Saturday, June 27, 2015

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்


 thangapathakkam01

 kedibilla_killadiranga

தந்தையர்நாள் எண்ண ஓட்டம்

  உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது.
 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.  
(திருவள்ளுவர், திருக்குறள் 70)
என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
(ஔவையார், கொன்றைவேந்தன், 37, 38)
தந்தை தாய் பேண் (ஔவையார், ஆத்திசூடி, 20)
என்பனவும்
குமர குருபரர், புதல்வர்க்குத் தந்தையும் தாயும் தெய்வம் என்பதும்
பெற்றோரின் உயர்வை நமக்கு உணர்த்தும்.
இராமாயணத்தில், மாயத்தோற்றத்தில் சனகனை உருவாக்கி மடிந்ததாக் காட்டும் பொழுது தந்தை இறந்ததாகக்கருதிய சீதை,
எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக் கோள்
வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ! மண்ணோர்
தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!’ என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள்.
 என்கிறாள். தந்தையைத் தாயாகவும் அறமாகவும், தவமாகவும் போற்றும் மனப்பான்மையை நாம் காணலாம்.
இதுபோல், வாலி இறந்ததும் அவன் மகன் அங்கதன்,
எந்தையே! எந்தையே! இவ் எழு
திரை வளாகத்து, யார்க்கும்,
சிந்தையால், செய்கையால், ஓர்
தீவினை செய்திலாதாய்!
என்று தந்தையின் உயர்வை எண்ணி அரற்றுகிறான்.
 “ஈச னடிபோற்றி எந்தையடி போற்றி(திருவாசகம்)
என மாணிக்க வாசகர், கடவுளைத் தந்தையாகக் கருதுகிறார்.
 அப்பா, நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல்வேண்டும்
என வள்ளலார் இராமலிங்க அடிகள், இறைவனை அப்பா என்றே கருதி அழைக்கிறார்.
 இவ்வாறு தந்தையை உயர்வாகப் போற்றுவதையும் அதனால் இறைவனைத் தந்தைக்கு ஒப்பாகக் கருதுவதையும் நாம் பல பாடல்கள் வழிக் காணலாம்.
   இப்பொழுதெல்லாம் அந்த நாள், இந்த நாள் என்று ஏதேதோ நாள் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது தந்தையர்நாள் வந்துள்ளது .இவற்றையெல்லாம் நாம் கொண்டாட வேண்டுமா என்பது பலர் எண்ணம். கடந்த ஒரு நூற்றாண்டாகப் பிற நாடுகளில் கொண்டாடப்படும் இத்தகைய நாள்கள் வணிக நோக்கில் முதன்மைப்படுத்தப்பட்டு நம் நாட்டிலும் இப்பொழுது பின்பற்றப்படுகிறது. எனவே, தேவையில்லை என்பதே மூத்தோர் எண்ணம்.
  எல்லா நாளிலும் எல்லாரையும் போற்ற வேண்டும் என்பதே உண்மை. அதனால், இத்தகைய தனித்தனிநாள் தேவையில்லை என்பதும் ஒரு சாரார் கூற்று. இவற்றிலெல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் நம் நாட்டில் இன்றைய பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, கூட்டுக்குடும்பம் அருகியமை போன்ற பல காரணங்களால், உறவுகளை மதிக்கும் நிலை மறைந்து வருகிறது. எனவே, தந்தைநாள் முதலான நாள் வரும்பொழுதாவது இது குறித்த சிந்தனை உண்டாவதும், திருந்திய போக்கு ஏற்படுவதும் தந்தை மீதுள்ள மதிப்பினை வெளிப்படுத்துவதும், நல்லன செய்வதில் நாட்டம் உண்டாவதும் பெருகுகிறது. இவற்றை யெலலாம் ஒரு நாள் கூத்தாக மாற்றாமல் தொடர்ந்து நிலவும் பண்பாடாகக்கடைப்பிடிக்கும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்..
