Monday, August 27, 2018

பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு

முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம்


  தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்றாலும் இது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவந்த துறைகளில்கூட, இணையப் பயன்பாடு, கணிணிப் பயன்பாடு ஆகிய காரணங்களால் தமிழ் ஒதுக்கப்பட்டு வருகிறது. இவற்றிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த முடியும். என்றாலும்  தக்க வழிகாட்டியின்றியும், சோம்பல், ஆர்வமின்மை ஆகியவற்றாலும் ஆங்கிலப் பயன்பாடு பெருகி வருகிறது.
  இச்சூழலில் பதிவுத்துறையின் தமிழ்ப்பயன்பாட்டிற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
  பதிவுத்துறையில் பிற துறைகளைப்போலவே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இணையப் பக்கங்கள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட நேர்வில் தமிழில் மட்டுமே பதியும் முறையில் இருப்பதாகவும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்றும் வழக்குரைஞர் பிரகாசுராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
  பதிவுத்துறையில் காலத் தாழ்ச்சியை இல்லாமல் ஆக்கவும் ஊழலுக்கு வழிவகுக்காமல் இருக்கவும் எளிய வெளிப்படையான ஆளுமை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துகள் அடிப்படையில் (simplified and transparent administration of registration) இது STAR என ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. இதன் மேம்பட்ட புதிய வடிவம் ஃச்டார்(STRAR) 6.7 எனப்படுகிறது.
இதில் தமிழில் மட்டுமே பதிய முடியும் என்பதால் வழக்கு  தொடுத்துள்ளார்.
  சென்னையில் தகவல் துறையில் பணியாற்றுநர் வெளிமாநிலத்தவராக உள்ளமையாலும் அவர்கள் தமிழில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யாத  காரணத்தால், அவை மறுக்கப்படுவதாலும் ஆங்கிலம் தேவை என்கிறார். இதற்கு நாம் இசைந்தால் இந்தி, தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியினரும் இதே போல் கேட்டுப் பெறும் அவல நிலை மேலோங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  எந்த நாட்டிலும் அந்த நாட்டு மக்கள் மொழியின் பயன்பாட்டிற்கு எதிராக ஒருவர் செயல்பட்டு மானமுள்ள மனிதராக நடமாட இயலாது. நம் நாட்டில்தான் தமிழுக்கு எதிரானவர்கள் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளனர். அதனால்தான் துணிவாக அவர் வழக்கு  தொடுத்துள்ளார்.
  இவ்வழக்கில்(ஆகத்து24,2018 அன்று) நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத்து ஆகியோர் அடங்கிய அமர்வு மேம்படுத்தப்பட்ட இப்புதிய வடிவில் (எண் 6.7.) ஆங்கில மொழியிலும் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர். இதனைச் செயல்படுத்தி 27.08.2018 அன்று அறிக்கை அளிக்குமாறும் ஆணையிட்டுள்ளனர்.
  இவ்வழக்கிற்கான கேட்பு நேற்று(ஆக,27) வந்தது. அப்பொழுது “பத்திரப் பதிவு விதிப்படி அந்தந்த மாநில மொழியில் தான் பத்திரம் பதிவு செய்ய முடியும். ஆங்கிலத்தைச் சேர்க்க முடியாது” என கொள்கை முடிவைக் காரணம் காட்டி தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.
  இந்த முடிவைத் தெரிவித்த தமிழக அரசிற்கும் செயலர் திரு க.பாலச்சந்திரன் இ.ஆ.ப., பதிவுத்துறைத்தலைவர் திரு குமரகுருபரன் இ.ஆ.ப. ஆகியோருக்கும் பாராட்டுகள். இக்கொள்கை முடிவில் உறுதியாக நிற்குமாறும் இணையப்பக்கம் முழுமையும் தமிழில் அமைய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகிறோம்.
 ஆனால்,  “பத்திரப்பதிவு முகப்புப் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்யும் வகையில் மென்பொருளை மாற்றக் கருதிப்பார்க்க  முடியுமா?” என்று நீதிபதிகள் கேட்டு வழக்கை வரும் 30.08 அன்று ஒத்தி வைத்துள்ளனர். இதில் காட்டும் விரைவைப் பிற வழக்குகளிலும் எதிர்பார்க்கிறோம்.
  பெரும்பாலும் அரசின் இணையப்பக்கங்கள் ஆங்கிலப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்கும் வகையில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் அயல்மொழிகள் ஆட்சி செய்வதால் மண்ணின் மக்கள் இடர்ப்படுகின்றனர். ஆங்கிலமறிந்தவர்கள் அல்லது வழக்குரைஞர்கள் மூலமே ஆங்கிலப்பயன்பாடு உள்ள இடங்களில் விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறிருக்க அயல்மொழியினர் தமிழ் உள்ள இடங்களில் வழக்குரைஞர்கள் மூலம் தத்தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் அல்லவா?
  தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் முழுமையாக நிறைவேற்றப்படவும் அனைத்துத் துறைகளிலும் இணையப்பக்கங்கள் முழுமையும் (தமிழறியார் புரிந்து கொள்ள மட்டும் ஆங்கிலத்தில் தந்துவிட்டுத்) தமிழிலேயே பதியும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் மாண்பமை நீதிபதிகள் நெறியுரை வழங்க வேண்டும். பல நல்ல தீர்ப்புகளை வழங்கி வழக்காளர்கள் மனத்தில் இடம் பெற்றுள்ள மாண்பமை நீதிபதிகள் தமிழ் சார்பான நல்ல தீர்ப்பை வழங்கி உலகத்தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பெற வேண்டும்.
  தமிழ்வளர்ச்சித்துறை, பதிவுத்துறை தொடர்பான இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்மட்டுமே இணையப் பதிவுகளில் இலங்கும் நிலைக்கு உயர் நீதிமன்றம் மூலம் ஆணை பெற வேண்டும்.
  விருதுகள், பொருளுதவிகள், விழாக்களில் சிறப்பாகச் செயல்படும் தமிழ்வளர்ச்சித்துறை ஆட்சிமொழிச் செயலாக்தக்தில் சுணக்கமே காட்டி வருகிறது. அரசு அலுவலகங்கள் பலவற்றில் சென்று பார்த்த பொழுது ஆங்கிலப்பயன்பாடே மிக்கு இருக்கும் வருந்தத்தக்க நிலையே காணப்பட்டது. ஏதேனும் துறையில் தமிழ்ச்செயல்பாடின்மை குறித்துத் தெரிவித்தால் எங்கள் துறைக்கு உரியதல்ல என உரிய துறைக்கு அனுப்பித் தகவல் தெரிவிக்கும் காலம் கடந்த பணியை மட்டுமே செய்கிறது. அவ்வாறில்லாமல் முனைப்புடன் செயல்படவேண்டும்.
  இவ்வழக்கின் மூலமே முதலில் குறிப்பிட்டவாறு முழுமையான ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கான நெறியுரைகளையும் ஆணைகளையும்  தமிழ்வளர்ச்சித்துறை பெற வேண்டும்.
  அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதில்லை என்ற நீதிமன்ற நிலைப்பாட்டை இதிலும் கடைப்பிடிக்குமாறு மாண்பமை நீதிபதிகளை வேண்டுகிறோம்.
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 111)
[பொதுநோக்கில் பாராமல் பகுதிதோறும் ஆராய்ந்து முறையோடு பொருந்தி நீதி வழங்குவதே நடுவுநிலைமை என்னும் அறமாகும்.]
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Friday, August 24, 2018

கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? : தி.க.உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? : 

தி.க.உறங்குவது ஏன்?


  கடவுள் உருவச் சிலைகள் திருட்டுகள் குறித்துத் தாங்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் நேர்மையாக நடவடிக்கை எடுப்போம் எனச் சார்புரை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தேன்.
அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாளர்களா  அல்லரா என்பதை மக்கள் அறிவார்கள். எனினும், தவறாகப் பாகுபடுத்தும் வரையறை மூலம் நேர்மையை அளவிட்டுப் பெருமை பேசக்கூடாது.
 நேர்மையாக வாழும்    ஒருவர் தன்னை நேர்மையாளராகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், “நான் படித்தவன், நேர்மையாகத்தான் வாழ்வேன்” எனச் சொல்லக்கூடாது. படித்தவர்கள்தாம் மிகுதியும் நேர்மைக் குறைவுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நேர்மையின்றி வாழும் முறையையும் படித்துக் கொள்கிறார்கள். படித்தவன் நேர்மையாளன் என்றால் படிக்காதவன் நேர்மைக் குறைபாடுடையவனா? உண்மையில் சூது வாது படிக்காதவன்தான் நேர்மையாளனாக உள்ளான். எனவே, கல்விஅடிப்படையில் நேர்மையை அளவிட்டுக் கூறுவது தவறாகும்.
  சிலர், நான் உண்மையான கிறித்துவன், பொய் பேச மாட்டேன் அல்லது குற்றம் புரிய மாட்டேன் என்பர். அப்படியானால், இந்து, இசுலாம், புத்தம் முதலான பிற சமயங்களைச் சார்ந்தவர்கள் குற்றம் புரிபவர்களா? இவ்வாறு சமய அடிப்படையில் நல்லவன் அல்லது தீயவன் என மதிப்பிடுவதும் தவறாகும்.
   இதுபோல்தான் தெய்வப் பற்றுள்ளவன் எனவே நேர்மைக் குறைபாடுடையவன் அல்லன்; நேர்மையாளன் எனக் கூறுவதும். கடவுள் மறுபிறப்பாகக் கூறிக்கொண்ட காஞ்சி செயேந்திரன்தான் கற்பழிப்பு, கொலை, ஒழுக்கக்கேடுகளின் உறைவிடமாக வாழ்ந்தான் என அவனுடன் வாழ்ந்தவர்களே தோலுரித்துக் காட்டினர்.
 தெய்வப்பணி புரிந்த தேவநாதன்தான் கருவறையிலேயே திருமணமான பெண்களை ஏமாற்றி உறவு கொண்டவன்.
 கிருட்டிணன் போன்ற கடவுள் பிறப்பெடுத்தவனாகக் கூறிக்கொண்ட சாமியார் நித்தியானந்தன்தான் பெண்கள் பலர் வாழ்வில் விளையாடி உள்ளான்.
  ஒழுக்கக்கேடுகளால் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்ட ஆசாராம் சாமியார், குற்ற உணர்ச்சி ஏதுமின்றி, “எங்கள் கடவுள் கிருட்டிணன் செய்த  காம விளையாட்டுகளைத்தான் நானும் செய்தேன்” என்று நீதிமன்றத்திலேயே  சொன்னதை யாரும் மறந்திருக்க முடியாது.
 சாமியார்கள் என்றாலே பெண்களின் கற்புடன் விளையாடுபவர்கள் என்பதைத்தான் நாளும் நிகழ்வுகள் காட்டுகின்றன. இறை நம்பிக்கையைப் பரப்புபவர்களில் பெரும்பான்மையர் இறை நம்பிக்கையற்ற ஒழுக்கக்கேடர்களாக உலவி மக்களை ஏமாற்றி வருவதையும் நாம் அன்றாடம் காண்கிறோம்.
 சாமியார்களை ஒழுக்கவான்களாகப் புகழ்வதும் அவர்கள் குற்றவாழ்க்கை தெரிய வந்தால் போலி சாமியார்கள் என்று சொல்வதும் வழக்கமாகப் போய்விட்டது. உண்மையில்  சாமியார் என்று ஏய்த்துத்திரியும் அனைவருமே போலிகளே! உண்மையான அறவாணர்கள் விளம்பரம் எதுவுமின்றி அமைதியாக நற்பணிகள் ஆற்றி வருகின்றனர்.
  அடுத்தவர் பணத்தில் அறப்பணி செய்து நம்பிக்கையை அறுவடை செய்துகொண்டு ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடும் இத்தகைய போலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
