Sunday, June 30, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 421-430: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

431. Account slipகணக்குத் தாள்  

ஓய்வூதியக் கணக்குத் தாள்,

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்,

பொதுச் சேமிப்பு நிதிக் கணக்குத் தாள் எனப் பலவகைப்படும்.  

குறிப்பிட்ட நிதிக்கணக்கில் செலுத்தப்படும் தொகை, வைப்பு, இருப்பு, வட்டி கடனாக எடுத்திருப்பின் கடன் திருப்பச் செலுத்தி விவரம்,  அக்கணக்கில் முன்பணம் பெற்றிருப்பின் அதன் விவரம் முதலியவற்றைப் பதிந்து அளிக்கும் சீட்டு.
432. account statedவிவரிப்புக் கணக்கு  

ஒப்பந்தம் அல்லது நம்பக உறவுநிலையில் விவரித்துக் காட்டும் கணக்கு.     

ஒருவர் மற்றவருக்குக் கொடுக்க வேண்டியதாகக் காட்டும் கணக்கும் அத்தொகையைக் கொடுப்பதற்கான உறுதிமொழி, கணக்கின் நேரிய சரி தன்மை ஆகியவையும் தொடர்புடையவர்களால் வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ ஒப்புகை அளிக்கப்படுவதுமான பற்று வரவு விவரம்.  

காட்டிய கணக்கு என்கின்றனர். எல்லாக் கணக்கும் மறு தரப்பாருக்குக் காட்டப்படுவதுதான். கொடுதொகை முதலியவற்றை விவரிப்பதால் விவரிப்புக் கணக்கு எனலாம்.
433. account suitகணக்கெழு வழக்கு  

கணக்கு வழக்கு  

கணக்கு வழக்கு என்பது கொடுக்கல் வாங்கல், பணப்பரிமாற்றம் என  நடைமுறையில் கருதுகிறோம். எனவே வேறுபடுத்துவதற்காகக் கணக்கெழு வழக்கு எனலாம்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லது பத்திரம் போன்ற ஆவண அடிப்படையில் அல்லது நம்பக உறவுநிலை அடிப்படையில் கொடுக்கப்பட்ட பணத்தை அல்லது கணக்கைக் கொடுக்கவேண்டியவர் மீது கணக்கு பெறவேண்டியவர், அவ்வாறு அவர் தராதபொழுது தொடுக்கும் வழக்கு.
434. account take intoகருத்தில் கொள்ளல்  

கவனத்தில் கொள்ளல்  

ஒரு முடிவு எடுக்கும் முன்னர், மற்ற காரணிகள் இருப்பின் அதனைக் கவனத்தில் கொள்ளுதல்.  

புதிய தொழில் நுட்பத்தைக் கவனத்தில் கொள்ளுதல் போல் ஏதேனும் ஒன்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுத்தல் அல்லது செயற்படுதல்.
435. Account testகணக்குத் தேர்வு  

அரசுப் பணியாளர்களும் அலுவலர்களும் பதவியை நிலைப்படுத்திக் கொள்ளவும் வரன்முறைக்காகவும் பதவி உயர்விற்காகவும் வெற்றி காணவேண்டிய துறைத்தேர்வு.

சார்நிலை அலுவலர்க்கு, செயல்நிலை அலுவலர்க்கு எனத் தனித்தனியே கணக்குத் தேர்வுகள் உள்ளன.
436. account votes onசெலவளிப்பு வாக்கெடுப்பு  

சட்ட மன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ குறுகிய காலச் செலவுத் தேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு .

  பணத்தைச் செலவிடுவதற்காக, முழுமையான நிதிநிலைஅறிக்கையை எதிர்நோக்கி இடைக்கால இசைவு பெறுவதற்கான வாக்கெடுப்பு.  

செலவழிப்பு என்பது செலவிடுவதைக் குறிக்கிறது. செலவளி என்பது செலவிற்கான தொகையை அளிப்பதைக் குறிப்பிடும் புதுச்சொல்லாகப் படைத்துள்ளேன்..
437. accountabilityகணக்குப் பொறுப்பு  

கணக்குக் காட்டும் பொறுப்பு

பொறுப்புடைமை  

பொறுப்புக் கூற வேண்டிய நிகழ்மை(fact) அல்லது நிலைமை(condition).

பொறுப்புக் கூறல் என்பது தனியரோ நிறுவனமோ  அவர்களின் பொறுப்பு தொடர்பான ஏதோ ஒன்றுடன் தொடர்புடைய அவர்களின் செயல்திறன் அல்லது ஒழுகலாறு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவதற்கான உறுதிச் சொல்லாகும். இச்சொல் பொறுப்புடன் தொடர்புடையதாக இருந்தாலும், கவனக்குறைவு குறித்த தொலைநோக்காகும்.
438. accountableபொறுப்புள்ள  

கணக்கு காட்டும் பொறுப்புள்ள.