  தலைப்பு தந்தையைப்பற்றியது என்பதால் நாம் இங்கே அதனைப்பற்றி இனிப் பார்ப்போம். உலகில் இந்தியா முதலான 52 நாடுகள் சூன் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையைத் தந்தையர் நாளாகவும் பிற நாடுகள் (ஏப்பிரல் நீங்கலான ஒரு மாதத்தில்) ஏதோ ஒரு நாளினைத் தந்தையார் நாளாகக் கொண்டாடுவதும் வழக்கமாக உள்ளது.
  சொனாரா இசுமார்ட்டு டோட்டு (Sonora Smart Dodd), 6 பிள்ளைகளைவிட்டுவிட்டுத் தாய் மறைந்தபின், மறுமணம் புரியாமல் தங்களைப் பேணிய தந்தை வில்லியம் இயாக்சன் இசுமார்ட்டு(William Jackson Smart)-இனைப் புகழும் வகையில் தந்தையர் நாள் கொண்டாட விரும்பியதனால் உருவாகி இது படிப்படியாக வெவ்வேறு நிலைகளை எட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  சூலை 5, 1908 இல் முதன்முதலில் தந்தையா் கொண்டாடப்ட்டது என்பாரும் உளர். 1909இல் சொனாரா வேண்டியதற்கிணங்க 1910 முதல் தந்தையார் நாள் கொண்டாடப்படுவதாகவும் கூறுகின்றனர். (இரு கருத்துகளுமே விக்கிபீடியாவில் காணப்படுகின்றன.)
  தந்தையர் நாள் கொண்டாடும் நாம் திரைப்படங்களில் தந்தையர்பற்றிய தவறான படிமம் உருவாக்கப்படுவதை நீக்க முயல வேண்டும். தமிழ்த்திரைப்படங்களில் அப்பா எனப்படுபவர் பொதுவாக மகன் முன்னிலையில் அவனை வேலைவெட்டி இல்லாதவன், தண்டச்சோறு, ஊர் சுற்றி, பொறுப்பில்லாத போக்கிலி என்பனபோல் ஏசுவார்; கண்டிப்பார்.   ஆனால், மகன் இல்லாத பொழுது தன் மனைவியிடம் அவன்மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவார். மகனோ அப்பாவை ஒருமையில் பேசுவான். இந்த ஒருமையில் பேசுவது என்பது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்தது. அச்சமூகம் ஆதிக்கம் செலுத்திய ஊடகங்கள் வழியாக இப்பேச்சு பரவி, அடுத்துச் சென்னை வழக்கம்போல் மாறி, இன்று எங்கும் இதுவே நிலைக்கின்றது. பெரியவர்களை ஒருமையி்ல் கூறும் ஊடகம் சிறு பிள்ளைகளிடம், நீங்கள், வாங்கள், என்பனபோல் மதிப்பாகப்பேசுவர். இப்பழக்கமும் இன்று மக்களிடையே பரவி விட்டது. எனவே, அப்பாவை மகன் ஒருமையில் குறிப்பிடுவதைத் தவறு என யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் மகன் தந்தையை அடிக்கக் கையை ஓங்குவதாகத்தான் காட்டுவார்கள். அண்மையில் வந்த ஒரு படத்தில் (கேடி பில்லா, கில்லாடி இரங்கா) “அடி பார்ப்போம்” எனத் தந்தை கூறியதும் மகன் அடித்துவிடுவதாகவே காட்சி இருக்கும். பின்னர் அவன்தந்தையைத் தன் நாயகனாக அவரது ஒளிப்படத்தில் குறிப்பிடுவான். இந்தக் கதை எதற்கு? படங்களில் இப்படி எல்லாம் பார்க்கும் இளைஞர்களுக்குத் தந்தையை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகும்?
  பொதுவாகவே திரைப்படங்களில் தந்தை பற்றிய வெளிப்பாடு சரியாக இல்லை என்பதே உண்மை. நடிகர் திலகம் (சிவாசி கணேசன்) அப்பாவாக நடித்த படங்களில் எல்லாம் மோசமான அப்பாகவே நடித்திருப்பார். (நான்பார்த்த படங்களில் எல்லாம் அப்படித்தான் நடித்திருப்பார். பிற படங்களில்மாறி நடித்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இப்படிப் பாத்திரப்படைப்பு இருந்தால்தான அவர் நடிப்பை வெளிப்படுத்த முடியும என்ற தவறான எண்ணமே காரணம்.) சான்றாக எல்லாராலும் பாராட்டப்படும் ‘தங்கப்பதக்கம்’ படத்தைக் கூறலாம்.
