Friday, June 5, 2020

இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா? – இலக்குவனார் திருவள்ளுவன்


இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க

வெட்கப்பட வேண்டாவா?


2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் செயற்பட்டுவந்தது. 2008 மே 19 முதல் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தனித்துச் செயல்பட்டு வருகிறது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட பொழுது அதன் இயக்குநரே இதன் இயக்குநராக இருந்தார். சென்னைக்கு இவ்வலுவலகம் மாற்றப்பட்ட பொழுது முனைவர் ப.மருதநாயகம் இதன் பொறுப்பு அலுவலராக அமர்த்தப்பட்டுச் செயல்பட்டு வந்தார்.
தமிழின் செம்மொழி அறிந்தேற்பிற்குப் பெரிதும் துணையாக இருந்த முனைவர் க . இராமசாமி, இ.மொ.ந.நிறுவனப்பணியில் ஓய்வு பெற்றதும், 29.09.2008 அன்று செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவராக ஒப்பந்தப் பணியில் சேர்ந்தார்.
பொறுப்பு அலுவலர்கள் இருந்த பொழுது தனியாக இயக்குநர் பதவி இன்மை பெரிதாகக் குறையாகத் தெரியவில்லை. எனினும் தனித்து இயங்குவதால் இங்கேயே செயல்படும் தனி இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட நாளிலிருந்து மத்திய அரசு அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பிலேயே இப்பதவி நிரப்பப்பட்டது- அவர்களில் ஒருவர்கூடத் தமிழ்த் துறையினர் அல்லர். வெளியூரில் இருந்த அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பில்கூட இயக்குநர் பதவி இருந்தது. இதனால் தலைமை இல்லா அமைப்பாக இந்நிறுவனம் தள்ளாடி வந்தது.
செம்மொழி அறிந்தேற்பிக்குக் காரணமாக இருந்த தி.மு.க. தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த பொழுதும் அவ்வாறு அறிந்தேற்பு ஆணையை வெளியிட்ட பேராயக்(காங்கிரசு)கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுதும் இயக்குநர் பதவியில் முழுப்பொறுப்பில் யாரும் அமர்த்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இயக்குநர் பதவியை நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இங்குள்ளவர்களின் மொட்டை மடல்களால் நிரப்பப்படாமல் போயின. பா.ச.க.வும் தன் முந்தைய ஆட்சியிலும் இப்போதைய ஆட்சியில் நேற்றுவரையும் இப்பதவியை நிரப்பாமல்தான் இருந்துள்ளது. எனினும் இப்பொழுது இயக்குநர் பதவியில் தமிழாய்ந்த தமிழ்மகனை அமர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இயக்குநராக அமர்த்தப்படும் முனைவர் இரா.சந்திரசேகரன் இரு முனைவர் பட்டங்களையும் ஐந்து முதுநிலைப்பட்டங்களையும் பெற்றவர். மேலும், 18 ஆய்வுநூல்களையும் 13பாடநூல்களையும் எழுதி 92 ஆய்வுக்கட்டுரைகளையும் அளித்துள்ளார். அத்துடன்   குடியரசுத் தலைவர் வழங்கும்  இளம் அறிஞர் விருதை 2009 – 2010-ம் ஆண்டில் பெற்றவர். இவை இவரின் தளராக் கல்வி ஆர்வத்தையும் தமிழ் ஆராய்ச்சி ஈடுபாட்டையும் புலப்படுத்துகின்றன. எனவே, மகிழ்ச்சியான அறிவிப்புதான்.
துறை அமைச்சரான மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர் இரமேசு பொக்கிரியால் என்னும் நிசாங்கன் (நிசாங்கன் அவர் புனை பெயர் / Dr Ramesh Pokhriyal Nishank)  பணியமர்த்தத் தகவலை  உச்ச நடிகர் இரசினிக்குத் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக இரசினி அவருக்கு நன்றி மடல் அனுப்பியுள்ளார். அதில், “தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான உங்கள் முயற்சிகள், ஒப்படைப்பிற்கு நன்றி” எனப் பாராட்டியுள்ளார். இந்தப் பணியமர்த்தத்தில் இரசினியின் பங்களிப்பு இருந்து அவர் நன்றி தெரிவித்திருந்தால் அது தனிச்செய்தி. எப்படியும் இப்பொழுதாவது பணி நிரப்பப்பட்டதற்கு நாமும் இரசினிக்கு நன்றி  சொல்லலாம். ஆனால், காலங்கடந்து பதவியிடத்தை நிரப்புவதில், தமிழ் மேம்பாட்டு முயற்சி என்ன அடங்கியிருக்கிறது? இதில் என்ன தமிழ் மேம்பாட்டிற்கான ஒப்படைப்பு உணர்வு உள்ளது.
