Wednesday, June 20, 2018

ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரைஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும்திமுகஅதிமுக!

இலக்குவனார் திருவள்ளுவன்
முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ்! தமிழ்!” என முழங்குவார்கள். வந்த பின் தமிழை மறந்துவிடுவார்கள். இப்பொழுதோ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய்என்கிறார்கள்ஆனால்ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச்செயல்படுகிறார்கள்இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான்.
முதிய தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தருதல், தமிழறிஞர்கள் பெயர்களில் விருதுகள் வழங்கல் போன்று தமிழ் வளர்ச்சிக்கெனச் சில திட்டங்களைச் செயல்படுத்துவது உண்மைதான். ஆனால், கல்வி நிலையங்களில் தமிழைத்துரத்திவிட்டு என்ன செய்து என்ன பயன்?
5.06.2018 அன்று சட்டமன்றத்தில், திமுக ச.ம.உ. (முன்னாள் அமைச்சர்) பூங்கோதை ஆலடி அருணா, “தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழ்வழிக் கல்விக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர் ஆங்கிலவழிக் கல்வியை வலியுறுத்துவது வெட்கக்கேடானது. பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி உள்ளமை போல் கல்லூரிகளிலும் கொண்டுவர வேண்டும் என்று பேராசிரியர் சி.இலக்குவனார் போராடினார். இதற்காகத் தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொண்டபோது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டார். அப்போது கலைஞர் கருணாநிதி ‘தமிழ்த்தாய் சிறையில்’ என ஊரெங்கும் பேசித் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தினார். இன்றைக்கு அவர் தலைவராக உள்ள திமுக, கல்வி வணிகம் மூலம் கொள்ளையடிப்பதால் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவர வேண்டுகிறது. என்ன கொடுமை இது!
ஆங்கிலத்துக்கு ஆதரவான கூட்டணி
“தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்க ஆய்வு நடைபெற்று வருகிறது” என்று பூங்கோதைக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்மறுமொழி அளித்துள்ளார். ஏறத்தாழ 900 தமிழ்வழிப் பள்ளிகளை மூடும் திட்டத்தில் அதிமுக அரசு உள்ளது. எனவே, இவற்றை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்ற எண்ணியுள்ள அதிமுகவிற்குத் திமுகவும் துணைபோவதால் சட்டமன்றத்தில் எதிர்ப்பு இருக்காது அல்லவா?
திமுக சட்டமன்ற உறுப்பினர் பொ.தி.இரா.(பி.டி.ஆர்.) பழனிவேல் தியாகராசன்தன்னை ஆங்கிலேயராகவும் தான் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசுவதுபோலும் எண்ணிக்கொண்டு ஆங்கிலத்திலேயே சட்டமன்றத்தில் பேசுபவர். மாதிரிச் சட்டமன்றத்திலும் அவ்வாறுதான் ஆங்கிலத்தில்தான் பேசினார். இவரைத் தட்டிக் கேட்காத திமுகவிற்குத் தமிழைப் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? எனவே, அரசியல் கட்சிகளின் தமிழ் முழக்கங்கள் கண்டு ஏமாறாமல் மக்களே முன்னின்று தமிழ்வழிக் கல்விக்கு வழி காண வேண்டும்.
ஆங்கிலவழிக் கல்வியின் மாயையைப் பின்வரும் புள்ளிவிவரங்கள் உடைக்கின்றன.
ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பப் பயிலகத்தில் 2015இல் சேர்க்கப்பட்ட 9,974 மாணாக்கர்களில் 188 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 9 பேர் தவிரப் பிறர் ஆங்கில வழியில் படித்தவர்கள்.
அனைத்திந்திய மருத்துவத் தேர்வில் 2011இல் தமிழ்நாட்டிலிருந்து 9,514 பேர் பங்கேற்றனர். ஆனால், 207 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். எனவே, ஆங்கிலத்தில் படித்தால்தான் உயரலாம் என்பது தவறு என்றாகிறது.
தமிழ்வழிக் கல்வி 1952ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. காமராசர்முதலமைச்சராகப் பதவி வகித்த காலகட்டமான 1954ஆம் ஆண்டு முதல், உயர்நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது. இதனை மாற்றி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கில வழிப் பாடமொழியாக இருக்கும் என 1965இல் முதல்வர் பக்தவத்சலம் ஆணை பிறப்பித்தார். தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தும் இவ்வாணையைத்தான் செயலலிதா பின்பற்றினார். இப்போதைய அரசும் பின்பற்றுகிறது.