  காவல் அதிகாரியான அவர் மகனிடம் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், கனிவை வெளிப்படுத்த என்ன தடை? வீட்டிலும் காவல் அதிகாரியாக எண்ணாமல் தந்தைபோல் நடந்துகொள்ள ஏன் இயலவில்லை? காவல் அதிகாரியின் வேலை தண்டிப்பதுதானா? திருத்துவது இல்லையா? தன் மகனின் குற்றச் செயலை அறிய இரு காவல் துறையினரை மாறு வேடத்தில் அனுப்பிப் பண உதவி கேட்கச்செய்வார். மகனும் உதவுவான். அதை வைத்து அவன் திருட்டைக்கண்டுபிடிப்பார். உண்மையில் அவர், மகனின் உதவும் பண்பையும் பரிவுப்போக்கையும் உணர்ந்து அவனை அவன் வழியில் திருத்ததானே முயன்றிருக்க வேண்டும். அன்பு காட்டி அவனைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து சரணடையச் செய்திருக்கலாமே! கடமை என்ற போர்வையில மகனைப் பகைவன்போல் கருதும் மோசமான தந்தையாகத்தான் இதில் நடித்திருப்பார்.
  பொதுவாகவே தந்தையை வழிகாட்டியாகவும் தாய்மைஉணர்வும் உள்ளவராகவும், தோழனாக நடந்து கொள்பவராகவும் ஆற்றுப்படுத்துபவராகவும் காட்டாமல் மகனின் எதிரிபோல் காட்டுவதே திரைப்படங்களின் பழக்கம். தந்தை எதிரிபோல் நடந்துகொண்டதும் மகனையும் அதற்கேற்ப எதிரியாகத்தானே படைக்க முடியும். எனவே, திரைப்படங்கள் இப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
  தந்தை, மகன் அல்லது மகள் மீதுள்ள அன்பை அவர்களிடம் நேரிடையாக வெளிப்படுத்துபவராகவும். பிள்ளைகளுக்கு இடர்ப்பாடு வரும் நேர்வுகளில் ஆற்றுப்படுத்தி ஆறுதல் கூறுபவராகவும் காட்ட வேண்டும். வேலை கிடைக்காச் சூழலில் பிள்ளையின் வருவாயை நாடும் குடும்பம் எனில், ” உன் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வேலை கிடைக்கும். அதுவரை கிடைக்கும் வேலையைப் பார்” என்று கூற வேண்டும். போதிய வருவாய் உள்ள குடும்பம் எனில், “உன் கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையில் சேர்ந்தால்தான் முன்னேற இயலும். எனவே, வேலை கிடைக்கவில்லை எனக் கவலைப்படாதே. உன்திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு முயற்சி செய். கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும்.” என நம்பிக்கையுரை வழங்க வேண்டும். பொறுப்பினை உணராமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், “நண்பர்கள் துணை தேவைதான். அவர்களுடன் தகுதியை வளர்த்துக்கொள்வது குறித்தும் வேலைக்கான தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவதுபற்றியும் கலந்து பேசு. தம்பி,தங்கையர் படிப்பில் கருத்து செலுத்தி அவர்களுக்கு ஊக்கமாக இரு. வீட்டுப் பொறுப்பில் உன்னால் முடிந்ததை ஏற்றுக் கொண்டு எங்கள் சுமையைக் குறை”   அமைதியான முறையில் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.
 அவ்வாறில்லாமல் இப்போதைய போக்கையே தொடர்ந்தால் இளந்துலைமுறையினர் வாழ்வைச் சிதைக்கிறார்கள் என்றுதான் பொருள்.
 ‘திரைப்பட அப்பாக்கள்’ திருந்த வேண்டுமெனில் இயக்குநர்களும் கதையாசிரியர்களும் திருந்த வேண்டும். திருந்துவார்களா? தந்தை-மகன் நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் படங்களை உருவாக்குவார்களா?
திருந்துவார்கள் என்று நம்பிக்கை வைப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன் 