இதற்கு அமைச்சர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? “இது வாலாயமான துறையின் பணிதான். இத்தனை  ஆண்டுகளாக இந்தப்பதவி நிரப்பப்படாமல் இருந்த வருத்தம் நீங்கியதில் மகிழ்ச்சிதான். இயக்குநரின் தமிழ் மேம்பாட்டுப்பணிகளுக்கு மத்திய அரசு முழுஒத்துழைப்பு நல்கும்” எனத் தெரிவித்திருக்க வேண்டும்.
மாறாக அவர், “தமிழ்மொழியை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் மத்தியஅரசு பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்’ என்று குறித்துள்ளார். காலங்கடந்து பணி யிடத்தை  நிரப்புவதில் என்ன அக்கறை?
மத்திய ஆட்சியாளர்கள் தமிழ் இலக்கிய மேற்கோள்களை உலகு அறிய தெரிவிக்கின்றார்கள். மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதன் மூலம் தமிழ் முதலான தேசிய மொழிகளை அழிக்கும் கொடுஞ்செயல் நிற்கவில்லையே.
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரே! நீங்கள் இந்தி மொழிப்புலவராகவும் அறிஞராகவும் திகழ்கிறீர்கள். உண்மையான அறிஞர் பிற மொழிகளையும் மதிப்பர். ஆகவே, நீங்கள், தேர்தல் விளம்பர நோக்கில் இல்லாமல் உயர்தனிச்செம்மொழியாகவும் இன்றைய இந்தியத் துணைக்கண்டம் முழுமையும்  ஒரு காலம் வழங்கிய மொழியாகவும் உள்ள செம்மொழித் தமிழை – செந்தமிழை – செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் மூலமேனும் வளர்க்க உதவுங்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சான்றிதழ்ப் படிப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை வாய்ப்பு உள்ளவாறு தமிழ்த் துறைகளைத் தொடங்குங்கள்.
உலகப்பல்கலைக்கழகம் ஒவ்வொன்றிலும் தமிழ்ச்சான்றிதழ் வகுப்பும் தமிழ்ப்பட்டயம் வகுப்பும் இருக்கும் வகையில் தமிழ்த்துறையைத் தொடங்குங்கள். (ஒருவருக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கும் ஆய்வு நிலையிலான இருக்கைகள் வேண்டா.)
அனைத்து நாட்டுத் தலைநகரங்களிலும் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் தொடக்கநிலை முதல் ஆய்வு நிலை கற்பிக்க நடவடிக்கை எடுங்கள்.
செந்தமிழ்க்கல்வி நிலையங்களுக்கும் செந்தமிழ் இதழ்களுக்கும் முழுப் பொருளுதவி அளியுங்கள்.
செந்தமிழில் உருவாக்கும்  நாடகம், திரைப்படம், ஆவணப்படங்களுக்கும் முழுப் பொருளுதவி நல்குங்கள்.
நிலுவையில் உள்ள செம்மொழி விருதுகளை மட்டுமல்லாமல் வழங்கப்படா ஆண்டுகளுக்குரிய செம்மொழி விருதுகளையும் வழங்குங்கள்.
செம்மொழி அறிஞர்களுக்கான வாழ்நாள் முழுமையும் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் இதுவரை தமிழ்மொழிக்கு வழங்கப்படவில்லை. செம்மொழி அறிந்தேற்வு வழங்கிய ஆண்டிலிருந்து இவற்றை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை உடனே வழங்கச்செய்யுங்கள்.
தமிழக அரசியல் விளையாட்டுகளில் தலைவர் பதவியும் சிக்கித் தவிப்பதால், இந்நிறுவனத்தின் தலைவராக உள்ள முதல்வரை இதன் நெறியாளராக மாற்றித் தலைவராகத் தமிழறிஞர்கள் அமர்த்தப்படுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
முதல் இயக்குநர் பல கனவுகளுடன் பணியில் சேருவார். அவர் கனவுகள் நனவாக எல்லாவகை ஒத்துழைப்பையும் தாருங்கள்.
எல்லா அமைச்சுத் துறைகளிலும் தமிழ் அறிந்த ஒருவரையேனும் பணியமர்த்துங்கள்.
எல்லாத் தூதரகங்களிலும் தமிழறிந்த ஒரு தமிழரையேனும் பணி யமர்த்துங்கள்.
தமிழர் பெரும்பான்மை வாழும் நாடுகளில் தமிழர்களைத் தூதர்களாகவும் தூதரக அதிகாரிகளாகவும் அமர்த்த ஆவன செய்யுங்கள்.
மக்கள் ஆதரவு உள்ள நடிகர் உங்களைப் பாராட்டுவதால் மட்டும் தேர்தலில் வாகைசூட இயலாது. தமிழை எல்லா நிலைகளிலும் பரப்பித் தமிழ் மக்கள் உள்ளங்களை ஆளுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல              

