Saturday, November 11, 2017

பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 

பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்


  ‘திருவேலன் ஒரு  பொறியாளர்’ என்று மட்டும் அறிந்திருப்போம். ஆனால் விரிந்து பரந்த அறிவு மிக்கவர். தரக்கட்டுப்பாட்டை நிலைப்படுத்தல், மேம்படுத்தல், ஆய்விடல், பயிற்சி யளித்தல் எனப் பல்துறைத் தொழில் நுட்பட அறிவராகத் திகழ்கிறார். வெளிநாடுகளில் பணியாற்றியதால் ஆங்கிலம்,செருமானியம், சப்பானியம்முதலான பல மொழிகள்  அறிந்தவர். பன்மொழிகள் அறிந்திருந்தாலும் தாய்த்தமிழை மறக்காதவர்.
  பொறியாளராகப் பல நாடுகளில் பணியாற்றியவர் எனப் பொதுவாக எண்ணுவதைவிட அவர் எத்தகைய பணியாற்றிவர், ஆற்றிவருபவர் என்பதை அறிந்தால்தான் அவரின் சிறப்பை உணர முடியும். எனவே,  அவரின் பணிச்சிறப்பில் ஒரு பகுதியைக் காண்போம்.
 திருவேலன் இலக்குவனார் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் உருவான பொறியாளர். படிப்பு முடிந்ததும் பணியில் சேர்ந்தவர் மின்னியல்  பொறியாளராகப் பட்டம் பெற்றவர், பிற துறைகளிலும் தன் படிப்பறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார். படிப்பறிவும் பணியறிவும் பணிச் செம்மையும் இவரை மேலும் மேலும் உயர்த்தின.
  இயந்திரஅகச் செயற்பாங்கு மேலாண்மை உட்பட கொள்முதல் ஆய்வு,  தரப்பாட்டு முறைமைகள், நெறிப்படுத்தல், பயிற்சி யளித்தல் முதலியவற்றில் 17 ஆண்டுகள் பட்டறிவு மிக்கவர் பொறியாளர் திருவேலன்.
 பொறியியலகங்கள் ஆய்வு, தரக்கட்டுப்பாடு, அணுத்திறன் உட்பட இயந்திரத்தொகுதிகள் செயற்பாங்கில் தர உறுதிப்பாடு அளித்தல் முதலானவற்றில் 28 ஆண்டுகள் பட்டறிவு மிக்கவர். இவற்றுள் 13ஆண்டுகள் இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பிய நாடுகள், சப்பான் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
  மின்கலன்கள், மாழைகள்(உலோகங்கள்) அரிமானம் தொடர்பான மின்வேதியியலில் ஆராய்ச்சி மேம்பாட்டுப்பணிகளில் 5 ஆண்டு பட்டறிவு,  இந்திய அணுவாற்றல் துறையில், தரக்கட்டுப்பாடு, ஆய்வு, வடிவமைப்பு, உற்பத்தி,  கட்டமைப்புகளில்   தர உறுதிப்பாடு,முதலிய பணிநிலைகளில் ஓராண்டு(1969-70) பணியறிவு மிக்கவர்.
    தர உறுதிப்பாடு, தரக்கட்டுப்பாடு,  இயந்திரப்பொறியாளர் அமெரிக்கக் கழகத்திற்கான(ASME)  இயந்திரத்தொகுதிகள், கருவிகள் தொடர்பிலான சிதைவுறா மதிப்பீடும் பற்ற வைப்பில் ஆய்வுப்பணியும் மேற்கொண்டு திறம்படச் செயலாற்றியவர்.  நிகழ்முறை இடைமுகப் பயனீட்டிற்கான(API)   பூசிய, பூசா நேரிய, வளைகுழாய்கள் தொடர்பான பணிகளும் இவற்றில் அடங்கும்.
  சப்பான், மேற்கு ஐரோப்பியநாடுகளில் உள்ள  பேரளவு எஃகு, பைஞ்சுதை(cement) ஆலைகள், உற்பத்தி ஆலைகள், மீ உயர் அழுத்த பரப்பகங்கள்(transmissions), பகிர்மான முறைமைகள், பாறைவேதியல்(petrochemical) ஆலைகள்  ஆகியவற்றுக்கான முழுமையான தளவாடகங்களையும் கருவிகளையும் அளிப்பதற்கான தர மேலாளராகவும் தனிநிலை ஆய்வுப் பொறுப்பாளராகவும் விற்பனைக் கணக்கீட்டு மதிப்பீட்டாளராகவும் திகழ்ந்துள்ளார்.
. இந்தியத் தொழிற்காலைகளின் செய்முறைத் தளவாடங்களைப் பேணுவதற்கான முறைமை, தொழில்நுப்பத் தணிக்கையாளராகச் சிறந்துள்ளார்.
   பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்குப், பயனர் தளங்கள், பெருநகர மையங்கள், பணியகப் பயிற்சிமையங்கள்  ஆகியவற்றில்  புதுப்பாணி மேலாண்மைக் கோட்பாடுகள், பேணுகைப் பொறியியலில் திறன் மேம்பாடு,  ஆகியவற்றில் பயிற்சித் திட்டங்களும்  பட்டறைகளும்  அமைப்பதில் வல்வலவராக விளங்குகிறார்.
  2003 முதல் தனிப்பட்ட பொறியியல் நெறியுரைஞராகச் செயல்பட்டுப் பல நிறுவனங்களின் தரமான உற்பத்திக்குக் காரணமாகவும் இவற்றால் வாடிக்கையாளர்கள் நற்பயன் அடையவும் காரணமாக விளங்கி வருகிறார்.
 தொடக்கத்தில் மதுரை தியாகராசர் ஆலையில் சில மாதங்கள் பணியாற்றிவிட்டு,    மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute) தன் பணியைத் தொடங்கினார்;இரும்பில்லா மாழை உற்பத்தியிலும் வழிமுறை எறிகணை மின்னழுத்தத் தொகுதியிலும் ஆராய்ச்சி, மேம்பாட்டுப்பணிகளில்  சிறப்பாக ஈடுபட்டிருந்தார்.