Friday, June 26, 2015

எழிலனும் கனிமொழியும் ஈழப்போரில் இந்தியப்பங்கும்


ananthi_and_kanimozhi01

கனிமொழி கருணாநிதி கனிவுடன் 

உண்மையை மொழிய வேண்டும்.

  விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி சசிதரன், இப்பொழுது வடமாகாண அவை உறுப்பினராக உள்ளார்.   இவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், தன் கணவன் எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தில் சான்றுரை வழங்குகையில், விடுதலைப்புலிகள் சிங்களப்படையிடம் சரணடைவது, பன்னாட்டு ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும் இந்தியாவும் பங்கு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   அப்பொழுது தன் கணவர் எழிலன் சரணடையும் முன்னர் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தொலைபேசியில் பேசியதன் அடிப்படையிலேயே படையினரிடம் சரணடைந்ததாகவும் அருகில் இருந்த தான் தான் இதற்குச் சான்று என்றும் தெரிவித்துள்ளார்.
  தமிழீழ விடுதலைப்போரைப் பொருத்தவரை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற நிலைதான் கனிமொழிக்கு. அவ்வாறிருக்க அவர் எப்படி இதில் முதன்மை பெற்றார் என எண்ணத் தோன்றும். அதேபோல், ‘செய்துமுடி அல்லது செத்துமடி’ என எந்நரேமும் மரணக்குப்பியுடன் விடுதலைப்புலிகள் சரணடையும் முடிவிற்கு எங்ஙனம் வந்தார்கள் என்றும் எண்ணம் எழும்.
  விடுதலைப்புலிகள் தம் நாட்டு மக்களின் நலன் காக்க அவர்கள் உரிமையைப் பெற்றுத்தரத்தான் போராடினார்கள். ஆனால், சிங்களக் கொடுங்கோலரசு இந்தியாவுடனும் பிற வலிமையான நாடுகளுடனும் இணைந்து இனப்படுகொலையில் பேரளவில் ஈடுபட்டபொழுது அவர்கள், எண்ணத்தில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். மக்களுக்காகத்தானே நாடு. மக்களே நச்சுக் குண்டுகளாலும் கொத்துக்குண்டுகளாலும் பல்லாயிரக்கணக்கில் கண்மூடித்தனமாக அழிக்கப்படும்பொழுது போரை நிறுத்துவதற்கு முயன்றதில் வியப்பில்லை. மேலும் தொடர்ந்து அவர்கள் போர் நிறுத்தத்திற்குக் குரல் கொடுத்து அதே நேரம் சிங்களக் கொடும்படை அதை மதிக்காத பொழுது போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எதிரி சிங்களப்படை மட்டும் என்றிருந்தால் என்றோ அதனை அழித்திருப்பர். ஆனால், உதவவேண்டிய கடப்பாட்டில் உள்ளோரும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பிலுள்ளோரும் சேர்ந்து அறமற்ற முறையில் தம் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதில் வியப்பில்லை. எனினும் களத்திலுள்ள வீரர்கள் களத்தில்தான் இருந்துள்ளனர். மக்கள்பணிப்பொறுப்பில் இருந்தவர்கள்தாம், போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்த பொழுது சரணடையச் சொன்னதும் நம்பிக்கையில் சரணடைந்து மாயமாகி உள்ளனர். இந்திய அமைதிப்படையின் பொழுதே இந்தியாவின் நடுநிலையற்ற போக்கினால் தம் களத் தலைவர்களை இழந்தவர்கள்தாம். எனினும், அன்றைய சூழலில் இந்திய அரசுடன் தொடர்பு கொள்ள தமிழகத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டது இயற்கையே.