  அன்றாடம் இறைப்பணிபுரியும் உத்தமர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள்தாம் சாமிச் சிலைகளைத் திருடி விற்று வருகிறார்கள்.
 இவர்கள் எல்லாம் கடவுள்களைக் கொண்டு தங்கள் பிழைப்பை நடத்துகிறார்களே தவிர, கடவுள்மீதுள்ள அச்சத்தால் குற்றம் தவிர்க்க வில்லை. இறைநம்பிக்கை இவர்களை நேர்மையாளராக வாழ வைக்கவில்லை.
  எனவே, தெய்வ நம்பிக்கை அடிப்படையில் நேர்மையை மதிப்பிடுவது பெருந் தவறாகும்.
 இறை ஏற்பாளர்களை விட இறை மறுப்பாளர்கள்தாம் தீவினைக்கு அஞ்சி வாழ்கிறார்கள். என்றாலும் பகுத்தறிவாளன் எனவே, பண்பாளனாக வாழ்கிறான் என யாரையும் சொல்ல முடியாது.
  ஆனால், ஒழுக்க நெறியில் வாழ்பவன், பண்பாளன் எனவே தவறான பாதையில் செல்லவில்லை என நாம் அத்தகையோரைச் சொல்ல முடியும். எனவேதான் திருவள்ளுவர் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார். ஒழுக்க நெறியில் வாழ்பவன் தவறிழைத்தால் அவன் ஒழுக்க நெறியில் வாழ்பவனாக முடியாதே!
 எனவே, அமைச்சர்பெருமான், “தாங்கள் ஒழுக்கநெறியில் வாழும் பண்பு நிறைந்தவர்கள்/ எனவே நேர்மையாளராகத்தான் செயல்படுவோம்” என உண்மையாக இருப்பின் கூறலாம்.
  ஒழுக்க நெறியில் வாழாமலேயே ஒழுக்க நெறியில் வாழ்வதாக ஒருவர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மக்கள் அறிவர். என்றாலும் பண்பை அடிப்படையாகக் கொண்டு நேர்மையை அடையாளம் காண்பது சரியே!
 ஆனால், அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளதால் இறை நம்பிக்கையற்றவர்கள் நேர்மைக் குறைபாடு உடையவர்கள் எனப் பொருளாகிறது. இவ்வாறு இறைநம்பிக்கையற்றவர்களைக் குறை சொல்லும் பேச்சைக்கேட்டும் இறை மறுப்பாளர் கழகங்கள், பகுத்தறிவாளர் கழகங்கள், திராவிடர் கழகங்கள் வாளாவிருப்பது ஏன்? இதனை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா? இவ்வாறு பேசியதற்குக் கண்டனக்கணைகள் பாய்ந்திருக்க வேண்டாவா? இவ்வாறு  சொன்னவரை மன்னிப்பு சொல்ல வைத்திருக்க வேண்டாவா? வருத்தம் தெரிவிக்கச் சொல்லி யிருக்க வேண்டாவா? ஆனால், அமைதி காத்து அதிமுகவின் சார்புரையாளர் கூறுவதுசரிதான் என்பதுபோல் நடந்து கொள்கிறார்களே!
  எனினும் அமைச்சரின் இத்தகைய பேச்சிற்கு நாம் கண்டனம் தெரிவிக்கிறோம். பிறரையும் கண்டனம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
 நேர்மைக்கும் கடவுள் பற்றிற்கும் தொடர்பில்லை என்னும் உண்மையை உரக்கச் சொல்ல விரும்புகிறோம். அப்படி இருந்தது என்றால் உலகில் நேர்மை எங்கும் வாழ்ந்திருக்குமே! இதற்காகக் கடவுள் நம்பிக்கையாளர்கள் நேர்மையற்றவர்கள் என்று சொல்வதாகப் பொருளல்ல. அவர்களுள்ளும். தெய்வ நம்பிக்கையால் தங்களுக்குள் வேலி அமைத்துக்கொண்டு அல்லன பக்கம் கடக்காமல் வாழும் நேர்மையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கடவுள் நம்பிக்கையுடன் பண்பாளர்களாகவும் வாழ்பவர்கள். கடவுள் நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் முடிச்சு போட வேண்டா என்றுதான் சொல்கிறோம்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை: இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (திருவள்ளுவர், திருக்குறள் 137)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, August 17, 2018

உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித்

திமுகவைச் சிதைக்க வேண்டா!

  வேட்டைக்காரன் காத்துக் கொண்டுள்ளான். பாய்ந்து குதறி எடுக்க நேரம் பார்த்துக்கொண்டுள்ளான். வேட்டை நாய்களையும் ஆயத்தமாக வைத்துள்ளான். குறி வைக்கப்பட்டவர்களுக்கு எதையும் எதிர்நோக்கும் வலிமையும் ஒற்றுமையும் இருப்பின் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த உண்மை ஒன்றும் மறைபொருளன்று. அறிந்திருந்தும் சிலர் வலையில் விழ விழைவதால் அனைவருக்குமே தீங்கு நேரும் பேரிடர் உள்ளது. இந்தச் சிந்தனையுடன் நாம் கட்டுரையைத் தொடருவோம்!
  மேனாள் முதல்வரும் அதிமுக தலைவியுமான செயலலிதா மறைந்த பின் பல நேர்வுகளில் அதிமுக ஒற்றுமை குறித்துக் குறிப்பிட்டுள்ளோம். அவை இன்றைக்குத் திமுகவிற்கும் பொருந்தும். ‘’இன்று அதிமுக நாளை திமுக’’ என்றும் எச்சரித்திருந்தோம் இன்று அவை உண்மையாகிக் கொண்டுள்ளன.
  பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் திமுக இயங்குவது இப்போதைய சூழலில் சிறப்பானதாகும். அழகிரி திமுகவில் இல்லாததால் அவர் திமுகவிற்கு எதிராகச் செயல்படுகிறார் எனக் குற்றம் சுமத்திப் பயனில்லை. மாறாக அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் அவரும் தாலினும் கட்டுப்பட்டு இருப்பர். குடும்ப அரசியலை முளையிலேயே கிள்ளி எறியாமல் இப்பொழுது குடும்ப அரசியல் எனக் கூறிப் பயனில்லை. எனவே, தாலின் பொதுச் செயலராகவும் அழகிரி பொருளாளராகவும் இருந்தால் தவறில்லை. அல்லது அழகிரியின் மகனுக்கும் மகளுக்கும் வேறு முதன்மைப்பொறுப்புகள் அளிக்கலாம்.
  பேராசிரியர் அன்பழகன் தலைமப் பொறுப்பை ஏற்கா நேர்வில் அவரைத் திமுகவின் நெறியாளராகக் கொண்டு கட்சியை நடத்தலாம் என முன்பு குறிப்பிட்டிருந்தோம். மாறாக, திமுகவில் நெறியாளர் குழு ஒன்றை அமைத்துப் பேராசிரியர் அன்பழகனைத் தலைமை நெறியாளராகவும், (திமுகவில சேர்த்துக் கொண்டு) அழகிரி, மூத்த தலைவர்கள் சிலரை நெறியாளர்களாகவும் கொண்டு கட்சியை வழி நடத்தச் செய்யலாம். உழைப்பிற்கு ஏற்ற பதவி அல்லது உரிய அறிந்தேற்பு என ஆதங்கத்துடன் எதிர்பார்ப்பவர்களை மதிக்கும் செயலாக இஃது அமையும்.
  அழகிரி திமுகவில் இருந்தால் செல்வாக்குடன்தான் இருப்பார். ஆனால், அதே செல்வாக்கு வேறு கட்சியில் அல்லது திமுக எதிர்ப்பணியில் இருந்தால் இருக்காது. அழகிரிக்கும் தாலினுக்கும் இப்போதுள்ள செல்வாக்கு அவர்கள் இருவரும் தலைவரின் பிள்ளைகள் என்பதால் உருவானதுதான். என்னதான் படிப்படியாக உழைத்துப் பெற்ற முன்னேற்றம் என்று சமாளித்தாலும் இதே முன்னேற்றம் இத்தகைய உழைப்பு உடைய பிறருக்குக் கிடைக்கவில்லையே! எனவே, தந்தையால் பெற்ற சிறப்பை இருவரும் தந்தையின் உழைப்பால் மெருகேறிய திமுகவிற்கு எதிராகப் பயன்படுத்தக் கருதக்கூடாது.
  தங்களால் திமுகவிற்குக் கேடு அல்லது சிதைவு வந்தால், அதுவே அவருக்குச் செய்யும் வஞ்சகம் என உணர வேண்டும். அத்தகைய எண்ணம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் சூழமைவில் உள்ளோர் உணர்ச்சியேற்றும் பொழுது தடுமாறித் தவறான பாதைக்குச்செல்ல  வாய்ப்பு உள்ளது.
  ஒருவருக்கு ஒருவர் போட்டுக் கொடுப்பதன் மூலம் வழக்கு கள்தொடுத்து இரு தரப்பு கழுத்தையும் நெரிக்கவே பாசக முயல்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அல்லவா? ஒரு தாய்ப்பிள்ளைகளான உடன்பிறப்புகளிடையே ஒத்துப்போகாதவர்கள் பிறருடன் ஒத்துப்போவது எங்ஙனம் என மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா?
 “அண்ணன் எப்பொழுது சாவான் திண்ணை எப்பொழுது காலியாகும்” எனக் காத்துக் கிடந்தது பாசக. அதற்கேற்ப திண்ணை காலியாகி உள்ளது. அதன் ஆசைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அதன் தூண்டிலுக்குத் திமுகவினர் இரையாகக் கூடாது.