 அதன்பின்னர் 1969 இல் இந்திய அரசின் அணுஆற்றல் துறையில் தம் பணியைத் தொடர்ந்தார். கல்பாக்கத்தில் உள்ள இதன்  அலுவலகத்தில் தரக்கட்டுப்பாடு, ஆய்வுப்பிரிவில் முதுநிலை பொறியாளராகப் பணியாற்றினார்.
  இதன் மூலம், வடிவமைப்பு, கொள்முதல் ஆகியவற்றில் தர உறுதிப்பாட்டை வழங்கி, விற்பனைத்தரக் கடுங்கண்காணிப்பிலும் கட்டமைப்பு மேற்பார்வையிலும் கருத்து செலுத்தினார்.  பற்றுவிப்பிலும் (welding)சிதைவுறாஆய்வு,  விற்பனை மதிப்பீடு ஆகியவற்றிலும் முதன்மை அளித்துத்  தர உறுதிப்பாடுதரக்கட்டுப்பாடு,ஆய்வு முதலான துறைகளின் எல்லா நிலைகளிலும் பணியாற்றினார்.
  இத்தாலி என்சிகோ-மிலான் நிறுவன அழைப்பில் 1977 முதல் இங்கே பணியாற்றினார்.   இந்நிறுவனம் சார்பில் உறைவிடப் பொறியாளராக, முதலில்   இந்தியாவில் பணியைத் தொடங்கியவர்(5/77-10/78) அடுத்து ஈரானிலும் (10/78-2/79),  பின்னர் மேற்கு செருமனியிலும் (10/79-5/80) தொடர்ந்து  சப்பானிலும் (6/80-5/87),    நிறைவாக இங்கிலாந்திலும் (5/87-101/88) பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்திலேயே  இன்காக்கு (INCOK)என்னும் கொரிய நிறுவனம் சார்பில் உறைவிடப் பொறியாளராகப் பணியாற்றினார்.( 11/88-1/1992, 1-6/1994).
  அனைத்து இடங்களிலும் பயனுறுவோருக்கான முழுமையான தளவாடங்கள், கருவிகள் ஆகியவற்றின் தரக்கட்டுப்பாட்டிற்குத் திறம்பட வழிவகுத்தார். அதனால் இந்நிறுவனங்களுக்கும் இந்நிறுவனங்களின் வாடிக்கயைாளர்களான பிற அயலக நிறுவனங்களுக்கும் நற்பெயர் கிட்டியது என்று  சொல்லவும் வேண்டுமோ?
.  இப்பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பணியாற்றித் தம் திறமையால் அந்நிறுவனங்கள் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்து, நற்பெயர் ஈட்டியுள்ளார்.
  தாயகம் திரும்ப விரும்பி 1992 இல்  ஆஃபின்கான் நிறுவனத்தில் (2/1992 – 3/2003 ;  1994 இல் 7 திங்கள் நீங்கலாகப்) பணியாற்றினார். கோட்ட மேலாளராகச் சேர்ந்து செயல் இயக்குநர் வரை இங்கே உயர்வடைந்தார்.  இங்கே இந்தியாவில் செயல்நிலைத் தளவாடங்களின் பேணுகைக்கான ஒரே அமைப்பான ஆஃபின்கான்  பொறியியல்  பேணுகை-ஆராய்ச்சியகத்தை     (Hofincons Institute of Maintenance Engineering & Research)  நிறுவித் தலைமை தாங்கினார்.
  14 ஆண்டிற்கும் மேலாக அயலக நிறுவனங்களின் நெறியுரைப் பொறியாளராக (consultant – engineer)   இந்நிறுவனப்பணிகளை ஆற்றுப்படுத்தி வருகிறார். இவற்றின் மூன்றாம் தரப்பு ஆய்வாளராகவும் தர உறுதிப்பாட்டுப் பொறியாளராகவும் குழுத் தலைவராகவும் செயல்பட்டு நன்னிலையில் பொருள்கள் உற்பத்தி ஆக உழைப்பை நல்கி வருகிறார்.
  அமெரிக்க நிறைநிலை ஆய்வுக் கழகத்தின் (ASNT) மேனாள் முதுநிலை உறுப்பினர்,
 இங்கிலாந்து பற்றகத்தின் (Welding Institute, UK)  மேனாள் முதுநிலை உறுப்பினர்
 முதலான  பொறுப்புகளின் மூலம் பன்னாட்டுப் பொறியாளர்களுடன் கலந்து பட்டறிவைப் பகிர்ந்து கொண்டார். இப்பொழுது இங்கிலாந்திலுள்ள  கட்டுப்பாட்டு பட்டய நிலையத்தின் பட்டயத் தரத் தொழில்நெறிஞராகத் (Chartered Quality Professional of the Chartered Quality Institute, UK ) திகழ்கிறார்.
  பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயலாற்றும் (திருக்குறள் 675) திறம் மிக்கவராகத் திருவேலன் திகழ்ந்தமையால். பணியிடங்களில் எல்லாம் பாராட்டும் சிறப்பும் பெற்றார்.
  இலக்குவனார் – மலர்க்கொடி இணையருக்கு  ஐப்பசி 24, 1973 / நவம்பர் 09, 1942 இல்  நன்மகனாய்ப் பிறந்தார். மரபில் பற்று மிக்கவரான பேராசிரியர் இலக்குவனார் தம்தந்தையின் பெயரான சிங்கார வேலன் என்பதையே அழகுதமிழில் திருவேலன் எனத் தம்மகனுக்குச்சூட்டினார். (தம் தந்தையின் பெயருடன் தம் தாத்தாவின் பெயரையும் சேர்த்துத் தம்முதல் பேரனுக்கு முத்துவேலன் எனப் பெயர் சூட்டினார்.)
  இவருக்கு முன் பிறந்த முதல் மகன் 2 அகவையிலேயே இயற்கை எய்திவிட்டார். எனவே, திருவேலன் வளர,வளர, தலைமகனுக்குரிய பொறுப்பும் சுமையும் இவரை வந்தடைந்தன.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல் என்னும் (திருவள்ளுவர்)
திருக்குறளுக்கு (எண்1026) ஏற்பத் தன்னை அவர் தலைமகனுக்குரிய கடமையாளராக மாற்றிக் கொண்டார்.
