Wednesday, December 29, 2010

Is Grantham necessary for science writings? - Ariviyalukku grantham the'vaiyaa?


அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா?
-இலக்குவனார் திருவள்ளுவன்


 தமிழ், தனித்தியங்க வல்லது என்பது அதன் சொல் வளத்தால் மட்டும் அல்ல; நெடுங்கணக்காலும்தான். எனவே, பிற மொழிச் சொற்களை நீக்கித் (தனித்) தமிழ் இயக்கம்  வெற்றி காண  அயல் எழுத்து வடிவங்களையும் அறவே நீக்க வேண்டும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அயல் எழுத்து வடிவம் என்று பார்க்கும் பொழுது பொதுவாக அயல் எழுத்தொலிகளைக் குறிக்கப்பயன்படும் கிரந்தம் நடைமுறையில் இருப்பதால்தான் பிற மொழிச் சொற்களை நாம் தங்கு தடையின்றிப் பயன்படுத்துகின்றோம்.

உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் தனித்தன்மையை நமக்கு உணர்த்திய அறிஞர் கால்டுவெல்; அதனை வழி மொழிந்து பரப்பிய அறிஞர் பரிதிமாற்கலைஞர்; அவ்வுண்மையை நிலைக்கச் செய்வதற்கெனத் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் தமிழ்க்கடல் மறைமலை யடிகள்; தனித்தமிழ் இயக்கத்தைப் புலவர்களிடையே கொண்டு சென்று தனித்தமிழ் இயக்க அமைப்புகளைத் தோற்றுவித்தவர் தமிழ்ஞாயிறு பாவாணர் அவர்கள்; இதழ்கள் மூலம் தனித்தமிழ் என்பது எளிமையான மக்கள் தமிழ்தான் என நாடெங்கும் பரப்பியவர் செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்; இவ்வியக்கம்  வேரூன்றவும் கிளை பரப்பவும் துணை நின்றவர்கள் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும்.

சமசுகிருதக் கலப்பை எதிர்த்துத் தனித்தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்ட தமிழ்நாட்டில், இந்தித்திணிப்பை எதிர்த்துத் தமிழ் எழுச்சி ஏற்பட்ட தமிழ்நாட்டில், இன்று ஆங்கிலச் சொற்கள் தங்கு தடையின்றித் தமிழுடன் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. பிறமொழிக்கலப்பால் தமிழ் சிதைந்து உருமாறிப் புதிய மொழி மாறியதும் அதனால் தமிழ் பேசும் நிலப்பரப்பு குறைந்ததும் வரலாறு காட்டும் உண்மையாக இருப்பினும் அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேலும் தமிழுக்கு அழிவு ஏற்படுத்தும் வகையில் உரையாடல்களிலும் ஊடகங்களிலும் படைப்புகளிலும் பாடங்களிலும் என எல்லா இடங்களிலும் வேறுபாடின்றி மொழிக்கொலையைக் காண முடிகிறது.  இம்மொழிக் கொலைக்குத் துணை புரிவன கிரந்த எழுத்துகளேயாகும். இவற்றை அடியோடு அகற்றினால்தான் தமிழ் தூய்மையுறும் ; தமிழ் இலக்கியம் செழுமையுறும்.

கிரந்தம் என்றால் என்னவென்றே தெரியாமல் பெரும்பான்மையர் பயன்படுத்துகின்றனர். அதுபோல் மணிப்பிரவாளம் என்றால் என்னவென்றே இக்காலத்தலைமுறையினர் கேட்கின்றனர். தமிழையும் சமசுகிருதத்தையும் கலந்து எழுதும் முறையற்ற நடையை மணியும் பவளமும் கலந்த மாலை போன்றது எனக் கூறி மணிப்பிரவாளம் என்றனர். இம்மணிப்பிரவாளத்தில் சமசுகிருத ஒலிகளை எழுதுவதற்காகப் பயன்படுத்தப்படும் வரிவடிவமே கிரந்தம் என்பதாகும். கிரந்தம் என்பது மொழியல்ல. சமசுகிருததத்திலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால்  தமிழில் சமசுகிருதச் சொற்களைப் புகுத்துவதற்காக என்றே கிரந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது அறமற்ற செயல் அல்லவோ!

கிரந்தம் தமிழில் எங்கே உள்ளது என அதனை அறியாமல் பலரும் கேட்கின்றனர். ஜ,,,க்ஷ,ஸ்ரீ,ஹ எனத் தமிழில் கலந்து பயன்படுத்துகின்றோம் அல்லவா? இவைதாம் சிரந்த எழுத்துகள். இவை மொத்தம் ஆறுதானா என்றால்  இல்லை; (மேலும், மேலே குறித்த 6 எழுத்துகள் வரிசையுடன் ƒ என்னும் கிரந்த எழுத்தும் தமிழ்எழுத்தாகக் காட்டப்பட்டுள்ளது.) இவை 51 எழுத்துகள். மேலும் ஜ், ஜா, ஜி என்ற முறையில் பார்த்தால் இவற்றின் எண்ணிக்கை மேலும் பெருகும். இந்தியக் கண்டத்திலுள்ள அனைத்து மொழி வரிவடிவங்களும் தமிழ் வரிவடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டனவே. கிரந்த எழுத்து வடிவங்களிலும் 20 தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன. பிற ஏதோ ஒரு வகையில் தமிழ் எழுத்துகளை இட வலமாக மாற்றி அல்லது தலைகீழாக அமைத்து உருமாற்றி அல்லது வேறு வகையில் சேர்த்தோ குறைத்தோ உருவாக்கப்பட்டவைதாம் அனைத்து மொழி எழுத்துகளும். திரிந்த பாலைப் பயன்படுத்துவது தீமை விளைவிப்பது போல் இவை தமிழ் எழுத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும் இவற்றை நாம் பயன்படுத்துவது நமக்குத் தீமையே விளைவிக்கும்.  

ஒருசாரார் பிற மொழிச் சொற்களை அந்த மொழிகளுக்குரிய ஒலிப்படியே ஒலிக்க வேண்டும் என்று கூறி அதற்குக் கிரந்தம் தேவை என்கின்றனர். ஆனால், இவர்கள் தமிழ் மொழிச் சொற்களைத் தமிழுக்கேற்ற வகையில் ஒலிக்காமல் பிற மொழியாளர்கள்போல் சிதைத்து ஒலிப்பவர்கள். என்றாலும் இவர்களது கருத்துகளைப் பிறர் நம்பும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதேபோல் மற்றும் சிலர்   அறிவியல் பெயர்களை எழுதுவதற்குக் கிரந்தம் தேவை என்கின்றனர். உலகில் எந்த  மொழியினரும் பிற மொழிச் சொற்களை எழுத வேண்டும் என்பதற்காகத் தம் எழுத்து வடிவினைச் சிதைத்ததில்லை. தத்தம் எழுத்துகளைப் பயன்படுத்தித்தான் பிற மொழிச் சொற்களைத் தங்களால் இயன்ற ஒலிப்பு முறைக்கேற்ப பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டிலோ எப்போதும் தமிழ்ப்பகைவர்களே செல்வாக்கு பெற்றுத் திரிகின்ற காரணத்தால்  பிற மொழிகளுக்கு முதன்மை அளித்துத் தமிழ் மொழியைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர்.

பெயர்ச்சொற்களை நம் மொழி எழுத்துகளைக் கொண்டே எழுத வேண்டும் என்பதற்குச் சான்று ஒன்று பார்ப்போம். தமிழ் என்று நாம்  குறிப்பிடுவதைப் பிற மொழியினர், தமில், டமில், டமிலு, டேமிள், டமிரு, தமிரு, என்றெல்லாம ஒலிக்கின்றனர். தமிழுக்குரிய ழகரத்தைத் தம் மொழியில் இடம் பெறச் செய்யவோ அதற்கு ஏற்ற புதிய எழுத்து வடிவத்தை உருவாக்கவோ முயலவில்லை. இவ்வாறுதான் ஆள் பெயர்கள், இடப்பெயர்கள், பொருள் பெயர்கள் முதலானவை பிற மொழிகளில் தம் மொழிகளின் இயல்பிற்கேற்ப மாற்றப்படுகின்றன. அவ்வாறு நாம் பிற மொழிகளை நம் மொழிக்கு ஏற்பக் குறிப்பிட்டால் எவ்வாறு மூலச் சொற்களைப் புரிந்து கொள்வர் என்று சிலர் கேட்கின்றனர். நாம் சப்பான் அல்லது ஜப்பான் என்று சொல்வதை அந்நாட்டினர் தம் தாய்மொழியில் நிப்பன் என்றுதான் குறிக்கின்றனர். தொடக்கத்தில் நிப்பன் என்பதை அறியாமல் இருப்பதால் ஒன்றும் யாருக்கும் இழப்பு  இல்லை. ஆனால், நாளடைவில் பழக்கத்தில் இருவகைப் பெயர்களையும் நாம் அறியும் வாய்ப்பு கிட்டும். இந்தியாவின் பெயரையே பிறர், இந்த், இந்தொ, இந்தே, இண்டியா, என்றெல்லாம் கூறும் பொழுது இந்தியா பாரத் என்றுதானே குறிப்பிடுகிறது. எனவே, பெயர்ச் சொற்களுக்குக்  கிரந்தம் தேவை என்பது தேயைற்ற  வாதம்.

அறிவியல் பெயர்களைக் குறிக்க கிரந்தம் வேண்டாவா என்பவர்கள், இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமலேயே அறிவியல் பெயர்களைக் குறிப்பதை உணர வேண்டும். சான்றுக்குச் சில வேதியல் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.  இவற்றிற்கெல்லாம் உரிய தமிழ்க் கலைச் சொற்களை அறிந்து அல்லது புதியதாய்ப் புனைந்து நாம் பயன்படுத்த வேண்டும். எனினும்  கிரந்தத்தைப் பயன்படுத்தாத ஒலி பெயர்ப்பு முறைக்காக நாம்  இவற்றை அறிய வேண்டும். சில எழுத்தொலிகளைத் தமிழில் குறிப்பிடும் முறை குறித்து மாறுபட்ட கருத்து இருக்கலாம். எனக்கும் அவ்வாறு மாறுபட்ட கருத்து உண்டு. ஆனால், இலங்கையினர் அவர்களின் ஒலிப்பு முறைக்கேற்ப குறிப்பிட்டுள்ளதால் நாம் முன்னோடியாக உள்ள அந்த முறையைப் பின்பற்றுதல் தவறு ஆகாது. நாம் வேறு முறையைப் பின்பற்றினால்தான் குழப்பம்  ஏற்படும். உலகளாவிய ஒரே முறைக்காக நாம் இவற்றைப் பின்பற்ற வேண்டும்.
கிரந்த எழுத்து  பயன்படுத்தும்  வாய்ப்பு  இல்லாத  ‘te’,‘de’    என்பன போல் வரும்  இடங்களில் எவ்வாறு தமிழில் குறிக்க வேண்டும் என்பதற்கும் சான்றுகள் குறிக்கப் பெற்றுள்ளன. பொதுவாக  ‘t’ என்பது என்னும் ஒலியில் சொல்லின் தொடக்கத்தில் அல்லது இடையில் வழங்கப்பெற்றிருப்பினும் இறுதியில் அல்லது ற்று என்று ஒலிக்கும் வகையில்  ஒலிபெயர்ப்பாக்கங்கள் உள்ளன.‘ட’ மொழி முதலில் வராது; ‘ட்’ மொழி இறுதியில் வராது என்னும் இலக்கணத்திற்கேற்ப இவ்வாறு ‘த’ பயன்படுத்தப்படுகின்றது: 

telluric acid தெல்லூரிக்கமிலம்
telluride  தெல்லூரைட்டு
tellurium தெல்லூரியம்
terbium  தேபியம்
terephthalic acid  தெரத்தலிக்கமிலம்
terpene  தெப்பீன்
toluene   தொலுயீன்
tyndal effect  திண்டல்விளைவு
tyrosine தைரோசீன்


Actinium அத்தினியம்
actinomycin அத்தினோமைசின்
antimony அந்திமனி
acetamide அசற்றமைட்டு
acetyl chloride     அசற்றயில்குளோரைட்டு
agate அகேற்று
antimonite அந்திமனைற்று
azurite  அசுரைற்று

‘C என்பது  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் அல்லது வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

cadmium கடமியம்
caesium சீசியம்
caffeine கபேன்
calamine கலமின்
carbonado காபனாடோ
carbonate காபனேற்று
cellophane செல்லோப்பேன்
cellosol செல்லோசோல்
celluloid செலுலோயிட்டு
cellulose செலுலோசு
cement சீமந்து
chloral hydrate குளோரலைதரேற்று
chloral குளோரல்
chrysoberyl கிரிசோபெரில்
chrysoprase கிரிசோபிரேசு
cuprous hydride குப்பிரசைதரைட்டு
cuprous iodide குப்பிரசயடைட்டு

எனினும் ‘c’ ஐத் தொடர்ந்து ‘t’  வருகையில்  ‘bacteria’, பற்றீரியா  என அவ்வொலிக்கேற்ப வருகிறது.