Friday, May 29, 2020

தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை

ஓர் ஏமாற்று வேலை

 தமிழில் படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக 30.09.2010 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையைக் கண்டு தவறாக நம்பியதுபோல் இப்போது அத் தொடர்பில வெளிவரும் திருத்த ஆணை குறித்தும் நாம் நம்பி ஏமாறுகிறோம்.
இன ஒதுக்கீட்டைச் சுழற்சி முறையில் பின்பற்ற அரசு ஆணை உள்ளது. தமிழ்வழியில் படித்தோருக்கான முன்னுரிமையை இச்சுழற்சி முறையில் திணித்துள்ளனர். எனவே, உரிய முன்னுரிமை என்பது இல்லாமல் போகிறது. 20 விழுக்காட்டு முன்னுரிமையை முதலில் வழங்கிவிட்டு, எஞ்சிய பணியிடங்களுக்கு ஒதுக்கீட்டுச் சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும்.
 20 விழுக்காட்டு முன்னுரிமையில் இன ஒதுக்கீட்டுச் சுழற்சி முறையைத் தனியே பின்பற்றும் வகையில் ஆணை இருக்க வேண்டும்.
இப்போதைய ஆணையில் தமிழ் வழி பயின்றவர்களுக்கு 18 ஆவது இடம் பிற்பட்டவகுப்பைச்சேர்ந்தவருக்கும் 19 இடம் மிகவும் பிற்பட்டவர் அல்லது சீர் மரபினருக்கும் வழங்கப்பெறும். அஃதாவது 20 இடங்களுக்குப் பணியாளர்களை நிரப்புவதாக இருந்தால் 20 விழுக்காடு என்ற அளவில் 4 பேருக்குப் பணி வழங்கப்படமாட்டாது. இனச்சுழற்சி முறையில் இதைத் திணித்ததால் இருவருக்கு மட்டுமே வழங்கப்படும். இது தமிழில் படித்தவர்களுக்கு வழங்கும் நீதியாகுமா? தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி விட்டு அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டில் இனச் சுழற்சி முறையைப் பின்பற்றும் வகையில் ஆணை பிறப்பித்திருந்தால்,  தமிழில் படித்தவர்க்கு முன்னுரிமை வழங்கியதாகவும் இருக்கும். இனச்சுழற்சி முறையைப் பின்பற்றியதாகவும் இருக்கும்.
வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணைக்கிணங்க 200 பணியிடங்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்தால், பட்டியல் இனத்தவருக்கு 150 ஆவது இடமும் பட்டியல் சாதியில் அருந்ததியருக்கு 166 இடமும் இசுலாமியருக்கு 188 ஆவது இடமும் வழங்கப்பெறும். இஃது எங்ஙனம் முன்னுரிமை அளிப்பதாக இருக்கும்?
இதை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் தமிழில் படித்தோருக்கான வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கான (PSTM) ஒதுக்கீட்டு முறை வருமாறு. நான் ஆங்கிலத்தில் உள்ளதையும் தமிழ்ப்படுத்தித்தான் வெளியிடுவேன். எனினும் அடிப்படை ஆணைகளைக்கூடத் தமிழில் வெளியிடாத அரசின் நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? எனவே, அவ்வாறே தருகிறேன்.
This image has an empty alt attribute; its file name is attavanai-thamizhil-padithoar-velai-munnurimai.png
தமிழில் படித்தவர்களுக்கு 20விழுக்காடு மட்டும் பணி வாய்ப்பு வழங்குவது என்பதே அநீதியான ஆணை. தமிழில் படித்தவர்கள் பெரும்பான்மையராக இருக்கும் பொழுது, பெரும்பான்மையருக்குக் குறைவான பணியிடங்களை ஒதுக்குவது அநீதியல்லவா? அதிலும் குறைபாடு வைத்தால் அது பெரும் அநீதியல்லவா?
முன்னுரிமை என்றால் பிறரை விட முதலிடம் தருவதுதானே. அப்படியானால் 20 விழுக்காடுப் பணியிடங்களை முதலில் தமிழில் படித்தோருக்கு வழங்கிவிட்டு எஞ்சியதை இன ஒதுக்கீட்டு முறையில் வழங்க வேண்டியதுதானே!
இதிலும், இனஒதுக்கீடு வேண்டுமெனில் அதற்கேற்ப ஆணை வழங்கலாமே. அஃதாவது பின்வருமாறு 20 விழுக்காட்டுப் பணியிடங்களில் இனச் சுழற்சி முறை வழங்கி விட்டு, எஞ்சிய 80 விழுக்காட்டு இடங்களுக்கு வழக்கமான இனச் சுழற்சி முறையைக் கையாளலாமே.
முதல் 20 இடங்களில்
பொது 6 (2,5,8,11,14,20)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 5 (1, 6 , 9, 13, 16)
மிகவும் பி.வ. / சீர் மரபினர் 4 (3, 7, 12)
பட்டியல் சாதியினர் 2 (10, 17)
பட்டியல் சாதியினர் – அருந்ததியர் 1 (15)
பட்டியல் இனத்தவர் 1 (18)
பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் 1 (19)
என்ற முறையில் முன்னுரிமை ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன் பின் எஞ்சிய இடங்களுக்கு இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.
ஐந்திற்கும் குறைவான இடமாக இருப்பின் அந்த ஓர் இடத்தையும் தமிழில் படித்தோருக்கு வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தால்தானே உண்மையான முன்னுரிமை வழங்குவதாக இருக்கும்?
தேர்வாணைய முடிவுகளைப் பார்க்கும் பொழுது 100 பணியிடங்கள் அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்பொழுது தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளமை பாராட்டிற்குரியதுதான். ஆனால்,   இரண்டாம் நிலைப் பணி முதல் நிலைப்பணிகளில் 100 அளவில் பணியிடங்கள் இருந்தாலும் பதவி வாரியாகப் பார்க்கும் பொழுது அவற்றின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையால் நிரப்பியதாகத் தெரியவில்லை. எனவேதான் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் முதலான முதல் நிலைப்பணிகளில் நிரப்பப்பட்ட விவரங்களைத் தெரிவிக்க வில்லை போலும்.