2012-13 இல் செயலலிதா அரசு, அரசின் தொடக்க – நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்தது. 320 பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2013-14 கல்வியாண்டில் மேலும் 3200 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு ஆண்டுதோறும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டதால், 4,84,498 பேர் தமிழ்வழிக் கல்வியை இழந்தனர். இதைத் தொடர்ந்து 2017-2018 இல் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு அரங்கேறியுள்ள அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 3,916.
சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாட்டில் பதின்நிலைப் பள்ளிகள் (மெட்ரிகுலேசன் பள்ளிகள்) இருந்தன. இவை 1978 இல் பள்ளிக்கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அப்போது ஏறத்தாழ 20 பதின்நிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. தமிழக அரசு 2011இல் பதின்நிலைப் பள்ளி இயக்ககம் எனத் தனியாகத் தோற்றுவித்தது. இப்பள்ளிகள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன. இப்போது 4,268 பதின்நிலைப் பள்ளிகள் உள்ளன. 39,18,221 மாணாக்கர்கள் இவற்றில் பயில்கின்றனர். இது வளர்ச்சியின் அடையாளம் அல்ல. வணிகமயமான கல்விக்கு மக்கள் இரையானதைக் காட்டும் அவலம். இதனால் இவர்கள் தாய்மொழி வாயிலான கல்வியை இழந்து சிந்தனை ஆற்றல் இழக்கின்றனர். ஒப்பித்து எழுதும் பாட முறையால் தமிழகச் சிறுவர்கள் இயந்திரமயமாகி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 37,211 அரசுப் பள்ளிகளும் 8,403 அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளும் 12,419 அரசு நிதியுதவி பெறாத் தனியார் பள்ளிகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் மாணாக்கர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் 54,71,544. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 28,44,693. அரசு நிதியுதவி பெறாத் தனியார் பள்ளிகளில் 48,69,289 என்னும் எண்ணிக்கையில் உள்ளன. தனியார் பள்ளிகள் பெருகிவருகின்றன. தனியார் பள்ளிகள் ஆங்கிலவழிக் கல்வியே வழங்குவதால் ஆங்கிலவழிக் கல்வியும் பெருகுகிறது.
இவற்றை மாற்ற அரசு என்னென்ன செய்யலாம்?
கோயம்புத்தூர், கிருட்டிணகிரி, நீலகிரி மாவட்டங்களில் மொத்தம் எட்டு உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. இவற்றைப்போன்று அனைத்து மாவட்டங்களிலும் தரமான தமிழ்வழியிலான உண்டு உறைவிடப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும். இதனால் தமிழ்வழிக் கல்வியில் பயில்வோர் எண்ணிக்கை உயரும்.
ஆந்திராவில் கூட்டுறவுக் கல்விச் சங்கங்கள் (The Cooperative Educational Societies), கேரளாவில் தொழிற்கல்விக் கூட்டுறவுக் கழகம் (The Co-operative Academy of Professional Education (CAPE) of Kerala) ஆகியன மூலம் கூட்டுறவு அமைப்புகள் மேனிலைக் கல்விக் கூடங்கள், தொழிற்கல்விக் கூடங்கள் ஆகியவற்றை நடத்துகின்றன. இவை குறித்து அரசு முழுமையாக அறிய வேண்டும். இவைபோல்தமிழ்நாட்டில் தமிழ் அமைப்புகள்பெற்றோர்கள்ஆசிரியர்களைக் கொண்டகூட்டுறவுச் சங்கம் அமைத்து மூடக் கருதும் பள்ளிகளை நடத்த வேண்டும்இதனால் அரசிற்கும் சுமை குறையும்தமிழ்வழிப் பள்ளிகளும்காப்பாற்றப்படும்.
இவற்றையெல்லாம் விட ஒரே ஓர் எளிய வழியில் இச்சிக்கலைத் தீர்க்கலாம். தமிழ்வழியில் படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுதான் அது. இது தொடர்பில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசாணை சரியானதல்ல. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முதல் 80% இடங்களை ஒதுக்கிய பின்னரே பிற வகையினருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இதேபோல் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசின் உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும் என்றும் ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்கால நம்பிக்கையின்மையால் இதுவரை தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கும் மக்கள் தமிழ்வழிக் கல்வியைத் தேடி நாடி ஓடி வருவார்கள்.
தமிழைக் காத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முன்வருமா அரசு?
(கட்டுரையாளர் குறிப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்… தமிழ் காப்புக் கழகத்தின் தலைவர், ‘அகர முதல’ என்னும் தமிழ் இணைய இதழின் ஆசிரியர். தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். அப்போது தமிழ் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். குறிப்பாக, இலவசம் என்ற சொல்லுக்கு விலையில்லா என்றும், அரவாணி என்பதற்கு திருநங்கை என்றும் அரசுத் துறைகளில் புதிய சொல்லாடல்களைப் பயன்பாட்டுக் கொண்டுவந்தமைக்குக் காரணமானவர். இவரைத் தொடர்புகொள்ள: thiru2050@gmail )

