Wednesday, February 14, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155 தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  156-160

156. Above standardதரத்திற்கு மேலான  
அளவு அல்லது தரம் அல்லது இரண்டும்  மேலான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.  
ஆளுமையில் இயல்பு மீறிய திறமையை வெளிப்படுத்தும் தலைமைத்துவ நிலையைக் குறிக்கிறது.  
நிதியியலில் கடனாளி வலுவான நிதிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
157. Above the rank ofபதவி நிலைக்கு மேலான  
ஒரு பதவி நிலையை விட மேலான உயர் பதவியைக் குறிப்பது.
158. Above writtenமேலே எழுதியுள்ள  
முன்பு எழுதப்பட்ட அல்லது பெயரிடப்பட்ட ஒன்றைக் குறிப்பிடுவது.
159. Abrasiveஉராய்பொருள்
தேய்ப்புப்பொருள்,
சிராய்ப்பி  
உப்புத்தாள்  
ஒரு பொருளின் மேற்பரப்பைத் தேய்ப்பதன் மூலம் சேதப்படுத்தல் அல்லது அழுக்கை அகற்றல். எடுத்துக்காட்டாகச் சொரசொரப்பான உப்புத்தாள் கொண்டுதேய்ப்பதன் மூலம் அழுக்குப் பகுதியை அகற்றல்.
160. Abreastகாலத்திற்கேற்றவாறு  
இணையான நிலையொத்து
பக்கம் பக்கமாக
  ஒரு வரிசையில் ஒருவருக்கொருவர் அருகருகே இருப்பது.
சமமாகவோ இணையாகவோ நடந்துசெல்லல்.   எ,கா. கொலை நடப்பதற்கு முன்னர்க் கொலையாளியும் கொலையுண்டருவரும் அருகருகே நடந்து சென்றுள்ளனர்.  
காதலியின் அருகே இணையாக நடந்து சென்ற காதலன் பின்னர்க் காதலியை ஓடும் ஊர்தி முன் தள்ளிக் கொலை செய்துள்ளான்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, February 11, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் : 151-155

151. Above mentionedமேற்குறிப்பிட்ட
மேற்குறித்துள்ள  
முன்னர்ச் சொன்னதை எடுத்துரைப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். எனினும் மேலே தெரிவிக்கப்பட்ட  என்பதை முந்தைய பக்கங்களில் என்றில்லாமல்  அதே பக்கத்தில் மேலே எனக் கருதும் வெற்றுரையாகக் கருதித் தவிர்க்க வேண்டுகின்றனர் சட்ட வல்லுநர்கள். இந்த இடங்களில் மேலே என்பதைவிட /முன்னதாக  முன்னால் /ஏற்கெனவே/ முந்தைய என்று குறிப்பிடத் தெரிவிக்கின்றனர்.
152. Above normalஇயல்பின் மிகுந்த
இயல்பினும் மேலான  
இயல்பான நிலைக்கு மேம்பட்ட நிலையைக் குறிப்பது
153. above parசமநிலைக்கு மேல்
மிகு விலையில்   இயல்பை விட அல்லது எதிர்பார்த்தை விடச் சிறந்தது.    
பொதுவாகப் பத்திரங்கள், பங்குகள் போன்றவை அவற்றின் முகமதிப்பை விட மிகுதியாக விற்கப்படுவதைக் குறிப்பிடுகின்றனர்.
154. Above quotedமேலே எடுத்துரைக்கப்பட்ட  
இதே நீதிபதியோ வேறு வழக்குகளில் வேறு நீதிபதிகளோ தீர்ப்புரையில் தெரிவித்த கருத்தை மேற்கோளாக எடுத்துரைப்பது.

