Monday, August 14, 2017

பதவி நலன்களுக்காக அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 199,  ஆடி28, 2048  / ஆகத்து 13, 2017

பதவி நலன்களுக்காக  அடிமையாகிக்

கட்சியைச் சிதைக்காதீர்!

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்” (ஔவையார், மூதுரை 17) இருப்பவர்களே, அரசியல்வாதிகள் என்பது இன்றைய இலக்கணமாகி விட்டது. எனவே,
“ஒருவீர் தோற்பினும் தோற்பதுநும் குடியே”(கோவூர்கிழார், புறநானூறு 45) எனப் பிறர் அறிவுறுத்த வேண்டிய நிலையில் அதிமுக தலைவர்கள் உள்ளனர்.
  இயல்பான போக்கில் அதிமுக வளர்ந்தாலும் தளர்ந்தாலும் ஒன்றுமில்லை. ஆனால், அதிகாரச் சுவையைப் பறிப்பதாகவும் தருவதாகவும் அச்சுறுத்தியும் ஆசைகாட்டியும் தமிழர் நலனுக்கு எதிரான ஒரு கட்சி அதனைச் சிதைத்துக் கொண்டுள்ளது. இதனால், அடிமைத்தனத்தின் உச்சக் கட்டத்தில் அதன் தலைவர்கள் இருப்பது அக்கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும்  கேடு தருவதாக உள்ளது.
  மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், நம் உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகும் பொழுதும் உரிமைக்குக் குரல்  கொடுக்காமல் போலி உறவில் கட்டுண்டு கிடப்பதில் பயனில்லை. வாதாடிப் பெற முடியாதவற்றைப்  போராடியாவது  பெற வேண்டும் என்ற உணர்வு இல்லாததால், தமிழக உரிமைகள் பறிபோகின்றன.  எனவே, நாம் தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவின் ஒற்றுமை குறித்துக் கூற வேண்டியுள்ளது.
  புராணக்கதையில் வரும் பரமசிவன் கழுத்தில்  இருக்கும் பாம்பின்நிலைதான் பன்னீர் செல்வம் நிலை. அவர் ஓரிலக்க எண்ணிக்கை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு கட்சியையும் ஆட்சியையும் கேட்பதன் காரணம் அதுதான்.
  செயலலிதா மறைந்ததும் சசிகலாவின் காலில் விழுந்து கெஞ்சிக்கதறி அவரைக் கட்சித்தலைமைக்கு அழைத்தவர், இப்பொழுது அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டுவது பித்தலாட்டம்தான். அப்பொழுதே இந்த முடிவை அறிவித்திருந்தார் என்றால் உளப்பூர்வமான எண்ணம் என ஏற்றிருக்கலாம்.
 அதுபோல்தான் எடப்பாடி பழனிச்சாமியும். ஆட்சிக்கட்டிலைப் பிணைத்துவைத்துக் கொள்ளும் திறமை மிக்கவராக அவர் இருக்கின்றார். ஆனால், கூவத்தூரில் ச.ம.உ.கள் ஆதரவு அவரது தனிப்பட்ட  செல்வாக்கிற்குக் கிடைத்ததில்லை என்பதை உணரவில்லை. அந்த நேரத்தில் வேறு யாரைச் சசிகலா அடையாளம் காட்டியிருந்தாலும் அவர்தான் முதல்வராகியிருப்பார். அப்பொழுது சசிகலா ஆதரவால் கிடைக்கும் முதல்வர்பதவி வேண்டா எனத் தூக்கி எறியவில்லை. இன்றைக்கு மத்தியக் கட்சியின் தூண்டுதலால் அவ்வாறு கூறுகிறார்.
 இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் தினகரன், இரட்டை இலையை மறக்க வைக்கும் அளவிற்குத் தன் தேர்தல் குறியீடான தொப்பியைப் புகழ்பெறச்செய்தார். அத்தேர்தல் பரப்புரையில் தினகரனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர், இன்றைக்கு பாசகவின் ஆசைகாட்டலுக்கு அடிபணிந்து தூக்கி எறிகிறார்.
  இடைத்தேர்தலில் தினகரன்தோற்பார் எனப் பாசக கருதியிருந்தால்,  அவரது செல்வாக்கு இவ்வளவுதான் என்று சொல்லி ஓரங்கட்ட வாய்ப்பாக இருந்திருக்கும் எனத் தேர்தலை நடத்தியிருக்கும். ஆனால்,  வெற்றிப் பட்டம் அவருக்கே மக்கள் அணிவிக்க ஆயத்தமாக இருப்பதைப் பாசக உணர்ந்தது;  எனவேதான் இடைத் தேர்தலை ஒத்தி வைத்தது. தினகரனை வழக்குகள் மூலம் அகற்றச்செயல்படுகிறது.
  இடைத்தேர்தலின் பொழுது தினகரனின்காலில் தவமிருந்தவர்கள் இப்பொழுது அவரை வெளியேற்றிப் பாசக திருகும் திறவுகோலுக்கு ஏற்பத் தாளம்போடுகிறார்கள்.
  சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றவேண்டும் என்பது பாசகவின் திட்டமே! அதிமுகவினர் கருத்தல்ல! எனவேதான் அவர்களை  அண்டியே வாழ்ந்தவர்கள் இன்றைக்குப் பாசகவின் ஊதுகுழலாக மாறியுள்ளார்கள். ஆனால், இந்த அடிமைத்தனம் அதிமுக  தொண்டர்களுக்குப் பிடிக்கவில்லை. தினகரனுக்கு எதிராக இருந்தவர்கள்கூட இன்றைக்கு  அவர் பக்கம் திரும்பியுள்ளார்கள் எனில், இதுதான் காரணம்.
  எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை இழந்தார் எனில், அவரும் மற்றொரு பன்னீர்செல்வம்தான். கொங்கு மண்டலத்தினர்கூட அப்பொழுது துணைநிற்க மாட்டார்கள்.
 பதவியில் இல்லாத பொழுதும் தினகரனுக்கு ஆதரவு உள்ளது எனில் அதிமுக  தொண்டர்கள் அவர் ஆளுமையை விரும்புகிறார்கள் என்றுதானே பொருள்.
  தினகரனும் பாசகவிற்கு இணங்கிப் போக முன்வந்தாலும் பாசக அதனை விரும்பாது. ஏனெனில், பிறரைப்போல நல்ல அடிமையாக அவர் இருக்க மாட்டார். மத்திய ஆட்சியைக்கூடத் தன்வயப்படுத்தினாலும் படுத்துவார் என்ற அச்சம் உள்ளது. வேலியில்போகும் ஓணானை வேட்டியில் விடுவானேன்! அவரை ஆதரித்து உள்ளதை இழப்பானேன் என்ற எச்சரிக்கை உணர்வால் அவரையோ சசிகலாவையோ விரும்பவில்லை. அவர்களை வழக்குகள் மூலம் அச்சுறுத்துவதன் காரணங்கள் அரசியலை விட்டு ஒதுங்கவைப்பதும் செயலலிதாவின் சொத்துகளைக் கவருவதும்தான்.