Thursday, June 14, 2018

நீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது! – இலக்குவனார் திருவள்ளுவன்


நீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது!

  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதிநீக்கம் செய்யப்பெற்ற 18 ச.ம.உ.  முறையிட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது. ஆளுங்கட்சிக்குத் சாதகமாக அதே நேரம் நடுவுநிலைமையுடன் உள்ளதுபோல் இரு தீர்ப்புகள் வந்துள்ளன. தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்று வந்த தீர்ப்பு போல் பல வழக்குகளில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. தகுதிநீக்கம் செல்லாது என்றால்  அரசிற்குக் கண்டம்தான். இப்பொழுது ஒரு நீதிபதி (மாண்பமை சுந்தர்) செல்லாது என்றாலும் மற்றோருவரான தலைமை நீதிபதி மாண்பமை இந்திரா (பானர்சி) செல்லும் என அறிவித்து விட்டார். ஆகப் பொதுவில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவும் பிறரை ஈர்க்கவும் ஆளும்அரசிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கும் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சிதான். முன்னுரைக்காக இதைக் குறிப்பிட்டாலும் கட்டுரை குறிப்பிட விரும்புவது இதை யல்ல.
  காலங்கடந்த தீர்ப்பு அநீதிக்கு இணையானது என்பது நீதித்துறையின் முழக்கம். தமிழ்நாட்டுத் தலைமை நீதிபதி இந்திரா(பானர்சியும்) இதனை வலியுறுத்தி உள்ளார். குற்ற வழக்குகள், உரிமை வழக்குகள், பணியாளர் வழக்குகள், தேர்தல் வழக்குகள் என எப்பிரிவு வழக்காயினும் காலத்தாழ்ச்சியான தீர்ப்பு என்பது வாலாயமாக உள்ளது. இதனால், அப்பாவிகள் தண்டிக்கப்படுவது, உரிய தண்டனைக் காலத்திற்கு மேலும் விசாரணைக்காகச் சிறையில் இருப்பது, உடைமைகளை இழப்பது, குடும்ப நலம் பாதிப்பது, பணி நலன்களை இழப்பது, மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற முடியாமல் போவது, தகுதியற்றவர்கள் பயனடைவது போன்ற பல நலக்கேடுகள் நிகழ்கின்றன.
18 பேர் தகுதி நீக்கம்   தொடர்பான வழக்கின் போக்கும் இவற்றிற்கு ஒரு    சான்றாகும். பன்னீர் அணியினர் பதினொருவருக்கு ஒரு  வகையாகவும் தினகரன் அணியினர் பதினெண்மருக்கு வேறு வகையாகவும் தீரப்பு அளித்ததன் மூலம் இவற்றில் ஒன்று தவறு என்பதைப் பேரவைத் தலைவர் தனபால் வெளிப்படுத்திவிட்டார். மாநில மத்திய ஆளுங்கட்சிகளின் ஆதரவால் நடுவுநிலை தவறி நடந்துகொண்டதற்கு நாணவும் இல்லை அவர். தனி மனிதர் உயர் பாெறுப்பில் இருந்து செய்த தவறு  நாட்டுமக்களுக்குக் கேடு பயப்பதாய் அமைந்து விட்டது. இதன் தொடர்பில் பதினெண்மரும் தொடுத்த வழக்கு இவ்வாண்டு சனவரித்திங்கள் 23 ஆம் நாள்  கேட்பு முடிந்து தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டது.  தீர்ப்பு ஏறத்தாழ 5 மாதங்களை நெருங்கும் இப்பொழுதுதான் வந்துள்ளது.
  தீர்ப்பு ஒருவருக்குச் சாதகமாய் அமைந்தால் மற்றொருவருக்குப் பாதகமாய் அமையும். என்றாலும் தீர்ப்பு என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். இதனடிப்படையில் இவ்வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என்றால் வழக்கு  நீட்டிப்புக் காலத்தில் உரிய  தொகுதிகளின் மக்கள் தங்களுக்கான மக்கள் சார்பாளர் இன்றி இன்னலுற்றதற்கு என்ன பரிகாரம்? முன்பே தீர்ப்பு வந்திருந்தால் மறு தேர்தல் மூலம் தங்கள் தொகுதி உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் அல்லவா?
  தகுதி நீக்கம் செல்லாது என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் கடமையை ஆற்றமுடியாமல் போனதற்கும் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களால் உரிய பயனடையாமல் போனதற்கும்  யார் பொறுப்பு? இக்காலத்தில் பழிவாங்கப்பட்டுச் சட்டமன்றத்திற்குச் செல்ல முடியாமையால் பேரவையில் தொகுதித் தேவைகளைச் சொல்லி நிறைவேற்றவும்  சட்ட வாதுரைகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் பறி போயின அல்லவா?
 வழக்கு முடிவின் காலத்தாழ்ச்சியால் மக்களாட்சியின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது.   இனி  மறு  நீதிபதி உசாவல் நடைபெற்றுத் தீர்ப்பு வரும் வரையும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பாதிப்புதான்.
வழக்கினை நீட்டித்து மறு தேர்தல் வரை இழுத்துச் சென்றால், இவர்கள் வழக்கில் வெற்றி பெற்றாலும் பயனில்லை.  அல்லது தீர்ப்பு முடிவு எப்படியாக இருந்தாலும் மேல் முறையீட்டால் இது போன்ற நேர்வு மீண்டும்  ஏற்பட்டாலும் மக்களாட்சி என்பது கேலிக்குரியதாகிறது அல்லவா?
  மறு நீதிபதி உசாவலுக்குக் கால வரையறை  குறிப்பிட வேண்டும். அன்றாடம் வழக்கைக் கேட்டு மிகு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட  வேண்டும். இவ்வாறு செய்வதுதான் நீதித்துறைக்கும் மாண்பு; மக்களாட்சி முறைக்கும் மாண்பு. இது வரை நீண்ட காலம் எடுத்துக் கொண்டு இப்பொழுது கால வரையறை கேட்பது முறையா எனக் கருதக் கூடாது. தவறுகள் மீள நிகழாமல் தடுக்கப்படுகின்றன; திருத்தப்படுகின்றன எனக் கருத வேண்டும்.
தீர்ப்பு எதுவாயினும் விரைவில் வழங்கட்டும் உயர் நீதி மன்றம்!
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. (திருவள்ளுவர், திருக்குறள் 482)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை – அகரமுதல: வைகாசி 27, 2049 – ஆனி 02, 2049 / சூன் 10- 16, 2018

