Friday, February 24, 2017

கலைச்சொல் : இடைநல அரசு – care taker government :- இலக்குவனார் திருவள்ளுவன்




கலைச்சொல் : இடைநல அரசு – care taker government

 காபந்து அரசு என்றால் என்ன   என்பது இன்றைய தலைமுறையினர் கேள்வி?
 காவந்து(kawand) என்னும் உருதுச்  சொல்லில் இருந்து காபந்து என்ற சொல் உருவானதாகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 869) குறித்திருக்கும்.  “முந்தும் அரவம் நச்சுயிரிகளால் ஏதம் வந்து கெடாமலே காபந்து செய்தாயே‘  என்பது சர்வசமய சமரசக் கீர்த்தனை)
  காபந்து அரசு என்பதற்கு, “மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தில் நாட்டை ஆளும்அரசு” என  விளக்குகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. இது விளக்கமே தவிர, உரிய கலைச்சொல்லன்று.
சிலர் காவல் > காவந்து  > காபந்து  என விளக்கிக் காபந்து அரசு சரி என்பர்.
சிலர் (மனையறிவியல் அகராதி) care taker – காப்பாளர் என்கின்றனர்.
 care taker என்றால் காப்பாளர் என்ற சொல்வதை விடப் பேணாளர் என்பதே பொருத்தமாக இருக்கும்.
 என்றாலும் care taker government என்றால் பேணாளர் அரசு என்னும் பொழுது இயல்பான  அரசு பேணா அரசா என்ற வினா வரும்.
தற்காலிக அரசு என்கின்றனர் பலர். தற்காலிகம் என்றசொல்லே தவறு. .
temporary என்பது நிலையற்றதைக் குறிக்கிறது. உயர் திணை அல்லாதது அல்+திணை = அஃறிணை எனப்படுவது போல் நிலையற்றதைக் குறிப்பதற்கு அல்+நிலை=அன்னிலை என்று சொல்லலாம்.”    (சங்க இலக்கியச் சொற்களும் கலைச்சொல் ஆக்கமும் பக்கம் 65, இலக்குவனார் திருவள்ளுவன் ஆய்வேடு, செம்மொழித்தமிழயாய்வு மத்திய நிறுவனம்)
   ஆனால்,  நிலையற்ற அரசு  என்னும் பொருளில் அன்னிலை அரசு என்று சொல்வதும் இச்சூழலில் பொருத்தமாய் அமையாது.
 இடைக்கால நல அரசு என்னும் பொருளில் care taker government – இடைநல அரசு என்பது சரியாக இருக்கும்.
–  இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, February 22, 2017

கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்


கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு

  சாதி என்பது பழந்தமிழரிடம் இல்லாத ஒன்று. இன்றோ, ஆரியரால் புகுத்தப்பட்ட  சாதி, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கி, உயிர் பறிக்கும் அளவிற்கு வேரூன்றிய பெருங்கேடாய் மாறிவிட்டது.
 சாதிகள் சிலவற்றின் அடையாளமாக இருப்பது பூணூல். வீரம் மிகு தமிழர்கள் அம்புறாத்தூணியை அணிந்திருந்தனர். தோளில் அணியும் அம்புகள் நிறைந்த கூடுதான் இது. இது மூவகைப்படும். இதனைப் பார்த்த ஆரியர்கள் இதுபோல் முப்புரி நூலை அணிந்தனர். பிராமணர்களின் அடையாளமாக விளங்குவது பூணூலே. ஆனால், பொற்கொல்லர், தச்சர் முதலான கை வினைஞர்கள் தாங்கள்தான் பிறக்கும் பொழுதே பூணூல் அணிவோம் என்றும் பிராமணர்கள், குறிப்பிட்ட சடங்கு செய்தபின்னர்தான் பூணூல் அணிவர் என்றும் பூணூல் தங்களுக்குரியதென்றும் கூறி வருகின்றனர். மேலும் தாங்கள்  ஆச்சாரி என அழைக்கப்பட்டதாகவும் இராசாசி, இராசகோபால்ஆச்சாரியார்  என அழைக்கப்படுவதற்காகத் தங்களை  ஆசாரி என்று மாற்றிவிட்டனர் என்றும் கூறுகின்றனர்.
  ஆசாரி போன்ற சில வகுப்பினர் பூணூல் அணிந்தாலும் பிராமணர்களின் அடையாளமாகப் பூணூல் விளங்குவதன் காரணம் அவர்கள் செய்யும் எத்தகைய சடங்கிலும் சடங்கிற்குரியவர்க்குப் பூணூல் அணிவித்தே செய்வதுதான்.  திருமணமாயினும் நீத்தார் சடங்காயினும் நம்மைப் பூணூல் அணியச் செய்யும் பொழுது  அவ்வாறு அணிந்தால்தான் நாம் சடங்கிற்கு உரிய தகுதி பெறுகின்றோம் என்றும் கடவுளின் அருளுக்கு ஆளாகின்றோம் என்றும் கூறி இழிவுபடுத்தும் பொழுது நாம் அதை எதி்ர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் இழி தகைமை இன்றும் உள்ளது. திராவிட இயக்கப் பணிகளாலும் தன்மதிப்பியக்கச் செயற்பாடுகளாலும், இந்நிலைமை ஓரளவு குறைந்துள்ளது.
  தங்களை இருபிறப்பாளர் என்றுகூறிப் பூணூல் அணிந்துகொள்வோர், பிறப்பே அற்ற கடவுளுக்குப் பூணூல் அணிவிக்கலாமா? இறைவனை இழிவுபடுத்துவதாகாதா?
   ஓவியங்களிலும் சிற்பங்களிலும் பூணூல் அணிவிக்கப்பெறாத கடவுளர் உருவங்களே திகழ வேண்டும்!
 மூவேந்தர்கள்தாம் ஆரியச் சடங்குகளை வளரவிட்டதாகச் சிலர் கூறி வருகின்றனர். வேறுபாடின்றி அனைவருக்கும் கொடை வழங்கும் கொடை மடம் மிக்க தமிழ் வேந்தர்களும் வள்ளல்களும் ஆரியர்கள், தங்களுக்குப் பொன்னும் பொருளும் வேண்டா; வேள்வி செய்து தாருங்கள் என்பதுபோன்று கேட்டமைக்குத்தான்  உதவி  புரிந்துள்ளனர்.
  திருநாவுக்கரசர். “இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில்” எனக் குறிப்பிட்டுள்ளதால், இதுபோல்  (இ)ரிக்(கு) வேதம் ஓதும் பிராமணர்கள் தங்களுக்கெனத் தனிக்கோயில் கேட்டதால் வேந்தர் கட்டித்தந்துள்ளதை அறியலாம். எனவே, திருநாவுக்கரசர் காலம் வரையிலும் தமிழ் வழிபாடு இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.
  ஆரிய வழிபாடு பெருகியபின்னர், கடவுளர்களையும் ஆரியர்களாகக் காட்டும் போக்கு வந்திருக்கலாம்.
 20 ஆண்டுகளுக்குமுன்னர் அப்போதைய சிற்பக்கல்லூரி முதல்வரிடம் பூணூல் அணியாத கடவுளர் உருவச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உருவாக்கச் சிற்பிகளிடமும் ஓவியர்களிடமும் வலியுறுத்தக் கூறினேன். விற்பனையாகாது என்று  அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றார். மக்கள் பூணூல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவதில்லை என்றும் அவ்வாறு செய்தால்  தொடக்கத்தில் நாமே வாங்கி ஊக்கப்படுத்தலாம் என்றும் மக்களும் இவற்றை வாங்க முற்படுவர் என்றும் கூறினேன். பின்னர் அவர்,  சிற்பிகளிடம் பேசியபின்னர், இரு பிறப்பாளர்களான தாங்கள்தான்  கடவுள்களையே படைப்பதகாவும் தங்ககளைப்போலப் பூணூல் அணிவித்தே சிற்பங்கள் செய்வோம் என்றும் கூறியதாகத் தெரிவித்தார். பிராமணக் கடவுளர் உருவங்களுக்குக் காரணம் ஆசாரிகளும்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
  தமிழ்வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த இலங்கை, ஈழம்,மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில்,  இஙகே செல்வாக்குள்ள பிராமணப் பூசாரிகளை அழைத்து வழிபாடு செய்யும் பழக்கம் பெருகி வருகிறது. இதனால் தமிழ் வழிபாடு மறைந்து கொண்டுள்ளது. புலம் பெயர் தமிழர்களும் தாங்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறு தமிழ்க்கடவுளர்களை ஆரியக்கடவுளர்கள்போலும் ஆக்கி ஆரிய வழிபாட்டையே இறக்குமதி செய்கின்றனர்.
 இவற்றுக்கு முற்றுப்புள்ளி இ்டவேண்டும். தமிழ்நாடு எனப்படும் தென்னாட்டவர்க்குரிய இறைவன் தமிழனாகவே காட்சி அளிக்க வேண்டும். தமிழர்கள் தாங்கள் வாழுமிடங்களில் எல்லாம் தமிழ்வழிபாட்டையே பின்பற்ற வேண்டும். அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்கும் கடவுளுக்குச் சாதிக்குறியீடான பூணூலை அணிவிப்பது கடவுளை இழிவுபடுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரையும்  கடவுளர் ஓவியங்களிலும் கடவுளர் சிற்பங்களிலும் பூணூல் அணிவிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் இதனை மக்களிடையே பரப்பி  வெற்றி காணவேண்டும்!
நாம் தமிழர்! நம் கடவுளும் தமிழரே!
நம்மொழி தமிழ்! நம்கடவுளின் மொழியும் தமிழே!
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 961)
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 173, தை 30, 2048 / பிப்பிரவரி 12, 2017