‘d’ என்பதும்  ஒலிப்பிற்கேற்ப வரிசையில்  அல்லது ‘dehy’ என வரும் பொழுது ஐ எழுத்தால் குறிக்கப்பட்டுள்ளன:

daltons law of multiple proportion தாற்றனின்பல்விகிதசமவிதி
daltons law of partial pressure தாற்றனின்பகுதியமுக்கவிதி
daltons law தாற்றனின்விதி
damped mirror galvanometer தணித்த ஆடிக்கல்வானோமானி
daniells cell தானியலின் கலம்
dehydrogenation ஐதரசநீக்கல்
dehydrohalogenation ஐதரோவுப்பாக்கியைநீக்கல்

 ‘f’ என்பது  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் அல்லது வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

faraday (unit) பரடேய் (அலகு)
faraday effect பரடேய் விளைவு
faradays laws of electrolysis பரடேயின்மின்பகுப்புவிதிகள்
farnesol பாணெசோல்
schiff base சிவுமூலம்
schiff test சிவுசோதனை

 ‘g’  இடையில் வாகவும்  இறுதியில் கு வாகவும் குறிக்கப் பெறுகின்றன:

Antigen  அந்திசன் 
Aquadag  அக்குவாடாக்கு

h’ என்பது  ஒலிப்பிற்கேற்ப , , , , , , எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

haber ammonia process ஏபரமோனியாமுறை
hadfields steel அடபீலினுருக்கு
haematite ஏமத்தைற்று
haemoglobin ஏமோகுளோபின்
hafnium அபினியம்
hargreaves bird cell ஆகிரீசு பேடர்க்கலம்
hargreaves process ஆகிரீசின் முறை
hausmannite ஓசுமனைற்று
helium ஈலியம்
hemiacetal அரையசற்றல்
hemin ஏமின்
hempel gas burette எம்பெல்லின்வாயுவளவி
hempels apparatus எம்பெலினாய்கருவி
henrys law என்றியின் விதி
heptane எத்தேன்
hexane எட்சேன்
hexanol எட்சனோல்
holmium ஒலுமியம்
hydrazine hydrate ஐதரசீனைதரேற்று
hydrazine ஐதரசீன்

‘j’ என்பது  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:

joule-kelvin effect சூல்கெல்வினர் விளைவு
joule-thomson effect சூல்தொமிசனர் விளைவு

‘s’ என்பதும் ‘sch’ என்பதும்  ஒலிப்பிற்கேற்ப வரிசையில் உள்ள எழுத்துகளால் குறிக்கப்பட்டுள்ளன:
 
schonherr process  சோனர்முறை
schorder-grillo process  சோதகிரிலர்முறை
schotten-baumann reaction சொட்டன்போமானர்தாக்கம்
schulze-hardy rule சூல்சாடியர் விதி
schwein-furter green  சுவீன்பேட்டர்பச்சை
schweitzers reagent  சுவீச்சரின்சோதனைப்பொருள்
selenium  செலனியம்
selenium cell செலனியக்கலம்
selenium chloride செலனியங்குளோரைட்டு
selenium dehydrogenation  செலனியமைதரசனீக்கல்
selenium dioxide செலனியமீரொட்சைட்டு
selenium trioxide செலனியமூவொட்சைட்டு
siderite சிதரைற்று
siemens ozoniser  சீமஞ்சினோசோனாக்கி
siemens-martin steel process  சீமஞ்சுமாட்டினர் உருக்குமுறை
smalt சிமோற்று
smaltite  சிமோற்றைற்று
sodium aluminium fluoride  சோடியமலுமினியம்புளோரைட்டு
sodium ammonium hydrogen phosphate  சோடியமமோனியமைதரசன்பொசுபேற்று
sodium argentocyanide  சோடியமாசந்தோசயனைட்டு
sodium ferrite  சோடியம்பெரைற்று

‘s’ இடையில் வரும் பொழுது சு எனக் குறிக்கப்பெறுகின்றது:

asprin  அசுப்பிரின்
acetoacetic ester  அசற்றோவசற்றிக்கெசுத்தர்

‘se’  என  முடிவன சு  எனத் தமிழிலேயே குறிக்கப் பெறுகின்றன:

aminoglucose அமீனோகுளூக்கோசு
amylase அமிலேசு

  ‘x’, ‘z’  ஆகியன   வரிசையில் குறிக்கப் பெறுகின்றன:

xanthophyll  சந்தோபில்
xenon  செனன்
xylene சைலன்
xylidine  சைலிதீன்
zeisel methoxy determination சீசெல்மெதொட்சித்துணிதல்
zeolite செயோலைற்று
zeotropic mixture மாறுகொதிநிலைக்கலவை
zerewitinoff determination செரிவிற்றினோவுதுணிதல்
zeta potential சீற்றாவழுத்தம்
zinc சிங்கு azulene அசுலன்
azulmic acid அசுல்மிக்கமிலம்

‘y’ யிகர ஒலியாக வரும் பொழுது இகர ஒலியிலேயே குறிக்கப்படுகின்றது:

ytterbium இத்தேபியம்
yttrium இத்திரியம்
சொல்லளவில் ஒவ்வொன்றும் விளக்கமாக அமைந்துள்ளதால் நான் விரித்து உரைக்க வில்லை. எனினும் இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்த எழுத்து எதையும் பயன்படுத்தாமல் அறிவியல்  பெயர்களையும் பிறவற்றையும் குறிப்பிடும் பொழுது நாம் கிரந்தம் இன்றேல் தமிழ் முழுமையடையாது என்ற அறியாமையில் மூழ்கியிருப்பது வெட்கக்கேடானது அல்லவா? எனவே, நம் அகராதிகளில் கிரந்தம் பயன்படுத்திய இடங்களில் அவற்றை நீக்கிப் புதிய பதிப்புகள் வெளியிடப் பெற வேண்டும். கிரந்த எழுத்துகளைப் பாடநூல்களில் சேர்த்துள்ளமையால் - அதுவும் தமிழ் எழுத்துகள் என்ற தலைப்பில் தமிழ்த்தாய்க்கு ஊறுநேரும் வகையில் சேர்த்துள்ளமையால், அதனை உணராமல் - நாம் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகிறோம். ஆகவே, கிரந்த எழுத்துகளை உடனே பாட நூல்களில் இருந்து நீக்க வேண்டும்.
கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறி என்ற போர்வையில் கிரந்தத்தை  நுழைக்க முயல்தையும் தடுக்க வேண்டும்.

அறிவியல் துறையிலும் கிரந்தம் வேண்டா!
அனைத்துத் துறையிலும் கிரந்தம் வேண்டா!
தாய்த்தமிழின்  தூய்மையைப் பேணுவோம்!


- ---- இலக்குவனார் திருவள்ளுவன்



Friday, October 29, 2010

செம்மொழிக் குழுவில் முதல்வருக்கு எதிராகச் செயல்படுவோர் எவர்? ஏன்?