  கனிமொழி இங்கே எங்கே வந்தார் என்று தோன்றலாம். கலைஞரின் குடும்பத்தில் அவரைப்போல் எழுத்துத்துறையில் யாரும் இறங்கவில்லை. கனிமொழியை அரசியலுக்கு அழைத்துவர முடிவெடுத்ததும் குடும்பத்தில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவும் அவரைக் கலை இலக்கியத் துறை மூலம் ஒளிவிட வழிவகுத்தார்.   மாநிலங்களவையில் புகுமுக நிலையில் இருந்தாலும் முதன்மைப் பொறுப்பும் மத்திய அமைச்சர்களுடனும் தலைவர்களுடனும் தொடர்புகொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கினார். அதுபோல், விடுதலைப்புலிகளின் படையையேதான் தான் வழிநடத்துவதுபோல் கதையளக்கும் போலிப்பாதிரியார் பேச்சை நம்பிய கனிமொழி அவருடன் இணைந்து ஈழம்பற்றியும் பேசத் தொடங்கினார். இதனால் மட்டுமல்ல. கலைஞரே மகள் கனிமொழி வழியாகத்தான் சில தொடர்புகளைப் பேணி அவரை உருவாக்க எண்ணியதாலும் தமிழ்நாட்டு முதல்வர் கலைஞரின் மகள் என்பதாலும் எழிலன் கனிமொழியுடன் பேசியிருக்கவே வாய்ப்பு உண்டு. மேலும்,   வடக்கு மாகாண அவை உறுப்பினர் அனந்தி என்பதை அறியாவிட்டால் கனிமொழி அரசியலுக்கே தகுதியற்றவர் ஆவார். அவரை அறிந்தவருக்கு அவர் கணவரைப்பற்றியும் தெரிந்திருக்கும். “எழிலனுடன் நேரடி அறிமுகம் இல்லை, எனவே, பேசவில்லை” என்றால் நம்பலாம். ஆனால், “அவர் யாரென்றே தெரியாது” என முழுப் பூச்சுனைக்காயைச் சோற்றில் மறைக்கும் பொழுதுதான் கனிமொழி எதையோ மறைக்கிறார் என்பது புரிகிறது.   அவரைத் தெரியாது என்று நிறுத்தியிருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், அவர் “ஒன்றும் விடுதலைப்புலிப்படையில் முதன்மைப் பொறுப்பாளர்களில் ஒருவரல்லர்” என்பதுபோல் பேசியுள்ளார். இதன் மூலம் விடுதலைப்புலிகளின் முதன்மைப் பொறுப்பாளர்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டுள்ளார். முதன்மைப் பொறுப்பாளர்கள் களத்தில் இருக்கும் பொழுது அரசியல் பொறுப்பாளர் இவருடன் பேசியதில் வியப்பில்லை. எனவே, கனிமொழி இதை மறைக்கவேண்டிய தேவையில்லை.
  வஞ்சகத் தலைவர்கள் அல்லது உயரதிகாரிகள் தன்னிடம் தந்த தவறான தகவலை எழிலனிடம் தெரிவித்திருக்கலாம். எனவே, இவரைச் சரணைடயச் சொல்லி ஏமாற்றியதாக யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால், அங்கே இது தொடர்பில் வழக்கு உசாவல் நடந்துகொண்டுள்ளது. எனவே, கனிமொழி தான் யாரிடம் தொடர்பு கொண்டு யார் தந்த தகவலை எழிலனிடம் தெரிவித்தார் என்ற உண்மையைச் சொல்வது சரணடைந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க உதவியாக இருக்கும். மேலும், இந்திய அரசின் பங்களிப்பையும் வெளிப்படுத்த உதவும். இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் சிங்கள அரசு மூலமாகவே இந்த உண்மைகள் வெளிவரத்தான் போகிறது. எனவே, இதற்கு முன்பு இதுபோன்ற செய்திகள் வந்தபொழுது தமிழ் ஈழத்தில் தனக்கும் ஈடுபாடு உள்ளது என்ற உணர்வு ஏற்படுவதாக மகிழ்ந்தவர் இப்பொழுது மறைக்க   வேண்டியதில்லை. ஒருவேளை அவர்மீதுள்ள வழக்கில் மத்திய அரசின் பிடி இறுகக்கூடாது என்பற்காக அமைதி காத்தாலும் அது சரியல்ல. உண்மையை அவர் சொன்னால் உலகத்தமிழர்கள் அவர் பக்கம் நிற்பர்.
எனவே, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும்.
 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
(திருவள்ளுவர் – திருக்குறள் – 0642)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை
feat-default

