Thursday, September 21, 2017

எச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி – இலக்குவனார் திருவள்ளுவன்






எச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி

   பாசக, தன் காவி ஆணவத்தைப் பல இடங்களிலும்  விரித்து வருகிறது. தமிழக அரசியலில் உள்ள குழப்பமான சூழலைப் பயன்படுத்தித் தமிழக அரியணையில் ஏறவும் முயன்று வருகிறது. இவற்றிற்குத் தமிழக மக்களின் உடன்பாடு இல்லை என்பதை நம்பாமல் பொதுத்தேர்வு(நீட்டு தேர்வு)த் திணிப்பு, தமிழக நலன்களுக்கு எதிரான திட்டங்களைச் செயற்படுத்தல், நவோதயா பள்ளிகள் மூலமும் பிற வகைகளிலும் இந்தி, சமற்கிருதத்தைத் திணித்தல் எனத் தமிழ்நாட்டைச் சிதைத்து வருகிறது. இவையெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் வலிமைக்கு ஊறுநேர்விக்கும் என அறிந்தும் தன்னை மேல்நிறுத்துவதற்காக இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. பதவி ஆசைகள், செல்வாக்கு பெறல் போன்றவற்றால் சிலர் பாசக பக்கம் காலடி வைப்பதால் தமிழ்நாடே அதன் காலடியில் இருப்பதுபோல் கனவு  கண்டு வருகிறது. மத்திய அரசின் துறைகள் சிலவற்றின் மூலமும் தன் செல்வாக்கை உயர்த்த பாசக முயன்று வருகிறது. இவற்றிற்கெல்லாம் மரண அடி கொடுத்ததே சாரணர் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பாசக தேசியச் செயலர் எச்சு இராசா மண்ணைக் கௌவியது.
  ஒருவேளை இராசா வெற்றிபெற்றிருந்தால் எனக் கற்பனையாகக்கூடச் சொல்ல முடியாது. எனினும் 50 வாக்குகளைமட்டுமே எட்டி மண்ணைக் கௌவிய இராசா கூடுதலாக வாக்கு பெற்றிருந்தாலே  விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திருப்பார்; அவர் கட்சியும் குதித்திருக்கும், தமிழக ஆட்சியையே கைப்பற்றியதுபோல்! ஆனால் குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க எண்ணும் பாசகவிற்கு மரண அடியைச் சாரணர் இயக்க வாக்களார்கள் அளித்துள்ளனர். அனைவரையும் மகிழச்செய்த தேர்தல் முடிவாக இது நிகழ்ந்தமைபோல் வேறு எந்தத் தேர்தல் முடிவும நிகழ்ந்ததில்லை. வெற்றி பெற்ற பள்ளிக்கல்வி  மேனாள்  இயக்குநர் மணியை அறிந்தவர்கள் குறைவே! எனவே, அவர் வெற்றிக்காக மகிழ்வதன் காரணம் அவர் செல்வாக்கு என்று சொல்ல முடியாது. ஆனால் எச்சு இராசாவின் உண்மை முகத்தை  அறிந்தவர்களே பொது மக்கள். எனவே அவர் தோல்வி கொண்டாட்டத்திற்கு உரியதாக மாறியுள்ளது-
  தலைவருக்குப் போட்டியிட்ட மணி துணைத்தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டார். 3 பதவிகள் உள்ளமையால் ஒவ்வொருவருக்கும் 3 வாக்குரிமை உண்டு. இதில் அவர்  வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டாம்நிலையில் 204 வாக்குகள்தாம் பெற்றுள்ளார். எனவே, தலைவர் தேர்தலில் எச்சுஇராசாவிற்கு எதிரான வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் பாசகவின் தலையீட்டை வாக்காளர்கள் விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