natpu லகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்ததும் ‘மாநாடு முடிந்தது; கூட்டம் கலைந்தது என்றில்லாமல் ஆக்க முறையிலான தொடர் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என விரும்பிய முதல்வர் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாநாட்டிற்கு வர வாய்ப்பில்லாதவர்களும் மாநாட்டு உரைகளை அறிய வேண்டும் என்பதற்காகவும்  நிலையான பதிவாக  இருக்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காட்சிப்பதிவுகளாக்கி (வீடியோவாக) இணையம் மூலம் பார்த்து அறிய வழி வகை செய்துள்ளார். முந்தைய மாநாட்டில் சொல்லப்பட்ட குறையை நீக்குவதற்காக மாநாட்டு ஆய்வுரைகள் விரைவில் நூலாக வெளிவரவேண்டும்  என்றும் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனினும் முதல்வர் பணியிலிருந்து அடிப்படைப் பணியாளர் வேலை வரை எல்லாவற்றையும் அவரே செய்ய முடியாது அல்லவா? இதனைப் பயன்படுத்திக் கொண்டு செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் குழுவில் உள்ள சிலர் அவரது எண்ணத்திற்கும் கட்டளைக்கும் மாறாக நடந்து கொண்டு தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கின்றனர்.
natpu அப்படி என்னதான் கேடு செய்கின்றனர் என்கின்றீர்களா?  தமிழ் நலம் குறித்துப் பாராமுகமாக இருப்பதும் தமிழ்க்காப்புப் பணிகளைத் தடை செய்வதும் கேடுவிளைவிக்கும் செயல்கள்தாமே?
அவற்றில் ஒன்றையே குறிப்பிட விரும்புகின்றேன். எழுத்து என்பது, உடல்; மொழி என்பது, உயிர். எழுத்தாகிய உடல் சிதையுமானால், மொழி என்கிற உயிர் அழிந்துபோகும் என்றார் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவ்வகையில் தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைவில் இருந்து காப்பாற்றித் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் மொழியையும் இனத்தையும் காப்பாற்ற வேண்டும் என மாநாட்டில் நால்வர் கட்டுரை அளித்தோம்; தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைப்பதால் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் ஏற்படும் கேடுகளை நன்கு விளக்கினோம்.
25.06.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அமர்வில் கோவூர்கிழார் அரங்கத்தில் எங்களின் ஆய்வுரைகள் நிகழ்ந்தன. இக் கருத்தரங்கத்திற்கு முந்தைய நிகழ்ச்சி வரையும் இதற்கு அடுத்த நிகழ்ச்சியில் இருந்தும் காணொளிக் காட்சிகளை இணையத்தில் காண முடிகிறது.  தமிழ்மொழிக் காப்பிற்காக நாங்கள் வழங்கிய ஆய்வுரைகள் மட்டும்  திட்டமிட்டுக் காட்டப்பட வில்லை.
அதுபோல், ஆய்வுரைகளைத் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட வேண்டும் என முதல்வர் கட்டளையிட்டார் அல்லவா? தமிழ்க்காப்பு தொடர்பான எங்களின் கட்டுரைகளை மட்டும் வெளியிடக் கூடாது என முடிவெடுத்து  ஆய்வறிஞர்களிடம் கட்டுரைகள் அளிக்குமாறு கேட்கவில்லை. ஆய்வுக்கட்டுரைகள் அளித்த பிற பேராளர்களிடம் முழுக் கட்டுரையை அளிக்குமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது;  எங்களுக்கு மட்டும் அவ்வாறான மடல் வரவில்லை எனப் பன்முறை மின்னஞ்சல் வழியாகவும் பதிவஞ்சல் வழியாகவும் மடல்கள் அனுப்பியும் தொலைபேசி வழியாக வேண்டுகோள் விடுத்தும் அவை பார்க்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டன. அப்படி என்ன எங்களின் கட்டுரைகளில் அஞ்சகத்தக்கன உள்ளன என்கிறீர்களா?
natpu மாநாட்டின் பொழுது எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான ஆணை அல்லது அறிவிப்பு வரும் எனச் சிலரால் பரப்பப்பட்டு வந்த செய்தி நினைவிருக்கும்.  உடனே உலகெங்கும் உள்ள அறிஞர்கள் நிகழ்ச்சிகள், இணையத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.  உடனே முதல்வர் அவர்களும் அத்தகைய எந்த எண்ணமும் அரசிற்கு இல்லை என அறிவிக்கச் செய்தார். அத்துடன் நில்லாமல் மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் தலைப்பில் இருந்த பொதுக்கலந்துரையரங்கத்தையும் நீக்கினார். எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பிலான கட்டுரைகளும் மொழியியல் தலைப்பில் வாசிக்கப்பட வேண்டும் என்றார்.  எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பானவற்றிற்கு எதிர்ப்பாடான நிலையை எடுத்துத் தமிழ் எழுத்து வடிவப் பாதுகாப்பில் தனக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். வந்திருந்த அறிஞர்கள் எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே அளித்து உரையாற்றினர். தமிழ் எழுத்து முறையின் தனித்தன்மையும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் பேராசிரியர் சி.ஆர்.செல்வகுமார் (கனடா) அவர்களும், தமிழ் எழுத்துத் திருத்தத்திற் பொதிந்துள்ள பெருங்கேடுகள்  எனப் பொறிஞர் நா.இளங்கோவன் (துபாய்), தமிழ் எழுத்துத்திருத்தம் தேவையா? எனப் பேராசிரியர் மணியம்  (சிங்கப்பூர்) அவர்களும், வரிவடிவச்  சிதைவு வாழ்விற்கு அழிவு என்னும் தலைப்பில் நானும் உரையாற்றினோம். (இதே அமர்வில் முனைவர் வேல்முருகன் வீரமாமுனிவனின் எகர ஒகரக் குறியீடு குறித்துக் கட்டுரை அளித்தார்). வல்லுநர் குழுவின் தெரிவின் அடிப்படையில்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
பொதுவாகப் பிற அரங்கங்களில் போதிய அளவு நோக்கர்கள்  வராதபொழுது இவ்வரங்கத்தில் உட்கார இடமின்றித் திரும்பச் சென்றவர்கள் மிகுதி.
நாற்காலி முன்பு உரையாற்றும் சில கருத்தரங்கங்கள் போல் அல்லாமல் அரங்கு நிறைந்து காணப்பட்டது. அந்த அளவிற்கு உலகலாவிய வரவேற்பைப் பெற்றன எங்களின் ஆய்வுக்கட்டுரைகள். பார்வையாளர் அனைவரும் எழுச்சியுடன் பங்கேற்றனர். இந்த அரங்கத்திற்கு வர வாய்ப்பில்லாதவர்களும் கேட்டு அறிந்து மகிழும் அளவிற்குப் பெரிதும் வரவேற்பைப் பெற்றது எழுத்துச் சிதைப்பாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது போலும். எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! என்னும் தலைப்பில் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிறு நூலையும் வெளியிட்டோம்.  அதற்கும்  நல்ல வரவேற்பு கிடைத்தது.  எனவே, எழுத்துச் சிதைப்பாளர்கள் எழுத்துக் காவலர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் தமிழ்த்தாய்க்குத்தான்  கேடு செய்கிறோம் எனப் புரிந்துதான் செயல்படுகின்றனரா எனத் தெரியவில்லை.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே தமிழ்ச்சிதைவிற்கான ஆணையோ அறிவிப்போ வெளியிடக்கூடாது என முதல்வரை வேண்டி முறையீடு அளிப்பதற்காகக் கையெழுத்து இயக்கமும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தினரால் நடத்தப்பட்டது. ஆனால், தமிழறிஞர் ஒருவர் அத்தகைய அறிவிப்போ ஆணையோ எதுவும் வராது என உறுதியளித்து இதனைக் கைவிடுமாறு வேண்டியதற்கு இணங்க அம்முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.
natpu மாநாட்டில் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்தமையால் அப்பொழுது சிதைப்பு முயற்சியாளர்களால்  ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் மாநாடு முடிந்ததும் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.
தொடக்கத்தில் ஆய்வுரைகளை இணையத்தளத்திலும் ஆய்வுத் தொகுப்பு நூலில் சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்த மடல்களைப் பொறுப்பிலுள்ளோர் பார்க்கவில்லையோ என்ற ஐயமும் ஏற்பட்டது. ஆனால்  இதே மடல்களில் மறுநாள் மற்றோர் அமர்வில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் பேராசிரியர் பெஞ்சமின் லெபொ (பிரான்சு) உரையாற்றியதும் விடுபட்டது குறிக்கப்பெற்றது. அவரது அமர்வில் துணைமுதல்வரின் மனைவி அவர்களும் முதல்வரின் குடும்பத்தினரும் ஈடுபாட்டுடன் கேட்டதும் குறிக்கப்பெற்றது. அவருக்கு மட்டும் கட்டுரையை அனுப்புமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துக் காப்பு அமர்வு மட்டும் கூண்டோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கணினி முறையில்  சார்நிலையில் உள்ளவர்களே செய்வதே வழக்கம் என்பதால் பாகுபாடு காட்ட வேண்டும் என்னும் சிலர் திட்டமிட்டே தமிழ் எழுத்துச் சிதைவிற்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வாறு நடக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே,  தமிழ் எழுத்துக் காப்புப் போக்கிற்கு எதிரான செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் குழுவின் போக்கைக் கண்டித்தும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டனர். இதை அறிந்த இப்பேராளர்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தினர். இவர்களது கட்டுரைகள் இடம் பெறாமல் கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட உயர்நீதிமன்றம் மூலம் தடையாணை பெறவும் தமிழார்வலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு வழக்குமன்றம் சென்று நீதி கேட்போம் என எழுதியும் செவி மடுக்காத முதல்வருக்கு எதிரான போக்கினை உடையவர்களுக்கு இதனால் ஒன்றும் ஏற்படாது; தமிழ் எழுத்து வடிவங்களைக் காக்க வேண்டும் என்னும் உணர்வுள்ள முதல்வருக்குத்தான் களங்கம் ஏற்படும் என அதையும் தடுத்து நிறுத்தியுள்ளனர் ஆய்வறிஞர்கள்.
natpu அவ்வாறு தடையாணை பெறுவது மாநாட்டைச் சிறப்பாக நடத்தியதாகக் கூறும் தமிழக அரசிற்கு அவமானம் ஆகும் என்பதால் உடனே விழித்து இவர்களது உரைகள் இணையம் மூலம் ஒளிபரப்பப்படவும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? முதல்வருக்கு எதிராகச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்குமா?
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வழியில் ஆய்வறிஞர்கள் வழங்கிய தமிழ்க்காப்புக் கட்டுரைகளுக்கு  இழைக்கப்படும் அநீதி தமிழ்த்தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்பதை உரியவர்கள் புரிந்து கொள்வார்களா?
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை  யானும் கெடும்
என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பொய்யா மொழியைப் படித்தாவது தங்களைத் திருத்திக் கொள்வார்களா?
செம்மொழித்தமிழ் தொடர்பான குழுவில் இருந்துகொண்டு இவ்வாறு செய்வது சரிதானா? முறைதானா? அறம்தானா? எனத் தமிழ்த்தாய் கேட்கும் கேள்வி அவர்கள் செவிகளில் விழுமா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்குதானா?
மக்கள் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்! நல்ல தீர்ப்பு கூறுங்கள்!


Comments

Saturday, October 9, 2010

யாருக்கும் வெட்கமில்லை!

யாருக்கும் வெட்கமில்லை!

இலக்குவனார் திருவள்ளுவன்
(இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)
natpu       தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை உலகிற்கு உணர்த்துகிறது. நம் உரிமையைக் கேட்பதற்குக் கூட நாம் தயங்குவதில் இருந்தே நம் வெட்கங் கெட்ட நிலை அனைவர்க்கும் புலனாகின்றது.
      உரிமைக்கு ஊறு நேரும்பொழுது மிக மிகச் சிறிய எதிர்ப்பைக் காட்டக்கூடத் தயங்கும்  தமிழால் வாழ்வோரின் தகைமைக்கு(!) ஒரு சான்று.
     சமற்கிருதம், அரபி, பெர்சியன் முதலான மொழிகளைச் செம்மொழிகள் எனச் சொல்லி பல கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வருகிறது சமயச் சார்புடைய மத்திய அரசு. தமிழுக்குப் பல போராட்டங்களுக்குப் பின்பே தமிழின் செம்மொழித் தன்மைக்குரிய தகைவேற்பு வழங்கப்பட்டது. உடனே எப் பேராட்டமும் முயற்சியும்  இன்றிச் சமற்கிருதத்திற்கும் செம்மொழி ஏற்பு வழங்கப்பட்டது. ஆனால், செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே சமற்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தொடருகின்றன. தமிழுக்கோ ஒப்பிற்கு ஓரிரண்டு கண் துடைப்பாக வழங்கப்படுவது தவிர முழுமையான நிதி உதவிகள் வழங்கப்படவில்லை. அவற்றில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.
natpu      செம்மொழிச் செயற்பாட்டுத் திட்டங்களில் ஒன்று செம்மொழி அறிஞர்களை விருதுகள் வழங்கிச் சிறப்பித்தல். ஆனால், தமிழில் புலமையுடையோர் இல்லை எனத் தமிழறிஞர்களை  இழிவுபடுத்தும் விதமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. நாமும் அமைதி காப்பதன் மூலம் அதனை ஒப்புக் கொள்கின்றோம்.
ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெர்சியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத அறிஞர் ஒருவர் என 22 அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்கப்படுகிறது. இவ் விருதானது விருது பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் பரிசுத்தொகை வழங்கும் சிறப்பிற்குரியதாகும். செம்மொழித்தமிழ் அறிஞர்களுக்கும் இவ்வாறு வாணாள் முழுவதும் ஆண்டுதோறும் பரிசுஊதியம் வழங்கும் வகையில்  விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதே தவிர இது வரை ஒருவருக்குக் கூட அவ்வாறு விருது வழங்கப்படவில்லை. தமிழ்ப்புலமையுடையோர் யாருமில்லை என மத்திய அரசு கருதுகிறது என்றால், நாமும் ஆமாம், ஆமாம், எங்களில் அறிஞர்கள் யாருமில்லை; அந்த அளவிற்கு வளர்ச்சியில்லாத மொழியே எங்கள் தமிழ் மொழி என்பதுபோல் தலையாட்டிக் கொண்டு அமைதி காத்துவருகிறோம். சமற்கிருதத்திற்கும்  தொன்மையான சிறப்பு மிக்க உலக மூல மொழியான தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் முழுவதும் ஆண்டுதோறும் பரிசூதியம் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதைக் கேட்பதற்கு நமக்குத் துணிவில்லை. ஒருவேளை அவ்வாறு விருது வழங்கினால் நமக்கா கிடைக்கப் போகிறது? வேறு யாரோ விருது வாங்க நாம் ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்ற பெருந்தன்மையா என்று தெரியவில்லை.
natpu      இவை தவிர சமற்கிருத அறிஞர் ஒருவருக்குப் பன்னாட்டு நிலையில் ஆண்டுதோறும் வாணாள் முழுவதும் உரூபாய் 50,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அயல்நாட்டைச் சேர்ந்த செம்மொழியாம் தமிழறிஞர் ஒருவருக்குக் குறள்பீடம் விருது   என உரூபாய் 5,00,000 வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அப்படியானால்  சமற்கிருதத்தைவிடத் தமிழ் உயர்ந்ததாக ஒத்துக் கொண்டதாகுமே! விடலாமா? எனவே, எவ்வகை முறையீடும் போராட்டமும் இன்றிச் சமற்கிருத அறிஞருக்கான இப்பரிசுத் தொகை உரூபாய் 5 இலட்சத்திற்கு ஒருமுறை விருதாக உயர்த்தப்பட்டது.
      உண்மையில், குறள் பீடம் பன்னாட்டு விருதுகள் இரண்டு வழங்கப் பெறும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று இந்தியாவில் தங்கியிராத இந்தியர் ஒருவருக்கும் மற்றொன்று இந்தியரல்லாத அயலவர் ஒருவருக்கும் வழங்கப்பெறும். சமற்கிருதத்திற்கு ஒரு விருது; ஆனால், தமிழுக்கு இரண்டா என எண்ணியே குறள்பீட விருது ஒன்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
natpu  அறிவித்துள்ள விருதுகளையாவது காலமுறையில் வழங்கியுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 2004ஆம் ஆண்டு   அக்டோபர்த் திங்கள் 12 ஆம் நாள் தமிழுக்குரிய செம்மொழி ஏற்பாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிற்கான விருதாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. அஃதாவது  2004-2005ஆம் ஆண்டிற்குரிய தொல்காப்பியர் விருதோ, குறள் பீடம் விருதுகளோ இளம் அறிஞர் விருதுகளோ யாருக்கும் வழங்கப்படவில்லை. (மூத்த அறிஞர் விருது பற்றித்தான் வாயே திறக்கவில்லையே!) தமிழறிஞர்கள் யாருமில்லை என மத்திய அரசு கருதுகிறதா? சமற்கிருதத்திற்குக் கீழான நிலையில்தான் தமிழாக இருந்தாலும் இருக்க வேண்டும் என்ற பரந்த(?) மனப்பான்மையா எனத் தமிழ் டிரிபுயூன் (Tamil Tribune) கேட்டது. இருப்பினும் வழங்கப்படவில்லை.
      தொல்காப்பியர் விருது 2005-2006ஆம் ஆண்டிற்கு மட்டுமே (பேராசிரியர் அடிகளாசிரியர்) அறிவிக்கப்பட்டுள்ளது. குறள்பீடம் விருதும் அயலவருக்கான ஒரு விருது மட்டும் (பேராசிரியர் சியார்சு அர்ட்)  2006-2007இற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக விருது வாங்கும் அளவிற்குக் கூடத் தமிழறிஞர்கள் யாரும் இல்லை என்பது மத்திய அரசின் வாதம் போலும். ஆனால் சமற்கிருத விருது சிற்றூரைச் சேர்ந்தவருக்குக் கூட வழங்கிச் சிற்றூரிலும் அதற்குச் செல்வாக்கு உள்ளதாக அறிவிக்கத் தயங்குவதில்லை.
இளம்அறிஞர் விருது 2005-2006 (முனைவர் அறவேந்தன், முனைவர் மணிகண்டன், முனைவர் கலைமகள், முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர் பழனிவேலு), 2006-2007 (முனைவர் சந்திரா, முனைவர் அரங்க. பாரி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் பவானி, முனைவர் கலைவாணி), 2007-2008ஆம் ஆண்டுகளுக்கு மட்டுமே (முனைவர் செல்வராசு, முனைவர் வேல்முருகன், முனைவர் மணவழகன், முனைவர் சந்திரசேகரன், முனைவர் சைமன் சான்) அறிவிக்கப்பட்டது. எனவே, இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய விருதுகள் வழங்காமை தமிழுலகத்திற்கு இழப்பு என்னும் உணர்வு ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை? பரபரப்பான அரசியல் விளம்பரத்தில் விரிவான செய்தி இடம் பெறாது என்ற நம்பிக்கையோ?
      உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய 2010  சூனில் 2008-2009,   2009-2010 வரை விருதுகளை அறிவித்து வழங்கியிருக்கலாமே.  அவற்றையும் ஏன் அறிவிக்கவில்லை. உலக அறிஞர்கள் முன்னிலையில் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து இருக்கலாமே! தமிழால் பெருமை பேசுவோர்களுக்குத் தமிழறிஞர்களைச் சிறப்பிக்க மனமில்லாமல் போனது ஏன்? சரி போகட்டும்! அறிவித்த விருதுகளையாவது குடியரசுத்தலைவர் மூலம் வழங்கினார்களா? அவ்வாறு வழங்கவில்லையே! ஏன்? சமற்கிருதம் முதலான மொழியறிஞர்களுக்கு வழங்கியதுபோல் இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்குவதைத் தடுத்தது யார்? அதுதான் போகட்டும். குடியரசுத் தலைவர் நிகழ்ச்சித் திட்டத்தைப் பார்த்தால் வாரத்தில் 4 நாட்கள்கூடத் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில்  பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறிருக்க தமிழறிஞர்களுக்கான விருதுகளுக்கு நாள் ஒதுக்காமல் முட்டுக்கட்டையாக இருப்பது யார்? ஏன்? 
விருது தராமல் விருதுத் தொகை மட்டும் தந்த பொழுது அதை எவ்வாறு இந்த அறிஞர்கள் வெட்கம் சிறிதுமின்றி ஏற்றுக்கொண்டார்கள்?
natpu அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே
ஊமைச்சனங்களடீ
மானம் சிறிதென் றெண்ணி
வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில்-கிளியே
இருக்க நிலைமையுண்டோ?