தமிழ் வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்னும் அரசாணை ஒரு  வகையில் தமிழ் வழியில் படித்தவர்களைத் தாழ்த்துவதாக உள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களைத் துணை ஆட்சியர்,  துணைப்பதிவாளர், காவல்துணைக் கண்காணிப்பாளர் முதலான உயர் பதவிகளில் அமர்த்தி விட்டு விவரம் தெரிவித்தால் தமிழ் வழியில் படித்தவர்களைப் பெருமைப் படுத்துவதாக அமைந்திருக்கும்.   மாறாகப் போலி முன்னுரிமை ஆணை பிறப்பித்த உடன் தி.மு.க. ஆட்சியில் இழிவு படுத்தும் வகையில் கடை நிலை ஊழியரைப் போல உள்ள ஏணறையாகிய மின் ஏணி(லிப்ட்) இயக்கும் வேலையும் பதிவுரு எழுத்தர் பதவியும் தந்து விளம்பரப்படுத்தினார்கள அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். எனினும் தமிழில் படித்தால் கடை நிலைப் பணிதான் கிடைக்கும் என்று சொல்வது  தமிழ் வழியில் படித்தவர்களை இழிவுபடுத்துவது ஆகாதா?  மேலும் 20%  தமிழில் படித்தவர்களுக்கு என்று சொல்லி 80% ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது எவ்வாறு தமிழ் வழியாகப் படிக்க மாணவர்களைத் தூண்டும்? வெற்று விளம்பரம் மூலம் நன்மை அடையும் மோசடியான முயற்சிதானே இது.
எனவே இப்போதைய அரசாவது  தமிழில் படித்தவர்களுக்கும் தமிழைப் படித்தவர்களுக்கும் 80% வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றுவதை நிறுத்தி  விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளத் தமிழ் வழிப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறாயின் இயல்பாகவே அனைவரும் தமிழ்வழிக்கல்வியையே நாடுவர்.
தமிழில் முன்னுரிமை அளிப்பதாக அமைந்த ஆட்சியாளர்களின் பெருமைமிகு உரைகள், வழக்ககுள் முதலியவற்றையெல்லாம் குறிப்பிட்டால் கட்டுரை நீளும். எனவே, அண்மைய நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.
பள்ளிக்கல்வியை ஆங்கில வழியில் முடித்துவிட்டுப் பணித்தகுதிக்கான கல்வியைத் தமிழ் வழியில் முடித்தவர்களுக்குப் பணி வழங்குவதா எனப் பொங்கி எழுந்து இப்பொழுது திருத்த ஆணை வெளியிடுகின்றனர். எதையும் ஆய்ந்து பார்த்துக் குரல் கொடுக்கும் மரு.இராமதாசும் வழக்கு ஒன்றினனைப் பார்த்து இவ்வாறு முன்னரே தவறான குரல் கொடுத்திருந்தார்.
இவ்வாறு ஆணை பிறப்பித்தால் கல்லூரிக்கல்வியைத் தமிழ்வழியில் படித்தவர்களைப் புறக்கணிப்பதாக அமையாதா? பள்ளிக்கல்வி முதல் தகுதிக்கல்வி வரை தமிழில் படித்தவர்கள், வேண்டிய எண்ணிக்கையில் கிடைக்காத பொழுது அடுத்த நிலையில் இதில் ஒரு பகுதியைத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கினால் என்ன தவறு? பட்ட வகுப்புகளிலும் பட்ட மேற்படிப்புகளிலும் தொழிற் கல்விகளிலும் தமிழே இல்லாத துறைகள் உள்ளன. இத்தகைய சூழலில் மேனிலைக்கல்வி வரை தமிழில் பயின்றவர்களுக்குப் பணி முன்னுரிமை வழங்குவதுதானே இயல்பான அறமாகும். தமிழ்வழிக்கல்வியே இல்லாத கல்வித்தகுதியினால் வாய்ப்புள்ளவரை தமிழில் பயின்றவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது அல்லவா?
எனினும் இதற்காக நாம் முந்தைய இன்றைய ஆட்சியாளர்களை முழுமையாகக் குறை கூற இயலவில்லை. ஏனெனில் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணமும். ஆனால், தக்க முறையில் வழிகாட்ட வேண்டிய உயர் அதிகாரிகள், தவறான ஆணையைப் பிறப்பித்து மக்களுக்குச் சார்பான அரசின் எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.
எனவே, அரசு மீண்டும் தமிழ்வழிக்கல்வி பயின்றவர்களுக்கான பணிவாய்ப்பு முன்னுரிமை வழங்கும் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும். விழுக்காட்டு எண்ணிக்கையை மாணாக்கர் எண்ணிக்கைக்கிணங்க 80 விழுக்காடு வழங்குவதே சிறப்பு என்பதையும் உணர வேண்டும்.
அரசுப்பணிகளில் தமிழ்ப்புலவர்களுக்கும் தமிழ் வழிப் பயின்றவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனப் போராடிச்சிறை சென்ற செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் கனவு சிறிதளவே நனவாகியுள்ளது. அவ்வாறு இல்லாமல் முழுமையாக நனவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழில் படித்தால் வேலையில் முன்னுரிமை என்னும் அறிவிப்பைக் கேட்டுத் துள்ளிக்குதித்த அரசியல் கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் உண்மையைப் புரிந்து அதற்குக் குரல் கொடுத்துத் தமிழ் வழிப் பயின்றவர்களைச் சிறப்பிக்க வேண்டும்.
தமிழ்வழி பயின்றவர்களுக்கு முன்னுரிமை என்ற நிலை எழாத வகையில் தமிழ் நாட்டில் கல்வி எனில் தமிழ்வழிக்கல்விதான் என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
(திருவள்ளுவர், குறள் 670)
ஆதலின் வினைத்திட்பத்துடன் செயல்பட்டுத் தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை உறுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல


Friday, April 24, 2020

கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு! இவரும் தவறு! – இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துக் கதிர் 1.20

அவரும் தவறு! இவரும் தவறு!

மகுடைத் தொற்றுத் தடுப்பு தொடர்பாக  அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் காணுரை மூலமாக நடத்த வேண்டும்  என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.தாலின் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். பிற எதிர்க்கட்சியினரும் அவ்வாறுதான் வேண்டிவருகின்றனர். ஆனால் முதல்வர் தேவையில்லை என மறுத்து வருகிறார். அதற்காக அவரும் பிற அமைச்சர்களும் லும் காரணங்கள் சரியில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் ஆட்சியில் இருந்தவர். சட்டமன்ற உறுப்பினர், மாநகரத் தலைவர், அமைச்சர், துணை முதல்வர்,  எனப் பல பொறுப்புகளை வகித்தவர். இப்பொழுதும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையிலும் மக்கள் சார்பாளராகச் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியினரிடமும் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசு முடிவெடுத்துச் செயல்படுத்தலாம். ஆனால், மக்களின் குறைகளை எதிர்க்கட்சியினர் மூலமும் அறிந்து குறைகளைவதிலும் சிறப்பாகச் செயல்படுவதிலும் என்ன தவறு? மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே அரசியல் நடத்தும் போக்கில் இருந்து மாறுபட்டு எதிர்க்கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும்போக்கைப் பல நேரங்களில் வெளியிட்டுள்ளார். அவ்வாறிருக்க மக்கள் நலன் கருதி, எதிர்க்கட்சியினரைக் கலந்து பேசமறுப்பது தவறுதான்.
ஆட்சிப்பொறுப்பில் உள்ள முதல்வருக்கு அதிகாரிகளையும் தொடர்புடைய வல்லுநர்களையும் சந்தித்துப் பேசுவது கடமைதான். அதைப்பொதுக்கூட்டம் போல் கருதி எதிர்ப்பதும் எதிர்த்து வீணுரை பேசுவதும் தவறு. முதல்வர் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டாவிட்டாலும் எதிர்க்கட்சித்தலைவர் தம் தோழமைக்கட்சித் தலைவர்களைக் கூட்டினார். ஆனால் அதன் பயன் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு அரசைக் கேள்வி கேட்பதைக் குறைத்து விட்டு மக்கள் அரசைக் கேள்விகேட்கும் வண்ணம் மாற்ற வேண்டும். மகுடைத் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கு ஆளானவர்களை விரைவில் மீட்கவும் நிறைவான நல்வாழ்விற்கும் ஒல்லும் வகை தொண்டாற்றிட வேண்டும்.
மகுடைத்தொற்றுக்கு(கொரானாவிற்கு) எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என நாளும் பொழுதும் சொல்லும் அரசு தானே முன்னெடுத்துக்காட்டாக இருக்க வேண்டாவா? எனவே, பிறரை – அதுவும் ஆட்சிப்பட்டறிவு உள்ள எதிர்க்கட்சித் தலைவரையும் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் தலைவர்களையும் – சந்திப்பதை இழுக்காக எண்ணாமல் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் அவர்களைக் கலந்து பேசி இணைந்து பணியாற்றினால் அவருக்குப் பெருமைதான் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், பிறரின் இடித்துரைகள் கசப்பாக, ஏற்றகத்தக்கனவாக இல்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 389)
இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, February 19, 2020

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்!