Tuesday, February 21, 2017

முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்




 

முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா?


  அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக  ஆட்சிகவிழும்;   தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார்.
  பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும் இறுதியில் அவ்வாறு எதுவும் நிகழாது எனத் தாலின் தெரிவித்தார். இப்பொழுது் தேர்தல் நடைபெற்றால், திமுக வெற்றி பெறும் என்றும் தாலின் முதல்வராவார் என்றும் செய்திகள் சொல்லப்பட்டன.
  இச்சசூழலில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்பொழுது வன்முறைக்கு வித்திட்டதேன்? அவரது முதிர்ச்சியான போக்கு  ஏன் தடுமாறியது? என மக்கள் வினவுகின்றனர்.
  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கை கட்டிக்கொண்டு அமைதி காத்த பொழுது திமுக ச.ம.உறுப்பினர்கள், பன்னீர் செல்வத்துடன் இணைந்து மக்களாட்சி மாண்பினைக் குழிதோண்டிப் புதைத்ததேன்?
  பா.ச.க.தான், பன்னீர்செல்வத்தை நம்பி அவரைக் களமிறக்கிப் பின்னாலிருந்து இயங்கியதென்றால், தாலின் ஏன் அவ்வாறு மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினார்அதிமுகவில் சசிகலாவிற்கு மாற்றாகப் பன்னீர்செல்வத்தையும் நேற்றுப்பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான் போன்ற தீபாவையும் சொன்னார்களே தவிர, தாலினையோ திமுகவையோ யாரும் கூறவில்லையே!
 இதனைப் புரிந்து கொண்டு அமைதி காத்து அதிமுகவின் எதிர்ப்பினை ஒன்றுதிரட்டி வெற்றி காண வேண்டியவர்வெண்ணெய் திரண்டுவரும் வேளையில் தாழியை உடைக்கலாமா? சட்டமன்றத்தைக் கலவரப்பூமியாக மாற்றலாமா? தாலின்,  நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால் என்ன பயன்? அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள்  கை கட்டி வாய்பொத்தி அமைதி காத்த பொழுதாவது சூழலைப்புரிந்துகொண்டு அமைதிக்குத் திரும்பியிருக்கலாமே!
  தன் பக்கம் பேரளவு ஆதரவு உள்ளதாக நம்பிக்கொண்டு பா.ச.க.வையும் நம்ப வைத்த பன்னீர்செல்வ  அணியினர் ஒற்றைப்பட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வரவிற்கே  பெரும்பாடுபட்டுள்ளனர். ஏதோ அவர் கணிசமான உறுப்பினர்களுடன் கட்சியைப் பிரிப்பார், அதில் குளிர் காய்ந்து ஆட்சி அமைக்க உதவுவதுபோல் நாடகமாடி நாமே ஆட்சியை அமைக்கலாம் எனத் தாலின் கருதியுள்ளதாகத் தெரிகிறது.  ஆனால், உண்மையான  நடைமுறை அவ்வாறல்ல என்பதைப்புரிந்து கொண்டபொழுது கனவு கலைந்த அதிர்ச்சியால் அமைதி இ்ழந்துவிட்டார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாசி 04 / பிப்.16 அன்று 15 நாள் காலவாய்ப்பைத் தந்தார் ஆளுநர்; நீண்ட கால வாய்ப்பால் குதிரை பேரம் நடைபெறும்  எனக் கூறிய தாலின் அதனை எதிர்த்துள்ளார். ஆனால், பெருமளவு ஆதரவாளர்கள் தம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நன்கறிந்த முதல்வர் பழனிச்சாமி இரு நாள்களுக்குள்ளாகவே, நம்பிக்கை வாக்கு வேண்டியுள்ளார்.  இதனை வரவேற்றிருக்க வேண்டிய தாலின் எதிர்த்தது முதல் தவறு.
