Wednesday, April 30, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! – இலக்குவனார்திருவள்ளுவன்

 




(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11

 “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”

              – செம்புலப் பெயனீரார்

              – குறுந்தொகை : பாடல் 40

பொருள்:

யாய்=என் தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; நுந்தை = உன்னுடைய தந்தை; புலம் = நிலம்; செம்புலம் = சிவந்த நிலம்; பெயல் = மழை.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார்?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்

யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள்?

செம்புலப் பெயல் நீர் போல = செம்மண் நிலத்தில் விழுந்த நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே.

செம்புலம் என்பது செம்மண் நிலம். சிலர் செம்மையான நிலம் என்பர். சம நிலம் என்பார் அறிஞர் இராமகி. எனினும் செம்மண் நிலம் என்பதுதான் பாடலுக்குப் பொருந்துகிறது.

மழைநீர் வயலில் பெய்ததும் மண்ணும் மழைநீரும் கலந்து நீருக்கு மண்ணின் நிறமும் சுவையும் மணமும் வந்து விடுகின்றன.

மண்ணும் கடினத்தன்மை மாறி நீருடன் கரைந்து விடுகின்றது. மழை நீரும் மண்ணும் கலந்து விடுவதுபோல் இரண்டு அன்பு உள்ளங்களும் கலந்து விட்டனவாம்.

குலம் முதலிய எவ்வேறுபாடும் பார்க்காத கலப்புத் திருமணம் சங்கக் காலத்தில் இருந்ததற்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறுவர்.

சங்கக்காலம் தொகுக்கப்படுவதற்குப் பல நூறு ஆண்டுகள் முன்னரே இயற்றப்பட்ட பாடல் இது. இயற்றியவர் பெயர் தெரியாமல், இதில் வரும் உவமையை அடிப்படையாகக் கொண்டு செம்புலப்பெயல் நீரார் என்கின்றனர்.

இயற்பெயர் அறியப்படாமல், தாம் படைத்த உவமைகளால் பெயர் பெற்ற புலவர்களுள் ஒருவரானார் இவர்.

இப்பாடல் மக்களைக் கவர்ந்ததுபோல் பாடலாசிரியர்களை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே, திரைப்படப்பாடல்களில் இக்கருத்தை எதிரொலித்துள்ளனர்.

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

என்றார் கண்ணதாசன். (படம்: வாழ்க்கைப் படகு)

கவிஞர் வைரமுத்து குறுந்தொகைப் பாடலின் பொழிப்புரைபோல் பின்வருமாறு பாடல் எழுதியுள்ளார் (படம்: இருவர்).

யாயும் யாயும் யாராகியரோ
நெஞ்சு நேர்ந்ததென்ன?
யானும் நீயும் எவ்வழியறிதும்
உறவு சேர்ந்ததென்ன?
ஒரேயொரு தீண்டல் செய்தாய்
உயிர்க் கொடி பூத்ததென்ன?
செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன?

இவைபோல் கவிஞர் முத்துலிங்கம்

செந்நில மேட்டில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் தஞ்சம்

என்கிறார் (படம்: வெள்ளை ரோசா)

குறுந்தொகைப் பாடல் முழுமையாக அவ்வாறே ‘சகா’ என்னும் திரைப்படத்தில் சபீர் இசையில் வெளிவந்துள்ளது.

‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் ‘முன்பே வா’ எனத் தொடங்கும் பாடலில் குறுந்தொகை உவமையை,

நீரும் செம்புலச் சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்
முன்பே வா

எனக் கையாண்டுள்ளார் கவிஞர் வாலி.

கவிஞர் கபிலன்,

ஞாயும் நீயும் யாரோ?
எந்தை நுந்தை யாரோ?
செம்புல நீராய்
ஒன்றாய்க் கலந்தோமே

என எழுதிய பாடல் ‘சித்திரம் பேசுதடி’ என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

செம்புல நீர் போல்
ஐம்புலன் சேர்க

என்கிறார் பாடலாசிரியர் பா.விசய் (படம் ‘பில்லா’)

அன்பு நெஞ்சங்கள் கலப்பது காதலுக்கு மட்டும்தானா? அண்ணன் தங்கை என்னும் உடன்பிறப்புப் பாசத்திற்கும்தான் என்கிறார் கண்ணதாசன்.

‘தர்மயுத்தம்’ திரைப்படத்தில் ‘ஒரு தங்க ரதத்தில்’  எனத் துவங்கும் பாடலில், இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன.

செம்மண்ணிலே
தண்ணீரைப் போல்
உண்டான சொந்தமிது

கண்ணதாசன் – அண்ணன் தம்பி இருவர் பாசத்திற்கு, ஆனால் ஒருதாய்மக்கள் என அறியாச் சூழலில் நட்பிற்கு எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு எழுதியுள்ளார்.

யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ

எனப் ‘பட்டாக் கத்தி பைரவன்’ படத்தில் வரும் பாடல் வரிகளே அவை.

அறியா இருவர் காதலால் இணைவதைக் குறிப்பிடும் குறுந்தொகைப் பாடலை எதிரொலிக்கும் மேலும் பல பாடல்களும் உள்ளன.

காலங்காலமாகக் கூறுவதுபோல் சங்கப்புலவர் பொன்னுரைக்கிணங்க யார் யாருக்கோ உரிய
அன்பு நெஞ்சங்கள் இரண்டறக் கலப்பதே இயற்கை!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் 30.04.2025

Monday, April 28, 2025

குறள் கடலில் சில துளிகள் . 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்




(குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – தொடர்ச்சி)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்

(திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்: ௪௱௪௰ – 440)

பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; விரும்புகின்ற பொருள்கள்; காதல்-விருப்பம்; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின்.

பொழிப்பு:

தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார் (பேரா.வெ.அரங்கராசன்).

தனக்கு விருப்பமானவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கி வைத்திருப்பவனிடம் பகைவரின் வஞ்சகச் செயல்கள் பலிக்காது.

மணக்குடவர் உரை: காதலிக்கப்பட்ட யாவற்றின் மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர் கற்ற கல்வி.

பரிமேலழகர் உரை: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் – தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் – பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)

மு. கருணாநிதி உரை: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்  (௪௱௪௰)

இரா சாரங்கபாணி உரை: தாம் விரும்பும் பொருள்களின் மேலுள்ள விருப்பத்தைப் பிறர் அறிய முடியாதவாறு மனத்தை அடக்கிச் செலுத்துவானாயின், பகை வந்து அவனை வஞ்சிக்க நினைக்கும் எண்ணம் பழுதுபடும்.

காதல என்ற சொல்லுக்கு விரும்பினவற்றை என்பது பொருள்.

காதல் என்பது விருப்பம் என்ற பொருள் தரும்.

அறியாமை என்ற சொல் அறியாவண்ணம் என்று பொருள்படும்.

உய்க்கிற்பின் என்பதற்கு செலுத்த வல்லராயின் என்பது பொருள்.

ஏதில என்பது பயனற்றது என்னும் பொருள் கொடுக்கும்.

ஏதிலர் என்ற சொல்லுக்குப் அயலர் அல்லது பகைவர் என்பது பொருள்.

நூல் என்ற சொல்லுக்கு இங்கு சிந்தனை அல்லது சூழ்ச்சி எனக் கொள்வர்.” (குறள்.திறன்)

ஒருவருக்கு ஒரு பொருளின்மேல் அல்லது உணவின் மேல் அல்லது இடத்தின்மேல் அல்லது ஆளின் மேல் விருப்பம் இருப்பின் அதனைப் பிறரறியச் செய்தால் அவ்விருப்பத்தை நுகரும் பொழுது உணவில் நஞ்சு கலந்தோ குறிப்பிட்ட பொருளை நுகர அல்லது இடத்திற்கு வரும் பொழுது தீங்கு இழைத்தோ அழிவிற்கு வழி வகுப்பர். ஆதலின் தன் விருப்பத்தைக் கமுக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றார். பொதுவாக ஆட்சித்தலைவருக்குத் தகுந்த குறளாக இருந்தாலும் தனியாளுக்கும் பொருந்தக் கூடியதே. நம் தனிப்பட்ட செய்திகளைப் பகைவர் அறியாமல் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். ஆனால், பகைவர் யார் என்று அறியாமல் உட்பகைவரும் மறைமுகப் பகைவரும் இருப்பர். எனவேதான், பிறர் யாரும் அறியாமல் வைத்திருப்பின் அதில் பகைவரும் அடங்குவர் அல்லவா? அவரும் அறிய மாட்டார். ஏதிலார் என்றால் பகைவர் என்றும் பொருள். பிறர் என்றும் பொருள். எனவேதான் பிறர் அறியாமல் விருப்பத்தை நுகர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் காதல் பொருட்கள் எவை எவை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆதலின் அவர் எல்லாப் பொருள்கள் மேலும் விருப்பத்தைப் பிறரறியாமல் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத்தான் கருத வேண்டும்.  காமக் காதலையே கூறினார் என்றும், ஆசை நாயகியரிடம் செல்வதைக் குறிப்பிடுகிறார் என்றும் இவ்வாறான காம ஆசையின் அடிப்படையில் கூறுகிறார் என்றும் சிலர் சொல்வது பொருந்தாது. காதல் என்பதைக் காமக் காதலாக் கருதாது விருப்பம் என்றேதான் கொள்ள வேண்டும். பகைவர் அறியா வண்ணம் விருப்பத்தை அடக்கமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார் என்பதே பொருத்தமாகும்.