இந்தியத் திருநாட்டின் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. என்றாலும் நமக்குரிய உரிமைகளை இழந்துதான் நாம் வாழ்கிறோம். இந்தியர் என்ற அடையாளம் தமிழர் என்ற அடையாளத்தைக் காக்கத்தான் இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கு இருக்கக் கூடாது. ஆனால், எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து வாழும் வகையி்ல்தான் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.
தமிழ் மாநிலம் அமைக்கப்பட்ட பொழுதே நில உரிமைகளை இழந்துதானே ஏற்றுக் கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நாம் உரிமைகளை இழப்பதும் தொடர் வரலாறாகத்தானே உள்ளது. உரிமைகளைக் காக்க வேண்டிய அரசுகள் உரிமைகளைப் பறிக்கும் பொழுது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனச் சேர்த்துக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள் மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய், மும்பை என மாறியதும் மும்பை என்று அழைக்ககும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை. (மெட்ராசு என்று திரைப்படமும் வந்துள்ளது. தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.) அரசாணையையும் மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப் பெருமைபட என்ன இருக்கிறது?
  மத்திய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க மத்திய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின் கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க மத்திய அரசு முயல்வது இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையில் அல்லல் பட்டு வரும் அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொன்னாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை.
பிற மாநில மக்கள்போல் நம் மாநில உயர் நீதி மன்றத்தை நாம் மாநிலத்தின் பெயரில் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று அழைக்கும் உரிமையில்லை. மாநிலத் தலைநகர் பெயரில்தானே உயர்நீதி மன்றம் உள்ளது. அதையாவது நம்மால் ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்று அழைக்க இயலுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பினும் அதற்கான உரிமை நமக்கு இல்லையே!
  தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் அதற்குக் காரணமானவர்களை  வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, மத்திய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம் போட்டு மீட்டு வரும் மத்திய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு மத்திய அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
 மத்திய அரசின் தொலைபேசிகளிலும் அதன் அறிவுறுத்த்லுக்கு இணங்கத் தனியார் நிறுவனங்களின் தொலைபேசிகளிலும் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும். பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!
  வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!

  அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம். மத்திய அரசின் துறைகளின் பெயர்களும் திட்டங்களின் பெயர்களும் முழக்கங்களும் இந்தி மயமாக்கப்பட்ட சமக்கிருதத்தில்தான் உள்ளனவே தவிர, தமிழுக்கு அங்கு இடமில்லை. மாநில உரிமைகளில் குறுக்கிட்டுக் கல்வித்துறையை எடுத்துக் கொண்டு, மத்திய அரசு, இந்தியையும் சமக்கிருதத்தையும் திணிப்பதையே அன்றாடகப்பணியாகச் செயல்படுத்தி வருகிறது.
  தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச் செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள், சாலைக் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ் இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!
  தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை. எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும் மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!
  மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்களா? இப்படியாவது தமிழர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.
  உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில் இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா   சாப்பிடப் போகிறார்கள்! தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!
  தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
 உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ் இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்! என்ன கொடுமை இது!
தமிழர்கள் அடிமைகள் என்றால் சாமான்யன்முதல் அனைவரும்தானே.
   அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்? சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும் அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்!
  தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?
தமிழர்க்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் பொழுது, எதிர்த்துக் குரல் கொடுத்து அடங்கிப்போகத்தான் நமக்கு உரிமையே தவிர, அதனைத் தடுப்பதற்கு உரிமை இல்லை.
நாம் செலுத்தும் வரி வருவாயில் இருந்து இந்தி, சமக்கிருதத்தை  வளர்ப்பதற்குத்தான் ஆதரவாக இருக்க முடியுமே தவிர, நம் தாய்மொழிப் புறக்கணிப்பைத் தடுக்க இயலாது.
மத்தியில் யார் ஆட்சியில்  இருந்தாலும், தமிழக்கட்சிகள் அதில் இடம் பெற்றாலும், மத்திய அரசிற்குக் கை கட்டி வாய்பொத்தி ஒடுங்கித்தான் இருக்க முடியுமே தவிர, உரிமைக் குரல் கொடுக்க முடியாது.
நம் அடிமை நிலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்வதானால், இந்தியா ஒன்றிய ஆட்சியாக இருந்தாலும் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. அதனால் தமிழரும் அடிமைகளாக வாழ்கிறோம். உரிமை வாழ்வு வாழும் தமிழரே உண்மையான இந்தியராகத் திகழ முடியும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். போராட்டமும் வாதாட்டமும் இன்றி நாமும் பிற தேசிய இனங்களும் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.