எனப் பாரதியார் இவர்களுக்காகத்தான் பாடிச் சென்றாரோ?
இன்று அவர் இருந்திருந்தால்

விருதுபெறுவதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

எனப் பாடியிருப்பார் அல்லவா?

விருதுகள் வழங்காமல் விருதுத் தொகைகள் மட்டும் வழங்கப்பட்டது ஏன் என எண்ணலாம். நிதி ஒதுக்கப்பட்ட ஆண்டிற்குள் அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் அல்லவா? எனவே, வழங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கோரிப் பெறப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்தினால்  தணிக்கைத் தடை வருமல்லவா? எனவேதான் விருதுகளைக் குடியரசுத் தலைவர் தரும்பொழுது தரட்டும். விருதுத் தொகைகளை  வழங்குவோம் என வழங்கியுள்ளனர். விருதுகள் வழங்காதது விருதாளர்களுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தாலும் பெருமைக்குரிய விருதுத் தொகையை அறிந்தேற்பிற்குக் காரணமான முதல்வர் வழங்கும் பொழுது வாங்குவதுதானே ஏற்றது என வாங்கிவிட்டனர்.
natpu       விருதுத் தொகைகள் வழங்காததன் காரணம் என்ன தெரியுமா? ஆரிய மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிப்போன மத்திய அரசு தமிழ் டிரிபுயூனில் குறிப்பிட்டாற்போன்று சமற்கிருதத்திற்கு இணையாக எந்த மொழியையும் ஏற்க விரும்பவில்லை. உண்மையிலேயே சமற்கிருதத்தைவிடப் பன்மடங்கு மேம்பட்டதாக உயர் தமிழ் இருப்பினும் ஒப்பிற்குச்  சமற்கிருதத்திற்கு அடுத்தநிலை தமிழ் எனக் கூறி வந்தாலும் அதற்கு மிகவும் கீழான நிலையே கொடுக்க விரும்புகிறது. சமற்கிருதத்திற்கு அடுத்துள்ள நிலையில் பல மொழிகளைக் கூறிவிட்டு அதில் தமிழையும் சேர்த்து விட்டால் தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை மறைத்து விடலாம் அல்லவா? எனவே, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் செம்மொழி ஏற்பு நடைமுறைக்கு வருவதற்குக் காத்திருக்கிறார்கள்.
மருத்துவர் கி.ஆ.பெ.மணிமேகலை கண்ணன் நடத்தும் தமிழ்க்கழகம் (அகாதமி) சார்பாக அதன் தலைவர் மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் உயர் நீதிமன்றத்தில் செம்மொழித் தகுதியல்லாத மொழிகளுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளார். தீர்ப்பு வருவதற்குள் அவசரம் அவசரமாக  அம் மொழிகளுக்கான அறிந்தேற்பாணையைத் தீர்ப்பிற்கு உட்பட்டுச் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார்கள். வழக்கு முடிவில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை வரவழைத்து விடலாம் என எதிர் நோக்குகிறார்கள். அவ்வாறு வந்தால் அவையும் செம்மொழிகளாகும். மலையாள மொழியினர் சேரநாட்டில் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலியவற்றின் அடிப்படையில் செம்மொழிஏற்பினை வேண்டி உள்ளார்கள். வங்காள மொழியினரும் செம்மொழிஏற்பினை வழங்க வேண்டி உள்ளார்கள். இவ்வாறு இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் செம்மொழி ஏற்பு வழங்கிவிட்டால்  சமற்கிருதம் தவிர பிற அனைத்தும் ஒரு கும்பலாகக் காட்சியளிக்கும். கும்பலோடு கும்பலாகத் தமிழுக்கான விருதுகளை வழங்கினால் அதன் சிறப்பு யாருக்குத் தெரியப் போகிறது? என்னும் உயர்வு(!) மனப்பான்மை. எனவே, பிற மொழிகளுக்கான செம்மொழி ஏற்பாணை நடைமுறைக்கு வருவதற்காகக் காத்து உள்ளார்கள்
natpu       செம்மொழிக்காலம் என்பதற்குக் கி.மு. (கிறித்து பிறப்பிற்கு முன்புள்ள காலம்) எனப் பொதுவாகக் குறித்திருக்க வேண்டும். அல்லது 2000 ஆண்டு முன் வரலாறு என்று  இருந்ததையாவது மாற்றாமல் இருந்திருக்க வேண்டும். அதைத்தான் 1000 ஆண்டு என அறிவித்துப் பிற மொழிகளைப் பட்டியலில் சேர்க்க ஆட்சியாளர்கள் ஒத்துக்  கொண்டார்களே! பிறகு போராட்டத்திற்குப் பின்தானே 1500 ஆண்டுப் பழமை என மாற்றினார்கள். எனவே தமிழால் பிழைப்பவர்களுக்குப் பிறருக்கான விருதுகள் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? அவர்கள், பிற மொழிஅறிஞர்களுக்கான விருதுகள் வழங்கும் வரை பொறுத்துக் கொள்வார்கள் அல்லவா? அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இதுவரை தமிழக அரசு மத்திய அரசைக் கண்டிக்க வேண்டா - வற்புறுத்தி விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியிருக்கலாமே! ஏன் நடத்தவில்லை? முதல்வர் தில்லிக்குச் சென்ற பொழுதுகூட விருதளிப்பை வைத்திருக்கலாமே! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ன செய்கிறது என்கிறீர்களா? முதல்வர் தமிழர் நலனுக்கு அனுப்பும் மடல்களே குப்பைத் தொட்டிக்குப் போகும்பொழுது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் கடமை உணர்வுடன் அனுப்பும் மடல்களுக்கா மதிப்பிருக்கப் போகிறது! அனைவரும் சமம் எனப் பேசும் மத்திய அரசு, அயல்நாட்டு மொழியாம் ஆரியத்தை உயர்த்துகிறது; மண்ணின் மொழியான உயர்தனிச் செம்மொழித் தமிழைத் தாழ்த்துகிறது. இதனைக் கடமையாக எண்ணும் மத்திய அரசினருக்கு வெட்கம் எங்கே வரப் போகிறது?
      அரசியல்வாதிகளுக்குத்தான் வெட்கம் கிடையாது. விருதுகளால் மதிப்படையும் அறிஞர்களுக்குமா வெட்கம் இல்லை. விருதுகள் வழங்கிவிட்டதாக எண்ணி நண்பர்களும் சுற்றத்தாரும்  விருது எங்கே? விருது எங்கே? எனக் கேட்கும் பொழுது நாணிக் குறுகுகிறார்களே! கிளர்ந்து எழ வேண்டாவா?
     விருதுக்குத் தெரிவு செய்யப்பெற்ற அறிஞர்களே! உண்மையிலேயே நீங்கள் தமிழை மதிப்பதாயின் குறைந்த காலக்கெடு கொடுத்து குடியரசுத்தலைவர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவில்லையெனில் திருப்பித் தருவதாக அறிக்கை விடுங்கள்! தமிழை மதிக்காதவர்களும் தமிழ்ப்பகைவர்களே. ஆதலின்
       எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி    
       இட்டழைத்தாலும் தொடேன்
என அறிவித்து  விருதுத் தொகைகளைத் திருப்பியளியுங்கள். தமிழ் என்பது மொழியை மட்டும் குறிப்பதில்லை. வீரம், மானம் முதலான உணர்வுகளையும் குறிப்பது. எனவே, படித்த தமிழுக்காவது மதிப்பளித்து தன்மானத்தமிழர்களாக மாறுங்கள். இப்படி ஒரு நெருக்கடி கொடுத்தாலன்றித் தமிழ்மானம் காக்கப்படாது என்பதை உணருங்கள்.

