Monday, September 3, 2018

வல்லமையாளர் தாலின் வெல்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

 

வல்லமையாளர் தாலின் வெல்க!

  திமுகவின் தலைவர் பொறுப்பேற்றதும் தாலின் ஆற்றிய உரை, அருமையான உரை எனப் பல தரப்பாரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் பாசகவிற்கு எதிராகப் பேசியிருக்கவேண்டா எனச் சிலர் கூறுகின்றனர். கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக் கருத்தும்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே, புதியதாகப் பிறந்தவரின் புதிய உரையைப் பாராட்டலாம்.
  திமுக தன் கொள்கைப் பாதையில் சறுக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் சிலர், திமுக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் துணிவுடன் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு திமுக, தன்மானம், தன்மதிப்பு, மொழிப்பற்று, இனப்பற்று முதலான தன் கொள்கைகளைக் கைவிடுவதைவிடக் கட்சியைக் கலைத்துவிட்டு இதற்கு எதிரான கட்சியில் சேர்ந்து விடலாம். ஆனால் அவ்வாறு கூறும் நிலைக்குத் திமுக ஏன் வந்தது எனச் சிந்திக்க வேண்டும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்(திருவள்ளுவர், குறள் 466)
ஆதலின் செய்ய வேண்டிய பணிகளை ஆற்றாமலும்  செய்யக்கூடாதவற்றைச் செய்தும் திமுகவிற்கு அழிவை உண்டாக்கக் கூடாது.
  பல நேர்வுகளில் அமைதியைக் கடைப்பிடித்து வெல்லும் திறமை உடையவர் தாலின். எனவே, தேவையற்றவற்றைப் பேசுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். சான்றுக்கு ஒன்று. கலைஞர் கருணாநிதிக்கு நல்லடக்கம் செய்ய முதலில் அண்ணா சதுக்கத்தில் இடம் தரவில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனத் ‘தம்பி’ விரும்பினார் எனக் கேட்பது சரியல்ல. தனக்கு அல்லது தன் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட விரும்பி அதற்கு அரசு குறுக்கே நின்றால் பாயலாம். இத்தகைய விருப்பமே “எனக்கு அறிஞர் அண்ணாவிற்கு எழுப்பியது போன்ற நினைவகம் அமைக்கப்பட வேண்டும்” என்பதாகத்தான் பொருள். செயலலிதா பதவியில் இருந்தால்  இசைவு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. திமுக ஆட்சியில் இருந்தால்  செயலலிதாவிற்கு அரசு முறையில் அடக்கம் செய்யவும் இடம் தந்திருக்காது. வழக்கு தொடுத்திருப்பவர்கள் எங்ஙனம் அதற்கு இசைந்திருப்பார்கள்?
  திராவிடக் கட்சிகளின் முதல்வர்கள் மறைவிற்கு இடம் தந்ததுபோல் ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கும் இடம்தர வேண்டும் என்பதுதான் முறை. அந்தக் கண்ணோட்டத்தில்தான்  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் அரச இசைவு தந்துள்ளது. நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளையும் அரசு முறையில் செய்தது. மீண்டும் மீண்டும் இது குறித்துப் பேசுவது மக்களிடையே  எதிரிடையான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. எனவே, இப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே நன்று. இதுபோன்றவற்றில் அமைதி காப்பதே மக்களின் ஆதரவிற்கு வழி வகுக்கும்.
 பதவியில் இல்லாதபொழுது ஒன்று பேசுவதும் பதவியில் இருக்கும்பொழுது வேறொன்றைச் செயல்படுத்துவதுமே அரசியல் வாதிகளின் இலக்கணமாகி விட்டது. அதனை மாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் செய்ய இருப்பதாகக் கூறும் திட்டங்களை இயன்ற வகைகளில் இப்பொழுதே செயல்படுத்தலாம்.
 பேராயக்கட்சியாகிய காங்.ஆட்சியில் பள்ளிகளிலாவது தமிழ் வழிக்கல்வி இருந்தது. திராவிடக்கட்சி ஆட்சிகளால் இப்பொழுது மழலை நிலையிலிருந்தே தமிழ் ஒழிக்கப்பட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்தபின் முழுமையான தமிழ்வழிக்கல்வியைச் செயல்படுத்தப்போவதற்கு முன்னோடியாகத் திமுக கட்சியினர் நடத்தும் பள்ளிகளைத் தமிழ்வழிக் கல்வி நிலையங்களாக மாற்ற ஆவன செய்ய வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட ஒல்லும்வகையெலாம் உதவ வேண்டும்.
  இராசீவு கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்ட எழுவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வாழ்க்கையில் உள்ள இசுலாமியர், பிறர் ஆகியோர் விடுதலைக்காக எப்பொழுதாவது குரல் கொடுத்தால் போதாது. ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வது குறித்த உறுதியை அளிக்க வேண்டும். எல்லா வகையிலும் முயன்று இவர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும். அத்துடன் இவ்வாறு சிறையில் துன்புறுவோர் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் திமுக நிதியிலிருந்து உதவித் தொகை அளிக்க வேண்டும்.