  திறமைமிக்க நடராசனையே ஓரங்கட்டச் செய்துள்ள தினகரனைத் தன் கூட்டணியில் சேர்த்து வீண் வம்பை விலைக்கு வாங்க அது முன்வரவில்லை. எனவேதான் சசிகலா குடும்பத்தினரை அகற்றும் ஒற்றை முழக்கத்தை அதிமுக மூலம் பாசக முன் வைக்கிறது. இதன் மூலம் சசிகலாவிற்குத்தான் ஆதரவு பெருகுகிறது என்பதை  அஃது உணரவில்லை.
  இராசீவு காந்தி அதிமுக ஒற்றுமை குறித்து வலியுறுத்திய போது அதில்  நேர்மை இருந்தது. இப்பொழுது பாசக அதிகமுவின் ஒன்றுமை குறித்துக் கூறுவதில் வஞ்சகம் இருக்கிறது. இந்த வஞ்சக வலையில் சிக்கிக் கொண்டு அதிமுக தலைவர்கள், தாங்கள் கடந்து வந்த பாதையைமறந்து முழங்கிக் கொண்டுள்ளனர்.
  சசிகலா குடும்பத்தினரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் அமைதி காக்கின்றனர். ஆனால், அவர்களால் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்றவர்கள்தாம் இன்றைக்கு அவர்களால் கட்சிக்குக்  கேடு என்று கூறி வருகின்றனர். இத்தகையவர்களை அறிமுகப்படுத்தி ஆளாக்கியதுதானே அவர் செய்த தவறு. அதைத்தானே தொண்டர்கள் விரும்பவில்லை. அவ்வாறிருக்க எலலாப் பயனையும் அடைந்தவர்கள்,  பொல்லாக் குடும்பத்தினராக அவர்களைக் கூறுவதை மக்கள் எப்படி ஏற்பர்?
   நாளைக்குச் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்னும் நிலைவந்தால், இவர்கள் புது முகமூடி அணிவர். தங்களின் அடிமன எண்ணத்திற்கு மாறாகக் கூறவும் செயல்படவும் தூண்டியவர்களால் அவ்வேடம் போட்டோம் எனப் புது வேடம் கட்டுவர். அப்பொழுதும்  இவர்கள்தாம் பயன்பெறுவர். அந்த நம்பிக்கையில்தான் தற்போதைய பாசகவின் முயற்சிகளுக்குக் கை கொடுக்கின்றனர். வென்றால் நன்று. இல்லையேல் பழுத்த மரம்நாடிச் செல்வதில் தவறில்லை என்பதே இவர்களின் எண்ணம்.
  அதிமுக தலைவர்கள், அதிகாரப்போட்டியில் தங்களுக்குள் அடித்துக்கொண்டால் நாளைஅரசியலை விட்டே அகற்றப்படுவர் என்பதை உணரவேண்டும். சிறு குழுவைப்  பெரும் அணியாகக் காட்டுவது   தங்களையே அழித்துக்கொள்ளும் அறியாமை என்பதை அறிய வேண்டும். அதிகாரத்தால் ஒட்டிக் கொண்டிருப்பவர்களை ஆதரவாளர்களாக எண்ணுவதும் பேரறியாமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதால் ஒன்றிணைந்து தமிழக நலனுக்குப் பாடுபடவேண்டும். இதற்கு மாறாக அடிமைத்தனத்தில் மூழ்கி இருப்போரைத் தொண்டர்களும் மக்களும் இடம்தெரியா நிலைக்குத் தள்ள வேண்டும்.
ஆளுங்கட்சியினரின் ஒற்றுமை தமிழகத்திற்கு வலிமைசேர்க்கட்டும்! வளம்சேர்க்கட்டும்!
மக்கள் பகையினரைத் தூக்கி எறியட்டும்!
    அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது (திருவள்ளுவர், திருக்குறள் 1075)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 199,  ஆடி28, 2048  / ஆகத்து 13, 2017