  ‘அம்மா ஆட்சி’, ‘அம்மா ஆட்சி’ என்று கூறிக்கொண்டே மறைந்த முதல்வர் செயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கெல்லாம் ஒப்புதல் கொடுத்து வருதல், கல்விக்கூடம் மூலமாக இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்க நவோதயா பள்ளிக்கு ஆதரவு நிலையை உருவாக்கல் எனப் பாசகவின் அடிமையாட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. (பாசகவின் நிழலாட்சி எனச் சொல்வதை விட அடிமையாட்சி என்பதே பொருத்தமாக இருக்கும்.) ஆனால், ஆள்வோர் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.  அதை உணர்த்துவதற்கு வந்ததே சாரணர் இயக்கத்தலைவர் பதவிக்கான தேர்தல்! இத்தேர்தலில் போட்டியிட்ட எச்சு இராசாவிற்கு அரசின் ஆதரவும் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலும் இருந்ததாகச் சொல்கின்றனர். அவ்வாறு இருப்பினும் கணிசமான வாக்குகளைக்கூட அவரால் பெற இயலவில்லை.
  யார், யார் மீதோ அவதூறு வழக்கு தொடுக்கும் தமிழக அரசு, இவரது பேச்சுகளுக்காக இவர் மீது பல அவதூறு வழக்குகள் தொடுத்திருக்க வேண்டும். எனினும் பாசகவின் செல்லப்பிள்ளையாகக் கருதி அரவணைத்தது. தேர்தல் நேரத்தில்  முதல்வர் அவரைச் சந்தித்ததே தவறு. பள்ளிக்கல்வி இயக்குநர் வெற்றி  பெற்ற தோரணையில் பொன்னாடை அணிவித்ததும் அதற்கேற்றவாறான மடல் ஒன்றை அவருக்கு அனுப்பியதும் தவறு. எச்சு இராசா அரசின் வேட்பாளர் என்பதுபோல் சொல்லாமல் சொல்லியது தமிழக அரசு. ஆனால் நடந்தது என்ன? துண்டைக்காணோம், துணியைக் காணோம் எனப்  பின்னங்கால்கள் பிடரியில் பட அவர் ஓடியதுதானே நடந்துள்ளது! இதற்குப் பின்னரும் ஆட்சியாளர்கள் விழித்துக் கொள்வது அவர்களுக்கு நல்லது. இல்லை யென்றால் புதைகுழியில் வீழ்வது உறுதி!
  மின்வாரியத்தின் ‘உதய்’ திட்டம்,  தேசிய உணவுப் பாதுகாப்புச்சட்டம்,  சரக்கு-சேவை வரிச்சட்டம், மருத்துவக்கல்லூரி (சேர்க்கைக்கான) பொது நுழைவுத் தேர்வு(NEET) என்பனவற்றிற்கெல்லாம் முந்தைய முதல்வர் செயலலிதா எதிர்ப்பாக இருந்தார். முதல்வர் எதிர்க்கிறார் என்றால், அவரது அமைச்சரைவையும் எதிர்க்கிறது என்றுதான் பொருள். கூட்டுப்பொறுப்பில்  எதிர்ப்பிற்கு உடன்பட்டவர்கள், இப்பொழுது இசைகிறார்கள் எனில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பே பொருளற்றதாகிறது. வழக்கு, சிறை வாழ்க்கை முதலானவற்றிலிருந்து தப்பிக்கவும் தத்தம் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். மக்கள் நலன்கள்பற்றிய எண்ணமே இல்லை. பா.ச.க.வின் கால்களில் வீழ்ந்து கிடப்பது விரும்பியல்ல. அச்சுறுத்தல்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டைத் துன்பத்தில் தள்ளுகின்றனர். தாங்கள் என்ன செய்தாலும் மக்கள் ஏற்பர் என்ற தவறான நம்பிக்கையும் இதற்குக் காரணம்.