காண்க: accountability
439. accountable personபொறுப்புள்ள ஆள்  

ஒருவர், தாம் செய்யும் செயல்களுக்கு முழுப் பொறுப்பாக இருப்பவர். அதற்குரிய தக்கக்காரணத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்.
440. accountable relationshipபொறுப்புள்ளமைக்கான தொடர்பு  

செயல்களுக்கும் அவை எவ்வாறு பிறரைப் பாதிக்கின்ற என்பதற்கும் பொறுப்பு கோருவதற்கான செயற்பாங்கே பொறுப்புள்ளமைக்கான தொடர்பு.

(தொடரும்)

Thursday, June 27, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


421. account of crime, Give anகுற்ற வரலாறு கூறு/ கொடு  

குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளியின் முந்தைய குற்ற வழக்கு,

தண்டனை விவரக்கணக்கைத் தெரிவித்தல்.

குற்றக் கணக்கு என நேர் பொருளாக இருந்தாலும் வழக்கிலுள்ள குற்றவரலாறு என்பதே சரியாக உள்ளது.  

முதல் குற்றவாளியா, வழக்கமான குற்றவாளியா, சட்டவகையிலான குற்றவாளியா, ஒழுக்கக்கேட்டுக் குற்றவாளியா, மனநோய்க்குற்றவாளியா, நிறுவனக் குற்றவாளியா, வெள்ளாடைக் குற்றவாளியா(அழுக்குபடியாமல் குற்றம் செய்பவர்), தொழில் முறைக் குற்றவாளியா, சூழல் குற்றவாளியா, சில நேரக் குற்றவாளியா என அறியக் குற்ற வரலாறு உதவும்.  

ஒரே வகையான குற்றம் புரிபவரா, ஒரே முறையில் குற்றம் புரிபவரா, திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் என வெவ்வேறு குற்றங்களைச் சேர்த்துச் செய்பவரா எனவும் அறிய உதவும்.  

தண்டனை குற்றச் செயலுக்கல்ல, குற்றம் புரிந்தவருக்கே என்ற அடிப்படையில் குற்றவாளியைப் புரிந்து கொள்ள குற்ற வரலாறு உதவும்.
422. account of experiment/ an  account of experimentதேர்வாய்வு பற்றிய விவரிப்பு  

ஒரு கருதுகோளை ஏற்க அல்லது மறுக்க அல்லது திறனை வரையறுக்க அல்லது முன்னர் முயலப்படாத சிலவற்றின் சாத்தியக் கூறுகளைத் தீர்மானிக்கச் செயற்படுத்தப்படும் ஆய்வே தேர்வாய்வு ஆகும்.  
இங்கே, சட்டம், குற்றம், நீதி சார்ந்து  மேற்கொள்ளப்படும் தேர்வாய்வு பற்றி விவரிப்பதைக் கூறுகிறது.
423. account of profitsஆதாயக் கணக்கு  

தரப்பினர்  நம்பக உறவில் இருக்கும் பொழுது  பயன்படுத்தப்படும் ஒரு சமமான தீர்வு.  

இத்தீர்வின் நோக்கம் ஒரு தரப்பு பெற்ற ஆதாயத்தைச் சரணடையச் செய்வதாகும்.
424. account of, Onபொருட்டு  

ஒரு நிலையின் பொருட்டு அல்லது காரணமாக ஒன்றைச் செய்தல் அல்லது செய்யாமல் விடுதல்.
425. account payeeகணக்குவழிப் பெறுநர்

வங்கிக் கணக்கு மூலமாகப் பணம் பெறுபவர்.
426. account payee onlyகணக்குவழிப் பெறுநர் மட்டும்  

காசோலையில் குறிப்பிடும் தொகை,

காசோலை யார் பெயரில் எழுதப்பட்டுள்ளதோ, அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் மூலம் மட்டுமே பெற இயலும்.

இயல்பான காசோலையை அக்காசோலை யாருக்காவது மாற்றப்பட்டிருந்தால், அக்காசோலையை வைத்திருப்பவரும் பணமாக மாற்றலாம்.
427. account renderedகொடு கணக்கு  

கொடுக்கப்பட்ட கணக்கு   (கொடுங்கணக்கு என்றால் கொடுமையான கணக்கு எனப் பொருள் வரும்.)

கணக்கு அறிக்கையில் காணப்படும் செலுத்தப்படாத தொகையைக் குறிக்கிறது. இதன் விபரங்கள் முந்தைய அறிக்கையில் தரப்பட்டிருக்கும்.