Friday, July 28, 2017

மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017


மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது!

  இந்திய அரசியல் யாப்பின் இணைப்புப்பட்டியல் 7 இன்படி மத்திய மாநில அரசின் அதிகாரங்கள் குறித்து அ.) ஒன்றியப்பட்டியல், ஆ.) மாநிலப்பட்டியல்,  இ.) பொதுப்பட்டியல் என 3 பட்டியல்கள் உள்ளன. தொடக்கத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த துறைகள் 66. அதில் இருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்பில் வரிசை எண் 11இல் இருந்தது. அதனைப் பொதுப்பட்டியலாக்கி மத்திய அரசின் அதிகார வரம்பிற்குக் கொண்டுவந்தபொழுதே பலரும் எதிர்த்தனர். இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநிலக் கல்விக்கொள்கையில் தலையீடு இருக்காது; மாநில அரசுகளுக்கு உதவுவதற்குத்தான் என்றும் மழுப்பினர். ஆனால், நாளைடைவில் மத்திய அரசின் அதிகார வரம்பு மிகுதியாகி விட்டது. சில ஆண்டுகளில் முழுமையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்வித்துறை வரும் என்பதில் ஐயமில்லை.
 பெயரளவிற்கு பொதுப்பட்டியல் எனப்பெறும் இரட்டை அதிகாரப்பட்டியலில் வைத்துக்கொண்டு மத்திய அரசே முழுமையும் பறித்துக் கொள்ளும். அவற்றின் அடையாளம்தான் தேசியத்தகுதி-நுழைவுத்தேர்வு(NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்பெறும் மருத்துவக்கல்லூரிப்பொது நுழைவுத்தேர்வு. அதன் மற்றொரு வடிவம் அதனைக் காரணம் காட்டி மாநிலக் கல்விப்பாடத்திட்டத்தைத் தரமுயர்த்துவதாகக் கூறி மத்திய அரசின் பாடமுறையைப் பின்பற்றுவது.
  மத்தியஅரசுக் கல்வித்திட்டத்தின்படி மாநிலக் கல்வித்திட்டத்தில் பயின்றவர்கள் எழுத இயலவில்லை என்கிறார்கள் அல்லவா? மாநிலக் கல்வித்திட்டத்தின்கீழ்த் தேர்வு நடத்தினால் மத்திய அரசுக் கல்வித்திட்டத்தின்படி பயின்றவர்களால் எழுத முடியாது.  உண்மை இதுதான். இதைக்கொண்டு மத்திய அரசின் பாடத்திட்டம் தகுதி கூடியதாகக் கூறுவது தவறு.
  மத்தியக்கல்வித்திட்ட வரலாற்றுப் பாடங்களில் தமிழக வரலாற்றுக்கே இடமில்லை. புவியியல் அல்லது சுற்றுப்புற அறிவியல் முதலான பாடங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலான தமிழகத்தின் ஐந்திணை  குறித்து அறிய வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திப்பாடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் குடிபோதையில் கோவலனுக்கு மரணத் தண்டனை விதித்ததாகப் பாடம்  வந்தது. அம்பேத்கார், மொழிப்போர் போராட்டம்பற்றி யெல்லாம் தவறான தகவல்கள் மத்தியப்பாடத்தில் இடம் பெற்றதை நாமறிவோம். 
 தமிழ்த்தேசிய உணர்வு மலர்ந்து மொழிப்போர் வரலாறு பாடங்களில் இடம் பெற வேண்டும் என்ற உணர்வு வரத்தொடங்கியுள்ளது. ஆனால், மத்தியப்பாடத்திட்டத்தில் அதற்கான வாய்ப்பில்லை.
 தமிழகத் தலைவர்களைப்பற்றி யறியவும் வாய்ப்பில்லை. வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாறு தெரியாத் தலைமுறைகளை உருவாக்கும் பாடத்திட்டமாக மத்தியப்பாடத்திட்டம் அமையும். வரலாற்றை மறைத்தும் திரித்தும் பொய்யான வரலாற்றுச் செய்தியைப் புகுத்தியும் ஆள்வதே பா.ச.க.வின் பண்பாடு. அவ்வாறிருக்க மத்தியப்பாடத்திட்டம் எப்படி அமையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  இப்பொழுது மத்தியப்பாடத்திட்டத்தைத் தழுவி  மாநிலப்பாடத்திட்டத்தை அமைத்தால், பின்னர் நாடு முழுவதும் ஒரே பாடமுறைதானே எனத் தேர்வுத்திட்டத்தையும் மத்திய அரசு  கையில் எடுத்துக் கொள்ளும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு  ஒரே நாடுஒரே கல்வி  முறை, ஒரே பாடத்திட்டம் என்ற வலையில் தமிழக அரசு  சிக்கக்கூடாது.