எனவே,

உன் விருப்பத்தைப் பிறர் அறியுமாறு வெளிப்படுத்தாதே!

சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

961. At sightகண்டவுடன்  

கண்ட நிலை    

காட்டியவுடன்  

பார்த்த உடன்  

“At sight” என்பது சட்டப் பிரிவிலும் நிதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டுள்ளது.

சட்டப் பிரிவில், “at sight” என்பது ஒரு கடமை அல்லது பணம் செலுத்த வேண்டிய தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் குறிக்கும்.  

பணப் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்களில், “at sight” என்பது பணம் உடனே செலுத்தப்பட வேண்டும் என்று பொருளாகும். 

  ஒப்பந்தம் அல்லது பற்று வழங்கப்பட்டதும், உடனடியாகப் பணம் செலுத்தப்பட வேண்டும் என்ற விதி அல்லது விதிமுறையையும் குறிக்கும்.  

சட்டச் சூழலில் “at sight” என்பது ஒரு பற்று (bill of exchange) அல்லது ஒப்பந்தம் வழங்கப்பட்டவுடன் பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.  

இந்தச் சொல், பணம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டவுடன் உடனடியாகப் பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதைக் கூறுகிறது.  
நிதித் துறையில் “at sight” என்பதன் விளக்கம் – உடனடிப் பணம்.:   “at sight” மூலம் பணம் செலுத்தப்பட வேண்டிய தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.  

பணப் பரிமாற்றங்கள், குறிப்பாகப் பற்று (bill of exchange) போன்ற ஆவணங்களில், பணம் செலுத்தப்பட வேண்டிய நாள் அல்லது காலக்கெடுவைக் குறிப்பிடாமல் உடனே செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.  

எடுத்துக்காட்டு:  

“The bill is payable at sight” என்று ஓர் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தால், அந்தப் பற்று (bill) வழங்கப்பட்டவுடன் உடனே பணம் செலுத்தப்பட வேண்டும் என்று பொருள்.  

பார்த்த உடன் சுடுதல்  

பயங்கரக் குற்றவாளி ஒருவர், தன்னைப் பிடிக்க வந்துள்ள காவலர்களையோ சுற்றிலும் உள்ள பொதுமக்களையோ அவர்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும் வண்ணம் தாக்க முற்படுவார் என்ற அச்சத்தில் கண்டவுடன் சுடுதல் ஆணையைப் பயன்படுத்திச் சுடுதல்.  

கண்டதும் சுடுதல் என்பது மிகவும் அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்  விவாதத்திற்குரிய உத்தரவு. இந்த உத்தரவு காவல்துறை அல்லது பிற பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவை மீறும் எவரையும் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அல்லது கைது செய்ய முயலாமல்  சுட அதிகாரம் அளிக்கிறது. அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கடுமையான பொது அச்சுறுத்தல் இருப்பதாக அதிகாரிகள் உணர்ந்தால் அல்லது அவர்கள் உயிருக்குக் கேடுதரும் படையைப் பயன்படுத்துவது முற்றிலும் இன்றியமையாதது என்று கருதினால் மட்டுமே இது பயன்படுத்தப்படும்.  

On sight என்றும் கூறுவர்.  
962. At the beginning of the tenancyதொடக்கத்தில்‌  

முதலில்  

ஆரம்பத்தில் (ஆரம்பமும் தமிழ்ச் சொல்லே)  

சட்டச் செயல்முறைகளில், ஒப்பந்தங்களில், புலனாய்வுகளில் தொடக்க நிலையைக் குறிப்பது.  

சட்டச் சூழல் தொடர்பில் வலியுறுத்துவதற்காகத் தொடக்கத்தில் என்பது பயன்படுத்தப்படுகிறது.   எ.கா.   சட்டச் செயற்பாடு தொடங்குவதற்கு முன்னர்த் தொடக்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  

உசாவல்(விசாரணை) மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கியது.  

செயல்முறையின் தொடக்கத்தில் தவறு நேர்ந்ததாக வாதிட்டார்.  