  ஈழ ஏதிலியர் முகாம்களில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வுப்பணிகளில் கட்சி சார்பாக இப்பொழுதே ஈடுபட வேண்டும்.
  தமிழ்ஈழம் மீது நம்பிக்கை இருந்தது என்றால், பரப்புரைக் குழுக்களை அமைத்து, உலகெங்கும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
  இவற்றை எல்லாம் கட்சி சார்பாகவே மேற்கொள்ள இயலும். அவ்வாறு செய்தால் ஆட்சி வந்தால் எளிதில் இவற்றை நிறைவேற்ற இயலும்.
  இறை நம்பிக்கை என்பதும் தமிழர் பண்பாடுதான். ஆனால், தமிழ்நெறிக்கு மாறான மூடநம்பிக்கைகளும் வேள்விகளும் சாமியார் வழிபாடுகளும் அறவே நீக்கப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா வழியில், திருமூலர் கூறியவாறு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”  என்பனவே நெறி எனில் அதனைத் தொண்டர்கள்பின்பற்றச் செய்ய வேண்டும்; மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
  பதவிக்கு வேள்வி, அதற்கு வேள்வி, இதற்கு வேள்வி என அதிமுக போல் திமுகவும் செயல்படுகின்றது. வேள்வியே வாழ்விற்கான வழி என நம்பினால் தெளிவாக அறிவித்து அதைப் பின்பற்றட்டும். அதனைப் பின்பற்றுபவர்கள் திமுகவைப் பின்பற்றட்டும். பகுத்தறிவையும் தன்மானத்தையும் ஏற்காதவர்கள் விலகிக் கொள்ளட்டும்.
 எல்லாத் தேசிய மொழியினரின் வளத்தையும் உறிஞ்சி அவற்றை நசுக்கி இந்தி தலைமை நிலைக்குத் திணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தித் துதிபாடிகள், திமுக இந்திக்கு எதிராகச் செயல்பட்டதால் தமிழினமும் தமிழ்நாடும் பின் தள்ளப்பட்டதாகப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இந்தி, சமற்கிருதத் திணிப்புகளால் தமிழ் முதலான மொழிகளும் மொழி பேசுநரும் ஒடுக்கப்படுகின்றனர் என்னும் உண்மையை ஏற்பதாக இருந்தால் இவற்றிற்கு எதிரான பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். தங்கள் குடும்பத்தினர் இம்மொழிகளுக்கு முதன்மை அளிப்பதற்கும் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இவற்றைக் கற்றுத் தருவதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது இக்கொள்கை உடன்பாடில்லை எனில் வெளிப்படையாக அறிவித்துவிட்டு இவற்றைப் பரப்பும் பணியில் இவர்களும் ஈடுபடலாம்.
  தமிழ்நாட்டில் தமிழ்ப்பெயர்களே காணாமல் போன சூழல்தான் நிலவுகிறது. திமுகவின் தொடக்கக்காலம் போலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கம்போல் தொல்திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டப்படுவதற்கு எடுத்த நடவடிக்கை போலும் மீண்டும் முயல வேண்டும்.
  அன்றாடப்பயன்பாட்டில் தமிழே முழுமையாய் இருக்கப்பாடுபட வேண்டும்.
  புலவர்களை மதிக்கும் அரசுகள் புகழ்பெறும். சங்கக்கால வேந்தர்கள் புலவர்களை மதித்துப்போற்றினர். அவர்கள் காட்டிய நல்வழியில் அரசை நடத்தினர். இப்போதைய அரசுகள் அறிவார்ந்த ஆன்றோர்களை எதிரிகளாக நடத்துகின்றனர். இவ்வாறில்லாமல் அறிஞர்களைப் போற்ற வேண்டும். அறிஞர்களைப் போற்றுவதாகக் கூறிக்கொண்டு புகழ்பாடிகளுக்குப் பதவிகள் வழங்கி மகிழ்ச்சி கொள்ளக் கூடாது.
  கட்சியிலும் கட்சிக்காக உழைக்கும் சொற்பொழிவாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். புறக்கணிக்கப்படுவதாகக் கவலைப்படும் அவர்கள் வருத்தத்தைப் போக்க வேண்டும்.  அதற்காக நரகல் நடைப் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தக் கூடாது. அதனைக் கூட்டத்தைச் சேர்க்கும் வழியாகக் கருதாமல் நல்ல கருத்துகளை விதைப்பதையே கொள்கையாகக் கொள்ள வேண்டும்.
எல்லார்க்கும் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் கிடைத்தாலே ஊழல் பெருமளவு குறையும்.
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்
(பாரதிதாசன், பாண்டியன் பரிசு, இயல் : 56)
என்று முழங்கிக் கொண்டிராமல் செயலாற்றி இதன்மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும். செல்வம் உள்ளவர்க்கே தேர்தலில் வாய்ப்பு என்பதும் ஊழல் பெருகக் காரணமாக இருக்கிறது. வீண் செலவுகளுக்கும் வாக்குகளை வாங்குவதற்கும் வாய்ப்பு இல்லா முறையில் தேர்தல் நடைபெறச் செயலாற்ற வேண்டும்.
  சுருக்கமாகக் கூறுவதாயின், ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் நாட்டு முன்னேற்றத்திற்காகவும் என்னென்ன ஆற்றப்போவதாகப் பரப்புரை மேற்கொள்கிறார்களோ அவற்றையெல்லாம் கட்சிநிலையிலேயே இயன்ற அளவு மேற்கொள்ள வேண்டும்.
புதிய மனிதர் தாலின் செய்வார் என எதிர்பார்ப்போமா?
-இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்