இந்தியராகத் திகழத் தமிழராய் வாழ்வோம்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 25, 2020

சடங்காகிப்போன வீர வணக்க நாள்! – இலக்குவனார் திருவள்ளுவன்



சடங்காகிப்போன வீர வணக்க நாள் 


தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமை காக்கத் தீயுண்டும் நஞ்சுண்டும் சிறைப்பட்டும் உயிர்நீத்த மாமறவர்களின் நினைவைப் போற்ற சனவரி 25 அன்று வீர வணக்க நாள் நிகழ்த்துகிறோம். தமிழகக் கட்சிகள் மாவட்டந்தோறும் இதனை நிகழ்த்தத் தவறுவதில்லை. ஆனால், மொழி உரிமைக்காகப் பாடுபட்டவர்களையும் உயிரை இழந்து பாரினை நீங்கியவர்களையும் போற்றும் நாம், நாளும் மொழி உரிமை இழந்து நலிவதில் இருந்து மீள எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீரர்கள் போல் கூக்ககுரலிடுவது தவிர அன்னைத்தமிழை அழிவிலிருந்து காக்க எந்தச் சிறுதுரும்பையும் எடுத்துப் போடுவதில்லை. ஒவ்வோர் இடத்திலிருந்தும் தமிழ் நீக்கப்படுவதற்கு உடன்பட்டும் அல்லது அதை அறிந்தும் எங்கும் தமிழ் எனப் போலி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
பிரதான் மந்திரி சுரக்சா பீம யோசனா, சீவன்சோதி பீம யோசனா, சன்தன் யோசனா, கிராம் சதக்கு யோசனா, பசல் பீம யோசனா, கிரிசி சிஞ்சை யோசனா, கிரிசி விகாசு யோகனா, அவாசு யோசனா எனத் திட்டங்களுக்கு இந்திப்பெயர்கள் சூட்டி அவையே நாடு முழுவதும் விளம்பரப் படுத்தப்படுகின்றன.
வானொலி, தொலைக்காட்சிகளில் இந்தி விளம்பரங்களே பெருகிக் கொண்டுள்ளன. விளம்பரங்களின்  நோக்கம் இந்தித்திணிப்பாகத்தான் உள்ளது. வானொலி நிகழ்ச்சிகளிலும் இந்தி ஒலிபரப்பு நேரங்கள் கூடிக் கொண்டுள்ளன. இந்தி வருவதால் அங்கிருந்த தமிழ் அகற்றப்படுகிறது; அங்கு வரவேண்டிய தமிழ் விரட்டப்படுகின்றது என்பதை உணராமல் இந்நிகழ்வுகளுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டுள்ளோம்.
மத்திய அரசின் அலுவலகங்களிலும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் முதலான மத்திய அரசு சார் நிறுவனங்களிலும் தனியார் மருத்துவமனைகள், விடுதிகள் முதலான இடங்களிலும் ‘வணக்கம்’  மூட்டைக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. ‘நமசுதே’ அல்லது நமசுகார் குடி கொண்டுள்ளன.
தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் இந்தியில் எழுதத் தெரிந்தால்தான் வேலை இந்தியில் தட்டச்சிட அல்லது கணிப்பொறியில் கணியச்சிடத் தெரிந்தால்தான் வேலை என்று வேலை வாய்ப்புகளில் இந்திக்கு வரவேற்புப்பா பாடிக்கொண்டு தமிழ் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் முதலான தேசிய மொழிகள் பல இந்தியாவில் இருப்பினும் இந்தி மட்டுமே தேசிய மொழியாக விளம்பரப்படுத்தப்பட்டு பிற மொழிகள் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளன. நாமும் சேர்ந்து தமிழை விரட்டிக் கொண்டுள்ளோம்.
இந்தி திணிக்கப்படவில்லை என்றும் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்றும் கூறிக்கொண்டே இந்திக்கல்வி தவிர்க்க இயலாததாக மாற்றப்படுகிறது. விருப்பப்பாடம் என்ற பெயரில் அதுமட்டுமே பாடம் என்று நிலை நாட்டப்படுகிறது.
தமிழின் பெருமையைக் கூறி நம்மை மகிழ்ச்சி மாயையில் ஆட்படுத்திவிட்டுத் தமிழுக்கான தடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. நாட்டுமொழியாக மட்டுமல்லாமல் வீட்டு மொழியாகவும் இந்தி இருக்கவேண்டும் என  மத்திய ஆட்சியாளர்கள் அறைகூவிக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து இந்தியை அப்புறப்படுத்த ஆழமான திட்டம் எதுவும்  இந்தி எதிர்ப்புப் போலி வீரர்களிடம் இல்லை.  தமிழை எல்லா இடங்களிலும் வீற்றிருக்கச் செய்யும் செம்மையான திட்டம் எதுவும் தமிழ்க்காப்புப் போலி வீரர்களிடம் இல்லை.
தமிழக ஆட்சியாளர்களிடம் தமிழ்நாட்டில் தமிழ்தான் கல்வி மொழி, தமிழே அலுவல் மொழி, தமிழ்மட்டுமே வழிபாட்டு மொழி, தமிழ் ஒன்றே இசையாக முழங்கும் என்று சொல்வதற்கும் செய்வதற்கும் துணிவு இல்லை.