Saturday, June 9, 2018

வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்


வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்

அண்மையில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 11 சட்டமன்ற்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இவற்றுள் மகாராட்டிர மாநிலம் பாலுசு கடேகான் தொகுதியில் பேராயக்கட்சியின்(காங்.) வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கே போட்டியிடுவதற்குக் கூடத் துணிவற்ற நிலையில்தான்  தன்னை வலிமைவாய்ந்த கட்சியாகக் கதையளக்கும் பாசக உள்ளது. இதுவே பாசகவின் வீழ்ச்சியைத்தான் காட்டுகின்றது.
உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதியில்  பாசக  நாடாளுமன்ற உறுப்பினர்  உக்கும் (சிங்கு)  காலமானதால் இடைத்தேர்தல் நடை பெற்றது. அந்தத் தொகுதியில் உக்கும்(சிங்கின்) மகள் மிரிகங்கா(சிங்கு) பாசக சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கெளவினார். (உ)லோக்தள் சார்பில் போட்டியிட்ட தபசம் அசன் அவரைவிட 55,000 வாக்குகள்  கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தான் வெற்றி பெற்ற  தொகுதியில் கூட மீண்டும் வெற்றி பெற முடியாத நிலையில்தான் பாசக இருக்கிறது. பாசக ஆளும் மாநிலத்திலேயே பாசக படு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதைவிட வெட்கக்கேடு அக்கட்சிக்கு வேறு இல்லை. முதல்வர்  (இ)யோகி ஆதித்யநாத்து பற்றிய பிம்பத்தைப் பாசகப் பெரிதாகக்காட்டி வருகிறது. இங்கே தோற்றதற்கு அவர் விலகியிருக்க வேண்டும். இருப்பினும் முதல்வர் பதவியில் நாணமின்றி ஒட்டிக் கொண்டுள்ளார்.
மகாராட்டிராவில்  தன்னிடமிருந்த பால்கர் மக்களவைத் தொகுதியில் மட்டும் பாசக  வெற்றி பெற்றுள்ளது. மேலும் இங்கே 17,31,077 வாக்காளர்கள் இருப்பினும் 8,69,985 வாக்காளர்கள்தாம் வாக்களித்துள்ளனர்.  ஏறத்தாழ பாதிபேர் வாக்களிக்கவில்லை. இதுவும்கூடப் பாசகவின்மீதான எதிர்ப்பலை யைக் காட்டுவதுதான்.
மேலும் பாசக வேட்பாளர் காவிது இராசேந்திர தேதியா பெற்ற வாக்குகள் 2,72,782 மட்டுமே. 7 கட்சிகள் போட்டியிட்டதில், சிவசேனா 2,43,210; பகுசன் விகாசு அகாதி 2,22,838 வாக்குகள் பெற்றுள்ளன. இங்கே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருந்தால் பாசக காணாமல்  போயிருந்திருக்கும்.
இந்தத் தேர்தலின்பொழுது இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றும் போக்கிரி(இரெளடி) பாணியில் தானும் அவர்களை(சிவசேனாவை) எதிர் கொள்வேன் என்றும்  முதல்வர் பட்னாவிசுபேசியுள்ளார். எனவே இஃது உண்மையான வெற்றியாக இருக்காது என்றே மக்கள் கருதுகின்றனர்.