  அகரமுதல

தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்!

   திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (12.08.2049/28.08.2018) தாலினுக்கும் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை முருகனுக்கும் வாழ்த்துகள். துரை முருகன் நகைச்சுவையாகப் பேசுபவர். எனவே, யாரையும் கசக்கிப் பிழியாமல் தன் பேச்சு மூலமே பொருளைத் திரட்டுவார் என எதிர்பார்க்கலாம். இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.
  பன்முகத் திறமை கொண்ட கலைஞர் மு.கருணாநிதிக்குப் பின்னர் மு.க.தாலின், திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்சியைப் பிளவிலிருந்து காப்பாற்றல், தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டச் செய்தல், அதற்காகக் கூட்டணிகளைச் சிறப்பாக அமைத்தல் முதலான பல பொறுப்புகள் அவர் முன் காத்திருக்கின்றன. எனினும்,
 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.     (திருவள்ளுவர், குறள் 624)
என்பதற்கேற்ப அவற்றை வெல்லுமாறு வாழ்த்துகிறோம்.
(சி இலக்குவனார் உரை: தடை ஏற்படும் இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவன் அடையும் துன்பங்கள் துன்பம் அடையும்.)
   திமுகவில் ஏற்பட்ட பெரும்பிளவு என்றால் வைகோ விலகியதால் ஏற்பட்டதைத்தான் சொல்ல வேண்டும். தாலின் முன்நிறுத்தப்படுவதற்காக வைகோ மீது தலைவர் கருணாநிதியைக் கொல்ல முயன்றதாகப் பழி சுமத்தி நீக்கப்பட்டார். அப்பொழுது அவருடன் மாவட்டச் செயலர்கள் ஒன்பதின்மரும் பொதுக்குழு உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவரும் இணைந்தனர். செங்குத்துப்பிளவு  எனப்படும் இப்பிளவு வேறு கட்சிகளில் ஏற்படவில்லை. இருப்பினும் வைகோ, தலைவர்  என்னும் நிலையில் இருந்து இறங்கி மூத்த தலைவர்களுக்கு மதிப்பு அளித்ததால் ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்னும் நிலை ஏற்பட்டது. இதனால் ‘தன்னை முந்து நிறுத்தும் போக்கு’ பிற தலைவர்களிடம் ஏற்பட அதுவே மதிமுக சரிவிற்குக் காரணமாயிற்று. இதனைத் தாலின் பாடமாகக் கொள்ள வேண்டும். மூத்த தலைவர்களை மதித்து அவர்கள் கருத்துகளைக் கேட்க வேண்டும். ஆனால், எச்சூழலிலும் தலைமைப் பொறுப்பிலிருப்பதை மறவாமலும் விட்டுப் பிடிக்கலாம் என எண்ணாமலும் தொடக்கத்திலிருந்தே முழுமையான தலைவனாகச் செயல்பட வேண்டும். தாலின் வல்லமையாளர் என்பதால் பிறரைக் கட்டுக்குள் வைத்திருப்பார் என எதிர்பார்க்கிறோம்.
  தாலினால், தான் விரட்டப்படுவதாக அன்று குமுறிய வைகோதான், இன்று தாலினை முதல்வராக்கியே தீருவேன் என முழங்கி வருகிறார். உலக அளவில் செல்வாக்கு கொண்ட தலைவர் வைகோவையே மாற்றிய பொழுது தமையனான அழகிரியை மாற்ற இயலாதா? இன்றைக்கு அழகிரி திமுகவில் இல்லை. “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்பதற்கேற்ப, அவரைச் சேர்ப்பதால் அணி உருவாகிக் குழப்பம் ஏற்படலாம் எனத் தாலின் கருதுவது சரிதான். ஆனால், வெளியே இருந்து திமுகவிற்கு எதிராகச் செயல்பட்டால் ஏற்படும் வாக்கு இழப்பால் திமுக தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படக் கூடாது. இவரும் இவர் மகனும் பதவி வேண்டா என்று சொன்னாலும் கட்சியில் நுழைந்த பின்னர் இதே நிலைப்பாடு தொடரும் என்றும் சொல்ல இயலாது. எனினும் ஏதேனும் வகையில் அவரைச் சரிக்கட்டுவது நல்லது.