  எச்சு இராசாவின் தோல்வி மூலம், ஆசையில் அடி விழுந்தது! இடி விழுந்தது! பாசகவிற்கும் இது புரிந்துஇருக்கும். பிற  மாநிலங்களில் காலூன்ற அவர்களுக்குச் சார்பாக நடந்து கொள்ளும் பாசக தமிழ்நாட்டில் காலூன்ற எதிரான வழிகளில் இறங்குகிறது. எனவேதான் இந்த நிலை.
  எச்சு இராசா  சாரணர் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் தெரிவித்து எச்சரித்த மு.க.தாலினுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதனால் விழிப்புற்ற இளைஞர்களும் மன்பதை நல ஆர்வலர்களும் தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்கவும் கல்வித்துறை காவிமயமாவதைத் தடுக்கவும்  முகநூல் முதலான இணையத் தளங்கள் மூலம் கிளர்ந்து எழுந்தனர். இதனால் சாரணர் தேர்தல் வாக்காளர்களும் விழிப்புற்றனர். எச்சு இராசாவிற்குப் பாதை வகுத்துக்கொடுக்க முயன்று ஆள்வோர் குறுக்கு வழிகளில் இறங்காமிலிருந்திருந்தால், கூடுதல் வாக்குகள்  பதிந்திருக்கும். அவை யாவும் எச்சு இராசாவிற்கு எதிராகவே பதிவாகியிருந்திருக்கும். எப்படியோ பாசகவின் குறுக்கு  வழிக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை அவர்களும் அதற்கு வழி வகுத்துக்கொடுக்க முனைந்த தமிழக ஆட்சியாளர்களும் புரிந்து கொண்டிருப்பர்.
  அதிகாரச்சுவையை இழக்காமலிருக்க  யாருடைய கால்களிலும் வீழ்ந்து கிடக்கட்டும்! ஆனால், தமிழக நலன்களை உதைத்துத் தள்ளக்கூடாது. மிரட்டப்படுவதை வெளிப்படையாகச் சொல்லித், தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கை, தமிழகக்கல்வித்திட்டத்தின்படியான மாணாக்கர்களுக்கே என்பதை அறிவிக்க வேண்டும்; நெடுவாசல் துயரக்களமாக மாறிவருவதைத் தடுக்க வேண்டும்; கீழடியைப் பேண வேண்டும்; தமிழக நலன்களுக்கு எதிரான அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  தமிழக நலன்களுக்காகப் பாடுபட்டால் ஒருவேளை மத்திய ஆட்சியாளரால் கீழே தள்ளப்பட்டாலும்  தமிழக மக்கள் கைதூக்கி அவர்களை எழுப்பி நிற்கச் செய்வர்.
  முடிந்து போன தேர்தலை நீக்கும் முயற்சியில் பாசக இறங்கினால் துணைபோக வேண்டா என்றும் வேண்டுகிறோம்!
இறைநம்பிக்கையுள்ள நிலம்தான் இது. என்றாலும் பெரியார் மண்! புரிந்து  கொண்டு விழிப்படைய வேண்டியவர்கள் விழிப்படையட்டும்! தம் பாதையைத்திருத்திக் கொள்ளட்டும்!
சாரணர் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மணி, துணைத்தலைவர் கோ. பெரியண்ணன்,துணைத்தலைவர் அரங்கநாதன், மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், பிற பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அனைவருக்கும்  பாராட்டுகள்!
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். (திருவள்ளுவர், திருக்குறள் 1071)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 204,  புரட்டாசி 01,  2048 / செட்டம்பர் 17, 2017
 