  மாணவப்பருவத்திலேயே தந்தையின் இ்லக்கியப்பணிக்கு முகவர்கள் கணக்கு வழக்கு, பதிவேடுகள் பேணல் முதலான பணிகளைப்பார்த்துத் துணை நின்றுள்ளார்.
 பல்வேறு வெளிநாடுகளில் பணி புரிந்தாலும் தமிழுணர்வுடனே வாழ்ந்தவர். மொழிக்கொலையைக் காணும் பொழுதெல்லாம் நம்நாடு நம்மொழியை அழிவுப்பாதையில் கொண்டுசெல்கிறதே என வேதனையால் வாடியவர்.
  செயல்திறனால் பெருமை பெற்று உயர்பவர் தலைவரால் மதிக்கப் பெறுவார் என்கிறார் திருவள்ளுவர்.
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும் (திருக்குறள் 665).
அதற்கேற்ப இவர் பணித் தலைவர்களால் பெருமை படுத்தப்பட்டுள்ளார்.
 இவரது பணிச்செம்மைக்கும் எழுத்துவன்மைக்கும் எடுத்துக்காட்டாக “நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள்” – என்னும் தலைப்பில் அகரமுதல இதழில் வந்துள்ள கட்டுரையைக் குறிப்பிடலாம்.
  தான் சார்ந்த பணிகளில் வாய்ப்புள்ள இடங்களில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்குபவர். இதனால் நண்பர்களையும் தமிழ்ப்பற்றில் ஆற்றுப்படுத்துபவர்.
  தமையனாக மட்டுமல்லாமல் உடன்பிறப்புகளுக்குத் தந்தையுமானவர். அன்பும் பண்பும் கொண்டு அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். செல்லம்மாள் என்னும் மங்கை நல்லாளைக் கைப்பிடித்த இவருக்கு முத்துவேலன், மலர்க்கொடி என்னும் மக்கட்செல்வங்களும் அவர்கள் வழிப் பேரச் செல்வங்களும் உள்ளனர்.
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். (திருவள்ளுவர்)
 என்னும் திருக்குறளுக்கு(1021) எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.
அறிவார்ந்த ஆசானாய், ஆற்றல்மிகு வழிகாட்டியாய்த் திகழும் பொறி.இ.திருவேலன்
எல்லா நலமும் வளமும் இனிதே பெற்று நூறாண்டு வாழ்க! .
-இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, November 4, 2017

கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்!

  நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறில்லாமல் என்ன முரண்பாடாகச் சொன்னாலும் செயல்பட்டாலும் அவர்கள் காலடிகளே அடைக்கலம் என்று இருக்கக் கூடாது.  நம்மால் கட்சித்தலைமைக்கு எதிராகப் பேசவோ செயல்படவோ விருப்பம் இல்லையெனில் விலகியேனும் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
  அப்படி இல்லையேல் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் சார்ந்து இராமல் கொள்கைகள் அடிப்படையில்  எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆதரவு தர வேண்டும்.
  நாம், கட்சியின் கொத்தடிமைகளாக இருப்பதால், கட்சித்தலைவர்கள் மொழி, நாட்டு, இன நலனுக்கு எதிராகச் செயல்பட்டாலும்  அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்கிறோம் அல்லது அமைதி காக்கிறோம்.
  சான்றுக்குச் சில பார்ப்போம். தமிழர் நலன் குறித்துப் பெரிதும் பேசிய கட்சி தி.மு.க.  அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியின் உரையாலும் எழுத்தாலும் தமிழ் உணர்வு பெற்றவர்கள் மிகுதி. இருப்பினும் தமிழர் நலனுக்கு எதிராக அவர் நடந்துகொண்டபோதும் கட்சியினர் வாய்மூடி அமைதிதான் காத்தனர். ஈழத்தில் படுகொலை நடந்த பொழுது அதற்குக் காரணமான பேராயக்கட்சி(காங்.) உடன் அவர் நெருக்கமாக இருந்து உடன்பட்டபொழுதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தனிப்பட்டுப்பேசும்பொழுது தங்கள் தலைவரின் கருத்துகளுக்கு எதிராகப் பேசினாலும், பொதுவில் அவரை ஆதரித்தனர். எனவே,  தடம் புரண்ட பாதையைச் சரியாக்காமல், தவறான பாதையிலேயே கட்சி சென்றது. ஈழத்தமிழர்கள் பேரளவு  படுகொலை செய்யப்பட்டபொழுதும்  நிலையாமை பேசி இயற்கை என்பதுபோல் கலைஞர் எழுதிய போதும் எதிர்ப்பு வரவில்லை. இதன் தொடர்ச்சியாக இலங்கைத்தமிழர் என்றும் ஈழத்தமிழர் என்றும் அழைக்கப்படுபவர்களைச் சிங்களத் தமிழர் என்று சொல்லி  இலங்கையைச் சிங்கள நாடாகத் தலைவர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்ட பொழுதும் மூளை மழுங்கிக் கிடந்தனர் கட்சியினர்.
 தி.மு.கவைமட்டும் குறை கூறுவதாக எண்ண வேண்டா. எல்லாக் கட்சியிலும் அதே நிலைதான். தமிழுணர்வுடன் பேசும் ஒருவர் பேராயக்கட்சி(காங்.) ஆதரவாளராக மாறியதும் அக்கட்சியினரிடம் தமிழர் நிலையை உரைப்பதற்கு மாற்றாக அக்கட்சியின் தமிழர் எதிர்ப்பில் பேசத்தொடங்கி விடுகின்றனர்.  கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப் பெற்றாலும்  காப்புவிடுப்பில்(பரோலில்) விடுவிப்பதும் முன்கூட்டி விடுதலை செய்வதும் தண்டனையின் – சீர்திருத்தத்தின் ஒரு பகுதியே! ஆனால், நெறிமுறை தவறி, இராசீவு கொலையில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுத் தண்டனையால்  துன்புறுவோர்கள் மீது பரிவு காட்டாமல் ,  பிற தண்டனைவாசிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பிற்கு எதிராக அதன் தலைவர்கள் பேசுகின்றனர். அண்மையில் அதன் தமிழகத்தலைவர் திருநாவுக்கரசர், எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசியதும் இவ்வகையில்தான். திருச்சி வேலுச்சாமி மட்டும்தான் உண்மையை எடுத்துரைத்து அவர்கள் விடுதலைக்குச் சார்பாகக் குரல் கொடுத்து வருகிறார்.    பேராயக்கட்சி அல்லது பாசகவின் தமிழகத்தலைவர்கள்இந்தியத்தலைமைகளுக்கேற்ப ஆட்டம்  போடாமல்தமிழர்களின்உணர்வுகளைத் தங்கள் தலைமைகளிடம் எடுத்துரைத்தால் அவர்களும் திருந்த வாய்ப்பு உள்ளது. மாறாக இவர்கள் நடந்துகொள்வதால் இக்கட்சிகளின் தமிழ்ப்பகைப் போக்கு வளர்நது கொண்டே போகின்றது.