  அழகிரி வெளியே இருக்கும் பொழுது திமுகவிலிருந்து கணிசமானோர் அவர் பின் செல்ல வாய்ப்பே இல்லை. இப்பொழுது அவர் பின் சென்றுவிட்டு அவர் திமுகவில் இணையும் பொழுது இணைவதால் மற்றொரு பன்னீர் அணியாகத்தான இருக்க வேண்டும். அதற்கு நேரடியாக தாலினை ஏற்றுத் திமுகவில் இணைவதே சிறந்தது என்பதே திமுகவில் விலகி இருப்போர் எண்ணம். எனவேதான், முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைந்தனர். எனவே, அழகிரியும் தன் திறமையும் ஆற்றலும் திமுகவிற்குப் பயன்படும் வகையில்  இருக்க வேண்டும்எனச் செயல்பட வேண்டும்.
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.(திருவள்ளுவர், குறள் 529)
நம்மை விட்டுப் பிரிந்த சுற்றத்தார், பிரிந்ததற்கான காரணம் நீங்கினால் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வர். எனவே, அழகிரி பிரிந்ததற்கான காரணத்தை அறிந்து நீக்குக!
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.(திருவள்ளுவர், குறள் 633)
 எதிராக இருப்பவரைப் பிரித்தலும் நம்மிடம் இருப்பவரைப் பேணிக் காத்தலும் நம்மிடம்இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளலுமே தலை மைப் பண்பின் இலக்கணமாகும். இதன்படியே இப்பொழுது தாலின் செயல்படுகிறார். எனவே, முழு அளவில் வள்ளுவர் நெறியைப் பின்பற்றித் திமுகவையும் அதன்மூலம் நாட்டையும் நலம்பெறச் செய்வாராக!
 தாலினை அவர் தந்தையுடன் ஒப்பிடுவது தவறு. தாலின் தாலினாகத்தான் செயல்படவேண்டும். 50 ஆண்டுகள் தலைவராகச் செயல்பட்ட அவரிடமிருந்த நிறைகளை ஈர்த்துக்கொள்ள வேண்டும். அவர் பணிகளில் ஏற்பட்ட குறைகளைக் களைய வேண்டும்.
  பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், கலைஞர் மு.கருணாநிதி முதலான திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படிக்க வேண்டும். கலைஞர் குடும்பத்தில் ஆழமான தமிழியல் சிந்தனையை வெளிப்படுத்தும் பேச்சாளர் இல்லை என்னும் குறையைப் போக்க வேண்டும்.
  உறுப்பினர், இளைஞர் திமுக அமைப்பாளர், வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், இளைஞர் அணி அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், துணைப்பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் எனப் பல வேறு நிலைகளில் பட்டறிவு பெற்றுள்ள தாலின் தலைமைப்பதவியிலும் திறம்படச் செயலாற்றுவார். சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சித்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், துணை முதல்வர் என அரசு நிலையில் அவர் பெற்றுள்ள பட்டறிவும் அவருக்குக் கை கொடுக்கும். எனவே, தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டினருக்கும் தொண்டாற்றித் தலைவர் மு.க.தாலின் வாழ்க என  வாழ்த்துகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Sunday, September 2, 2018

தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்



தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என
முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்

  கல்விப்பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப்பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே  மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றி மக்களிடையே தமிழைப்பரப்பிய செம்மல் இலக்குவனார்.                       படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப் பாவியம் படைத்த பாவலர் இலக்குவனார். பயின்று கொண்டே  தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய தொல்காப்பிய அறிஞர் இலக்குவனார். குறள்நெறி, சங்க இலக்கியப் பரப்புரைப் பணிகளை இளமையில் தொடங்கி. வாணாள் இறுதி வரை அவற்றைக் கைவிடாமல் இருந்த சங்கத்தமிழ்க் காவலர் இலக்குவனார். சொற்பொழிவுகள், நூல்கள், கட்டுரைகள் மூலம் மட்டுமல்லாமல் தமிழ் முழக்கங்கள் மூலமும் தமிழ் உணர்ச்சியை மக்களிடையே பரப்பிய  தமிழ்ச்சான்றோர் இலக்குவனார்.
  பேராசிரியர் சி.இலக்குவனார் உருவாக்கித் தமிழ் உலகில்  உலவ விட்ட முழக்கங்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இம்முழக்கங்களுடன் பாரதியார், பாரதிதாசன் பாடல் வரிகளையும் முழக்கங்களாகப் பயன்படுத்தி மக்களுக்குத் தமிழ் உணர்வு ஊட்டுவார் இலக்குவனார். அவற்றுள் ஏறத்தாழ 70 முழக்கங்களை ‘இதழியல் அறிஞர் இலக்குவனார்’ என்னும் கட்டுரையில் அளித்துள்ளேன். இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே நாம் காணலாம்.
தனித்தமிழ்க்காப்பு முழக்கங்கள்
  தமிழில் பிற மொழிச்சொற்களையும் பிற மொழி எழுத்துகளையும் கலந்ததால்தான் இந்திய நிலப்பரப்பு முழுமையும் இருந்திருக்க வேண்டிய தமிழ் எல்லை சுருங்கித் தமிழ்நாட்டளவில் இருக்கிறது என்பதைப் பல இடங்களில் இலக்குவனார் உணர்த்தியுள்ளார். இவ்வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் நாமும் இப்பொழுதும் தமிழ்க்கொலை புரிவது கண்டு உள்ளம் நைந்தார் அவர். கட்டுரைகள், நூல்கள் முதலியவற்றை முழுமையாகப் படிக்க இயலாதவர்களுக்கும் தமிழ் உணர்வை உள்ளத்தில் பதிக்க விரும்பினார். எனவே, தாம் நடத்திய இதழ்களில் பக்கங்களின் இறுதியில் தமிழ் முழக்கங்கள் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டார். இது நல்ல பயனை அளித்தது. இவரது முழக்க வரிகள் படைப்பாளர்களின் கவிதைகளிலும் சொற்பொழிவுகளிலும் இடம் பெறலாயிற்று.