தமிழை மதிக்கும் தமிழர்களாய்த் தலை நிமிர்ந்து வாழ்வோம்!


Comments




(1 hours ago) ஏதிலன் said:
வெட்கமில்லை, வெட்கமில்லை, இங்கு யாருக்கும் துளிக்கூட வெட்கமில்லை!
(1 hours ago) தஞ்சை இறையரசன் said:
தமிழ் மொழிக்கான தகுதியைக் குறைத்து மதிப்பிட இடம் கொடுத்தவர்கள் கொடுப்பவர்கள் தமிழறிஞர்களும் தமிழகமும்தான்! உண்மையை விளக்கமாகத் தந்துள்ளார் திருவள்ளுவனார்! தமிழறிஞர்கள் தமிழமைப்புகள் அதிக உரிமைகளைப் போராடிப் பெற்வில்லை என்றாலும் கிடப்பவற்றையாவது தக்கவைத்துக்கொள்வார்களா?

செய்திகள்



© நட்பூ @ 2010, ஆக்கம் மற்றும் பராமரிப்பு தாய் தொழில் நுட்பம்
மின்னஞ்சல் முகவரி : natpoo.in@gmail.com
தொடர்புக்கு: 9884057744
4 hours ago) karikalan said:
ஐயா!

இந்தக் கட்டுரையின் வாயிலாக உங்கள் குமுறல்களை நீங்கள் கொட்டி விட்டீர்கள். இதைப்படித்த எங்களைப் போன்றோரும் எங்கள் பங்குக்குப் புலம்புவதைத் தவிர என்ன செய்ய? "உரிமைக்கு ஊறு நேரும்பொழுது மிக மிகச் சிறிய எதிர்ப்பைக் காட்டக்கூடத் தயங்கும் தமிழால் வாழ்வோரின் தகைமைக்கு(!) ஒரு சான்று" என நீங்கள் எழுதியுள்ள வரியிலேயே இத்தகு நிலைமைக்கு விடையும் புதைந்துள்ளது. தமிழால் தங்களை அவர்கள் வளப்படுத்திக் கொண்டது மட்டுமல்ல, மாறாகத் தமிழினத்தையே கொள்ளை கொண்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை. தமிழறிஞர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது அப்படித் தங்களைத் தாங்களே எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக இருந்து தொலைக்கும் வரை நம் நிலை இப்படித்தான் இருக்கும். பாவேந்தர் கூறியது போலத் தமிழாய்ந்த தமிழன் தமிழ்நாட்டை ஆண்டாலொழிய, வந்தேறிகள் இந்த மண்ணுக்கும் இனத்துக்கும் எதுவும் நன்மை செய்துவிடப் போவதுமில்லை, அவர்களுடைய அடிவருடிகளாலும் நம் மொழிக்கும், இனத்துக்கும் எதுவகையான நன்மைகளும் ஏற்படவும் ஏற்படாது. தமிழ்நாடு தமிழர்நாடாக மாற வேண்டும். அப்போது தான் நம் இனத்துக்கும், மொழிக்கும் விடிவு பிறக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++



 

within the last minute) இலக்குவனார் திருவள்ளுவன் said:
அன்புள்ள திரு கிருட்டிணன், உங்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்வதில் சிக்கல் என எண்ணுகிறேன். thiru2050.blogspot.com வலைப்பூவில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி எனக் குறிப்பு உள்ளது. அதனைப்பின்பற்றினால் நீங்கள் கணிணியில் தமிழில் தட்டச்சிட இயலும். எனினும் உங்கள் கருத்திற்கு நன்றி. (பிற கருத்தாளர்களுக்கும்தான் நன்றி.)அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(1 hours ago) Krishnan-Chennai said:
This needs no further illustrations. Even Sahithya Awards have been turned down by some of our Great Scholars for reasons best known to them. So People have to come to a consensus and decide keeping in mind the Larger Interests of the Tamil Community as a whole. There are enough of precedences earlier in the History of Tamil Nadu. Even otherwise they can lay their own cases as examples and create a Noble Precedence.
Hats off to Valluvan for the above exemplary Note. Quotation from Bharathi is extremely apt and I have no doubt that it will open the minds of People.

யாருக்கும் வெட்கமில்லை என்னும் கருத்துரையைப் படித்தேன்.
நெருப்புரையாக இருந்தது. மேற்கூறிய தலைப்பில் பாவலரேறு
பெருஞ்சித்திரனார் தம் தென்மொழியில் ஓர் ஆசிரிய உரையை
எழுதி அந்தக் காலத்தில்
தமிழுக்கும் இனத்திற்கும் ஏற்பட்ட இழிவுகளைச்
சுட்டிகாட்டிருந்தார். இக்காலத் தமிழனுக்கு மொழியைப் பற்றியோ
இனத்தைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ கவலை இல்லை.
மொழி இனம் நாடு ஆகிய மூன்றிலும் நாம் கோட்டை விட்டோம்
என்பதுதான் அவலம். அறிஞர் திருவள்ளுவன் அவர்களின் கருத்துகள்
தமிழர்களை விழிக்கச் செய்யும்.

இரா.செம்மல்











(within the last minute) Anonymous said: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெட்கமில்லை வெட்கமில்லை! யாருக்கும் வெட்கமில்லை!

தமிழ் மொழிக்கான தகுதியைக் குறைத்து மதிப்பிட இடம் கொடுத்தவர்கள் கொடுப்பவர்கள் தமிழறிஞர்களும் தமிழகமும்தான்!
(within the last minute) முருகன் said:
ஐயா!


தங்கள் கருத்துரை..... நெருப்புரை........
(within the last minute) தீபக் ,திருப்பெரும்பதூர் said:
சிறு எறும்பு  கூடத் தன்னைப்  பாதுகாக்கத்  தன்னால் ஆன எதிர்ப்பைக் காட்டும் ஆனால் தமிழன்.............. இதையெல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.....
(within the last minute) மாணிக்கம் , லிட்டில் இந்தியா, சி said:
நட்பூ ஆசிரியருக்கு வணக்கம்,
தங்களுடைய தலத்தில் தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெறுவது மகிழ்ச்சி, மற்ற இணைய இதழ்களில் எல்லாம் சினிமா, கவர்ச்சி இதுவே உள்ளது தற்போதைய தமிழனுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை........
(6 hours ago) Anonymous said:
சிறு எறும்புகூடத் தன்னைப் பாதுகாக்கத் தன்னால் ஆன எதிர்ப்பைக் காட்டும்  ஆனால் தமிழன்.............. இதையெல்லாம் என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.....
durai
(2 days ago) த.மணிமாறன் said:
எந்த ஒரு சொல்லையும் இடம் மாற்றம் செய்ய முடியாத படி பொருத்தமாகவும் சரியாகவும் திரு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதியுள்ளார். ஆனால் எருமை மாட்டுத் தோல் உள்ளவர்களுக்குச் சுரணை எப்படி வரும்? வெட்கம் எப்படி வரும்? வழக்குரைஞர் காந்தியின் பணியும் பாராட்டிற்குரியது. உயர் மட்டத்தில் உள்ளவர்களும் வழக்கைத் திரும்பப் பெற கேட்டதாகவும் சிலர் விலை பேச முயன்றதாகவும் மிரட்டல் வந்ததாகவும் கேள்விப்பட்டேன். அவருடன் மேலும் பல தமிழ் அமைப்புகளும் அவருடைய வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டு வழக்கை வலிமையுடையதாக ஆக்க வேண்டும். இதைப் படித்த பின்பும் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வெட்க உணர்வு ஏற்பட வில்லை என்றால் நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
(5 days ago) besten online poker said:
hey your blog design is very nice, clean and fresh and with updated content, make people feel peace and I always like browsing your site.

- Joe
(5 days ago) குமரன் said:
என்ன செய்வது தன்மானமற்ற் தலவர்களால் தமிழகம் தாழ்ந்து போய் கிடக்கிறது. தடுமாறிக் கிடக்கும் தமிழகம் தலை நிமிர இயன்றதைச் செய்வோம்.
(Oct 11, 2010) said:
(within the last minute) Anonymous said:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
hit counters

Wednesday, September 29, 2010

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
– திருவள்ளுவன் இலக்குவனார்

தமிழைப் பாதுகாப்பதாகவும் பரப்புவதாகவும் கூறிக் கொண்டு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு எழுத்துச் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் பிற அனைத்து மொழிகளுடனும் ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாயும் அறிவியல் முறையில் அமைந்ததாயும் உள்ள ஒரே வடிவப் பாங்கு தமிழ் மொழிக்குரிய வரி வடிவ அமைப்பாகும். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத சிலர் தாங்களும் குழம்பிப் பிறரையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையோர் மிகச் சிலராய் இருப்பினும் இவர்கள் செல்வாக்கு உள்ள இடங்களில் உள்ளமையாலும் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறி உண்மையாக இருக்குமோ எனப் பிறரை ஐயப் படுகுழியில் தள்ளப் பார்ப்பதாலும் நாம் மறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்த வகையில் தமிழ் வரிவடிவச் சீர்மையையும் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளும் சிதைவு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் தேவையையும் நாம் காணலாம்.

குறைபாடுள்ள ஒன்றைத் திருத்துவதே முறையானது. மாறாகச் சீராக உள்ளதைத் திருத்துவது என்பது சீரழிப்பே ஆகும். அந்த வகையில் சீராக உள்ள தமிழ் வரிவடிவங்களில் சிதைவு ஏற்படுத்த வலியுறுத்துபவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எளிய கவிதைகள் மூலம் தமிழன்னையை அழகுபடுத்தும் அறிஞர் வா.செ.குழந்தைசாமி ஆவார். அவர் குறிப்பிடும் கருத்துகளில் முதன்மையானவை தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதாலும் உயிர் மெய்க் குறியீடுகள் சீராக அமையாமையாலும் படிக்க முடியாமல் போகின்றது என்பதாகும். உண்மையில் தமிழ் எழுத்துகளில் உயிர் மெய்க் குறியீடுகள் என்பன அட்டவணை 1 இல் குறிப்பிட்டாற்போன்று கால், பிறை, விலங்கு, கீற்று, கொம்பு என ஐந்தாகும். இவற்றுள் கொம்பும் காலும் இணைந்த கொம்புக்கால் என்பது ஊகாரத்திலும் ஔகாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. இது ள என்னும் எழுத்து போன்று இருந்தாலும் (கொம்பும் காலும் இணைந்த) தனிக் குறியீடு என்பதால் அட்டவணை 1 இல் தனியாகக் காட்டப்பட்டுள்ளது.
natpu
ஐந்து உயிர் மெய்க் குறியீடுகளே அட்டவணை இரண்டில் குறிப்பிட்டாற்போன்று எழுத்துடன் இணைந்தும் முன்னால் அல்லது பின்னால் அல்லது முன்னும் பின்னுமாகச் சேர்ந்தும் பதினெட்டு வகையாகக் காட்சியளிக்கின்றன.
natpu
இவற்றுடன் மெய்யெழுத்தில் உள்ள புள்ளி நீக்கப்படுவதன் மூலம் உயிர்மெய் அகரம் உருவாகிறது. எனவே, உயிர்மெய் அமையும் வகை பத்தொன்பது என்று கொள்ளலாம். இவற்றை அட்டவணை 3 அ, அட்டவணை 3 ஆ, அட்டவணை 3 இ ஆகியவை விளக்குகின்றன.
natpu
natpu
natpu
இவற்றுள் ணா, றா, னா ஆகியவை மிக மிகத் தொடக்கக்காலத்தில் இவ்வாறேதான் எழுதப்பட்டு வந்துள்ளன. இவற்றைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கலைச்சொல் அகர முதலியிலும் ஆறாயிரம் எனத் துணைக்காலுடன் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது குறிக்கப் பெற்றுள்ளது. பின்னரே எழுதும்பொழுது ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகப் பிறை என்னும் வடிவமிட்டு எழுதியுள்ளனர். முன்பே இவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது போல் இப்போது ஏற்றுக் கொண்டால் என்ன என்று சிலர் வினவலாம். குறியீடுகளை அறிவியல் முறையில் அமைக்கும் பொழுதே எழுதும் முறைக்கு முதன்மை கொடுத்து இவ்வாறு அமைத்துள்ளனர். ஆனால் கல்வெட்டுகளில் பெரியார் எழுத்து என்று இப்பொழுது நாம் சொல்லும் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். இவைபோல்தான் ணை, லை, ளை, னை ஆகியன எழுதுகையில் ஏற்படும் எழுத்து மயக்கத்தை அல்லது குழப்பத்தைப் போக்குவதற்காக துதிக்கை எழுத்து என்று இப்போது அறியாமல் அழைக்கப்படுகின்ற முன்வளைத் தலைகீற்று பயன்படுத்தப்பட்டது. இதனால் சுழிகளாக இணைந்து வருகையில் ஏற்படும் ஐயப்பாடு நீங்கியது. டி, டீ ஆகிய எழுத்துகள் உள்ளவாறே மேல் விலங்கு இடப்பட்டால் பி, பீ என்ற எழுத்து போல் தோன்றும் என்பதால் சற்று உள்வாங்கிக் குறியீடுகள் போடப்பட்டுள்ளமை போல்தான் மேலே குறிப்பிட்ட சில ஆகார ஐகாரக் குறியீடுகள் அறிவியல் முறையில் எழுதப்படுவதற்கு வாகாக அமைந்துள்ளன. இவற்றை அறியாமல் நாம் 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றதாகும். எனவே, மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்துவதே சிறந்ததாகும்.