At the beginning of the tenancy – குத்தகையின்‌ தொடக்கத்தில்  

தொடக்கத்தின்/தொடக்க நிலையில்(In the beginning) என்பதற்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. தொடக்கத்தின்/தொடக்க நிலையில்(In the beginning)  என்பது மிகவும் பொதுவானது, பெரும்பாலும் பிந்தைய சூழ்நிலையுடன் வேறுபடுவதற்கு அல்லது ஒரு காலக்கட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது, அதே நேரத்தில் “தொடக்கத்தில்/At the beginning” என்பது மிகவும் குறிப்பிட்ட, நேரம் அல்லது இடத்தில் ஒரு துல்லியமான புள்ளியைக் குறிக்கிறது.  
963. At the hearingகேட்பின்போது  

உசாவலின்‌ போது  

ஒரு நீதிமன்றம் அல்லது பிற சட்ட அமைப்பு ஒரு வழக்கில் ஆதாரங்கள், வாதங்களை முறையாக ஆராயும் கட்டத்தைக் குறிக்கிறது.  
964. At the instance ofவேண்டியபடி  

வேண்டுதலின்‌ பேரில்‌  

கோரிக்கையின்‌ பேரில்    

சான்று நிகழ்வு ,   நிகழ்ச்சி  

எ.கா.   வழக்காடியின் வேண்டுகோளின்படி, எதிர்வாதிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
965. At the time and for the period his attendance is requiredஅவரது வருகை தேவைப்படும்போதும்‌ தேவைப்படும் கால அளவுக்கும்‌‌  

“கட்டாய வருகை” என்பது, ஒரு நீதிமன்றத்தில் வழக்கில் தொடர் புடையவர்கள்  கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.  

attendance is required: “பயிற்சிக்குக் கட்டாய வருகை உள்ளது” என்பது பயிற்சிக்குக் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

“இந்த கூட்டத்திற்குக் கட்டாய வருகை இல்லை, ஆனால் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கலந்து கொள்ளலாம்” என்பது, கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் விரும்புபவர்கள் கலந்து கொள்ளலாம் என்பதைக் குறிக்கிறது.  

(தொடரும்)

Saturday, April 26, 2025

நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – தொடர்ச்சி)

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்

பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து

காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே

ஏம நெறிபடரும் ஆறு.

  • நாலடியார், இளமை நிலையாமை, 13

பொருள்: சொற்கள் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் முதுமை வரையும் காமவழியில் செல்வார்க்குப் பேரின்ப நெறியில் செல்வதற்கு வழியில்லை.

சொல் விளக்கம்: சொல்=சொற்கள்; தளர்ந்து=வலிமை குறைந்து(குழறி); கோல்=ஊன்றுகோலை; ஊன்றி=ஊன்றிக்கொண்டு; சோர்ந்த=தள்ளாடிய; நடையினர் ஆய்=நடையை உடையவராய், பல்=பற்கள், கழன்று=உதிர்ந்து, பண்டம்=உடலாகிய பண்டம், பழிகாறும்=பழிக்கப்படுமளவும், இல்= இல்லத்திலேயே, செறிந்து=அடைபட்டு, காமநெறி=ஆசைவழியே, படரும்= நடக்கும், கண்ணினார்க்கு=காமநெறியில் செல்லும் சிற்றறிவுடையார்க்கு, ஏமம்= மெய்யின்பக் கோட்டை யாகிய, நெறி=நல்வழியில், படரும்= நடக்கும், ஆறு= வழி, இல்=உண்டாவது இல்லை. ஏமம் என்றால் பேரின்பம், மெய்யின்பம், பாதுகாவல் எனப் பல பொருள்கள். இவற்றை உள்ளடக்கி இங்கே மெய்யின்பக் கோட்டை எனப்பட்டுள்ளது.

இல்வாழ்க்கையில் உள்ளோர்க்கு நல்வாழ்க்கை இல்லை எனச் சிலர் தவறாகப் பொருள் உரைக்கின்றனர். பணி வாழ்வு, பொது வாழ்வு, அற வாழ்வு முதலியவற்றில் ஈடுபடாமல் வீட்டில் இருந்து கொண்டு காமவாழ்விலேயே ஈடுபடுவோர்க்குத்தான் நல்வாழ்க்கை இல்லை என்கின்றனர். இளமை நிலையாமையைச் சொல்லுவதன் காரணம், நிலையான நன்னெறியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான். 

அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி யம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு

கைத்தலம் மேல்வைத் தழும்மைந்த ரும்சுடு காடுமட்டே

என்னும் பட்டினத்தார் பாடலைத் தழுவி ‘பாதகாணிக்கை’ படத்தில் கண்ணதாசன் “வீடுவரை உறவு” எனத் தொடங்கும் பாட்டை எழுதியிருப்பார். அதன் தொடக்கமாக

ஆடிய ஆட்டமென்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?

எனப் பாடலடிகள் வரும். இளமை ஆட்டம் முதுமை வரை தொடராது. ஆனால் இளமையில் செய்யும் நற்செயல் பயன் முதுமையிலும் தொடரும் என்பதை உணர வேண்டும்.

சிற்றின்பத்தில் திளைத்து நல்லற இன்பத்தை இழக்காதே!