  பேராயக்கட்சியில் இருந்தபொழுது வாய்மூடி அமைதி காத்த வாசன் இப்பொழுது மீனவர் நலன்தமிழ்நாட்டு நலன்பற்றியெல்லாம் பேசுகிறார். அக்கட்சியில் இருந்தபொழுதே இவர் இவ்வாறு பேசியிருந்தால் இந்தியத்தலைமை திருந்த வாய்ப்பு இருந்திருக்கும் அல்லவா? ஆனால், இதையும் நிலையான கொள்கை என்று சொல்ல முடியாது. நாளையே அவர், இந்தியக்கட்சியில் சேர்ந்து விட்டால் மீண்டும் அமைதியாகி விடுவார்.  திருநாவுக்கரசர் அல்லது வாசனுக்கு மட்டுமல்ல, இஃது இளங்கோவன் முதலான எல்லாத் தலைவர்களுக்கும் பொருந்தும்.
  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு.கிருட்டிணசாமி பாசகவுடன் உறவு வைப்பதால், தணிந்த சாதியினருக்கு – ஒடுக்கப்பட்ட இனத்திற்கு – எதிராக நடந்துகொண்டு அப்போக்கே சரியென வாதிட்டு வருகிறார்.  சாதித்லைவர்களை  வளைப்பதன் மூலம் சாதியினரை ஒடுக்கி வைக்கலாம் எனக் கருதும் பாசகவின் போக்கிற்குத் துணை நின்று தமிழ்நாட்டிற்கு எதிராக நடந்துகொள்வதும்  தன்னலம் மட்டுமல்ல! அடிமைத்தனத்தின் வெளிப்பாடே!
  மூளைச்சலவை செய்யப்படும்  பொதுவுடைமைக்கட்சியினர் தத்துவங்களைத் திறம்பட உரைததாலும் கொத்தடிமைத்தனத்தால் கட்சிகளின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கின்றனர்.
  திராவிடம் என்பது பகுத்தறிவு, தன்மானம், தன்மதிப்பு என்பவற்றின் குறியீடுதான். அந்த வகையில்தான் திராவிட இயக்கம் அல்லது திராவிடக்கட்சிகளின் பெயரில் திராவிடம் உள்ளது. ஆனால், இவற்றிற்கு மாறாக அதிமுக செயல்பட்டாலும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து ஆதரிப்போரே அக்கட்சியில் உள்ளனர்.  முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைச் சேற்றில் உழல்பவர்களாக அக்கட்சியினர் இருப்பது குறித்துச்சிறிதும் வருந்தவில்லை.  தலைமையை நற்பணிகளுக்காகப்போற்றுவது என்பது வேறு! தலைமை என்ன சொன்னாலும் ஆமாம்  என்று சொல்லி அடி வீழ்வது  வேறு!
 ஊழலில் கட்சிகள் ஊறியிருக்கும் பொழுது தாமும் அவற்றுடன் இணையும் பொழுது நாட்டில் எங்ஙனம் நேர்மையான ஆட்சி நடைபெறும்? ஆட்சியில் நேர்மையில்லையேல், மக்கள் தாம் அடைய வேண்டிய பயனை அடையாமல்போகத்தானே செய்வர்! கட்சியினரும் மக்களில் ஒரு பகுதியினர்தாமே! இதை உணராமல் ஊழலுக்குத் துணை நிற்கும் இவர்களை என்ன செய்வது?
  பெருந்தலைவர் எனப் போற்றப்படும் காமராசர் தாம் சார்ந்த கட்சியின் கொள்கையால் “நாம் இந்தியர்கள், இந்தியாவில் எங்கிருந்தால் என்ன?” என்று தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நடந்துகொண்டதால்தானே தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், திருப்பதி, பெங்களூரு, கோலார் முதலான தமிழகப்பகுதிகள் அண்டை மாநிலங்களுடன்  இணைக்கப்பட்டன.   ஆற்று நீர்ப்பங்கீட்டுச் சிக்கல் அயல்மாநிலங்களில் தமிழர்கள் துன்புறுத்தப்படல் எனத் தொல்லைகள் தொடர்வதும் இவற்றால்தானே! கண்மூடித்தனமாகக் கட்சித்தலைமையை ஆதரித்ததால் வந்த தீவினை, வரும் தீவினைகள் மிகுதியன்றோ?
    நெடுவாசல், கதிராமங்கலம், (நீட்)பொதுத்தேர்வு, இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு என நமக்கு அழிவு தரும்  பலவற்றையும்  பாசக அரங்கேற்றி வந்தாலும் தமிழகத்தலைவர்களும் கட்சியினரும் அவற்றிற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்காததால்தானே நம் உணர்வு என்ன என்பதை அக்கட்சியின் இந்தியத் தலைமை புரிந்து கொள்ளாமல் தலைவிரித்தாடுகிறது!