நாகாலாந்தின் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள்நாயக முன்னேற்றக் கட்சியின்(Nationalist Democratic Progressive Party) தலைவர் நிபியோ (இ)ரியோ இருந்தார்.  இவர், பாசக ஆதரவுடன் அம்மாநில முதல்வராகி விட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது.  பாசக ஆதரவுடன் போட்டியிட்ட இக்கட்சி வேட்பாளர் தோகியோ (Tokheho)  வெற்றி பெற்றுள்ளார்.  இதனை மாநிலக்கட்சியின் வெற்றியாகக் கருதலாமே தவிரப்  பாசகவின் வெற்றியாகக் கருத முடியாது.
உத்தரகண்டு மாநிலம் தாரலி தொகுதியில் ஆளும் பாசக  வெறும் 1981 வாக்குகள்  வேறுபாட்டில்தான் வெற்றி பெற்றுள்ளது.
கருநாடகாவில் மறுதேர்தல் நடத்திக் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரலாம் எனக் கனவு கண்டது பாசக. 2014 இடைத் தேர்தலிலேயே  தனது கோட்டை என்று சொல்லிக் கொண்ட பெல்லாரி தொகுதியில் தோல்விகண்டது பாசக. இப்பொழுது  நடைபெற்ற இராசராசேசுவரி நகர் இடைத் தேர்தலில் பாசக தோல்வியுற்றது. வெற்றி பெற்ற பேராயக்(காங்.)கட்சி வேட்பாளரும் மசத  வேட்பாளரும் பெற்ற வாக்குகளில் (1,08,064+60,360)பாதிக்கும் குறைவாகத்தான் பாசக (82,572) பெற்றுள்ளது. இதன் மூலம் பாசகவின் குறுக்குவழி ஆட்சிக் கனவைக் கலைத்த கருநாடக மக்களைப் பாராட்ட  வேண்டும். அதேபோல் ஆட்சி யமைக்க வாய்ப்பு தந்த  பேராயக்கட்சிக்கு எதிராகப் போட்டியிடாமல் மசத  கட்சி,  தேர்தலில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும்.  இக்கட்சி இங்கே வெற்றி பெற்றிருந்தால்  குமாரசாமி ஆணவக் குன்றின் மேல் ஏறி யிருப்பார்;  பேராயக் கட்சியை மிரட்டி ஆட்டிப் படைத்திருப்பார்; பேராயக்(காங்.)கட்சி பணியாவிடில் பாசகவுடன் கூட்டணிக்கு மாறவும் முயன்றிருப்பார். ஆனால், அதற்கு வாய்ப்பளிக்காத கருநாடக மக்கள்பாராட்டிற்குரியவர்களே
பாசக. தான் வெற்றி பெற்றிருந்த மாகராட்டிர மாநிலத்தின் பண்டாரா – கோண்டியா மக்களவைத் தொகுதியில் தேசியவாதக் காங்கிரசிடம் தன் வெற்றியைப் பறிகொடுத்தது.
பாசக, தனது கோட்டையாகக் கூறிககொள்ளும்  பாசக ஆளும் உத்தரபிரதேசத்தில் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில்  மக்கள் தோல்வியையே பரிசாக அளித்துள்ளனர்.
சட்டமன்றத் தொகுதிகளான, பீகார் மாநிலம் இயோகிஃகட்டு (Jokihat), மேகாலயா மாநிலம் அம்பட்டி, கேரள மாநிலம் செங்கனூர், மேற்குவங்க மாநிலம் மகேசுதலா (Maheshtala), உத்தரகண்டு  மாநிலம் தாரலி, பஞ்சாப்பு மாநிலம்  சாக்கோட்டு (Shahkot),  இயார்க்கண்டு மாநிலம் கோமியா, சில்லி, ஆகிய இடைத்தேர்தல் நடைபெற்ற பிற அனைத்து இடங்களிலும் பாசக மாபெரும் தோல்வியையே சந்தித்துள்ளது.