தமிழ்வழிக்கல்விக்கான முழக்கங்கள்

தமிழ்வழிக்கல்வியை நாளும் வலியுறுத்திய நற்றமிழறிஞர் இலக்குவனார். ‘பயிற்சிமொழிக்காவலர்’ என்று அதனால்தான் அவருக்குப் பட்டமளித்துச் சிறப்பித்தனர். தமிழ்ப்பயிற்சி மொழிக்காகத் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு ஏற்பாடுசெய்து அதனால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படிச் சிறை செய்யப்பட்டவர் தமிழ்ப்போராளி இலக்குவனார்.
  பயிற்சி மொழியைத் தெரிவு செய்யும் உரிமையை மாணவர்க்கு வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இலக்குவனார். தமிழ் மட்டுமே பயிற்சி  மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழிகள் மொழிப்பாடங்களாகக் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.  எனவே,
பயிற்று மொழியில் உரிமை பாழ்படுத்தும் கல்வியை!
என்னும் முழக்கத்தைப்பரப்பித் தமிழ்வழிக்கல்விக்கான உணர்வை ஊட்டினார்.
தாய்மொழியில் பயிலாததால்தான் நம் நாட்டில் நோபள் பரிசு பெறும் அறிஞர்கள், அறிவியலறிஞர்கள், சிறந்த தலைவர்கள் உருவாகவில்லை என்று வருத்தப்பட்டு உரைத்தார். எனவே,
பைந்தமிழைப் பல்கலைக்கழகப் பாடமொழியாக்குக!
என வலியுறுத்தினார்.
  மேற்குறித்த இரண்டும் அரசிற்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்துவதற்காக மக்களிடையே பரப்பியவை. மக்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழிக்கல்வியில் சேர்க்க வேண்டும்; அதற்கு மாணாக்கர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தங்களைத் தமிழ் வழிக்கல்வியில் சேர்க்குமாறு வலியுறுத்த வேண்டும் என்பதற்காகப் பின்வரும் முழக்கத்தைப் பரப்பினார்.
தாய்மொழியில் பயின்று தக்கோராக வாழ்மின்!
தக்கவராக வாழ அயல்மொழிக்கல்வி உதவாது. தாய்மொழிக்கல்வியே உதவும், நமக்குத் தமிழ்வழிக்கல்வியே உதவும் என இதன் மூலம் உணர்த்தினார்.
அப்பொழுது தமிழ்வழிக்கல்வி பள்ளிகளில்  இருந்தது.கல்லூரியில்தான் இல்லாமல் இருந்தது. கோயம்புத்தூரில் மட்டும் தமிழ்வழிப்பட்டப்பிரிவைத் தொடங்கிய அரசாங்கம், இலக்குவனாரின் முயற்சியால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு நாடு முழுவதும் கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியது. அங்கே படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்தது.
  ஆனாலும், கல்வி வணிமாக மாறி,  அரசே இதனை ஊக்குவிக்கத் தொடங்கிய பின்னர் இலக்குவனார்போன்ற  அரசிற்கு எடுத்துரைக்கும் துணிவான அறிஞர் இன்று இல்லாமையால் நாம் பள்ளிக் கல்வியிலேயே தமிழை இழந்து கொண்டுள்ளோம்.