  இவ்வாறு கட்சிக்கொத்தடிமைத்தனத்தால் நாம் அடையும் தீமைகள், நம் இனம் எதிர்நோக்கும் அழிவுகள் எனப் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் இனியேனும் திருந்த வேண்டும். நமது  பொது நலனுக்கு எதிரான  கட்சிச்செயற்பாடுகளைத் துணிந்து எதிர்த்துக்குரல் கொடுக்க வேண்டும்.  பொதுமேடையில் பேசுவது கட்சிக்கட்டுப்பாட்டிற்கு எதிரானது எனக் கருதினால்,   தனிப்பட்ட  முறையிலும் கட்சிஅமைப்பு தொடர்பான கூட்டங்களிலும் மக்கள் குரலை எதிரொலித்து தம்கட்சியின் நலனுக்காகவாவது தமிழர் பகைப்போக்கைக் கைவிட வலியுறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதுதான் இந்தியக்கட்சிகளின் வளர்ச்சிக்கும் நல்லதாகும்.
 அப்பொழுதுதான் கட்சியால் வழிநடத்தப்படும்ஆட்சியும் நமது நலனில் கருத்து செலுத்தும்.
  இனிமேலாவது மனத்திற்குக் கடிவாளம் போடாமல் ஆராய்ந்து பொதுநலன்  தொடர்பான தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மட்டும் ஆதரவு தருவோம்! மாறான கருத்துகளுக்குத் தடைபோடுவோம்!
 தமிழ்நாட்டில் இருக்கும் எக்கட்சியாயினும் தமிழர் நலன், தமிழ்மொழி நலன், தமிழ்நாட்டு நலன், தமிழின நலன் எனத் தமிழ்ப்பாதையிலேயே நடைபோடச்செய்‌வோம்!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர்திருக்குறள் 423)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 210, ஐப்பசி 12-18, 2048 /  அட்டோபர் 29 – நவம்பர் 04,  2017

Saturday, October 28, 2017

ஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல! உண்மைக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல!  உண்மைக்கு!
  சசிகலா, தினகரன் தொடர்பான கட்டுரைகளப் படிக்கும்  நண்பர்களில் பெரும்பான்மையர், “உங்கள் கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்து நாங்கள், சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக எழுதுகிறாரே! என எண்ணுவோம். ஆனால் படித்து முடித்ததும் வழக்கம் போல் நடுநிலையாகவும் துணிவாகவும் எழுதுவதைப்  புரிந்து கொள்வோம். மாறுபட்ட  கோணத்தில் அமையும்  உங்கள் கட்டுரைகள் தொடரட்டும்!” என்கின்றனர். சிலர் “அதிமுகவினரே சசிகலா குடும்பத்தைப்  புறக்கணிக்கும் பொழுது அவர்கள் சார்பாக எழுதுகிறீரகளே!” என்று  கேட்கின்றனர்.  மூவர் ஊழல்பேர்வழிகளை ஆதரித்துத் திருவள்ளுவர்  பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக முகநூலில் பதிந்துள்ளனர். மேலும் சிலரும் இதுபோன்ற எண்ணத்தில் இருக்கலாம்.
  என்னைப் புரிந்து கொண்டுள்ள பெரும்பான்மை  நண்பர்களுக்கு நன்றி.
 நம் விருப்பம் ஒன்றாகவும் நாட்டு நடப்பு வேறாகவும் இருக்கும்பொழுது நாட்டுநடப்பின் எதிரொலியாக எழுத  வேண்டியது கடமையாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நடந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரான தொலைக்காட்சி உரையாடல்ஒன்றில், |சென்னை, கடலூர் வெள்ளப் பாதிப்புகளால் அதிமுக தோல்வியுறும் என அனைவரும் தெரிவிக்கும் பொழுது நீங்கள் அதிமுக வெற்றி பெறும் என்று எப்;படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. “அதிமுக வரக்கூடாது என்பதுதான் என் விருப்பம். ஆனால், அதிமுக  வெற்றி பெறும் என்பது நாட்டு நிலை.  சென்னையும் கடலூரும் மட்டும் தமிழ்நாடு அல்ல!  இவற்றை மாற்றும் வல்லமை அதிமுகவிற்கு உண்டு. எனவே, இவையும் கடந்து போகும். அதிமுகதான் வெற்றி பெறும்” என்றேன். அவ்வாறுதான் நடந்தது. எனவே, நம் விருப்பத்தைத் தெரிவிப்பதுடன் நாட்டு மக்களின்  போக்கையும் தெரிவிப்பது நம் கடமையாகிறது.
 தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் தரக்கூடிய தமிழ்த்தேசியர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் தமிழ்த்தேசியர்களில் ஒரு பகுதியினர் தேர்தலைப் புறக்கணிக்கின்றனர். பெரும்பான்மையர் திராவிடத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆரியத்திற்குப் பாய் விரிக்கின்றனர்.  எனவே, ஒப்பீட்டளவில் குறைந்த தீமையுடையவரையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
 தமிழ்தமிழர் நலனை அடித்தளமாகக் கொண்டு திமுக எழுப்பப்பட்டிருந்தாலும் அண்மைய போக்கு அதற்கு மாறாகவே உள்ளது. ஈழத்தில்  பெருமளவிலான இனப்படுகொலை நடைபெற்றபொழுதும் அமைதி காத்து உடன்பட்டது,  இலங்கைத்தமிழரையும் ஈழத்தமிழரையும் சிங்களத் தமிழர் என்று சொல்லி  இன வரலாற்றை அழிப்பது முதலான தலைமையின்  போக்கை அடிமைத்தனத்தில் ஊறி  மனச்சான்றிற்கு எதிராகக் கட்சியினர் ஆதரிக்கின்றனர்.  ஓழிக்கப்படவேண்டிய  பேராயக்(காங்.) கட்சியைக் காப்பதற்குத் திமுக துணை நிற்கிறது. தோல்விகளைச் சந்தித்த பின்பும் மனத்தை மாற்றிக்கொள்ளாமல் வால்பிடிக்கும் திமுக  இன்றைக்கு ஆதரிக்கப்படவேண்டிய நிலையில்  இல்லை.
   அதிமுகவிற்குத் தரும் ஆதரவு திமுகவைத் திருத்த உதவும் என்பதன் அடிப்படையிலும் தொடர்ந்து திமுக காங். நிலைப்பாட்டில் இருப்பதைத் தடுக்கவும் அதிமுக பக்கம் தமிழ்உணர்வாளர்கள் சாயும் நிலை ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது மாற்றுஅணித் தலைமையைவீழத்துவதற்காகப் பாசக காலடியில் வீழ்வதையே  நோக்கமாகக் கொண்டு பதவியில் உள்ள தலைவர்கள்  செயல்படுகின்றனர்.