Tuesday, September 19, 2017

பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான் – இலக்குவனார் திருவள்ளுவன்)

பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு

– தனபால் அறிவிப்பு

(கற்பனைதான்)

   சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் இன்று திடீரென்று  ஊடகத்தினரை வரவழைத்தார். அப்பொழுது அவர்,  முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக வாக்களித்த பன்னீர் அணியைச்சேர்ந்த  11 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் இப்பொழுது் தகுதி நீக்கம செய்த தினகரன் அணியினரின் தகுதி நீக்கத்தை விலக்கிக் கொள்வதாகவும் தி.மு.க. உறுப்பினர்கள் 21 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
“ஆளாளுக்கு அம்மா ஆவி பேசியது, ஆதன்(ஆன்மா) பேசியது என்றெல்லாம் சொல்கிறார்களே! நம்முடன் அம்மா பேசினால் குழப்பம் தீருமே!
  ஆளுங்கட்சியிலிருந்து விலகாத பொழுதும் சட்ட மன்றத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்காதபோதும் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்த பொழுது வானளாவிய  அதிகாரம் என அமுக்கி அறிவிக்கச் செய்து விட்டனரே!
 ஒடுக்கப்பட்ட பிரிவில் இருந்து முதல்வர் வருவது குடிமக்களுக்குச் செய்யும் நன்மையாயிற்றே! ஏற்றுக்கொண்டால் என்ன என்று எண்ணியபொழுது மோடிவித்தை காட்டி நாற்காலியில் கட்டிப்போட்டனரே!
  அரசிற்கு எதிர்த்து வாக்களிக்காத 18 பேரைச் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து தகுதி நீக்கம் செய்து அவர்கள் தொகுதியைக் காலியிடமாக அறிவித்தது சரி என்றால், அதற்கு முன்னர் அரசிற்கு எதிராக வாக்களித்த பன்னீர் அணியினரை அப்பொழுதே தகுதி நீக்கம் செய்யாதது சரிதானா?
 என்றெல்லாம் மக்கள் கேள்விக்கணைகளை எழுப்பும்போது குழம்பித் தவித்தேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழிகாட்டமாட்டார்களா என ஏங்கி அப்படியே தூங்கி விட்டேன்.
தூங்கும்போது கனவு வந்தது. கனவில் பேரொளி வந்தது. பேரொளியில் அம்மா தோன்றினார். “மகனே நீ ஏன் கவலைப்படுகிறாய்? நீ எல்லாருக்கும் பொதுவாகச் செயல்படுபவன் என்றுதானே உன்னைப் பேரவைத்தலைவராக ஆக்கினேன். அதை அப்பொழுதே கூறியுள்ளேனே!
 நீ, கட்சி உறுப்பினர்போல் செயல்பட்டுக் கட்சிக்காரர்கள் ஆட்டுவிப்பதற்கெல்லாம் ஆடலாமா?” என்று கேள்விகேட்டார்.
 பின் எனக்குச் சில கட்டளைகள் இட்டார். “இவற்றை நிறைவேற்று. குழப்பங்கள் தீரும்” என்றார்.
  பின்னர் ஒளி மங்கியது. அம்மா உருவமும் மறைந்தது. நான் உடனே விழித்துக் கொண்டேன். அம்மா கட்டளைகளை அப்படியே தாளில் எழுதி வைத்துக் கொண்டேன். அவற்றை நிறைவேற்றும் வகையில் இப்பொழுது் சில அறிவிப்புகளை வெளியிடுகின்றேன்.
  1. சட்ட மன்றத்தில் அரசிற்கு எதிராக வாக்களிக்காத நிலையில் தனிப்பட்ட உட்கட்சிச்சிக்கலால் கருத்து மாறுபாடு கொண்டு செயல்படுபவர்களைத் தகுதிநீக்கம் செய்தது தவறு என உணருகின்றேன். எனவே, தகுதிநீக்க ஆணையைத் திரும்பப்பெற்றுக் கொள்கின்றேன். இவர்களின் சட்டமன்றத் தொகுதிகள் ஒழிவிடங்களாக உள்ள என அறிவித்ததையும் திரும்பப் பெற்றுக்கொள்கின்றேன். இதன்படி இந்த 18 பேரும் இடை வெளியின்றிச் சட்டமன்ற உறுப்பினரக்ளாக நீடிக்கிறார்கள் என்று மறு ஆணை பிறப்பிக்கின்றேன்..
  1. முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்ட மன்றத்தில் பிப்பிரவரி 18 அன்று காலை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் அதற்கு எதிராகப் பன்னீர்செல்வம் உட்பட அவரது அணியினர் 11 பேர் வாக்களித்துள்ளனர். எனவே, இவர்கள் கட்சித்தாவல் சட்டப்படி பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகின்றனர். இவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது தவறுதான். அதனைச் சரிசெய்யப் புரட்சித்தலைவி அம்மாவின் கனவுக் கட்டளைக்கிணங்க அவர்களைக் கட்சித்தாவுதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றேன். பன்னீர்செல்வம் அணியினர் 11 பேரும் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளார்கள். அவர்களிடம் உறுப்பினர் அட்டை கொடுத்து அவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவதற்குத் தடையில்லை. ஆனால்இதனால் இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக முடியாது– எப்பொழுது தகுதியிழந்துவிட்டார்களோ அப்பொழுதே அவர்கள் தொகுதிகள் ஒழிவிடங்களாகிவிட்டன. அதன்பின்னர் அவர்கள் தாய்க்கட்சியில் சேருவதால் புத்துயிர் பெறாது.  அவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய எச்சலுகையும் பெற முடியாது. 6 மாதங்களுக்குள் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறேன்