வாதுரைஞர்கள் அல்லது வழக்குரைஞர்களும் வேறு தீர்ப்புரைகளில் இருந்து தம் வாதத்திற்கு வலு சேர்க்கும் தீர்ப்பின் பகுதியை எடுத்துக்காட்டி மேற்கோளாகக் கூறுவர்.
155. Above saidமேற்சொன்ன  
அதே பக்கத்திலோ முந்தைய பக்கத்திலோ சொன்னதைக் குறிப்பிடல்

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, February 10, 2024

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள்

5/7

Act of bad faith – நம்பிக்கை வஞ்சச் செயல்

தீங்கெண்ணச் செயல்

நம்பிக்கை வருவதுபோல் வஞ்சகமாக நடந்து கொண்டு ஏமாற்றும் இரண்டகச் செயல்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of bad faith for benefit of a person without consent – ஒருவரின் ஆதாயத்திற்காக இசைவின்றிச் செய்யப்படும் தீச் செயல்

ஒருவர், தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தவருக்கு ஆதாயம் ஏற்படுவதற்காகத் தீய நோக்குடன் செய்யும் செயல்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of conveyance – மாற்றளிப்புச் செயல்

உடைமையின் உரிமைப்பட்டயம், உரிமை,  நலன்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுதல்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of cruelty – கொடுஞ்செயல்

மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ வலி, துன்பம், ஊறு, உயிரிழப்பு நேர்விக்கும் வன்மையான செயல்.

ஒரு பெண்ணிற்கு அவள் கணவனோ கணவனின் உறவினர்களோ கொடுமை இழைத்தால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, ஒறுப்புத் தொகை விதிக்கப்படும். (இ.த.தொ. பிரிவு 498.அ.)

சட்டப்புறம்பான கோரிக்கை மூலமோ தாங்க இயலாக கொடுமை இழைப்பின் மூலமோ பெண்ணின் மரணத்திற்கு அல்லது தற்கொலை முயற்சிக்குக் காரணமானவர்கள், உயிரிழப்பிற்குக் காரணமான அல்லது கொலை முயற்சிக்கான குற்றமிழைத்தவர்களே. கணவனைக் கொடுமைப்படுத்தினால் அதற்குக் காரணமானவர்களுக்கும் இது பொருந்தும். விலங்குகளுக்குக் கொடுமை இழைப்பதிலிருந்து காப்பாற்ற விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1960(The Prevention Of Cruelty To Animals Act, 1960) உள்ளது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act Of God –இயற்கைச் செயல்

இறைமைச் செயல் / தெய்வச் செயல்

நிலநடுக்கம், கடல்கோள், போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரிடர் அலலது பெருமிழப்பு. இவை மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக உள்ளதால் இறைமைச் செயல் அல்லது இயற்கைச் செயல் எனப்படுகிறது.

இங்கு Act என்பது செயல் என்னும் பொருளில் வந்துள்ளது . Act என்பதைச் சட்டம் என்று கையாள்வதை விடச் செயல் என்பதே ஏற்றதாகும்.

இயற்கை இடர்களையெல்லாம் சட்டமாகக் கூறுவது பொருந்தாது அல்லவா?

Act of grace – அருட் செயல்

சட்டச் செயற்பாடு அல்லது தண்டிப்பு நோக்கில் மட்டும் செயலபடாமல் பரிவுக் கண்ணோட்டத்துடன் குற்றவாளியை அணுகுவது அருட் செயலாகும்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of honour – நன்மதிப்புச் செயல்

நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும்.

இங்கு Act என்பது செயல் என்னும் பொருளில் வந்துள்ளது.

Act Of Indemnity – இழப்பீட்டுச் செயன்மை

இழப்பீட்டு ஒப்பந்தம்; வழுவேற்புச் செயன்மை

ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது செய் சட்டத்தை > செயன்மையைக் குறிக்கிறது; செயலை அல்ல.

வாக்குறுதியளிப்பவரின் அல்லது வேறு ஒருவரின் நடவடிக்கையால்  ஏற்படும் இழப்பிலிருந்து மற்றவரைக் காப்பாற்ற ஒரு தரப்பினர் உறுதியளிக்கும் ஒப்பந்தம் இழப்பீட்டு ஒப்பந்தம் எனப்படுகிறது.

இழப்பீடுகள் ‘தீங்கற்ற ஒப்பந்தங்கள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன.

மற்றொரு தரப்பினரால் ஏற்படும் இழப்புகள், சேதங்கள் அல்லது கடன் பொறுப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் ஒப்பந்தங்கள் இழப்பீட்டு ஒப்பந்தங்கள் என்றும் கூறலாம்.