செலுத்தப்படாத தொகை என்பதால் நிலுவைக் கணக்கு என்றும் குறிப்பர்.   கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவருக்குப் பற்றுவரவு விவரத்தைக் காட்டி மீதித் தொகையைக் கேட்டல்;

இது குறித்துப் பூசல் ஏற்படுகையில் அதனால், வழக்குத் தொடுக்கப்பட்டால் கணக்கின் உண்மைத் தன்மை குறித்து நீதிமன்றத்தை மனநிறைவு கொள்ளச் செய்ய அளிக்கும் பற்று வரவு விவரம்
428. account revenueவருவாய்க் கணக்கு  

வருவாய் இருப்புடன் கூடிய கணக்கு.  

வணிக நடவடிக்கைகளிலிருந்து வரும் வருமானத்தைப் பதிவு செய்யுங்கணக்கு   

அரசின் நடப்பிலுள்ள பெறுகைச்சீட்டுகளுடன் அனைத்து வருவாய்ப் பெறுகைச் சீட்டுகளும் இதில் அடங்கும்.  

அரசின் வரி வருவாய்களும் பிற வருவாய்களும் இதில் அடங்கும்.  

வரிவருவாய்கள், விற்பனை வருவாய்கள்,ஈட்டிய கட்டணங்கள், வட்டி வருவாய், அரசின் பிற வருவாய்கள். கடன் நிலுவைகள்  ஆகியவற்றை உள்ளடக்கியது.  

வருமானச் செலவினங்கள் எனச் சில அகராதிகளில் காணப்படுகிறது. அது revenue expenditure ஆகும். அச்சில் தவறு நேர்ந்திருக்கலாம்.
429. Account satisfactorilyமன நிறைவான கணக்கு  

கடன் வாங்குநர்  கடன்வாங்கும் தளத்தில் சேர்ப்பதற்குரிய நிறைவளிக்கும் கணக்கு.
430. account settledமுடிப்புக் கணக்கு  

நிலுவைத் தொகையைச் செலுத்திக் கணக்கு இருப்பைச் சுழி(0)க்குக் கொணர்ந்து கணக்கு முடிப்பைக் காட்டுவது.  

இரு தரப்பாரும் ஒப்புக் கொள்ளும் கணக்கு என்பதால் ஒப்பிய கணக்கு என்று சொல்வர்.

தொடரும்)

Tuesday, June 25, 2024

சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்

 




சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை

2023 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்க இருப்பது குறித்துத் தமிழ்வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் 1947 ஆம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1960 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தை தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், விதிமுறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 1972 முதல் தமிழ் வளர்ச்சித்துறை இத்திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் அரசாணை நிலை எண் 842 கல்வி (த.வ.பிரிவு 2) நாள்: 31-5-1971இல் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன. இவ்வாணையின்படி பரிசிற்குரிய நூற்பிரிவுகள் 20 ஆக வகைப்படுத்தப்பட்டன. அரசாணை நிலை எண் 49, தமிழ் வளர்ச்சி, பண்பாடு அறநிலையத்துறை நாள்:27-02-1995இன் படி  23 பிரிவுகளாகக் கூட்டப்பட்டன. அரசாணை நிலை எண் 157, த.வ.ப.அ.துறை நாள்:20-07-2001இன் படி 30 பிரிவுகளாக அமைக்கப்பட்டன. அரசாணை நிலை எண் 75, த.வ.ப.அ.துறை நாள்:16-03-2004 இன் படி 31 பிரிவுகளாக்கப்பட்டன. 2011 இல் 33 பிரிவுகளாகக் கூட்டப்பட்டன.

இவ்வாறு பிரிவுகள் கூட்டப்பட்டாலும் தமிழ் இலக்கியத்திற்கு முதன்மை அளிக்கும் வகையிலும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம் முதலானவற்றிற்கு உரிய இடம் அளிக்கப்படாதது வருத்தத்திற்குரியதே. இவ்விலக்கியங்களில் கொடுக்கப்பட்ட பிரிவுகள் குறித்த நூல்கள் பரிசிற்குரியன. எனினும் இது போதாது.  சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், மகளிர் இலக்கியம் எனப் பிரிவுகள் உள்ளமைபோல் 1) தொல்காப்பிய இலக்கியம், 2) சங்க இலக்கியம், 3) திருக்குறள் இலக்கியம், 4) நீதிநூல் இலக்கியம், 5) காப்பிய இலக்கியம், 6) சமய இலக்கியம் என்னும் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். 22 ஆம் வகைப்பாட்டில் சமயம்(ஆன்மிகம், அளவையியல்) இருப்பினும் இப்பிரிவில் இக்காலச்சமய நூல்களே இடம் பெறுகின்றன. இடைக்காலச் சமய இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்கும வகையில் தனிப் பிரிவு தேவை.

அறிவியல் தமிழ் நூல்களைப் பெருக்கும் வகையில் தனிப்பிரிவு இல்லை. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல் என்பன போன்ற அறிவியல் துறைகள் சில குறிக்கப் பெற்றிருப்பினும் 7) அறிவியல் தமிழ் என ஒரு பிரிவு சேர்க்கப்பட வேண்டும்.