 கல்வித்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வியமைச்சர் செங்கோட்டையன் உறுதியாக இருக்கிறார். பள்ளிக்கல்விச்செயலர் த.உதயசந்திரன் இ.ஆ-ப. கல்வி வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதுடன் தமிழார்வமும் மிக்கவர். இப்போதைய வல்லுநர் குழு என்ன முடிவெடுத்திருந்தாலும் தமிழ்நலன் சார்ந்த கல்வி  முறையை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி அதற்கேற்பவும் குழு அமைத்துப் பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். 
  முன்பே குறிப்பிட்டபடி, ஆங்கிலம் முதலான பிற மொழிப்பாடங்களிலும்  தமிழ் இலக்கியம், தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் வரலாறு முதலானவை இடம் பெற வேண்டும். பிற மொழிப்பாடங்கள் படிக்கிறார்கள் என்பதற்காகத் தமிழகம் பற்றி அறியாமல் தமிழகத்தின் இளந்தலைமுறையினர் வருவாக்கப்படுவது நாட்டு வளர்ச்சிக்குப் பெருங்கேடாகும்.
  அறிவியல் பாடங்களில் தொடர்புடைய தமிழ்இலக்கியச்செய்திகள் இடம் பெற வேண்டும்.  தவாரங்களுக்கு உயிர்உண்டு என்னும் பாடத்தில் தொல்காப்பியர் குறிப்பிடும் “ஒன்றறிவதுவே” எனத்தொடங்கும் நூற்பா இடம் பெற வேண்டும். தெர்மாசு குடுவைபற்றிய பாடத்தில் தமிழர்களின் சேமச்செப்பு இடம் பெற வேண்டும். மாற்றுச்சக்கரம்(stepney)  பற்றிய பாடத்தில் பழந்தமிழரின் சேமஅச்சு இடம் பெற வேண்டும். இவ்வாறு இன்றைய அறிவியல்பற்றிய பாடங்களில் தொடர்பான பழந்தமிழர் அறிவியல் கருத்துகளும் இடம்பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
  தமிழக மாணாக்கர்கள் தமிழ்வழியில்தான் பயில வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். இருப்பினும் ஆங்கிலக்கல்விமுறை இருந்தது எனில், தமிழகம் சார்ந்தே பாடத்திட்டம் அமைய வேண்டும்.
  மாநிலத்தன்னாட்சி எனப் பேசும்  தமிழகக்கட்சிகள் மத்தியக்கட்சிகளிடம் அடிபணிந்து தஞ்சமடைவதில் காட்டும் விரைவைத் தமிழக உரிமைகளைக் காப்பதில் காட்டுவதில்லை. இவ்வாறு ஒவ்வொரு துறையாக மத்திய அரசின் தலையீடு இருப்பது நாளடையில் இந்தியா முழுமையும் ஒற்றையாட்சி நிலை வர வழிவகுக்கும்.  எனவே,  கல்வி நலனுக்காக மட்டும் என்றில்லாமல் ஒவ்வொரு துறையாக மாநில  உரிமைகள் பறிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும்  மத்திய அரசின் கல்வித்தலையீட்டை நிறுத்த வேண்டும். ஒன்றியப்பட்டியலில் 100 இனங்கள் என்றிருப்பதை மிகவும் குறைத்து மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரச் செய்ய வேண்டும்.  பொதுப்பட்டியலில் உள்ள 52 இனங்களைப் பாதியாகவாவது குறைக்க வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட்டால்தான் கல்விஉரிமையும் காக்கப்படும் என்பதை அரசியலாளர்கள் உணரவேண்டும்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.  (திருவள்ளுவர், திருக்குறள் 671)
தமிழகக்கல்விநலன் காக்கவும் மாநில உரிமைகளைக்காக்கவும் ஆராய்ந்து முடிவெடுத்துத் துணிவுடன் நிறைவேற்றுக!
தமிழகம்சார்ந்தகல்விமுறையை உருவாக்குவோம்!
மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017