பயன்பாட்டுத் தமிழ்
  பயன்பாட்டு மொழியாகத் தமிழ் எல்லாத் துறைகளிலும் சிறப்புற இருத்தல் வேண்டும் என்பதைத் தமிழ்ப்போராளி இலக்குவனார் எந்நாளும் வலியுறுத்தி வந்தார். எழுதுவதுபோல் பேசினால்தான் மொழி வாழும்; பேசுவதுபோல் எழுதினால் மொழி அழியும் என்பது அறிஞர்கள் கண்டறிந்து உணர்த்திய உண்மை. இதனைப் பேராசிரியர் இலக்குவனாரும் வலியுறுத்தினார். தமிழ்க்கடல் மறைமலையடிகள் வழியில் தனித்தமிழ் அறிஞராகத் திகழ்ந்த அறிஞர் இலக்குவனார் மக்களிடையேயும் பிறமொழிக் கலப்பின்றி எழுதவும் பேசவும் வலியுறுத்தினார்.
தமிழிலே உரையாடுக! தமிழிலே எழுதுக!
தமிழிலே பெயர்களிடுக!
என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்ச் சொற்களிருக்க வேற்றுச் சொற்களை விரும்புவதேன்?
என வினா தொடுத்து உணர்வு ஊட்டினார்.
அயல்மொழிச் சொற்கலப்பு அழிக்கும் தமிழை!
என்னும் வரலாற்று உண்மையை மக்கள் மனங்களில் பதியவைத்தார்.
  தமிழ் வீட்டு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் திகழ வேண்டும் என வலியுறுத்தினார். அன்றாடப் பயன்பாட்டில், உரையாடலில், கல்வியில், வழிபாட்டில், இசையில், கலைகளில் என எங்கும் எதிலும் தமிழே நம் பயன்பாட்டு மொழியாக இருக்கவேண்டும் என வற்புறுத்தினார்.
  தமிழ் பயன்பாட்டிலிருந்து நீங்கிய இடங்களில் எல்லாம் தமிழ் மொழி சிதைந்து, புது மொழி தோன்றி  தமிழ். பயன்பாட்டுப் பரப்பில் குறைந்து போனதால் அங்கெல்லாம் தமிழர்கள் மறைந்தைமையச் சுட்டிக்காட்டினார். எனவே,
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு
என்றார். இதுபோல் தமிழ் மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து பொருளியலில் உயர்ந்தால்தான் தமிழ் மக்களையும் அவர்கள் பேசும் தமிழையும் உலக மக்கள் மதிப்பர். எனவே, அறிவில் உயர்ந்து வினையில் சிறந்து தமிழர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழை வாழச் செய்ய வேண்டும் என்றார். எனவே,
 தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு என்றார்.
பின்னர்  இரு முழக்கங்களையும் இணைத்து ஒரு முழக்கமாக்கினார்.
  கிரந்தப் பயன்பாடு கூடாது, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பனவும் கூடா .இந்தித்திணிப்பு கூடாது.  ஆங்கில முதன்மை அகற்றப்பட வேண்டும் என்பனபோல் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்க்காப்பிற்காகவும் பல முழக்கங்களை உருவாக்கிப் பரப்பியவர் தமிழ்நலப்போராளி இலக்குவனார். அவரது நினைவு நாளில் நாம் இவற்றைக் கடைப்பிடித்துத் தமிழைக்காத்து  நன் மாந்தர்களாகத் திகழ்வோம்
– இலக்குவனார் திருவள்ளுவன்
[03.09.1973 தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் மறைந்த நாள். அவர் நினைவாக இக்கட்டுரை]
– தமிழ் தினசரி
dhinasari.com
https://dhinasari.com/literature/articles-literature/53692-tamil-scholar-ilakkuvanar-insisted-to-learn-speak-write-in-tamil.html

Followers

Blog Archive