 கவிஞர் கனிமொழி, மாறன் உடன்பிறப்புகள் தனிஅணி காணும் அளவிற்குச் செல்ல வாய்ப்பில்லை. ஆனால், தனி அணி காண்போர் இவர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலலாம். யாராக இருந்தாலும் திமுகவால்தான் வாழ்வு பெற்றுள்ளனர் என்பதை நினைந்து திமுகவைச் சிதைக்கும் முயற்சியில் யாரும் இறங்கக் கூடாது.
  ஊடகத்தினரையும் செல்வர்களையும் கலைத்துறையினரையும் பாசக விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் ஆட்சி மாறினால் கட்சியை மாற்றிக் கொள்பவர்களே! என்றாலும் இன்றைக்கு இவர்களின் பரப்புரைப் பணி அல்லது பாசக எதிர்ப்பிலிருந்து ஒதுங்கி நிற்றல் பாசகவிற்கு நன்மையே பயக்கிறது. என்றாலும் பாசகவின் ஒரே நாடு! ஒரே சமயம்(மதம்)!  ஒரேமொழி!  என்னும் இந்துமத வெறியும் சமற்கிருதத் திணிப்பு வெறியும் நாட்டிற்குப் பெரும் தீங்கு இழைத்து வருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே, பாசகவின் பக்கம் சாய்பவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்பதையும் உணர வேண்டும்.
  திமுக, சிதைவு முயற்சியாளர்களால் அழியாது. ஆனால், அதன் வளர்ச்சி குன்றும். எதிர்பார்க்கும் ஆட்சிக் கனவு தகர்ந்து போகும். சிதைவு முயற்சியாளர்களுக்கும் கனவு நனவாகாது. எனவே, விலகி நின்று கனவைச் சிதைத்துக் கொள்வதை விட உடனிருந்து போராடி வாகை சூட முயல்வதே சிறந்தது.
 அழகிரி தன்பக்கம் தொண்டர்கள் உள்ளதாகக் கூறுகிறார். குறிப்பிட்ட மாவட்டங்களில் அவருக்குத் தொண்டர்கள் மிகுதியாகத்தான் உள்ளனர். ஆனால், திமுகவின் எதிர்ப்பு நிலையில் களமிறங்கினால் இவர்களில் பெரும்பான்மையர் அவருடன் இருக்க மாட்டார்கள். அவருக்கென்று இல்லை. திமுகவில் உள்ள பிறருக்கும் இது பொருந்தும்.
  எனவே, யார் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது இப்போதைய வினாவல்ல. மாறாக யார் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் முதன்மையானது.
  திமுக கலைஞர் கருணாநிதியின் குடும்ப ஆளுமைக்குக் கட்டுப்பட்ட கட்சியாக எப்பொழுதோ மாறிவிட்டது. குடும்ப ஆளுமையில் ஏற்படும் விரிசல் திமுகவையும் பாதிக்கும் என்பதே உண்மை. மனம்விட்டுப் பேசி, யார் பெரியவர் என்னும் எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, யார் யார் திமுக வலிமைக்கு என்ன என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுத்தால் அவர்களுக்கும் நல்லது. திமுகவிற்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது.
  பாசகவிற்கு அளிக்கும் முதன்மை  தமிழ்நாட்டைப் பல தலைமுறைக்குப் பின் தள்ளி  அழிவிற்கு அளித்துவிடும் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டைக் காப்பாற்ற திராவிடக் கட்சிகளின் நிலைப்பு தன்மை தேவைஎன்பதை உணர வேண்டும். எனவே, “உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா!” என இதன் முன்னணித் தலைவரகளை – கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினரை – வேண்டுகிறோம்.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்(திருவள்ளுவர், திருக்குறள் 474)
தான் சார்ந்துள்ள அமைப்போடு ஒத்துப்போகாமல் தன் வலிமையையும் பிறர் வலிமையையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல், தன் சிறப்பினை வெகுவாக மதித்துப் போற்றிக் கொண்டிருப்பவன் விரைவில் கேடடைவான் என்கிறார் திருவள்ளுவர். உலகெங்கும் இதனைப் புரிந்து கொள்ளாமல் கேடுற்ற அரசியல்வாதிகள் பலராவர். அந்தப் பாதையில் திமுக தலைவர்கள் செல்ல வேண்டா!
தமிழ்மானமும் தன்மானமும் நிலைக்க
ஒதுக்குவீர் பாசகவை!
ஒற்றுமை கொண்டு வாகை சூடுவீர்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, August 14, 2018

ஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று!