அடிப்படையில் அனைவரும் தவறாக எண்ணிவரும் உகரக் குறியீடுகள் அனைத்தும் அறிவியல் முறையில் மிகச் செம்மையாக அமைந்துள்ளன என அட்டவணை நான்கைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். உகரக் குறியீட்டின் பொதுப்பெயர் கீற்று என்பதாகும். எழுத்து முடியும் இடத்திற்கேற்ப இதனைத் தொடர்ந்து குறிப்பிடும் வகையில் உகர உயிர்மெய் எழுத்துகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் என்றால், க என்னும் எழுத்துடன் கீற்றைக் (க+|)குறிப்பிடுகையில் த என்ற குழப்பம் வரக் கூடாது என்பதற்காகக் கீழ் விலங்குக் கீற்றாக ( ) அமைத்துள்ளனர்; த என்னும் எழுத்தில் முடியும் இடத்தில் கீற்றைக் குறிப்பிடுகையில் த எழுத்தில் இருந்து வேறுபடுத்த முடியாது என்பதால் மடக்கேறு கீற்றாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வடிப்படையில்தான் ஊகாரக் குறியீடுகளும் நேர்த்தியாயும் எழுதுவதற்கு வாகாகச் சீரியதாயும் அமைந்துள்ளன.

natpu

பெரும்பான்மைத் தமிழறிஞர்கள் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்ப்பவர்கள் - தம் வாதத்தை எடுத்துரைக்கும் பொழுது தெரிவிக்கும் சில கருத்துகளைக் கொண்டு அவர்களும் - எழுத்துச் சிதைவை ஆதரிப்பதாக எழுத்துச் சிதைவாளர்கள் தவறாகக் கூறுகின்றனர். சான்றாக அறிஞர் வா.செ.கு. அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பன்மொழியறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய சிலர் எழுத்துச் சிதைவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். எழுத்துச் சீரமைப்புக் குழுவில் இருந்தாலும் மீனாட்சி சுந்தரனார், எழுத்துச்சிதைவிற்கு எதிராகத், தமிழ் மிகப் பழைய மொழி என்பதனை மறக்க முடியாது. பழமையை அழிப்பதில் ஏன் இந்த விறுவிறுப்பு? தமிழ் எழுத்து கண்ணைக் குத்துகிறதா? கொலை செய்கிறதா? எனக் கடிந்து கூறியுள்ளார் (சித்த யோகி சாமி சுந்தரமகாலிங்கம் அவர்களின் உண்மை வெளிப்படுகின்றது என்னும் கட்டுரை: செந்தமிழ்ச் செல்வி சனவரி, 1952: தரவு-புலவர்மணி இரா.இளங்குமரனாரின் எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்துச் சீரழிப்பா? என்னும் நூல் பக்கம் 13). சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், எழுத்துச் சீர்திருத்தவாதிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை பேசுகின்றனர். .... எழுத்துச் சீர்திருத்தவாதிகளுக்கு நானும் ஒரு பட்டம் தரலாம். அது குழப்பவாதிகள் என்பதாகும். .... உண்மை என்னவென்றால், தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்லூரிகளில் பயிற்சிமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ, யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுகின்றனர் (எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? 1995) என எழுத்துச்சிதைவிற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்துள்ளார். கூறாததைக் கூறியதாகக் கூறும் வஞ்சனையை அன்றே சிலம்புச் செல்வர் உணர்த்தியுள்ளார். இவர்களைப் போல், கப்பலோட்டிய தமிழர் அறிஞர் வ.உ.சிதம்பரனார், செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் வ.சுப.மாணிக்கம், பாவலர் பெருஞ்சித்திரனார், முதுமுனைவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ம.இல.தங்கப்பா, அறிஞர் வெ.கோவலங்கண்ணன், அறிஞர் ஔவை நடராசன், கணிஞர் மு. மணிவண்ணன், பேராசிரியர் இ.மறைமலை, பேராசிரியர் பா.இறையரசன், பொறிஞர் இராமகிருட்டிணன், முனைவர் இளங்கோவன், அறிஞர் க.சி.அறிவுடைநம்பி, அறிஞர் சீனிநைனா மொகமது, பேராசிரியர் செல்வகுமார், அறிஞர் சுப.நற்குணன், அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் முதலிய பலரும் வரிவடிவச் சிதைவு முயற்சிகளில் இருந்து தமிழைக் காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர்; மேலும் பலர் குரல் கொடுத்தும் வருகின்றனர்.



மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரிவடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால் மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கிவந்த தமிழ் மொழி புதிய புதிய வரிவடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக்கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச் சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ் நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை. ஒலியே மொழி என்றும் வரிவடிவம் மொழியன்று என்றும் கூறும் தவறான வாதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஐ என்று மட்டும் ஒலித்தால் தமிழா ஆங்கிலமா வேறு மொழியா எனத் தெரியாது. ஆனால், ஐ எனத் தமிழில் எழுதும்பொழுது, உயிரெழுத்துகளில் ஒன்றாகவும், தலைவன் என்னும் பொருள் உடைய சொல் என்றும் புரிந்து கொள்ளலாம். இதனையே ஆங்கிலத்தில் ஐ என எழுதும்பொழுது தனி எழுத்தாயின் (I) உயிரெழுத்தையும் நான் என்னும் பொருளையும் குறிப்பதாகவும் எழுத்துச் சேர்க்கையாக அமையின் (Eye) கண் என்னும் பொருள் வருவதையும் புரிந்து கொள்ளலாம். ஆக ஒலிவடிவம் பல மொழிகளில் பொதுவாக இருப்பதையும் வரிவடிவமே மொழியை வேறுபடுத்துவதையும் புரிந்துகொள்ளலாம். எனவே, வரிவடிவத்தைச் சிதைப்பது மொழியைச் சிதைப்பதாகும் என உணர்ந்து அம் முயற்சியைக் கைவிடவேண்டும்.



ஐரோப்பிய மொழிகளில் உயிர் மெய்யெழுத்தில்லை எனக் கூறி அவ்வாறு உயிர் மெய் அமைப்பிருக்கும் தமிழின் சிறப்பைக் குறையாகக் கூறுகின்றனர். ஊனமுற்றவர்களைக் காட்டி, முழு நலத்துடன் இருக்கின்றவரைக் கைகால்களை உடைத்துக் கொள்ளச் சொல்லும் அறியாமைக்கு என்னென்பது? உயிர்மெய்எழுத்துகள் இருப்பதால் நாம் ஒவ்வோர் எழுத்தாக ஒலிக்க வேண்டிய தேவையில்லை. த+மி+ழ் என்றால் தமிழ் என்றாகிறது. மாறாக உயிர் மெய் எழுத்துகள் இல்லாமல் இருந்தால் அவர் குறிப்பிடும் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் போல் த்+அ+ம்+இ+ழ் என எழுத்தொலிகளைக் கூட்டிச் சொல்லை உச்சரிக்க வேண்டியிருந்திருக்கும். சொல்லின் அளவும் நீளமாகும். இதேபோல்தான் சிதைவு முறைப்படி எழுதும் பொழுதும் அளவு கூடும். சான்றாகப் புது என்பதை எழுதும் பொழுது ப+உகரக்குறியீடு+த+உகரக்குறியீடு எனச் சொல்லின் அளவு நீளும். உழைப்பு, தாள், மை, தேய்மானம் ஆகியவை கூடும்: செலவு பெருகும். குறைந்த முயற்சியும் குறைந்த உழைப்பும் நிறைந்த சிக்கனமும் எளிமையும் உடைய எழுத்தமைப்பைக் குறை கூறுவதில் இருந்தே ஆழமான சிந்தனை இன்றி மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.



60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் 26 என்ற குறைந்த எழுத்துடைய ஆங்கில மொழியினைக் கற்க முதன்மை கொடுப்பதாகவும் 247 என்னும் மிகுதியான எண்ணிக்கை உடைய தமிழைக் கற்க அஞ்சி ஓடிவிடுவதாகவும் அவ்வப்பொழுது தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. எழுத்துகளின் எண்ணிக்கையைப் பார்த்து யாரும் மொழியைக் கற்க முடிவெடுப்பதில்லை. தேவை கருதிப் பெரும்பான்மையரும் ஆர்வம் கருதி மிகச் சிறுபான்மையரும் மொழியைக் கற்கின்றனர். மேலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான உள்ளன என்பதும் தவறாகும். ஆங்கில வரிவடிங்கள் தலைப்பெழுத்து, சிறிய எழுத்து, அச்சுப் பெரிய எழுத்து, அச்சுச் சிறிய எழுத்து என நால்வகையாக உள்ளன. சான்றாகப் பின்வரும் இரண்டு எழுத்துகளைப் பார்ப்போம் : F, f, g , f - G, g, g, g, என்பன வெவ்வேறு வகையாக உள்ளன அல்லவா? ஆங்கில வரிவடிவத்தில் மொத்தம் 524 வகை உள்ளதாக ஆங்கிலப் பேராசிரியர் ஐயாதுரை என்பார் கூறியுள்ளார். அவை அனைத்தையும் அறியா விட்டாலும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஒருவர் இந்நால்வகை வடிவமுறைகளையும் கற்றால்தான் அவரால் ஆங்கிலத்தைப் படிக்க முடியும். இல்லையேல் பயனில்லை. எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன என்று சொல்பவர்கள் உண்மையை மறைப்பது ஏன்?