திரைப்படப் பெயர்களில் கூடத் தமிழ் காணவில்லை. இதைக்கண்டும் தமிழக மக்கள் நாணவில்லை. தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டவன் தமிழன் என்ற நிலை மாறி, மறந்தும் தமிழ்ப்பெயர் சூட்டாதவனே தமிழன் என்ற நிலை நாளும் பெருகி வருகிறது.
தொடரிகள், கப்பல்கள், வானூர்திகள், ஏவுகணைகள் முதலான எவற்றின் பெயராயினும் இந்திவயமாக்கப்பட்ட சமசுகிருதப் பெயர்கள்தாம். மூத்த மொழியாம் தமிழுக்கு இடமில்லை. இதுகுறித்து நமக்குச் சிறுதுளி அளவேனும் வருத்தமும் இல்லை!
பெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணாமல் பெயரில்தான் வரலாறு, பண்பாடு, உரிமை எல்லாம் இருக்கின்றன என்பதை உணரவேண்டும். தமிழ்ப்பெயர் சூட்டப்படாத எப்பொருளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்ற நிலைப்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டிலாவது தமிழ் காக்கப்படும்.
1965இல் “தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற் கொள்ள உள்ள பேராசிரியர் சி.இலக்குவனார் கைது செய்யப்பட இருக்கிறார் என்னும் செய்தி நண்பர் ஒருவர் மூலம் புலவர்மணி இரா.இளங்குமரன் அறிய வந்தார். இதனை அவர் தெரிவித்த பொழுது தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ் மொழிக்காகச் சிலரேனும் பலியாக வேண்டும். அவர்களில் நான்  முதல் ஆளாக இருக்கிறேன் என்று வழக்கமான புன்முறுவலுடன் மொழிந்தார்.” (செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார், பக்கம் 79) அத்தகைய நெஞ்சுரம் படைத்த, மாணாக்கர்களையும் தமிழ் அன்பர்களையும் வழி நடத்தக்கூடிய தமிழ்ப்பேராசிரியர் ஒருவரும் இன்று இலரே அத்தகையோரை உருவாக்க வேண்டியது வீர வணக்கம் கொண்டாடுவோர் கடமையல்லவா?
அன்னைத்தமிழ் அனைவருக்கும்உரியதே அன்றி  ஒரு தரப்பாருக்கு மட்டும் உரியதல்ல! தமிழ் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பினர் அந்தக் குரல் பொதுமக்களிடமிருந்து எழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழுக்காகக் குரல் கொடுத்தால்தான் அது நிறைவேறினால்தான் நாம் தமிழ் மொழிக்காவலர்களுக்காக உண்மையில் வீர வணக்கம் செலுத்தியவர்கள் ஆவோம்.
மொழிப்போரில் உயிர் நீத்தவர்கள், உடலூறு நேர்ந்தவர்கள், துயரங்களைச் சந்தித்தவர்கள் உழைத்தவர்கள் முதலானோர் வழியில் செல்லாமல், நாமே மொழி அழிப்பிற்குத் துணை நிற்கின்றோம். அப்படியானால், மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள் என்பது வெற்றுச்சடங்குதானே!
வீர வணக்க நாள் கொண்டாடுநரே! அன்று ஒருநாளாவது இந்தி எதிர்ப்புப் போரில் களப்பலியானவர்கள் குடும்பத்தினரை, மரபு வழியினரைச் சந்தித்துச் சிறப்பியுங்கள். அவர்களுக்குத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு முதலியவற்றை அளியுங்கள். அவர்கள் யாரையும் சாராமல் தலைநிமிர்ந்து வாழும் வகையில் உதவுங்கள்!
தமிழ்க்காப்புச் செயல்களில் கட்சி, மதம், அமைப்பு முதலிய எவ்வேறுபாடின்றியும் அனைவரும் ஈடுபட வேண்டும். தமிழர் வாழும் நிலப்பகுதிகளில் எல்லாம் மத்திய அரசு இந்தித்திணிப்பை நிறுத்திவிட்டுத் தமிழ் கற்பிக்கவும் வளர்க்கவும் வகை செய்ய வேண்டும்.
தமிழ் நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் அயல்மொழிகளின் திண்பிற்குச்சிறிதும் இடம் இல்லாச் சூழலை உருவாக்க வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது பேச்சு என்பதை தாண்டிச் செயலாக்கப்பட வேண்டும். தமிழுக்குரிய தலைமைநிலையைத் தந்து உண்மையான வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
மொழிப்போர் ஈகியர்களே! உங்கள் கனவுகளை நனவாக்குவோம்!
பாருள்ளளவும் பைந்தமிழும் இருக்கும். பைந்தமிழ் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து நிற்கும். உங்கள் எண்ணங்களும் நினைவுகளும் எங்களை என்றென்றும் வழி நடத்தட்டும்!
வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல தை 11, 2051 / 25.01.2020

Followers

Blog Archive