  வாக்கெடுப்பில் இரு தரப்பிலும் கிட்டத்தட்ட சமநிலை என்பதுபோன்ற  குழப்பம் இருந்ததெனில்,   பேரவைத்தலைவரே கமுக்க வாக்கெடுப்பு முறையைப் பின்பற்றியிருப்பார். அவ்வாறான சூழல் இல்லாத காரணத்தால் வெளிப்படையான வாக்கெடுப்பை  நடத்தியுள்ளார்.  தாலின் அமைதி காத்து, வேறொருநாள் ஆளுங்கட்சியின் நிதி வரைவு(மசோதா) அல்லது முதன்மை வரைவு ஒன்றைத் தோற்கடிக்கச் செய்து அதன் மூலம் ஆட்சி கலையுமாறு செய்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், இதுவரை அமைதி காத்தது நடிப்பே என்று எண்ணும் வகையில்  ஏமாற்றம் தாங்காமல்   சட்டமன்றத்தின் அமைதி குலையக் காரணமாக இருந்தது சரிதானா?
  கைக்கெட்டும் நிலயில் இருப்பதாகக் கருதப்பட்ட ஆட்சி அதிகாரத்தை  அவசரச் செயலால் எட்டாத் தொலைவிற்குத் தள்ளிவிட்டாரே என இவருக்குச் சார்பாகப் பேசியவர்களே இப்பொழுது கூறுமளவிற்கு நடந்து கொண்டார்.
  மேலும், எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது செல்லாது என்று  எதிர்க்கட்சியினர் சொல்வதும் தவறாகும். அதிமுகவில் பிளவு உண்டாக்கத் துணை போவது பன்னீர்செல்வம் அணிதான். அந்த அணி  பேரவையில் இருக்கும்பொழுதுதான் வாக்கெடுப்பு நடந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் 11 வாக்குகளும் பதிவாகியுள்ளன  இந்த எண்ணிக்கை சட்டமன்ற மொத்த உறுப்பினர்களின் (234-1) எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டது. எனவே, வெளியேற்றப்பட்ட, அல்லது வெளியேறிய அனைவரும் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் ஆதரவு எண்ணிக்கையை விட மிகுதியான எதிர்ப்பு எண்ணிக்கை வராது என்பது  உறுதியாகிறது. எனவே,  எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றமரபுப்படியான நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு வாக்கு வெற்றி பெற்றுள்ளார் என்பதே உண்மையாகும். பிற செய்திகள் யாவும் இதனைப் பொறுக்கமாட்டார் கூறுவனவாகுமேயன்றி உண்மையாகாது.
  பொதுவாகச் சட்டமன்றத்தில் அமளி அல்லது கலவரம் நிகழும் பொழுது இரு பிரிவினரும் ஈடுபட்டிருப்பர். ஆனால், ஒருவரை மற்றொருவர் குறை சொல்வர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின்பொழுது் திமுகவும் பன்னீர்செல்வம் அணியும் சட்டம் ஒழுங்கிற்குக்  குந்தகம் ஏற்படுத்திய பொழுதும் அதிமுகவினர்  அமைதி காத்தனர்.  பேரவைத்தலைவர் மாண்புமிகு தனபால் அமைதிகாக்கப் பன்முறை வேண்டுகோள் விடுத்தும் பயனின்றி அவர் தாக்கப்பட்டதும் அவரது உடைமைகள் பாழ்படுத்தப்பட்டதும் நிகழ்ந்துள்ளன. ஆனால்,  போராட்டக் களத்தில்   ஈடுபட்டவர்கள்பற்றி ஒன்றும் சொல்லாமல்,  அரசினைக்  குறை கூறுவதும் விதிமுறைக்கு மாறாக மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்பதும் ஏனென்று தெரியவில்லை.  6 திங்களேனும் ஆட்சியின் செயல்பாடுகளைக் கவனித்து அதன்பின்னர் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுப்பதே சிறப்பாகும்.
 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
 தகுதியான் வென்று விடல்(திருவள்ளுவர், திருக்குறள் 158)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 174, மாசி 07, 2048 / பிப்பிரவரி 19, 2017