நடைபெற்ற  இடைத்தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு வெற்றி பெற்றிருந்தால் கூடப் பாசக மாபெரும் வெற்றி என்று ஓலமிட்டிருக்கும். இப்பொழுது இடைத்தேர்தல் தோல்விகள் வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம் இல்லை என்றும் மத்திய அ்ரசின் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தவில்லை என்றும் கதறும் அமீதுசா முதலான பாசகவினர் நரேந்திர(மோடி)க்கு மக்கள் மாபெரும் வரவேற்பு  தெரிவித்துள்ளதாகக் கூறியிருப்பர்; இனி என்றும் பாசகவே ஆளவேண்டும் என்பதே மக்களின் பெரு விருப்பம் என்று  தெரிவித்திருப்பர்.   வெட்கங்கெட்ட கட்சிக்காரர்கள் அப்படித்தான் கூறுவர். ஆனால் மக்களாட்சியில் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் உண்மையை உரைக்க வேண்டுமல்லவா?
 வாக்கு எண்ணிக்கையில் பாசகவிற்குப் பின்னடைவு எனக் கூறிய இதழ்கள், பாசகவின்படு வீழ்ச்சிக்குப்பிறகு அதனைப் பற்றிக் கூற அஞ்சுகின்றன. பாசக வெற்றி பெற்றிருந்தால்  நரேந்திர(மோடி)யின் பணமதிப்பிழப்பு, மக்கள் கருத்திற்கு மாறான பொது நிறுவனங்கள் அமைத்தல், பொது நுழைவுத் தேர்வு, சமற்கிருத இந்தித்திணிப்பு ஆகியவற்றை மக்கள் ஆதரிப்பதாகப் பக்கம் பக்கமாக எழுதியிருப்பர். சில இதழ்களில் தேர்தல் முடிந்தபிறகு தொடர்பான செய்திகளைத் தேடிப்பார்த்தால் எங்கோ ஒரு மூலையில்  சிறிய அளவில் வெளியிட்டுள்ளன. ஏனிந்த அச்சம்? மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டியது ஊடகங்கள் கடமையல்லவா? அக்கடமையிலிருந்து தவறலாமா?
பாசகவின் மக்கள் நலன்களுக்கு எதிரான கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த பரிசே இடைத்தேர்தல் முடிவு என உணர்த்தியிருக்க வேண்டுமல்லவா? இந்தத் தோல்விப்பரிசே பொதுத்தேர்தலிலும் வழங்கப்படவேண்டும், வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்திருக்க  வேண்டுமல்லவா? ஏன் வாய்மூடி அமைதி காக்கின்றன?  ஆதாயத்திற்காக உண்மையைக் கூறாமல் பாசகவிற்கு வால்பிடிப்பது ஊடக அறத்திற்கு எதிரானது அல்லவா?
 காணாக்கடி இயக்கம் (sting operation) மூலம் அண்மையில் மேற்கொண்ட கையுங்களவுமாகப் பிடிக்கும் நிகழ்ச்சியில் 19 ஊடகங்கள் பாசகவிற்கு விலைபோன உண்மையும்  விலை போவதற்கு மடிதற்று முந்துறும் ஆர்வமும் வெளிப்பட்டதைக்கண்டோம்,(மடிதற்று முந்துறும் = உடையை வரிந்து கட்டிக்கொண்டு முன் நிற்றல்)
இத்தகைய ஊடகங்கள் தததம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை ஆள்வோருக்கு உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கூடங்குளம், நெடுவாசல், தூத்துக்குடி முதலான நகர்களில் மக்களுக்கு  ஏற்பட்டுவரும் துயரங்கள் நிற்கவும் பிற இடங்களில் இவை போல்  ஏற்படாமல் இருக்கவும் ஆள்வோர் நடவடிக்கை எடுப்பர். எனவே,  இனியேனும் மக்கள் நலன்நாடும் வகையில் ஊடகங்களில் செய்தி  வெளியிட வேண்டுகிறோம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 448)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல வைகாசி 20-26, 2049 / சூன் 3 – சூன் 09, 2018