  தொண்டர்களை அரவணைத்துச் செல்வதிலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதிலும் வல்லவர் அழகிரி. எனினும் ஒரு பகுதியில் பெறும் சிறப்பைவிட மாநில அளவில் பெறும் சிறப்பு வலிமையானது. எனவேதான், தென்மண்டலப் பொறுப்பாளரான இவரை விட மாநிலப் பொறுப்புகளில் உள்ள தாலின் வலிமையாளராக உள்ளார்.
 தலைவரை இழந்த திமுகவில் யார் பெரியவர் என்னும் போட்டியில் இறங்குவது கட்சி ஒற்றுமைக்கும் குடும்பஒற்றுமைக்கும் நல்லதல்ல.
  அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்டம் வரலாம். என்றாலும் அவரது அதிரடியான அறிவிப்புகள் ஊடகத்திற்குத் தீனியாக அமையுமே தவிர, அவரது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படா. மத்திய அரசின் தூண்டுதலால் தனிக் கட்சி தொடங்கினாலும் இரசினி கட்சியில் பொறுப்பேற்றாலும் திமுகவில் சலசலப்பை உண்டாக்கலாம். ஆனால், பெரும்பான்மையர் அவருடன் செல்ல மாட்டார்கள். அப்படிச் செல்வதாக இருந்தால் அவரைக் கட்சியை விட்டு நீக்கிய செயல் கட்சியில் ஓர் அதிர்வை உண்டாக்கியிருக்க வேண்டுமே! அப்படி ஒன்றும் ஏற்படவில்லையே!  அழகிரி திமுகவில் இருந்தால் அவரது பின்னால் அணிவகுக்கும் தொண்டர்கள் அவர் வெளியே இருக்கும் பொழுது இல்லையே அதுதான் உலக நடைமுறை. கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கைக் கணக்கிட்டு, அழகிரி தனி அணி கண்டாலோ வேறு வகையாகத் தனித்துச் செயல்பட்டாலோ அவர் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய இயலாது.
 தாலினுக்குத் தரும் முதன்மை மூத்த தலைவர்களிடம் மன வருத்தத்தைத் தந்திருக்கலாம். என்றாலும் அவர்களின் பிள்ளைகள் தாலினைவிடச் செல்வாக்கு மிக்கவர்களாக உயரவில்லை. தாலினுடன் இணைந்து கட்டுப்பட்டு நடந்தால்தான் கட்சியில் பொறுப்பு என்ற நிலையில்தான் உள்ளனர். எனவே, மூத்த தலைவர்கள், தத்தம் பிள்ளைகள் நலம் கருதி அடங்கித்தான் கிடக்கின்றனர். செயல்தலைவராகவும் பொருளாளராகவும் இரு முதன்மைப் பொறுப்புகளில் தாலின் இருந்தாலும் வெளிப்படையாக அதனைத் தட்டிக்கேட்கும் துணிவுகூட இல்லாதவர்கள், அவரால் ஓரங்கட்டப்படலாமே தவிர, அவரை ஓரங்கட்டும் செல்வாக்கு அற்றவர்களே!  முதுமைப்பருவத்தின் வாயிலில் வந்த பின்னும் இளைஞர் அணித் தலைவராகத் தாலின் செயல்பட்டபொழுது வாய்மூடிக்கிடந்தவர்கள்தானே! இப்பொழுது மட்டும் துள்ளிக் குதிக்கவா போகிறார்கள்? எனவே, காலங்கடந்து அழகிரி எடுக்கும் எந்த முயற்சியாலும திமுகவில் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பில்லை.
  கலைஞர் கருணாநிதிதான் திமுக என்ற நிலை மாறி அவரது காலத்திலேயே தாலின்தான் திமுக என்னும் நிலை  வந்துவிட்டது. இந்தச் சூழலில் அவரது தலைமையில் திமுக இயங்குவதுதான் நல்லது.
  கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்ட, இப்பொழுதும் செயல்படும் பாங்கு அவரது பட்டறிவைப் பட்டை தீட்டிக் கட்சி நலனுக்கு உதவும.
 தாலின்,  முதுமையைக் காரணமாகக் கூறிப் பேராசிரியர் அன்பழகனைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகச் செய்யக் கூடாது. செயல்படா நிலையிலேயே கலைஞர் கருணாநிதி தலைவராகத் தொடரவில்லையா?