  தமிழ்ஈழ ஆதரவு தீர்மானத்திற்காக அதிமுகவை ஆதரித்தாலும் ஈழத்தமிழர் முகாம்கள் வதைக்கூடங்கள்  போல் உள்ளதாகக் கூறப்படுவதும் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவதும்  இதனைப்  பாராட்டுவதற்குரிய தகுதியிழப்பாகவே உள்ளன.
  எனினும் இன்;றைய சூழலில் மதவெறியும் இனவெறியும் மொழி வெறியும் கொண்ட ஆட்சியின் தலைமையால்  இந்தியா இன்னல்களைச் சந்தித்துக்  கொண்டுள்ளது. வலிமையான அரசு  இருந்தால்தான் தமிழகம் காப்பாற்றப்படும். எதிர்க்கட்சியான திமுக  தேர்தலின்றி ஆளுங்கட்சியாக மாறும் சூழல் இல்லை.  எனினும் ஆட்சிக்கலைப்பு அச்சம் ஆள்வோரிடம் உள்ளது.
 நேற்றுவரை சசிகலா குடும்பத்தினரிடம் வீழ்ந்து கிடந்தவர்கள்  இன்று எழுந்து நிற்கிறார்கள் என்றால் சொந்தக்கால்களில் அல்ல! பாசக இல்லையேல் இன்றைய ஆட்சி இல்லை என்பதை அமைச்சர் பெருமக்களே பொதுக்கூட்டங்களிலேயே தெரிவிக்கின்றனர். எனவே பதவிகளில் இருந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற எண்ணுவோரால் ஆட்சிக்கும் கட்சிக்கும் அழிவே தவிர நன்மை விளையாது. முதல்வர், துணை முதல்வர், பிற அமைச்சர்களுக்குப் பதவி  இல்லையேல்  செல்வாக்கு செல்லாக்காசாக மாறும்.
 சசிகலா சிறையில் இருக்கும் சூழலிலும் தினகரன் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் முதலான எப்பொறுப்பில் இல்லாத பொழுதும் கட்சித் தொண்டர்களைப் பிடிப்பில் வைத்துள்ளார். தமிழகக்கட்சிகள் யாவுமே மையத்தின் அடிமையாகத்தான் உள்ளன.  என்றாலும் சசிகலா அல்லது தினகரன், பாசக எண்ணும் அளவிலான அடிமைத்தனத்தில் இல்லை என்பது தெரிகிறது. பாசகவிற்கு ஆட்சியில் உள்ளோர் அடிமையாக இருப்பதன் மூலம்  கால்ஊன்ற முயல்கிறது. செல்வாக்கில்லாத  இருவரை நம்பி ஏமாந்ததுபோதும் என்று இவர்களை அடிமைப்படுத்தினால்  எண்ணம் எளிதில் அமையும். ஆனால் அவ்வாறு அடிமைப்படுத்துவது எளிதாக இல்லை என்பதை அரசியல் போக்கு காட்டுகிறது.
 செயலலிதாவின் மருத்துவமனைக் காலம்அவசரக்கதியில் அமைச்சரவை பங்கேற்றமை முதலான யாவுமே பாசகவின்றி ஓர் அணுவும் அசையவில்லை என்பதைக்  காட்டுகிறது. தமிழிசை முதலான பாசகவினர் முன்கூட்டி மணிஓசையை எழுப்பியதற் கிணங்கவே ஆட்சியிலும் கட்சியிலும் ஆட்டங்கள் நிகழ்கின்றன. எனவே, “எங்கள் அப்பன் குதிருக்குள்  இல்லை” எனச் சொல்லும்; பாசகவின் உண்மை முகம் உலகிற்குத் தெரிகிறது.
 இச்சூழலில் நடைமுறையில் இருகட்சி ஆட்சியில் உள்ள தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வலிமைiயாக  இல்லாவிடில் நாட்டிற்கும்  கேடுதான். இந்திய அரசியல் கட்சிகளின் அடையாளமாக ஊழல் மாறிப்போயுள்ள காலக்கட்டத்தில் ஊழலை அடிப்படையாகக் கொண்டு யாரையும் அளவிட இயலாது. சசிகலா குடும்பத்தினர் பதவிப்பொறுப்புகளில்  இல்லாத பொழுது ஊழல் புரிந்தனர் என்றால் அதற்குத் துணை நின்ற பதவியாளர்கள்தாம் முதன்மைக் குற்றவாளிகள். அவர்களை உத்தமர்களாகக் கூறிக்கொண்டு இவர்களை மட்டும் குற்றம் சுமத்திப் பயனில்லை.
  சசிகலா குடும்பத்தினரை அகற்றுவதற்குப் பாசக என்ன சொல்கிறது?
  தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள குடும்பத்தினரிடம்  ஆட்சி அதிகாரம் இருப்பது நல்லதல்ல என்பதால்தான் சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டுவதாக, மிகமிகச் சிறுபான்மை வகுப்பினராக இருந்து  கொண்டு நாட்டை ஆட்டுவிக்கும் பாசக தலைவர் ஒருவர்  கூறியுள்ளார்.
 தமிழரல்லாதவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் அல்லது தமிழரல்லாதவர்க்கு அடிமையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாசக நோக்கம்.
  தனி ஒரு செயலாகப் பார்க்கும் பொழுது சசிகலாமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், பொதுவாகப் பார்க்கப்பட்டால் குற்றப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் மிகுதி எனப் புரிந்து கொள்ளலாம்.