8) ஒப்பிலக்கியம் என்னும் ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.

குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது என்பது ஒரு விதி. 9) பிற அல்லது பல்வகை என்னும் ஒரு பிரிவைச்சேர்க்க வேண்டும். பிரிவு குறிப்பிடப்படாத நூல்களை இப்பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். வ.எண் 20 இல் 30. பிற சிறப்பு வெளியீடுகள் என உள்ளது.  இதனைச் சிறப்பு வெளியீடுகள் என்று மட்டும் குறிக்க வேண்டும்.

பாடநூலில் இடம் பெற்றுள்ள நூல்கள் பரிசுப் போட்டிக்குக் கருதப்படமாட்டா என்பது ஒரு விதி. மாணவர்களுக்கான பாட நூல்களை விலக்கி வைப்பது சரியே. அதே நேரம் பாடத்திட்டம் அடிப்படையிலான நூல்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதுவே தமிழ்வழிக்கல்வி சிறக்க வழி வகுக்கும். ஆதலின் 10) பாடத்திட்டஅடிப்படையிலான நூல்கள் என ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும்.

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள், பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள், நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பெற்றவை, வானொலி, தொலைக்காட்சியில் தொடராக இடம் பெற்றவை     (கவிதை, உரை நீங்கலாக) நூலாக ஆக்கப்பட்டிருப்பின் அவை இப்போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. — என்று ஒரு விதி உள்ளது.

ஆனால், இவ்வகைப்பாட்டில் இடம் பெறக்கூடிய சில நூல்களுக்குப் பரிசளித்துள்ளனர். எனவே, இவ்விதியையும் எடுத்து விடலாம். சொற்பொழிவுகளுக்குப் பணம் பெற்றிருப்பார்கள். மீண்டும் பணம் வழங்க வேண்டா என எண்ணுவது தவறு. பரிசு வாங்கி ஊக்கப்படுத்துவதன் மூலம் தரமான சொற்பொழிவுகள் அமைய வழி வகுக்கலாம். வேண்டுமென்றால் அரசிடம் இதற்கான பணம் பெற்றிருப்பின், பரிசுச் சான்றிதழ் மட்டும் வழங்கப் பெறும். பணப்பயன் கிடையாது எனலாம். சொற்பொழிவுகளை விலக்கி விட்டு உரைக்கு விலக்கில்லை என்கின்றனர். இரண்டிற்கும் என்ன வேறுபாடு? உரை என்பது உரை நூலைக் குறிக்காமல் உரையாற்றியதைத்தான் குறிக்கிறது. இதில் கவிதைக்கு விலக்களித்து விட்டுக் கட்டுரையை மட்டும் விலக்கி வைப்பது ஏன்? இதுவும் தவறே. இதழ்கள், பிற ஊடகங்கள் வாயிலாகத் தமிழின் சிறப்பை மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டிற்குரியது. அவ்வாறிருக்க இதற்கான பரிசை வழங்க மறுப்பது ஏன்? எனவே, 11) இதழ்களில் வெளி வந்தவை,  12) வானொலியில் ஒலி பரப்பி நூல் வடிவம் பெற்றவை, 13) காட்சி ஊடகங்களில் இடம் பெற்று நூல் வடிவம் பெற்றவை எனத் தனித்தனிப் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். ஆய்வேடுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனால் சேர்க்கத் தயங்குகிறார்களா? அல்லது மாணவ நிலையிலான ஆய்வேடுகள் தரம் வாய்ப்தவையா இருக்கா என மறுக்கிறார்களா? சிறந்த மொழிபெயர்ப்புகள், ஒப்பிலக்கிய ஆய்வுகள் கூட இப்பிரிவில் உள்ளன. எனவே, 14) கல்வியகங்களில் அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள் என்பதை ஒரு பிரிவாகச் சேர்க்கலாம்.

மின்னூல் இப்போட்டியில் இடம் பெற இயலுமா என்பது இணைய நேயர்களின் வினா. மின்தமிழ் மடலாடல் குழுவில் இதற்கு இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி மின் நூலை 5 படிகள் அச்சு வடிவில் அளித்து பங்கேற்குமாறு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். சின்ன குத்துாசி நினைவுக் கட்டுரைகளுக்கான  விருது வழங்கப்படுகிறது. இதில் மின்னிதழ்களில் இடம் பெற்ற கட்டுரைகளையும் இணையத்தளங்களில் இடம் பெற்ற கட்டுரைகளையும் கருதிப்பார்க்க முறையிட்டேன். அதனை எற்றுக் கொண்டனர். அடுத்த ஆண்டில் (2019) இருந்து அவ்வாறே அறிவித்தனர். மின்னிதழ்களில் வரக்கூடிய நூல்களைப் பெரும்பாலோர் பொது உரிமையாக ஆக்கி வருகின்றனர். வலைப்பூக்கள் முதலான இணையத்த தளங்களில் சிறப்பான கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. மின்னிதழ்களிலும் தரமான கட்டுரைகள் இடம் பெறுகின்றன. எனவே இவ்வாறான கட்டுரைத் தொகுப்புகளை மின்னிதழாக வெளியிட்டிருப்பின் அவையும் மின்னிதழாக வெளிவரும் நூல்களையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். எனவே,  15) மின்னூல்கள் என ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.