Saturday, June 2, 2018

பாசமில்லா உலகிது! – இலக்குவனார் திருவள்ளுவன்


பாசமில்லா உலகிது!

(சீர்திருத்தப்பள்ளிகளில் உள்ளவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என ஒட்டு மொத்தமாகக் கூற இயலாது. வீட்டைவிட்டு வெளியேறி அல்லது வழிதவறி வந்தவர்களும் இங்கே உள்ளனர்.  ஏழ்மையின் காரணமாகவும் குறும்புப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமலும்  பெற்றோரால்  சேர்க்கப்படுபவர்களும் உள்ளனர். சேர்த்து வைத்த ஊதியத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றும் முதலாளிகளை எதிர்ப்பதால் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு அடைக்கப்படுபவர்களும் உள்ளனர். தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்து சிதைவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறாரும் இங்கே சேர்க்கப்படுகின்றனர்.
 பெண்கள் சீர்திருத்தப்பள்ளி மாணாக்கியர்  பாடுவதற்காக 1980 இல் ‘வாசமில்லா மலரிது’ மெட்டில் எழுதிய பாடல்)

பாசமில்லா உலகிது
பணத்தைத்தான் நாடுது
பண்புமில்லா உலகிது
அழிவைத்தான் தேடுது
ஏதேதா ஆசை எந்நாளும் காணும்
நிலையில்லா உலகில் பிழை செய்தே வாழும்
[- பாசமில்லா உலகிது
வீட்டுக் கொரு மைந்தன்
நாட்டைக் காக்க எண்ணில்
எமக்கேன் கவலை
நிலமகள் மீதே
ஈண்டுதரும் பயிற்சி
உயர வைக்கும் முயற்சி
இருப்பினும் ஆசை விடுதலை மேலே
[- பாசமில்லா உலகிது
என்ன குற்றம் செய்தோம்
இங்குவந்து சேர்ந்தோம்
எமக்கோ கவலை
எதிர்காலம் மீதே
மக்கள் செய்யும் தவறு
உணரவில்லை அவர்கள்
எமக்கோ தண்டனை அதனால்தானே
[- பாசமில்லா உலகிது
பிறந்தது தவறா
வளர்ந்தது தவறா – உயிர்
இருப்பதுதான் தவறா?
காலங்கள் செல்ல
நல்ல நிலை வரலாம்
காத்திரு அதுவரை நீயே!
[- பாசமில்லா உலகிது