ஆதலின், ஆங்கில வரிவடிவ எண்ணிக்கை 26 எனக் குறைவாக உள்ளதால்தான் ஆங்கிலத்தைக்கற்பதாகக் கூறுவது போன்ற கயமைத்தனம் வேறு கிடையாது. தமிழ் எழுத்துகள் என்பன உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆய்த எழுத்து1 ஆகிய 31 எழுத்துகள்தாம். தமிழில் நெடிலெழுத்துகள் உள்ளமையால் எதையும் சரியாக ஒலிக்க முடிகின்றது; எழுத்தொலியைக் கூட்டினாலே சொல் பிறப்பதால் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. பெரும்பாலான மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் ஆர்,ஏ,எம்,ஏ (R,A,M,A) என்று ஒலித்தால் ரமா என்று சொன்னால் பெண்ணாகவும் ராமா என்று சொன்னால் ஆணாகவும் மாறும் குழப்பம் தமிழில் இல்லை. என், ஓ (NO) என்றால் நோ; என், ஓ, டபுள்யூ (NOW) என்றால் நௌ; கே, என்,ஓ,டபுள்யூ (KNOW) என்றாலும் நோ என்பன போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை. 26 எழுத்துகளையும் நான்கு வகையாக - ஆக 104 - எழுத வேண்டியுள்ளது போன்று தமிழில் எழுத வேண்டிய தேவையில்லை. அறிவியல் ஒலிப்பு முறையில் அமைந்த தமிழின் சிறப்பை மறைத்துவிட்டுக் குறைபாடுடைய மொழிகளின் ஒலிப்பு முறைகளைப் பாராட்டுவது அறியாமையே. (எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)

தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக் கற்பதைச் சுமையாகப் பலர் கருதுகின்றனர். அவ்வாறில்லாமல் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் வழங்கினால் அனைவரும் தமிழுக்கு முதன்மை அளிப்பர். எனவே, தமிழைக் கற்பதற்கும் வரிவடிவ எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை. தமிழ் படிக்கத் தொடங்கிய யாரும் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது என்றும் குறியீடுகள் சீர்மையாக இல்லை என்றும் கூறித் தமிழ் மொழிக் கல்வியை நிறுத்தினாரில்லை. இன்னும் சொல்லப்போனால், அயலக அறிஞர்கள் இங்கு வந்த பொழுது தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றித் தமிழைப் படித்துப் புலமை பெற்றார்களே அன்றி, ஒருவர்கூட, தமிழைப்படிக்க முனைந்தோம்; எழுத்துச் சுமையால் கைவிட்டோம் எனக் கூறினாரல்லர்.



தட்டச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது ஏறத்தாழ 42 விசைகளைக் கொண்டிருந்த விசைப் பல கைக்கேற்ப சப்பானியரும் சீனரும் நெடுங்கணக்கு எண்ணிக்கை மிகுதியாக உடைய பிற மொழியினரும் தத்தம் மொழியைச் சிதைக்கவில்லை. சான்றாகச் சப்பானியர் 3 அடுக்கு விசை இழுவைப் பலகையை அமைத்தனர். முதல் அடுக்கில் 1850 எழுத்துகள் + 351 குறியீடுகள் என 2201; இரண்டாம் அடுக்கில் 858 பட எழுத்து; மூன்றாம் அடுக்கில் 2297 பட எழுத்து என மொத்தம் 5356 எழுத்துகளுக்கான விசைகளை அமைத்தனர். இதனால் சப்பானிய எழுத்துகளைக் குறைத்ததாகப் பொருள் இல்லை. பயன்பாட்டு எண்ணிக்கைக்கேற்ப அடிக்கடி தேவைப்படுவன, அவ்வப்பொழுது தேவைப்படுவன, எப்போதாவது தேவைப்படுவன என்ற முறையில் பகுத்து வைத்துள்ளனர். பின்னர் அனைத்து சப்பானிய வரிவடிவங்களையும் பயன்படுத்தும் வகையில் கருவி அமைத்தனர். கணிணியையும் தம் வரிவடிவம் சிதைவின்றி அச்சிடப்படும் வகையில் அமைத்தனர்.

கஞ்சி எனப்படும் சீன அல்லது சப்பானிய பட எழுத்துகளை எழுதுவதாயின் ஒன்றிலிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வளைவுகளும் மடக்குகளும் உள்ளன. சான்றுக்குச் சில:

இச்சிக்கலான வடிவமைப்பால் அவர்கள் எழுத்துகளைச் சிதைக்கவில்லை. நாம் ஆங்கில எழுத்தில் கணியச்சிட்டால் தமிழ் எழுத்து வரும் முறையையும் கொண்டிருப்பது போல் அவர்கள் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத்தொலிக்கான விசையைக் கணியச்சிட்டால் படவெழுத்து அச்சிடப்படும் வகையில் கணியச்சை வடிவமைத்துள்ளனர். அஃதாவது தொப்பியின் அளவிற்கேற்பத் தலையை வெட்டி உயிரிழக்கும் அறியாமையில் மூழ்காமல் தலைக்கேற்றவாறு தொப்பியை வடிவமைத்துக் கொண்டனர். இங்குள்ள சிலரோ இல்லாத குறைகளை இருப்பதாகக் கூறிக் கொண்டு தொப்பிக்கேற்றவாறு தலையைச் சிதைக்க வேண்டும் என்கின்றனர். எனவே, வரி வடிவ எண்ணிக்கைக்கும் தமிழ்க் கல்வி குறைந்துபோவதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல,உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசிற்கும் இந்தியக் கூட்டரசிற்கும் உள்ளன. கடமையில் இருந்து தவறும் அரசுகளைக் கண்டிக்காமல் வரிவடிவ எண்ணிக்கையினால்தான் தமிழ் பயில்வோர் குறைவதாகக் கூறுவது ஏதோ தமிழ்ப் பற்றின் காரணமாக வரிவடிவச் சிதைவை வலியுறுத்துவதாக எண்ண வேண்டும் என்பதற்காகத்தானே தவிர வேறு அல்ல.(எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)



திபேத்திய மொழி, சீன மொழி, சப்பானிய மொழி முதலான மொழிகளில் கருவிகளைத் தங்கள் மொழிவடிவேற்கேற்ப அமைத்த அறிவார்ந்த பாங்கை விளக்குவதற்காகப் படம் 1 முதல் படம் 4 வரை விசைப்பலகைப் படங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளன.



இவையும் மொழிப்பயன்பாட்டிற்காகத்தான் கருவிகளே தவிர கருவிகள் பயன்பாட்டிறக்காக மொழியல்ல என்பதை நன்கு விளக்கும். எனவே, அடிப்படை எழுத்துகள் 31 மட்டுமே உள்ள தமிழ்மொழியின் வரிவடிவ எண்ணிக்கையைக்காட்டி வரிவடிவச் சிதைவுமுயற்சியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.

மாறுவது என்பது இயற்கை; எனவே, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதுவரை எத்தனையோ முறை மாறியுள்ள வரிவடிவத்தை இப்பொழுது மாற்றினால் என்ன? என்பது போன்ற வாதங்களைச் சிதைவாளர்கள் எடுத்து வைக்கின்றனர். காலந்தோறும் கல்வெட்டுகளில் வரிவடிவங்கள் மாறி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் வரிவடிவம் மிகத் தொன்மையான காலத்தில் இருந்து மாறாமல் வந்துள்ளது. பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
natpu


முதலானோர் இக்காலச் சுருக்கெழுத்துபோன்ற கல்வெட்டு வடிவங்கள் வேறு என்றும் பெரிதும் இவை தமிழறியா அயலவர்களால் செதுக்கப்பட்டவை என்றும் கூறுவர். தமிழ் இலக்கண நூல்களும், தொல்லை வடிவின எல்லா எழுத்தும் எனக் கூறுகின்றன. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. எனினும் முதன் முறையாக, வீரமாமுனிவர் காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமது அறுவகை இலக்கணம் என்னும் நூலில் எகர ஒகர வடிவங்களில் புள்ளி நீக்கி எழுதப்படுவது குறித்துத் தெரிவித்துள்ளார். இகரத்தைச் சுழித்து ஈகாரம்ஆக்குதல் கூட்டெழுத்துகள் முதலான பிற பற்றியும் இந்நூலில் தெரிவித்திருந்தாலும் பரவலாக
natpu
ஏற்கப்படாமை குறித்தும் கூறியுள்ளார். எனவே, உள்ளபடியே பிற வரிவடிவங்கள் காலந்தோறும் மாறிவந்திருந்தன எனில் இலக்கண ஆசிரியர்கள் அவை குறித்துக் கூறாதிருந்திருக்க மாட்டார்கள். ஆதலின் வரிவடிவங்கள் காலந்தோறும் மாறி வந்துள்ளன எனச் சிதைப்பாளர்கள் கூறுவது அறியாமையின்பாற்பட்டதே.

natpu

ஓலைச்சவடிகளைக் காலந்தோறும் படியெடுத்து வந்துள்ளனர். சிதைப்பாளர்கள் கூறுவதுபோல் வரிவடிம் மாறியிருப்பின் வெவ்வேறுவகையான ஓலைச்சுவடிகள் நமக்குக்கிடைத்திருக்க வேண்டும். அறிஞர் சி.வை.தாமோதரனார், அறிஞர் உ.வே.சாமிநாதய்யர் முதலானோர் தாம் ஓலைச் சுவடிகளை அச்சுவடிவமாக்கப்பட்ட இன்னல்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது இவற்றையும் குறிப்பிட்டிருப்பர். ஆனால் பாட வேறுபாடுகள் இருப்பினும், எழுத்து முறையில் மாறுபட்ட ஓலைச்சுவடிகள் இல்லாமையே எழுத்து வடிவம் மாறாதிருந்துள்ளது என்பதற்குத் தக்க சான்றாகும்.

எழுத்துச் சிதைப்பாளர்கள் சிலர் பெரியார் முகமூடி அணிந்து கொண்டு எழுத்துச் சிதைப்பு முயற்சிகளுக்கு வரவேற்பு தேட முயல்கின்றனர். பெரியார் அன்பர்களும் பெரியாரின் பிற கொள்கைகளைப் பின்பற்றாத இத்தகையோரின் கூற்றுக்களை நம்பி வரிவடிவ மாற்றம் தேவை என நம்புகிறன்றனர். தந்தை பெரியார் அவர்கள் அச்சுப்பணியில், எழுத்துவடிவில் பற்றாக்குறை ஏற்பட்டபொழுது ஆகாரங்களுக்கு ஒன்றுபோல் துணைக்காலைப் பயன்படுத்தியும் ஐகாரங்களுக்கு ஒன்றுபோல் இரட்டைக் கொம்பினைப் பயன்படுத்தியும் வந்தார். ஆனால், அவர் எழுதும்பொழுது இம்முறையைப் பின்பற்றவில்லை என்பதைத் தமக்கு எழுதிய மடலைச் சான்றாகக் கொண்டு மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கியுள்ளார்கள். பகுத்தறிவு, தன்மான உணர்வு, இன உணர்வு முதலானவற்றில் பெரியார் பாதையில் செல்லாதவர்கள்தாம், பெரியார் வாழ்ந்தபோதும் அவரது கொள்கைகளுக்காக அவர் பின்னர் அணிவகுக்காதவர்கள்தாம் இப்பொழுது பெரியார் வழியில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதாகக் கூறுகின்றனர். எழுத்துச் சிதைப்பைப் பெரியாரின் இலக்கு எனத் தவறாக எண்ணும் பெரியார் அன்பர்கள் சிலரும் ஏமாற்றப்பட்டு இப்பாதையில் பார்வை செலுத்துகின்றனர். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு உடன்பாடானவர் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
தந்தை பெரியார் அவர்கள், எழுத்தைச் சிதைக்கவுமில்லை; புதிய குறியீடு எதையும் புகுத்தவுமில்லை. நடைமுறையில் உள்ள குறியீடுகளின் அடிப்படையில் ஒன்று போல் அமைக்கலாம் எனக் கருதி அவர் அதனை அச்சில் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். 1950ஆம் ஆண்டில் மெயில் என்னும் ஆங்கில நாளேடு தமிழ்ச்சிதைவு முயற்சியில் ஈடுபட்டபொழுது அதற்கு மறுப்பாகப் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய மறுப்பு மடலைத் தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் வெளியிட்டுள்ளார் என்பதில் இருந்தே பேராசிரியரின் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்துகள்தாம் தந்தை பெரியாருக்கு உடன்பாடானவை எனப் புரிந்துகொள்ளலாம்.
இதே போல் திராவிட இயக்கப் பாவலரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1.2.1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பாடல்களில் பின்வருமாறு பதிந்துள்ளார்.

தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித்
தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இதுதான்

சீர்திருத்தம்

எழுத்துத் திருத்த்த்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துக்களைச் சீர்திருத்தும் ஆர்வலர்க்கு ஓர் விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்?
பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்
ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர்பெரியார் திருத்த்த்தை ஏற்க மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும்
மொழிக்குரிய உயர்கருத்தும் உலகலாவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்!
கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்களது சீர்திருத்தம்?
தோல்விழுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்?
மக்களெல்லாம் தாய் மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்கு
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கஒரு தகுதியினைப் பெற்றார்போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா!
பெரியார் காலத்தில் அவர் பின்பற்றி வந்த வரிவடிவ மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பெரியார் அன்பரான முனைவர் பொற்கோ அவர்களும் இன்றைய கணினிஉலகச் சூழலில் உலக மொழிகளில் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியில் சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச் சிதைவு தேவையில்லை என்றும் தமிழ் மொழியின் வரிவடிவங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். (புதிய தலைமுறை (வார இதழ்), நாள்: மே 13, 2010). ஆதலின், தந்தை பெரியார் இன்றிருந்தால் இத்தகைய வரிவடிவச் சிதைவு முயற்சி இந்தியா முழுவதும் ஒரேமொழி – ஒரேவடிவம் என்பதற்கான பாதை எனப் புரிந்துகொண்டு கடுமையாக எதிர்த்திருப்பார்.
இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 29(1)இல் மொழியையும் எழுத்து வடிவத்தையும் பேணிக்காக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும் என்னும் வரலாற்று உண்மையை அதனை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவேதான் சமற்கிருதத்தில் 500க்கு மேற்பட்ட வரிவடிவம் இருப்பினும் பிற இந்திய மொழிகளில் வரிவடிவ எண்ணிக்கை 500க்குச் சற்றுக் குறைவாக அல்லது சற்றுக் கூடுதலாக அமைந்திருப்பினும் சீர்திருத்தம் என்ற பெயரில் அவற்றைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அறிவியல் முறையில் சீராகவும் செம்மையாகவும் அமைந்துள்ள தமிழ் மொழியிலும் வரிவடிவ நிலைப்பே தேவை. ஆதலின், அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக வரிவடிவச் சிதைவினை வலியுறுத்துவோர்க்குத் தண்டனை வழங்கவும் இத்தகைய படைப்புகளைத் தடை செய்யவும் நம் அரசு முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு என்றென்றும் நிலைத்து நிற்கும்.

ஒலிவடிவமாகிய உயிரைக்காக்க
வரிவடிவமாகிய உடலைப் பேணுவோமாக!
தமிழ் மொழியைக் காக்க, மொழிவழி தமிழ் இனத்தைக் காக்க
நாம் நமது வரிவடிவத்தைக் காப்போமாக!


Comments

Thank you for commenting!
by HTML Comment Box
[login]
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:

அன்பிற்குரிய மணாவிற்கு எழுத்துக் காப்பில் இணைந்தமைக்குத் தனிப்பட்ட முறையிலும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தொண்டு தொடரவும் நட்பூ சிறக்கவும் வாழ்த்துகிறேன். நான் கடுங்காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்ந்திருந்தேன். நேற்று இரவுதான் இல்லம் திரும்பினேன். இப்பொழுதுதான் கட்டுரையைக் கண்ணுற்றேன். இரு சார்பு கருத்துகள் இடம் பெறுகையில் உலகம் தமிழ் எழுத்துப் பாதுகாப்புப் பக்கம் இருப்பதைப் புரிந்து கொள்ளும் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
+++++++++
(1 days ago) kumaran said:
எழுத்தைச் சிதைப்பது இனத்தைச் சிதைப்பதே , என்பதைச் சான்றுகளுடன் தெளிவாக்கியுள்ளது கட்டுரை.எதிர்வரும் தலைமுறை தடுமாறாமலும் தடம் மாறாமலும் இருக்க எழுத்தைக் காப்பாற்றித்தான் ஆக வேண்டும்.திருவள்ளுவனின் திருப் பணித் தமிழ்ப் பணியே,தொடரட்டும்.
(3 days ago) k.sundaram said:
udhaaranangaludan vilakki inathai kaappadharkaaga ezhuthai kaappaatra vendum ena vilaakiyull vidham arumai.
(Sept 30, 2010) Anonymous said: எல்லாமே மாற்றம் அடையும் பொழுது மாற்றம் வேண்டாம் என்று பழமைவாதிகள் கூறுவது ஏன் எனக் கட்டுரைப் பக்கத்தைப் பார்த்தேன். அட்டவணைகள் படிக்கத் தூண்டின. படித்து முடித்தும்தான் புரிந்தது தமிழ் எழுத்துகளில் ஏன் மாற்றம் கூடாது என்று. எழுத்தை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் கூறுகின்ற பொய்யான காரணங்களுக்கெல்லாம் தவிடு பொடியான ஆதாரங்களை கூறியிருக்கிறார். எழுத்தை அழிப்பது நம் இனத்தை அழிக்கும் முயற்சி என்பதை நன்கு புரிய வைத்துள்ளார் இலக்குவனார் திருவள்ளுவன் இதற்குப் பிறகும் நாம் சும்மா இருக்கக் கூடாது. எழுத்தைக் காக்க நாமும் பாடுபட வேண்டும். நல்ல படைப்பை நட்பு வெளியிட்டுள்ளதற்குப் பாராட்டுகள்.
++++++++++++++++++

(2 days ago) Ilakkuvanar Thiruvalluvan said:
திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி. எழுத்தைக் காக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக நண்பர்கள் பிறரையும் படிக்கச் சொல்லுங்கள். நட்பூ இதழாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். முந்தைய பதிவுகளையும் நீக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(2 days ago) karikalan said:
ஐயா! தமிழ்மொழியின் எழுத்தைச் சிதைப்பதற்கு முனைகின்ற சிலருக்கும், அவர்களை முட்டுக்கொடுத்துத் தாங்கி நிற்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கும் முகத்தில் அடித்தாற்போன்றது தங்களுடைய "எழுத்தைக்காப்போம்! இனத்தைக்காப்போம்!!" என்கிற விளக்கமான கட்டுரை.

தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

"எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இது தான்" என்று 01.02 .1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பதிந்துள்ள பாவேந்தர் அவர்களுடைய பாடலின் தலைப்பை மாற்றி "தமிழகம் மீள வேண்டும் திரிவடுகர் ஆட்சி ஒழிய வேண்டும்" எனவும், கடைசி வரிகளை ..."தமது நிலையினை உயர்த்தத் திரிவடுகரின் உள்ளம் இது தான்" என்று மாற்றி எழுதுவது தான் இப்போது பொருத்தமாக இருக்கும் என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ௦

இது போன்ற ஆக்கங்களைத் தாங்கள் தொடர்ந்தும் வெளியிட வேண்டுகிறேன்.
வணக்கம்.

Thursday, September 23, 2010

செம்மொழி மாநாடும் எழுத்துப் பாதுகாப்புப் போரும்

>>இலக்கியம்
செம்மொழி மாநாடும் எழுத்துப் பாதுகாப்புப் போரும்

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்பு மாநாடு நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடந்தது போல் மற்றொரு கருத்துப் போரும் நடைபெற்றது. தமிழ் எழுத்தை மாற்றியமைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் மாநாட்டு முடிவில் எழுத்துச் சீர்திருத்த ஆணை வரும் என்று சொல்லியும் எழுதியும் வந்தனர்.

இது கண்டு பொங்கி எழுந்த தமிழறிஞர்கள் எழுத்துச்சிதைவு முயற்சிகளுக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்தரங்கங்கள் நடத்தியும் இணையம் வாயிலாகவும் தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் சிங்கப்பூரிலும் பெரும் கருத்துப் போரினை நடத்தினர். உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள் இது கண்டு பல்வகையிலும் இதனைத் தடுக்க முறையிட்டனர். இதனால் தமிழக முதல்வர் சார்பாக மாநாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரான தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவ்வாறு எத்தகைய முயற்சியும் தமிழ் எழுத்துஅமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை என அறிவித்தார். அத்துடன் நில்லாது முதல்வர் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் குழுவரங்கம் முதலியவற்றை நீக்கச் செய்தார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகக் கட்டுரைகள் வாசிக்க மொழியியல் பிரிவில்தான் ஆய்வரங்கம் ஒதுக்கினார்.

25.06.10 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்குக் கோவூர் கிழார் அரங்கத்தில் இவ்வாய்வரங்கம் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து பேராசிரியர் மணியம் (எழுத்துத் திருத்தம் தேவையா ? - இவர் அதே நேரம் வேறு ஆய்வரங்கத்தில் தலைமை தாங்கியமையால் இவர் சார்பில் பிரான்சில் இருந்து வந்த பேராசிரியர் லெ.பொ, பெஞ்சமின் கட்டுரையை வாசித்தார்.), துபாயில் இருந்து பொறியாளர் நாக.இளங்கோவன் (தமிழ் எழுத்துத் திருத்தத்தில் பொதிந்த பெருங்கேடுகள்), பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (தமிழ் எழுத்து முறையின் தனித்தன்மையும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும்) தமிழ்நாட்டில் இருந்து திரு இலக்குவனார் திருவள்ளுவன் (வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு) ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள். (பேராசிரியர் லெ.பொ.பெஞ்சமின் 27.06.10 நண்பகல் 12.30 மணிக்குச் சாத்தனார் அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.)
பெரும்பாலான ஆய்வரங்கங்களில் சிலரே பார்வையாளராக இருந்த நிலைக்கு மாறாக இவ்வரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி இருந்தனர். பலர் இடமில்லாமல் திரும்பிச் சென்றனர். சிங்கப்பூர், மலேசியா எனக் கடல்கடந்துவந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர் இரு நாளும் மாநாட்டு அறிஞர்கள் இவ் வாய்வரங்கச் சிறப்பு குறித்தே பேசினர் எனில் இவ்வாய்வரங்கச் சிறப்பு குறித்தும் எழுத்தைச் சிதைக்கக் கூடாது என்பதில் உலகெங்கும் உறுதியான கருத்து இருந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அத்துடன் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாகத் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தம் கட்டுரையில் மேலும் சில கருத்துகளைச் சேர்த்து எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! எனச் சிறு கையேட்டையும் வெளியிட்டார். இக் கையேட்டிற்கும் மாநாட்டில் பெரும் வரவேற்பு இருந்தது. மாநாட்டுக் கட்டுரையின் தொடர்ச்சியாக அமைந்த இக்கட்டுரையை நட்பு வெளியிட்டு ஒரு விவாதக் களத்தைத் தொடங்கி வைக்கிறது. எனவே, உங்கள் கருத்துகளைச் சான்றுகளுடன் பதியுங்கள்.


(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:

எழுத்துச்சிதைவு முயற்சிகள் தோற்கும். தமிழ் வெல்லும்! ஆனால், கட்டுரை எங்கே? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

+++++++++++++
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி. எழுத்தைக் காக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக நண்பர்கள் பிறரையும் படிக்கச் சொல்லுங்கள். நட்பூ இதழாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். முந்தைய பதிவுகளையும் நீக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(8 hours ago) karikalan said:
ஐயா! தமிழ்மொழியின் எழுத்தைச் சிதைப்பதற்கு முனைகின்ற சிலருக்கும், அவர்களை முட்டுக்கொடுத்துத் தாங்கி நிற்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கும் முகத்தில் அடித்தாற்போன்றது தங்களுடைய "எழுத்தைக்காப்போம்! இனத்தைக்காப்போம்!!" என்கிற விளக்கமான கட்டுரை.

தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

"எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இது தான்" என்று 01.02 .1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பதிந்துள்ள பாவேந்தர் அவர்களுடைய பாடலின் தலைப்பை மாற்றி "தமிழகம் மீள வேண்டும் திரிவடுகர் ஆட்சி ஒழிய வேண்டும்" எனவும், கடைசி வரிகளை ..."தமது நிலையினை உயர்த்தத் திரிவடுகரின் உள்ளம் இது தான்" என்று மாற்றி எழுதுவது தான் இப்போது பொருத்தமாக இருக்கும் என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ௦

இது போன்ற ஆக்கங்களைத் தாங்கள் தொடர்ந்தும் வெளியிட வேண்டுகிறேன்.
வணக்கம்.

Followers

Blog Archive