Thursday, June 25, 2015

திராவிடத்தை வென்றிடுவோம்! தமிழியத்தை ஊன்றிடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

dravidathai_vendriduvoam01


திராவிடத்தை வென்றிடுவோம் எனச் சொல்வது ஆரியக் குரலா என எண்ணத் தோன்றுகிறதா? ஆரிய மாயையில் இருந்து மட்டுமல்லாமல் திராவிட மாயையில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
தமிழின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அறிஞர் வேங்கடகிருட்டிணன், தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும்.(தமிழே முதன் மொழி. பக்.389) எனக் கூறுகிறார். மக்களினம் வாழும் எத்தனை உலகம் இருந்தாலும் அத்தனை உலகிலும் வழங்கும் தொன்மையான தமிழ் மொழிதான் அயலவர் நாவில் திராவிடமாக மாறியது. திராவிடமாக மாறியபின் தமிழ் தனக்குரிய இடத்தை இழக்கத் தொடங்கியது. அதனால் இல்லாத திராவிடத்தின் மகளாகத் தமிழைக் கூறுவோரும் உருவாகிப் பெருகினர். அதனினும் கொடுமையாக உலகின் மூத்த மொழியான தமிழை அதன் சேய் மொழிகளே தாயாக ஏற்றுக் கொள்ளதாததுடன் தத்தம் மொழிக்குத் தாயுரிமை கொண்டாடி வருகின்றனர். திராவிட இயக்கப் பரப்புரைகள்கூட தமிழ்நாட்டில் தமிழரல்லாதவரின் செல்வாக்கை வளர்க்க உதவியதே தவிர, தமிழ்க் குடும்ப மொழிகள் வழங்கும் நாடுகளில் தமிழின் தாய்மையை நிலைநிறுத்த உதவவில்லை. தமிழ்நாட்டளவில் சுருண்டுக்கிடக்கும் திராவிடத்தைத் தமிழகத் தலைவர்கள்தாம் தாங்கிப் பிடிக்கின்றனர். எனவே, திராவிடம் பற்றிய ஆன்றோர் கருத்துகளில் சிலவற்றையாவது நாம் அறிய வேண்டும்.
திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக விளங்குகின்றது. தமிழ் “ழகர’த்தை உச்சரிக்க அறியாத ஆசிரியர் தமிழர் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். “நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந்தமிழும்.. .போல்வன’ என்னும் பேராசிரியர் உரை. ஆரியர் திருத்த முத்தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது எனக் கூறித் திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும் என்கிறார் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை (தமிழகம்)
.
   திராவிடம் பிற்காலப் பெயர் என்பதை அறிஞர்கள் பலர் உணர்த்தியுள்ளனர். தமிழ் மொழிக்குத் “திராவிடம்’ என்ற பெயர் பிற்காலத்தில் வந்தது. இந்நாட்டுப் பிறமொழியாளர் தமிழை அங்ஙனம் கூறினார். இன்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரோடட்டசு (ஏணிணூணிஞீச்tதண்) முதலிய பழைய கிரேக்க ஆசிரியர்கள், இந்நாட்டைப் பற்றிக் கூறியபோது “தமிழ்’ என்னுஞ் சொல்லையே வழங்கி இருக்கின்றனர் எனச் சங்கநூற் கட்டுரைகள் (பக்கம் 145) என்னும் நூலில் குறிக்கப்பெற்றுள்ளது.