  சிறைஅறையிலிருந்து நேர்முக அறைக்குச் சசிகலா சென்று வருவதைச் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதுபோல் காட்டுதல்போன்ற பல செய்திகளும் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு,  இரட்டை இலை முடக்கம், அடக்குமுறை வழக்குகள் யாவும் அதிகார வலிமையால் அடக்குவதற்கான முயற்சிகளே! இவர்கள் அடிபணிந்தால்அடுத்த நொடியே காட்சிகள் மாறும். இவர்கள் உத்தமர்கள் ஆவார்கள்! கட்சியையும்ஆட்சியையும் காக்க வந்த தெய்வங்கள் ஆவார்கள்.எனவே, புனையப்படும் வழக்குகள்,  விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் அடிப்படையில் நாம் எதையும் எடைபோடக்கூடாது.
 தேர்தல் வந்தால் தி.மு.க. வெற்றி அடையும் என்ற எண்ணத்தில்  ஆட்சிக்கலைப்பும் கூடாது; பாசகவை எதிர்க்கும் அதிமுக தலைவர்களும் ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் இலக்கில் பாசக செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 செயலலிதா மருத்துவமனையிலிருந்த பொழுதே அவர் எதிர்த்த திட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதால், செயலலிதாவின் உடல்நிலை பற்றிய முழு விவரமும் மத்திய அரசிற்குத் தெரியாமல் இருக்காது. எனவே, சசிகலாவை மட்டும் குற்றவாளியாகக் கூறுவது பொருந்தாது.
  பொதுவாக,  தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டம், உதய் மின்திட்டம், பொதுநுழைவுத்தேர்வு(NEET) திட்டம்,   பொருள்-சேவை வரித்திட்டம் (G.S.T.) என மேனாள் முதல்வர் செயலலிதாவால் ஏற்கப்பெறாத திட்டங்களை,  அவரைத் தொடர்ந்து அமைந்துள்ள அதிமுக அரசுகள் அவசரக்கதியில் ஏற்றுள்ளன.
 இவ்வாறு செயலலிதா தமிழக நலன் கருதி எதிர்த்த பல கொள்கைகள் தமிழர்நலனுக்கு ஊறுநேர்விக்கும் வகையில் கைவிடப் படுகின்றன.
 தமிழ்நாடு சமற்கிருத நாடாகவும் இந்தி வீடாகவும் மாற்றப்படுவதற்கான பாதையில் பாசக சென்று கொண்டுள்ளது.
 கதிராமங்கலம், நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டங்கள் முதலான பலவும், அரசிற்கு எதிராக முழங்குவோர் கதை செய்யப்படுவதும் பாசக ஆட்சியின் விருப்பத்திற்கேற்பவே நிகழ்கின்றன.
  ஆளுங்கட்சி வலிமையாக இருப்பதன் மூலமே இவற்றைத் தடுக்க முடியும்.
 தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையேல் இராதாகிருட்டிணன்  தொகுதிச் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். செல்வாக்கு உள்ளவர்களை ஒடுக்கப் பாசக முயன்றுவருவதால் அதற்கு எதிராக எழுத வேண்டியுள்ளது.  இதனால், சசிகலா, தினகரன் தரப்பு உண்மைகளையும் எழுத வேண்டியுள்ளது. இயல்பான போக்கில் விட்டிருந்தால் காணாமல் போயிருக்க வாய்ப்பு இருந்ததை அரசுகள், அதிகார வலிமையால் குறுக்குவழிகளில் செயல்பட்டு வளரவிட்டுள்ளன. அத்தகைய சூழல்களில் ஒன்றுதான்  பாசகவின் ஆளுங்கட்சியை ஒடுக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்காக நாமும் சசிகலா, தினகரன் வஞ்சிக்கப்படுவதையும் குறிப்பிடச் செய்கின்றது.
 ஊழல் பெருச்சாளிகள், சுண்டெலிகளை  விரட்ட முயலுவதுபோல் நடிப்பதால், நாம் முதலில் பெருச்சாளிகளை விரட்ட வேண்டும். பின்னர் சுண்டெலிகளை விரட்டலாம். இந்த நோக்கில் எழுதப்படுவன சசிசலா., தினகரன் ஆதரவு குரல்போல் மாறிவிடுகின்றன.
 தமிழ்நாட்டில் பாசக வேரூன்றி கிளை பரப்பக்கூடாது என்றால்  நேர்மையைமட்டும் அளவுகோலாகக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆதலின் அதிமுகவும் திமுகவும் வலிமையாக இருக்க வேண்டும்.
 தமிழகக்கட்சிகள் யாவும், தமிழர் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை அளிக்கும் கட்சிகளையே மக்கள் ஆதரிக்கும் சூழலும் உருவாக வேண்டும்.
இன அழிப்பு, மொழி அழிப்பு கட்சிகளை வளரவிடாமல் தடுப்போமாக!
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
     உவகையும் ஏதம் இறைக்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 432)
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியன ஆட்சித்தலைமைக்குக் கேடு நல்குவன. அத்தகைய ஆட்சியை அகற்ற வேண்டியது மக்கள் கடமை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 209, ஐப்பசி 05-11,  2048 /  அட்டோபர் 22 – 28,  2017

Tuesday, October 17, 2017

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!

  மரபார்ந்த விழாக்களுக்கும் அறிவுக்குப் பொருந்தாதக் கதைகளைப் பரப்புவது ஆரியத்தின் வேலை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் அவற்றை நம்புவது தமிழர்களின் மூடநம்பிக்கை.  பிற இனத்தார், இயற்கைக் கோள்களுக்கும் மூடநம்பிக்கைகக் கதைகளை உருவாக்கிய காலத்தில், அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையைக் கண்டறிந்த தமிழர்கள் அறியாமைக்கு அடிமையானது இரங்கத்தக்கதே! ஆனால், இன்றும் அறியாமை இருளில் மூழ்கிக்கிடப்பது அத்தகையோர் இருந்தென்ன, இறந்தனெ்ன என எண்ணத் தோன்றுகிறது.
  தமிழ்நாட்டில் கார்த்திகை  ஒளிவிழாவாகக் கொண்டாடப்பட்ட நாள்,  வடக்கிலிருந்து தீபவரிசை விழாவாக,  தீபாவளியாக மாறி இங்கே புகுந்தது.  விழாவில் விருப்பம் கொண்ட நம்மவர்கள் அதனையும் பிடித்துக் கொண்டனர். ஆனால், மூடநம்பிக்கையில் ஊறித் திளைப்பதுதான் வேதனையாக உள்ளது.