  ஒருவேளை தாலின் தலைவராக இருக்கும்பொழுது தான் அவர் கீழ்ப் பொதுச்செயலராக இருப்பதா எனப் பேராசிரியர் எண்ணலாம். அதனால் அவர் முதுமையின் போர்வையில் விலக முன்வரலாம். அத்தகைய சூழலில் கட்சியின் நெறியாளராகப் பேராசிரியருக்குப் பொறுப்பு வழங்குவது தாலினுக்கும் கட்சிக்கும் நல்லது. செயல் தலைவர் பொறுப்பை உருவாக்கிய திமுகவால் நெறியாளர் பொறுப்பை உருவாக்குவது ஒன்றும் சிக்கலானது அல்ல.
 அழகிரிக்குப்பொறுப்பு தந்தாலும் இணங்கிச் செல்வாரா என்பதில் தாலினுக்கு ஐயம் எழுவதே இயற்கை. எனவே, அவரை ஒதுக்கவே எண்ணுவார். இச்சூழலில்,எந்தப் பொறுப்பையும் எதிர்பார்க்காமல் தம்பிக்கும் கட்சிக்கும் வழிகாட்டியாக அழகிரி விளங்கலாம். இதனால் அவரது மதிப்புதான் உயரும்.
  இடைத்தேர்தல்களுக்கு முன்னர்ப் பொதுத் தேர்தல் வர பாசக வழி வகுக்கலாம். ஒரு வேளை இடைத் தேர்தல்கள் வந்தால் திமுக வெற்றி வாய்ப்பு ஐயமே!திருவாரூரில் தந்தைக்காக வாக்கு திரட்டிய செல்விக்கு ஓரளவு ஆதரவு உள்ளது. எனினும் கலைஞர் கருணாநிதிக்குக் கிடைத்த வாக்குகள் அவரது குடும்பத்தினருக்கோ கட்சியினருக்கோ கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறே  எனவே, திமுக பெறக்கூடிய வாக்குகளைக் குறைத்துச் செல்வாக்கைக் காட்ட அழகிரி முயலக்கூடாது. மாறாக வெற்றி வாய்ப்பில்லாத திமுகவை வெற்றி பெறச் செய்து தன் செல்வாக்கை அவர் உணர்த்த வேண்டும்.
 நேரடியாகப் பொதுத்தேர்தல் வந்தாலும் திமுகவை ஆட்சியில் அமர்த்தும் வண்ணம்செயல்படுவதுதான் அழகிரிக்குப் பெருமை சேர்க்கும். மாறான இப்போதைய போக்கு அவருக்கு அழகல்ல
  தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சியான திமுகவின் வலிமை தமிழ்நாட்டிற்கு நலம் சேர்க்கும். தமிழ்நலன் நாடும் வலிமையான கட்சி எதுவும் தோன்றாத காரணத்தால், அதன் வீழ்ச்சி நாட்டிற்கும் வீழ்ச்சியாய் அமைந்துவிடும். எனவே, நல்லன ஆற்றுவதன் மூலம் திறமையை வெளிப்படுத்த வேண்டும். மாறாக, அல்லன செய்து அழிவுப்பாதையில்  ஆதரவாளர்களைத் தள்ளுவதால் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் பெரும் நன்மை விளையாது.
  ஆற்றல்மிகு அழகிரி, திமுகவில் இணைந்து, அவரது தந்தை காலத்தில் திமுக சந்தித்த சறுக்கல்களைத் தாலினுடன் இணைந்து சரி செய்ய முன் வரவேண்டும். அவரது திறமை கட்சியை வலுப்படுத்தி நாட்டிற்கு நன்மை விளைவிக்க உதவ வேண்டுமே தவிர, கட்சியைச் சிதைப்பதற்குத் துணைபோகக் கூடாது.
 திமுகவில் இருப்பதுதான் தனக்கு செல்வாக்கு என்பதை அழகிரி உணர்வாரா? அல்லது திமுகவை வீழ்த்துவதாகக் கூறித் தான் வீழ்வாரா
கடல்ஓடா கால்வல் நெடும்தேர்; கடல்ஓடும்
நாவாயும், ஓடா நிலத்து(திருவள்ளுவர், திருக்குறள் 496).
நிலத்தில் ஓடும் வலிமையான தேர் கடலில் ஓடா.
கடலில் ஓடும் பெரிய கப்பல் நிலத்தில் ஓடா.
என்பதை இத் திருக்குறள் மூலம் விளக்கி ஓர் இடத்தில் செல்வாக்குடன் உள்ளவர், அவ்விடத்தை விட்டு அகலும் பொழுது செல்வாக்கு இழப்பார் என்கிறார் திருவள்ளுவர்.
ஆற்றலாளர் அழகிரி தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றும் வகையில் அரசியல் பாதையை வழிவகுத்துக் கொள்வாராக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Saturday, August 11, 2018

எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

உச்சநீதிமன்றக் கருத்திற்கு இணங்க

எழுவரை விடுதலை செய்தபின்னர்

பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும்

       இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்படடவர்களுக்குத் தண்ட னையே வழங்கியிருக்கக்கூடாது.
  வழங்கிய பின்னரும் வழக்கு தொடர்பானவர்கள் முறையற்ற வழியில் இவர்கள் தண்டிக்கப்படடதைத் தெரிவித்த பின்னராவது எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். விடுதலைக்கான பல வாய்ப்புகள் வந்தபின்னரும் மத்தியஅரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.
  இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்வது மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் அவர்கள் செய்தது ஒப்புமைப்படுத்த முடியாத குற்றம் என்றும் கூறி விடுதலைக்கு எதிரான கருத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் சனவரி 23 இல் தெரிவித்தது. மத்திய அரசிற்கு எண்ணிக்கை தெரியாக் காரணத்தால் ஏறத்தாழ இரு மடங்கு காலம் தள்ளி இந்த முடிவைத் தெரிவித்துள்ளது.
  மார்ச்சு 2016 இலேயே தமிழக அரசு இந்த எழுவரையும் விடுவிக்கும் முடிவை எடுத்து, அப்போதைய முதல்வர் செயலலிதா இதனை அறிவித்தார். அரசியல் யாப்பிற்கிணங்க எடுக்கப்பட்ட சரியான முடிவு இது. இதனை மத்திய அரசிடம் தெரிவித்தால் மட்டும் போதுமானது. ஆனால் மத்திய அரசு குறுக்கிட்டு அதன் கருத்தைக் கேட்க வேண்டுமென்றது. கருத்து என்ற பெயரில் மறுப்பைத் தெரிவித்துள்ளது. கருத்தைக் கேட்க வேண்டுமென்றால் அக்கருத்தின்படி ஏற்றோ மறுத்தோ முடிவெடுக்கலாம் என்றுதான் பொருள். ஆனால், அதன் கருத்தே முடிவானது என்றால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லையே!
 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இரஞ்சன் கோகோய்(Justice Ranjan Gogoi), நவீன் சின்கா(Justice Navin Sinha), கே.எம். சோசப்பு(Justice K.M. Joseph) அடங்கிய அமர்வு, தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் கருதிப்பார்க்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
    இதன் பொருள் தமிழக அரசின் விடுவிப்பு முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதே!
  சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே மட்டும் அல்ல குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையேயும்தான். எனவே, கொலையுண்டவர் முன்னாள் தலைமையமைச்சர் எனக்கூறித் தண்டிக்கப் பட்டவர்களிடையே வேறுபாடு காட்டுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
  பயங்கர ஆயுதங்களைத் தந்தவர்களுக்கு எல்லாம் குறைந்த தண்டனையும் முன்கூட்டி விடுதலையும் வழங்கியுள்ளனர். ஆனால், படப்பொறிக்குப் பசை மின்கலம் வாங்கித் தந்தவர், ஆள் மாறாட்டத்தில் தொடர்பில்லாதவர் என்றெல்லாம் அப்பாவிகளைச் சிக்க வைத்து நெடுங்காலம் சிறையிலும் அடைத்துள்ளனர். இருப்பினும் மனம் மாறாமல் சிறையிலேயே மடியட்டும் எனக் கருதினால் இறைவன் இத்தகையோருக்கு நல்வினை புரிவாரா? அல்லல் அளிப்பாரா? விடுவிப்பை மறுப்போர் எண்ணிப் பார்க்கட்டும்.
  தமிழர் நலனுக்கு எதிரானது என்றால் பாசகவும்  பேராயமும்(காங்கிரசும்) கை கோத்துக்கொள்ளும். எனினும் சில நேர்வுகளில் பேராயம் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. அதன் விளைவாகத்தான் இவர்களை விடுதலை செய்வதில் தங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை என இராசீவு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சட்டப்படி தரப்பட வேண்டிய விடுதலையைப் பாசக தடுத்து நிறுத்துவது அறமற்ற செயலாகும். இவர்கள் விடுவிக்கப்பட்டால் சு.சா.முதலான பாசகவினரின் பின்னணி தெரிந்துவிடும் என்ற அச்சத்தில்தான் பாசக தடுக்கிறதோ என மக்கள் எண்ணுகின்றனர். எனவே, இனியும் எழுவர் விடுதலைக்குக் குறுக்கே பாசக நிற்கக்கூடாது.
  மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை எடுத்து 27 ஆண்டுகளாகச் சிறையில் அல்லலுறும்  முருகன்சாந்தன்பேரறிவாளன்நளினிஇராபர்ட்டுபயாசுசெயகுமார்இரவிச்சந்திரன் ஆகிய எழுவரின் விடுதலைக்கு வழி விட வேண்டும்.
  எழுவரும் சிறைகளிலிருந்து வீடு திரும்பிய பின்னரே மத்திய பாசக அமைச்சர்கள்  தமிழகத்திற்குள் நுழைய வேண்டும் என்ற முடிவையும் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அமைச்சரும் இவ்வாறே செயல்படவேண்டும்.
இனியேனும் திருந்தட்டும் பாசக!
மகிழ்வாகச் சிறையிலிருந்து விடை பெறட்டும் எழுவரும்!
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.(திருவள்ளுவர், திருக்குறள் 671)
-இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை, அகரமுதல