தமிழ் வளர்த்த நீதி வழுவா மூவேந்தர்கள் குறித்தும் தமிழ் நாகரிகம், பண்பாட்டுச்் சிறப்புகள் குறித்தும் வெளியிடப்படும் நூல்களை ஊக்கப்படுத்த வேண்டும். எனவே, 16) மூவேந்தர் வரலாறும் சிறப்பும் 17) தமிழ் நாகரிகம், பண்பாடு  என இரு பிரிவுளையும் சேர்க்க வேண்டும். இப்போதுள்ள 33 பிரிவுகளுடன் இப்பதினேழு பிரிவுகளையும் சேர்த்தால் மொத்தம் 50 பிரிவுகளாகும். இக்கருத்தை ஏற்று அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

நூற்பிரிவுகள் தவிர பிற விதிகள் குறித்தும் ஆராய வேண்டும்.

அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைக்கப் பெற்ற எழுத்துகளில் அச்சிடப்பெற்ற நூல்கள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும் என்பது ஒரு விதி. இதுபோல் கிரந்த எழுத்துகள் தவிர்த்து எழுதப்பெறும் நூல்கள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும் என விதி வகுக்கப்பட வேண்டும்.

ஒரு பிரிவில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றால் அத்தலைப்பில் பரிசு வழங்க இயலாது என்பது ஒரு விதி. இந்த விதியின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவில் ஒரே ஒரு நூல் வந்த எதற்கும், தகுதியிருந்தும் பரிசு வழங்க வில்லை. ஆனால் இது தவறான விதியாகும். குறிப்பிட்ட பிரிவில் ஒருவரைத் தவிர வேறு யாரும் நூல் எழுதவில்லை என்றால் அந்த நூலின் தகுதி போற்றக்கூடியது இல்லையா? அந்த நூல் தகுதியடையதாக இருந்தால் பரிசு கொடுக்கலாம் அல்லவா?  எந்தக் காரணங்களுக்காகவோ சில ஆண்டுகளில் சில பிரிவுகளில் ஒரே ஒரு நூலுக்கு மட்டும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சான்றாக, 1971-72 ஆம் ஆண்டில், பிற மொழிகளில் தமிழ் என்னும் தலைப்பில் சிலம்பம் என ஒரே ஒரு நூலுக்கு ஒரே ஒரு பரிசாக முதற்பரிசு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதே போல், பொறியியல், தொழில்நுட்பவியல் என்னும் பிரிவில் பற்றவைப்பு என ஒரே ஒரு நூலுக்கு ஒரே ஒரு பரிசாக முதற்பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதே போல், 1975இல் மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் என்னும் பிரிவில், ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற ஒரே ஒரு நூலுக்கும் குழந்தை இலக்கியம் என்னும் பிரிவில் ‘வள்ளல்கள் வரலாறு’ என்னும் ஒரே ஒரு நூலுக்கும் முதற்பரிசுகள் வழங்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு ஒரே ஒரு நூலுக்குப் பரிசு வழங்கிய முன்னெடுத்துக்காட்டுகள் பல உள்ளன. குறிப்பிட்ட பிரிவில் வேறு யாரும் நூல் அனுப்பவில்லை என்றால் அதற்குரிய தகுதியைப் பிறர் பெறவில்லை என்பதுதானே பொருள். எனவே, குறிப்பிட்ட ஒரு பிரிவில் ஒரே ஒரு நூல் வரப்பெற்று, அது பரிசுக்குரிய தகுதி உடையதென்றால் பரிசு வழங்கப்பெற வேண்டும்.

மைய / மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்நூலும் இப்பரிசுப் போட்டிக்குக் கருதப்பட மாட்டாது என்பது ஒரு விதி. தத்தம் நூலை வெளியிடப் பண வாய்ப்பு இன்மையால் அரசின் பொருளுதவி பெற்று நூலை வெளியிடுகின்றனர். இது வேறு. சிறப்பின் அடிப்படையில் பரிசு வழங்குவது வேறு. ஒரே நூலுக்கு இரு முறை பணம் அளிப்பதாகத் தவறாகக் கருதக் கூடாது. எனவே, இவ்விதியை நீக்க வேண்டும். 