  1. சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் இருபத்தொருவர் (குட்கா முதலான) போதைப்பொருள்களைக் கொண்டு வந்தனர். ஆனால், தங்களின் பயன்பாட்டிற்கோ பிறரது பயன்பாட்டிற்கோ இதனைக் கொண்டுவரவில்லை. இதற்கு முன்பு சட்டப்பேவையில் இட்டிலி முதலானவை கொண்டுவந்து காட்டியதுபோல் பேரவைத்தலைவருக்கு, இவை எல்லாம் தாரளமாகக் கிடைக்கின்றன எனக் காட்டத்தான் கொண்டுவந்தனர். எனவே, இதனைத் தவறாகக் கருதியது தவறு. எனவே, அவர்கள்மீது எந்நடவடிக்கையும் இராது எனவும் இதுவரை அவர்களுக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கிறேன்.
  1. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சரவையினர், அல்லது அவரது அணியினர் அல்லது அவர்கள் சார்பாக யாரும் பேரவையில் நம்பிக்கை பெறும்வரை என்னைச் சந்திக்கக்கூடாது. என்னிடம் எதுவும் தெரிவிக்க வேண்டும் என்றால் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். அல்லது ஊடகம் வாயிலாகவும் கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், அத்தகைய கருத்து உரிமை மீறலாக இருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  1. தினகரன் அணியினர், முதல்வர்மீதுதான் நம்பிக்கையின்மையைத் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் மீதல்ல. எனவே, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற ஆளுங்கட்சி உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டித் தன் மீதான நம்பிக்கை வாக்கைப் பெற வேண்டும்.சட்டமன்றத்தில் தேவையான பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் அவரே முதல்வராக நீடிப்பார் இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. மாறாக அவர் கட்சி உறுப்பினர்களின் போதிய பெரும்பான்மையைப் பெறத் தவறினால் ஆளுங்கட்சியினர் வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவர் ஆட்சி அமைக்கும் உரிமையைப் பெற வேண்டும். கட்சி ச.ம.உறுப்பினர்களிடம், சட்டமன்றத்திற்குத் தேவையான  பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால் யார்மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை. எனவே, அதற்கு இசைவளிக்கப்படமாட்டாது.
இவையாவற்றையும் புரட்சித்தலைவி அம்மா கனவில் இட்ட கட்டளைகளுக்கிணங்கத் தெரிவிக்கின்றேன் எனவும் இவற்றுக்கு எதிராகப் பேசுவோர்  மீது சட்டமன்றத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கிறேன். இதற்கு முன்பு நான் எடுத்த முடிவு அப்போதைய சூழலில் எனக்குச் சரியெனப்பட்டதால் எடுத்த  முடிவு எனவும் எனினும் தவறாகப் படுவதால் அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவிக்கிறேன்.”
இவ்வாறாகச் சட்டமன்றப் பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
  இதைக்கேள்வியுற்ற தினகரன் அணியினரும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் மக்களாட்சி மீண்டும் மலர்கிறது என மகிழ்ந்தனர். தொடர்பான வழக்குகளுக்கு இனிமேல் வேலையில்லை. எனவே, அவற்றைத் திரும்பப்பெற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
 பிற  எதிர்க்கட்சியினரும் இவற்றை வரவேற்றனர். பொதுமக்களும் தனபால் தானாகவே முடிவெடுக்கும் நிலைக்குப் புரட்சித்தலைவியின் ஆவி உதவியது  அறிந்து  வியந்தனர். அதே நேரம் பாசகவின் முகவரான ஆளுநர் இனி என்ன  செய்ய முடியும்? பாசகவின் கனவு தகர்ந்து விட்டதே என்றும் கூறிக்கொண்டனர்.
(கற்பனைதான்! என்றாலும் இப்படியெல்லாம் நடந்தால் நன்றாகத்தானே இருக்கும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, September 14, 2017