  மகாவீரர்  வருத்தமானன் விடுநிலை(நிர்வாணம்) அடைந்த நாளே தீபாவளி நாள் எனச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.  இது மெய்யோ பொய்யோ, ஆனால் இதனால் எத் தீமையும் இல்லை.
  கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்தான் தீபாவளி கொண்டாடும் பழக்கம்வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.   ஆனால் முன்னதான சமண நூலில்  விளக்கு வரிசை ஏற்றுவது பற்றிய குறிப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கி.பி.1250 இல் எழுதப்பட்ட (இ)லீலாவதி என்னும் மராத்தி நூலில்  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இடம் பெற்றுள்ளது.
  சீக்கியர்கள், 1577-இல் பொற்கோயில் கட்டுமானப் பணிகள்  தொடங்கிய நாளைத் தீபாவளி என்கின்றனர்.  அதற்கு முன்பே இவ்விழா இருந்துள்ளதால்,   இச்சமய நம்பிக்கையால் எத்தீங்கும் இல்லை.
 ஆரியக் கதைகள் பலவாறாக உள்ளன. இராமன் 14 ஆண்டு வனவாசம் முடிந்த பின்னர், அயோத்தி திரும்பிய நாளில் மக்கள்  விளக்குகள் ஏற்றி வரவேற்றுள்ளனர். இந்நாள்  தீபாவளி என்பது  ஒரு கதை. இதனால்கூடத் தீமையில்லை.
 கிருட்டிணன்  தன் மனைவியருள் ஒருத்தியான நிலமகளுக்குப் பிறந்த அசுரனை ‘வராக’(பன்றி)ப்பிறப்பு  எடுத்து நிலமகள் மூலம் அழித்த நாள்தான் தீபாவளி என்பதுதான் அறிவுக்குப் பொருந்தாக் கதை.
 நிலத்திற்கும் கிருட்டிணனுக்கும் பிறந்ததாகக் கூறுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! கிருட்டிணன் நாரதருடன் உறவு கொண்டு 60 குழந்தைகள் பிறக்கும் பொழுது, நிலமகளுடன் உறவு கொண்டு ஓர் அசுரன் பிறப்பதில் என்ன வியப்பு என்கிறீர்களா?
  நரகாசுரன்பற்றிய  கதை ஆரியர்களின் அறிவின்மையை நன்கு வெளிப்படுத்துகிறது.
 சமயத்திற்கேற்ப -மதங்களுக்கேற்ற- கதைகள் இருக்கும் பொழுது சிவனிய நெறியினரும் ஒரு கதை சொல்லாமல் இருப்பார்களா? சிவன் மாதொரு பாகனாக – அருத்தநாரீசுவரராக உருவெடுத்த நாள்தான் தீபாவளியாம்.
  உடல் சூட்டைத்தணிக்கும்   போன்ற நல்ல காரணங்களைக் கூறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குச் சொல்லப்படும் கதையும் மிகவும் மட்டமானது. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றியவள் இலக்குமியாம். அவள் கடலில்  ஆமையாக மறைந்து இருந்த திருமாலை மணம் முடிக்க எண்ணினாராம். ஆனால், அசுரர்கள் இலக்குமியை மணம் முடிக்க விரும்பி அவளைத் துரத்தினராம். அவள் உடனே எள் தோட்டத்தில் மறைந்தாளாம். அப்படி ஓடியதால் எள் செடிகளில் இருந்து வெளிப்பட்ட எண்ணெயுடன் அவள் கலந்து விட்டாளாம். (இதனால் அசுரர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.) நாம் எணெ்ணெய் தேய்த்துக் குளித்தால் இலக்குமி நம்முடன் ஐக்கியமாகிவிடுவாளாம். இப்படி அடுக்கடுக்காக இழிவுகளைச்சுமக்கும் கதைகளைத்தான் பரப்பி வருகின்றனர்.
  மீண்டும் இந்த அவலங்களை நாம்   அரங்கேற்ற வேண்டா என்பதால் செய்திக்கு வருவோம்.
 தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் மூட நம்பிக்கைக் கதைகள் அடிப்படையிலா கொண்டாடுகிறார்கள் எனச் சிலர் கேட்கின்றனர்.  இவற்றை எழுதுபவர்கள், வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், நம்பிக்கையில்லாமலா செய்கின்றனர்?  மக்கள் இக்கதைகளை நம்பவில்லை என்றால் இவற்றை அச்சில் இருந்தும்  இணையத்தளங்களில் இருந்தும் நீக்கலாமே! இக்கதைகளைப் பரப்புவோருக்குச் சாவுத்தண்டனை கொடுக்கலாமே! இக்கதைகள் மூலம் ஏதோ ஒருவகையில்  மக்களை அடிமைத்தனத்தில் மூழ்க  வைத்திருக்கும் கும்பல் ஒழிவதற்கு இதுதான் வழி.
 “தீபாவளியைக் கொண்டாட வேண்டா எனக் கூறுவதைவிட,  அதுதொடர்பான  மூடநம்பிக்கை கதைகளைப் பரப்புவதைத் தடை செய்ய வேண்டும்.  எளிமையாகவும் சிக்கனமாகவும் கொண்டாடுமாறு மக்களுக்கு அளிவுறுத்த வேண்டும்.” என்பார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். இறை நம்பிக்கையும் இறை மறுப்பு நம்பிக்கையும் அவரவரைப் பொறுத்தது. ஆனால், அவை  பகுத்தறிவிற்கு முரணாக இருக்கக் கூடாது.  இந்நாளில் ஏற்றப்படும் ஒளி அறியாமை இருளைப் போக்கும் பகுத்தறிவு ஒளியின் குறியீடாக இருக்க வேண்டும்.
  மூட நம்பிக்கை எவ்வடிவில் வந்தாலும் அதை விரட்டியடிக்கும் அறிவுடைமையுடன் வாழ வேண்டும்.
   எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 423)
 அறியாமை இருளைப்போக்கிப் பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 208,  புரட்டாசி 29 –ஐப்பசி 04,   2048 /  அட்டோபர் 15 – 21,  2017

Followers

Blog Archive