அதுபோல் ஒன்றிய அரசின் பரிசைப்பெற்றால் தமிழ்நாடு அரசு தருவதும் இரட்டைப் பண உதவி எனக் கருதக் கூடாது.  சிறந்த நூலுக்கான பரிசுத் திட்டத்தில் முன்னர்ப் பரிசு பெற்றிருந்தால் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது என்று இருந்தால் போதும்.

சிறந்த நூல் பரிசு தொடர்பான அறிவிப்புகளைக் காணாதவர்கள், நாமே கேட்டுப்பெறுதல்ல பரிசு என்று விண்ணப்பிக்க விரும்பாதவர்கள் இருப்பார்கள். எனவே, சாகித்திய அகாதமியைப் பின்பற்றி முன்னரே அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்களிடமிருந்து அவர்கள் கருதும் சிறந்த நூல்கள் குறித்த குறிப்புகளைப் பெற்று, அந்நூல்களை வாங்கி அவற்றையும் பரிசுகள் வழங்கக் கருத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து அப்போதைய தமிழ் வளர்ச்சிச் செயலர் மரு.செல்வராசு அவர்களை நேரில் சந்தித்து விளக்கி எழுத்து மூலமாக முறையீட்டையும் அளித்தேன்(மடல் எண்101/2023 / நாள் 24.02.2054 / 08.03.2023). நல்ல திட்டம் என மகிழ்வுடன் ஏற்று உடனே உரிய நடவடிக்கை எடுக்க மடலில் குறிப்பையும் எழுதினார். அரசிடமிருந்து தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு இது குறித்து விரிவான கருத்துருவை அனுப்புமாறு கேட்டிருந்தார்கள்(இ-369/ த.வ.1.2/2023-1, நாள் 14.03.2023). த.வ.இயக்குநர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை. எனினும் உரிய பயனில்லை. இதில் குறிப்பிட்டவாறு பரிசிற்காக விண்ணப்பிக்காதவர்களின் தகுதியான நூல்களைக் கேட்டறிந்து தக்க நூலாசிரியர்களையும் பரிசிற்குக்கருதிப்பார்க்க வேண்டும்.

முதலில் சிறந்த நூல்களுக்கு இரு பரிசுகளும் பின்னர் 1987  முதல் 1999 வரை மூன்று பரிசுகளும் வழங்கப் பெற்றன. அதன் பின்னர் 2000-இத்திலிருந்து பரிசுத் தொகைகளைச் சேர்த்து ஒரே பரிசாகவும் வழங்கப்பெற்று வருகின்றன.

 இக்காலத்திற்கேற்ப பரிசுத் தொகையை உயர்த்த வேண்டும். சிறந்த நூலாசிரியருக்கான பரிசுகள் முறையே 1972இல் உரூ.2000/-,1991இல் உரூ.5,000/- 1998இல் உரூ.10,000/- 2008 இல் உரூ.20,000, பதிப்பகத்திற்கு உரூ.5,000 என அவ்வப்போது உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. 2011, சனவரியில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் பரிசளிப்பு விழாவில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி இத்தொகையை நூலாசிரியர்களுக்கு உரூ.30,000/- என்றும், பதிப்பகத்தினருக்கு உரூ.10, 000/- என்றும் உயர்த்தி அறிவித்தார்.கடந்த 15 ஆண்டுகளாக இதில் மாற்றமில்லை.

சிறந்த நூல்களுக்கு இரு நூல்கள் பரிசு வழங்கிய திட்டத்தை மாற்றி மூன்று பரிசுகளாக உயர்த்தியது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தாம். மூன்று பரிசுகளை ஒரு பரிசாக மாற்றியதை மீளவும் கலைஞரின் திருமகனாராகிய இப்போதைய முதல்வர் மு.க.தாலின் மூன்று பரிசுகளாக வழங்கச் செய்ய வேண்டும்.அதையும் இப்போதைய அறிவிப்பில் திருத்தம் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

இதன்படி,சிறந்த நூலுக்கு முதல் பரிசாக உரூ.நூறாயிரமும், இரண்டாம் பரிசாக உரூ.60,000 உம், மூன்றாம் பரிசாக உரூ.40,000 உம் வழங்கப் பெற வேண்டும். பதிப்பகத்தாரால்தான் சிறப்பான நூல்கள் வெளிவந்து தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. எனவே, பதிப்பகத்தார் பரிசுத் தொகையை முறையே உரூ30,000/, உரூ.20,000/, உரூ.10,000/ என வழங்க வேண்டும்.