Sunday, July 16, 2017

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு

அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு!

 

  ஆடி 01, 2048 /சூலை 17, 2017  அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!
 இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின்  மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே! கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும்  பீகாரிலும் மனச்சான்றுக்கு வேலை கொடுத்தால், முடிவு மாறலாம்.
  மண்டியிட்டுத் தாள்பணிந்து அணித்தலைவர்கள் பா.ச.க.வின் காலில் வீழ்ந்து கிடப்பதை விரும்பாதச் சில நா.உ. அல்லது ச.உ. இருக்கலாம். வேறுவழியின்றி அவர்கள் பாசகவை ஆதரித்தாலும்  தன்மானத்தைப் பறிகொடுத்த ஆதரவு என்பதால் உள்ளத்தில் குமைந்து கிடப்போர் சிலர் உள்ளனர். இத்தேர்தலில் வாக்கு அளித்த விவரத்தைக் காண முடியாது என்பதாலும், கட்சிக் கொறடாக்களுக்கு வேலை இல்லை என்பதாலும், தத்தம் தலைவர் கருத்துகளுக்கு மாறாக மனச்சான்றுடன் செயல்பட நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.
  இதனால் முடிவு மாறினாலும் நன்று. அல்லது சில  வாக்குகளேனும் அணி மாறி வீழ்ந்திருந்தாலும் பாசகவின் இறுமாப்பிற்குச் சாவு மணி அடிக்கத் தொடங்குவதாய் அஃது அமையும்.
  மீராகுமாரின் வெற்றி என்பது பா.ச.க.வினருக்குக் கடிவாளம் இடுவதாக அமையும். வெற்றி வாய்ப்பு பெறாவிட்டாலும் கூடுதல் வாக்குகள் மீராகுமாருக்குக் கிடைப்பது, தலைவர்களை மண்டியிடச் செய்வதால் கட்சியைக் கைப்பற்ற இயலாது; குறுக்குவழியில் ஆட்சியில் அமர முடியாது என உணர்த்துவனவாகவும் அமையும்.
 தங்கள் உரிமைகள் மிதிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் அதிமுகவினர் உணர்ந் திருப்பர். வாக்களிப்பைப் புறக்கணிப்பது என்பது வெளிப்படையாக உள்ளக்கிடக்கையைக்காட்டிக் கொடுக்கும் என்பதால் அச்சம் வரலாம். ஆனால், பா.ச.க.விற்கு எதிராக அளிக்கும் வாக்கு ஆணவ உச்சியில் இருந்துகொண்டு ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி என்பனபோல் நாட்டை இடுகாட்டிற்கு அழைத்துச் செல்லும் போக்கிற்குத் தமிழக மக்கள் முடிவோலை எழுதுவதாக அமையும் என்பதை உணர வேண்டுகிறோம்.
 மோசமானவர்களில் குறைந்த மோசமானவர் என்பதைத் தெரிவு செய்வதுதான் இந்தியத் தேர்தல். ஆளுங்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதால்,  நாட்டை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்குத்தான் அது துணை புரியும். எனவே, அதிகாரம் கைகளில் உள்ளமையால்,  அசைக்கமுடியாது என இறுமாந்நு கொண்டுள்ள பா.ச.க.வை அசைக்கும் ஆற்றல் அதிமுகவின்  சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அழிவுப்பாதை நோக்கிச் செலுத்தப்படும் இந்தியாவைக் காப்பாற்ற அதிமுகவின் மக்கள் சார்பாளர்கள் முன்வருவார்களாக!
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.(திருவள்ளுவர்,திருக்குறள் 676)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை ;  அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

Followers

Blog Archive