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது!

செட்டம்பர் திங்கள் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழின வரலாற்றிலும் முதன்மையான திங்களாகும்.
செட்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள். செட்டம்பர் 16 தன்மதிப்புச் சுடரொளி இராமச்சந்திரன் பிறந்த நாள். செட்டம்பர் 17  தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி பிறந்தநாள். தன்மானமும் உரிமையும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அவர்கள் கண்ட கனவு, அவர்களை எப்பொ ழுதாவது புகழ்வதால் நனவாகாது.
செட்டம்பரில்  நம் உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கும் மற்றொரு துயரம், திலீபன் இந்தியாவை நம்பி அளித்த உயிர்க்கொடை! திலீபன் போன்று எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிர் கொடுத்தும் ஈழம் விடியவில்லையே!
1987 செப்டம்பர் 15  அன்று ஐந்து  வேண்டுகோள்களை முன்வைத்து உண்ணா நோன்பிருந்தவர், அமைதிவழியை ஒப்புக்குப் பேசும் இந்திய வஞ்சகரால்   26.09.1987 அன்று  வீர மரணம் உற்றார்.
ஒரு தலைமுறை கடந்த பின்னரும்  திலீபனின் ஐந்து வேண்டுகோள்களில் ஒன்றுகூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல. மேலும் மோசமான நிலைக்குத்தான் அந்நாடு சென்று கொண்டிருக்கிறது.
  மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பது அவர் முதல் வேண்டுகோள். ஆனால்,  சிங்கள மக்களின் குடியமர்த்தல் மட்டுமல்ல, சிங்களப் படைத்துறையினரின் குடியிருப்புகள் தமிழர் பகுதியெங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் நிலம் என ஒன்று இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழர்களைச் சுற்றிலும் தமிழர்களின் மத்தியிலும் சிங்களர்கள் குடி யமர்த்தப்படுகிறார்கள்.
  சிறைக் கூடங்களிலும் இராணுவ, காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற அவரது இரண்டாம் வேண்டுகோள் இன்றும் உயிரோடுதான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நிலை என்ன வென்றும் தெரியவில்லை.
  6 திங்கள் கடந்த பின்னரும் கேப்பாவுலவு மண்மீட்புப் போராட்டம் முடிவுறவில்லையே! சிறை வைக்கப்பட்டவர்கள், வலுக்கட்டாயமாக  இழுத்துச் செல்லப்பட்டவர்கள், மேலும் பல வகைகளில் சிங்களப்படையினராலும் சிங்களக் காவல்துறையினராலும் காணாமல் போக்கப்பட்டவர்கள் நிலை தெரியாமல் குடும்பத்தினர் படும் பாட்டிற்கு முடிவு வரவில்லையே!
  முள்ளிவாய்க்கால் முதலான ஈழப்பகுதிகளில் இனப்படுகொலை நடந்தது குறித்து வருத்தம்தான் தெரிவித்தோம். அத்துயரம் வராமல் தடுக்க  முயலவில்லையே அல்லது இயலவில்லையே! புலம் பெயர் தமிழர்கள் உலக அரங்கங்களில் முழங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
முடிந்ததற்கு விடிவு தெரியாவிட்டால் போகிறது! இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி உண்டா? இல்லையே!