சிறந்த நூல் பரிசுகள்  ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளன்று சென்னையில் வழங்கப் பெற வேண்டும் என்பதே மற்றொரு நடைமுறை விதி. ஆனால், சில ஆண்டுகள் இவை வழங்கப்பெறவில்லை. அடுத்து ஆண்டு சேர்த்து வழங்கப்பெற்றுள்ளது. 2012 இல் சித்திரை முதல் நாளன்று வழங்கப் பெற்றது. பல ஆண்டுகள் அரசிற்கு வாய்ப்பான நாளில் வழங்கப்பெற்றது. விருதுகள் வழங்கல், நிகழ்ச்சிகளுக்கென குறிப்பிட்ட ஆண்டிற்காள ஆண்டுப் பட்டிகை (calendar for the year) உருவாக்கி அதனைத் தவறாமல் ஒன்றிய அரசு பின்பற்றி வருகிறது. தமிழ்நாடு அரசும் தவறாமல் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் சிறந்த நூல் பரிசுகளை வழங்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான விதிகளைத் தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது ஒரு விதி. இந்த விதியின் கீழ் மேற்குறித்தவாறான திருத்தங்களை அரசு  கொணர வேண்டும்.

இக்கருத்துகளில் உடன்பாடு கொண்டுள்ள படைப்பாளர்களும் பதிப்பாளர்களும் அரசிற்கு இதனைத் தெரிவிக்க வேவண்டும்.

 முதல்வர் அலுவலக மின்வரி < cmo@tn.gov.in >

தமிழ் வளர்ச்சி யமைச்சர் அலுவலக மின்வரி < minister_iandp@tn.gov.in >

நிதியமைச்சர் அலுவலக மின்வரி < minister_finance@tn.gov.in >

தமிழ் வளர்ச்சிச் செயலர் மின்வரி < tdinfosec@tn.gov.in >

ஏதேனும் கருத்து தெரிவித்தால் அரசின் மொழிக்கொள்கை எனத் தட்டிக் கழிக்கும் தமிழ்வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பிப் பயனில்லை என்பதால் அதன் மின் வரிக்கு அனுப்பத் தேவையில்லை. அரசே கேட்டால் விடையிறுப்பார்கள். அது போதும்.

எனவே, பரிசிற்குரிய நூற் பிரிவுகளை உயர்த்தி 50 பிரிவுகளாக மாற்றியும் மும்மூன்று பரிசுகளை வழங்கியும் பரிசுத் தொகைகளை உயர்த்தியும் விதிமுறைகளைக் காலத்திற்கேற்ப தளர்த்தியும் திருத்தியும் சேர்த்தும் இத்திட்டம் பரவலாகப் பரவும் வகையில் அரசு உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்குரிய சிறந்த நூல்களுக்கான பரிசுத்திட்டத்தில் இருந்தே இதனை மேற்கொண்டு சிறந்த நூலாசிரியர்களைப் போற்ற வேண்டும். 

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௭௰௩ – 673)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல



சட்டச் சொற்கள் விளக்கம் 411-420: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 401-410 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி

411. according to thatஅதற்கிணங்க

அதற்கேற்ப  

ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கேற்ப நடைமுறைப்படுத்துவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது.
412. Accordingly  இங்ஙனமே/அங்ஙனமே

இதன்படியே/அதன்படியே

இவ்வாறே/அவ்வாறே

இவ்வண்ணமே/அவ்வண்ணமே

ஒருவர் தன்னுடைய வரம்பை அறிந்து அதற்கேற்பச் செயற்படுவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது..
413. Accostஅணுகு

அணுகிப் பேசு  

தனிப்பட்ட பாதுகாப்பிற்கு எதிராக உடனடி உடல் தீங்கு ஏற்படும் அல்லது குற்றச் செயல் நிகழ உள்ளது என்ற பேரச்சம் விளைவிக்கும் பாங்கில் அணுகிப் பேசுதல்.
414. accountகணக்கு  
பற்றுவரவைக் காட்டும் கணக்கு.

கணக்கு என்பது,1) விலைப் பட்டி. 2)வணிக நடவடிக்கைகளைப் பதிதல். 3) வங்கிவைக்கும் பற்று வரவுக் கணக்கு. 4) ஒரு முகமையகத்திலிருந்து அதன் வாடிக்கையாளர் பெறும் கழிவு. 5) ஆண்டுக் கணக்கு என்பனவற்றைக் குறிக்கிறது.

நிறுவனங்கள், வங்கி, அமைப்பு, பல நிறுவனங்களில் பதிவுகளைப் பேணுவது கணக்கு ஆகும்.  

நாம் math(emetic)s என்பதையும் கணக்கு என்பதால் குழப்பங்களும் நேர்கின்றன. இதனைக் கணிதம் என்றே சொல்லலாம்.   எண்கணக்கு(Arithmetic), குறிக்கணக்கு(இயற்கணிதம்/Algebra), வடிவியல் (வடிவக்கணிதம் / Geometry), முக்கோணவியல்(Trigonometry) முதலியனவே கணிதமாகும்.  