திராவிடம் என்னும் பெயர்தான் தமிழாகத் திரிந்தது எனக் கூறி வருவோருக்கு விடையாகச் செந்தமிழ்ச்செல்வியில் (சிலம்பு 39) பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடம் என்று வடமொழியாளர்கள் நம் செந்தமிழ் மொழிக்கு இட்ட பேரே நாளடைவில் “தமிழ்’ என உருத்திரிந்ததெனக் கூறி மகிழ்வர் ஒரு சிலர். அஃது உண்மையற்ற வெற்றுரையென எவரும் எளிதில் அறிவர். செம்மொழியாம் ஒரு மொழி பேசும் நன்மக்கள் தங்கள் மொழிக்குத் தாம் வேறுபேரும் இடாது தங்கள் நாட்டிற் பின்வந்து குடியேறிக் கலந்தவரும், கலந்த அக்காலத்தும் தங்களால் நன்கு மதிக்கப்படாது அயலாராகக் கருதப்பட்டவரும் ஆகிய வடமொழியாளர்கள் தம் மொழிக்கு இட்ட பேர் கொண்டே தம்மொழியைச் சுட்டினார்கள் எனின் அஃது எங்ஙனம் பொருந்தும்? அன்றியும் அது பொருளாயின் தமிழ் நன்மக்கள் தம்மொழி சுட்டும் குறியீடு ஒன்றும் பண்டைக்காலத்துப் பெற்றிலர் என்றேனும் அல்லது குறியீடு ஒன்று பெற்றிருந்ததும் வடமொழியாளர் இட்டபேரே சாலும் எனக் கருதித் தம் குறியீட்டைக் கைவிட்டதனால் அது வழக்கு வீழ்ந்தது என்றேனும் கொள்ளல்வேண்டும். அங்ஙனம் கொள்ளல் சாலுமா? தமிழ் நன்மக்கள் தம் மொழிக்குத் தாமே பேரிட்டு வழங்கினர் என்றும் அப்பேரே இன்றும் வழக்கில் உள்ளதெனக் கோடலே சாலும். மேலும், அக்கோளர்தம்மைத் திராவிடம்’ தமிழ் என மாறியது யாங்ஙனம் என வினவுவார்க்கு, அவர் கூறும் விடை அவர்க்கே இனிமை பயக்குமல்லால் வேறெவர்க்கு உண்மையின் நழுவி வீழ்ந்ததாகக் காணப்படும். தமிழர்கள் தம் மொழிக்குப் பெயர் இடாமல் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த அயலவர்தான் பெயர்வைத்தனர் என்றால் அதுவரை அம் மொழியைப் பெயர்குறிக்காமலா அழைத்து வந்தனர் என்னும் வினாவை எழுப்புவதன் மூலம் நம் மொழிக்கு நம்மவர் இட்ட பெயர்தான் தமிழ் என்பது புரிகின்றது அல்லவா?

திராவிட மொழி என்று சொல்லாமல் தமிழைத் தமிழ் என்றும் தமிழில் இருந்து தோன்றிய மொழிகளைத் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் சொல்ல வேண்டும். திராவிட இனம் என்று சொல்லாமல் தமிழ் இனத்தைத் தமிழினம் என்றும் தமிழ் சார் இனங்களைத் தமிழ்க்குடும்ப இனங்கள் என்றும் குறிப்பிட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் தமிழர் தம் மொழிக்குத் தமிழ் என்றுதான் பெயரிட்டனர் என்பதையும் தமிழ் என்னும் சொல்லே திராவிடம் எனத் திரிந்ததையும் உணராமல் திராவிடம் என்னும் சொல்லையே கையாளுவதால் தமிழ்மொழி வரலாறும் தமிழர் வரலாறும் தமிழக வரலாறும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இல்லாத திராவிடரில் இருந்து வந்தவர் தமிழர் என உலகத் தமிழறிஞர்கள் முன்னிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலேயே ஒருவர் பொய்யுரைத்துப் பொழிவுரை ஆற்ற முடிகின்றது என்றால் அதன் காரணம் நம் மொழியின் முதன்மையை நம்மவரும் அயலவரும் உணரும் வண்ணம் ஆசிரியர்களும் தலைவர்களும் எடுத்துச் சொல்லாமையும் தமிழ்ப்பகைவர்கள் தங்கள் திரிப்புப்பணியைத் தவறாமல் செய்துவருவதும்தான். புறத்திலும் அகத்திலும் இருக்கும் தமிழ்ப்பகையை முறியடிக்க வேண்டுமென்றால் திராவிடமாயையை வென்றாக வேண்டும்! தமிழியத்தை ஊன்றிட வேண்டும் என்பது சரிதானே!
பி.கு.: 1. தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவதுதான் நம் நோக்கமே தவிர, திராவிடஇயக்க அறிஞர்களும் தலைவர்களும் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை என்றும் போற்றுவோம்! அதே நேரத்தில் தமிழரல்லாதவர் தமிழ்நாட்டில் எத்துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடாது.
2. இக்கட்டுரை எந்த இதழில் வந்தது என நினைவுமில்லை, பதிவுமில்லை.
இலக்குவனார் திருவள்ளுவன்
photo_Ilakkuvanar_Thiruvalluvan