கொத்துக்குண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் குண்டுமாரி பொழிந்து கொன்றால்தான் இனப்படுகொலையா?
அன்றாடம் நிலப்பறிப்பாலும் உடமைப்பறிப்பாலும் கட்டாயக் கருத்தடையாலும் கற்பழிப்பாலும் காவற்கூடச் சித்திரவதைகளாலும் இனம் அழிந்து கொண்டு உள்ளதே! இந்த இன அழிப்பு குறித்து நாம் கவலைப்பட்டோமா?
இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை முழுவதும்  சிங்களர் நிலமாகவும் ஏதோ சில பகுதிகளில் தமிழர்கள் சிலர் சிங்களவர்களின் அடிமையாகவும் வாழும் நிலைதானே நிலவும்!
இது குறித்துக் கவலைப்படுகிறோமா?
தமிழ்நாட்டு உரிமைகளைப் பறிகொடுத்துக்கொண்டு வாளாவிருக்கும் நாமா, அண்டைநாட்டுத்தமிழர்களின் உரிமைகளை மீட்கப் போகிறோம்!
  உரிமையுள்ளவன்தானே அடுத்தவன் உரிமைக்குப் போராட முடியும்!  (இதை அன்றைக்குப் பெரியார் சொன்னதைத்தான் திரித்துக் கூறிக்கொண்டுள்ளனர்.)
 தமிழ்த்தேசிய இயக்கத்தினரும் திராவிட இயக்கத்தினரில் ஒரு பகுதியினரும் தமிழ் அமைப்பினரும் நம்  உரிமைக்கும் ஒட்டுமொத்த நம் இன உரிமைக்கும் குரல்  கொடுத்து வந்தாலும் அதிகாரப் பீடத்தில் அவர்களை அமர விடுவதில்லையே! அதிகாரமில்லாதவர்களால் என்ன செய்ய இயலும்?
 உரிமைக்குக் குரல் கொடுத்து அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஊழலுக்குத் துணை நின்றதால் உண்மையான பேச்சிற்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.
  நாட்டுமக்கள் நலன் குறித்து  உழைக்க உணர்வூட்டியவர்கள் வீட்டுமக்கள் நலன்குறித்துப் பிழைத்தமையால் உண்மையையும் போலி என எண்ணத் தொடங்கும் போக்கு மேலோங்கியுள்ளது.
இதே போக்கு  தொடர்வது நல்லதல்ல!
  உண்மையை உணர்ந்து உண்மையின் பக்கம் நாம்  நிற்க வேண்டும்!
தமிழ்நாட்டில் தமிழ்  தொலைக்கப்படும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும்! தமிழ் தலைமையும் தமிழ்மக்கள் முதன்மையும் பெற நாம்  ஆன்றோர் பிறந்த திங்களிலே உறுதி எடுக்க வேண்டும்!
நாளும் தமிழினம்  ஈழத்தில் அழிவதை உணர்ந்து பிறருக்கும் உணர்த்தி,   01.01.1600 இல் தமிழ்நிலமாக விளங்கிய இலங்கைப்பகுதி தமிழ் ஈழமாக மலரக் கருத்துப் புரட்சியை விதைக்க வேண்டும்!
உலக ஆன்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள்  ஒத்துழைப்பால்  தமிழீழம்  உரிமையுடன் திகழ நாமும் பாடுபட வேண்டும்!
தமிழ் மக்களாக இருந்தும் தமிழைப் படிக்காமல் அயலவர் ஆகும் நிலை  பல நாடுகளில் நிலவுகிறது. ஆங்காங்கே இதனைப்போக்கத் தமிழ் அமைப்பினர் பாடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒல்லும் வகை உதவி, தமிழ் மக்கள் தமிழை மறக்காமல் உரிமையுடைய தமிழர்களாக வாழ வகை செய்ய  வேண்டும்!
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 967)
வாழ்க தமிழ்!   வெல்க தமிழினம்! ஓங்குக வையகம்!
 –  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை  அகரமுதல 203, ஆவணி 25, 2048 / செட்டம்பர் 10, 2017

Followers

Blog Archive