தமிழில் கணக்கு என்பது நூல் ஓதுவதைக் குறிக்கும். அதனால் கணக்காயர் என்பது ஆசிரியரைக் குறிக்கிறது. கணக்காயர் மகனார் நக்கீரனார் என்பதே சான்று. இவ்வாறான பொருள் விளக்க வழக்கம் இப்போது இல்லை.   எனவே, கணக்கு- account; கணிதம்- math(ematic)s என்றே வகைப்படுத்திக்கொள்ளலாம்.
415. account bookகணக்கேடு  

கணக்குப் புத்தகம்  

கணக்குகள் பேணப்படுகின்ற புத்தகம், பேரேடு.

பணப்பதிவேடு – பணம் பெறுகை, கொடுக்கை மட்டும் பதியப்படும் பேரேடு.
பொதுப்பேரேடு – அனைத்து நிதிப் பரிமாற்றங்களையும் குறிக்கும் ஏடு.
கடனாளிப் பதிவேடு – கடன் விற்பனை குறித்த தகவல்களைப்பதியும் ஏடு   என மூவகையாகக் குறிப்பர்.

பற்று வரவுக் கணக்குகள் பதிவே முதன்மைக் கணக்கேடாக இருப்பினும் துறைகளுக்கேற்ப கணக்கு வகைகளும் பேணப்படும்.

1.)சொத்துகள், 2.) பொறுப்புகள்,3.)செலவுகள், 4.)வருமானங்கள், 5.)பங்குகள் என வணிக நிறுவனங்கள் இவற்றிற்கான கணக்கேடுகளைப் பேணும்.

1.) நடப்புக்கணக்கு, 2.) சேமிப்புக் கணக்கு, 3.) சம்பளக் கணக்கு, 4.) நிலை வைப்புக் கணக்கு, 5.) தொடர் வைப்புக் கணக்கு, 6.) தாயகத்தில் குடியிரா இந்தியர் கணக்கு,  என அறுவகைக் கணக்கேடுகளை வங்கிகள் பேணுகின்றன.

1.) பெரு நிறுவனக் கணக்கு, 2.) பொது நிறுவனக் கணக்கு, 3.) அரசுக் கணக்கு, 4.) குற்றவியல் கணக்கு, 5.) தணிக்கைக் கணக்கு, 6.) பணியாட்சிக் கணக்கு, 7.) வரிக்கணக்கு என்றும் பேணப்படும்.
இவ்வாறு துறைகளின் தன்மைக்கேற்பக் கணக்கேடுகள் மாறி அமையும்.
416. account codeகணக்கு விதித் தொகுப்பு

கணக்குக்  குறியீடு  

கணக்கு விதிகளைத் தொகுத்துத் தரும் நூல்.  

கணக்குகளின் விளக்கப் படத்தை உருவாக்க ஒரு கணக்கிற்கு வழங்கப்படும்  குறியீட்டு எண்.
417. account contraஎதிர்க் கணக்கு  

இக்கணக்கின் இயல்பான இருப்பு என்பது தொடர்புடைய கணக்கிற்கு எதிரானது என்பதால் எதிர்க்கணக்கு என்கின்றனர்.  

பொதுப்பேரேட்டில், தொடர்புடைய கணக்கின்  மதிப்பைக் குறைப்பதைக் குறிப்பதாகும். இதனை முரண் கணக்கு என்றும் சொல்வர்.
418. account currentநடப்புக் கணக்கு

நடப்பு கணக்குகள் நிறுவனங்கள் வழக்கமான பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்டவை. நிறுவனங்கள் பேணுவதற்காக நடப்புக் கணக்கு பயன்படுகிறது.
419. account depositவைப்புதொகைக் கணக்கு  

குறுங்காலம் அல்லது நெடுங்காலம் எனக் குறிப்பிட்ட காலத்திற்குப் பணத்தை வைப்புத் தொகையாகச் செலுத்தும் கணக்கு.

திங்கள்தோறும் குறிப்பிட்ட தொகையை வைப்பில் வைக்கும் தொடர் வைப்புக் கணக்கும் உள்ளது.
420. account forகாரணங்கூறு  

கணக்குக் கொ

கணக்குக்காட்டு

ஒருவருக்கோ ஒன்றனுக்கோ நிகழ்ந்த ஒன்றிற்கான அல்லது கணக்கு வழக்கு நிலைமைக்கான காரணங் கூறும் பொறுப்பு.   [இந்திய ஒப்பந்தச் சட்டம்(பிரிவு 196), குடி பெயர்வுச்சட்டம்(பிரிவு 27 இ(c)(2)., சான்றுச்சட்டம்(பிரிவு 114) முதலியவற்றில் பொறுப்புடைமை குறித்து இடம் பெற்றுள்ளன.]

(தொடரும்)