சட்டத்திற்குப் புறம்பானவையாக நிகழ்பவற்றைச் சட்ட முறையாக்கவோ பொதுப்பணியாற்றுங்கால் தொழில்நுட்ப அளவில் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்குத் தண்டனையிலிருந்து அல்லது ஒறுப்புத் தொகையிலிருந்து விலக்களிப்பதற்கோ இயற்றப்படும் சட்டம்  வழுவேற்புச் செயன்மை எனப்படுகிறது. வழுவமைப்புச் சட்டம் எனச் சிலர் குறிப்பிடுவதைவிட வழுவேற்புச் செயன்மை என்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த ஒரே தொடரே பயன்படும் இடத்திற்கு ஏற்பச் செயன்மை, ஒப்பந்தம், எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

Act of insolvency – நொடிப்புச் செயன்மை / நொடிப்புச்  செயல்

நொடிப்பு நிலை குறித்த சட்டம் நொடிப்புச் செயன்மை.

நொடிப்பு என்பது பொருளறு நிலை – பொருள் இல்லாமல் அற்றுப்போன நிலை – யாகும்.

நடைமுறையிலுள்ள சட்டப்படி ஒருரை நொடித்தவராகத் தீர்ப்பளிப்பதற்குரிய யாதேனும் ஒரு செயல் நொடிப்புச் செயலாகும்.

திவால் என்பது உருதுச்சொல்.

நொடிப்பொழுது அல்லது கணப்பொழுது எடுக்கப்படும் திரைக்காட்சியை(screen shot)யும் நொடிப்பு என்பர்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை / செயல் .

act of law – சட்ட விதியம்

விதியத்திற்கான சட்டம்

சட்ட விளைவுச் செயல்

சட்ட நடவடிக்கை, சட்டச் செயல் என்கின்றனர். இங்கே  act என்பதைச் செயல் அல்லது நடவடிக்கை என்னும் பொருளில் பார்க்கக் கூடாது. Act என்பது சட்ட அமைப்பால் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் – செயப்படும் சட்டம் > செயன்மை.  Law  என்பது சட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஒழுங்குமுறை விதிகளை அரசு இயற்றுவது. எனவே (சட்ட)விதியம் எனலாம்.

 உரியவரது இசைவின்றியே  சட்டம் செயற்படுவதன் மூலம் ஓர் உரிமை எழுதல், அழிதல் அல்லது மாறுதல் என்பதைக் குறிப்பது சடட விளைவுச் செயல் ஆகும்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் விதியம் என்பதாகும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)

Wednesday, February 7, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் :இலக்குவனார் திருவள்ளுவன்:146-150

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் : 146-150

146. Aboveமேலே
மேம்பட்டு, அப்பாற்பட்டு.தலைக்குமேல், விண்ணில், முன்னிடத்தில், உயரமாக     எழுத்து வடிவில் தெரிவிக்கையில்
முன்னர்க் கூறியதைச் சுட்டிக்காட்ட மேலே சொன்ன, மேலே தெரிவித்த, மேலே கூறிய என்பன போன்று வரும்.  
வாதுரையிலோ தீர்ப்புரையிலோ முதலில் கூறியதை எடுத்துக் கூறும் பொழுது மேலே சுட்டிய/குறிப்பிட்ட எனப் பயன்படுத்துவர்.
147. Above allஎல்லாவற்றிற்கும் மேலாக  
யாவற்றையும் விட மேலாக  யாவற்றினும் மேம்பட்ட,
பலவற்றில் ஒன்றைக் குறிப்பிடுகையிலோ ஒப்பிட்டு முறையில் தெரிவிக்கையிலோ எல்லாவற்றிலும் மேலாக இருக்கும் நிலை இருப்பின் அதனை இவ்வாறு குறிப்பிடுவர்.
148. Above averageசராசரிக்கு மேலான
இயல்புக்கு மேலான  
வழக்கமான தொகை அல்லது எண்ணிக்கை அல்லது விளைச்சல் அல்லது வருமானம் அல்லது தரம் அல்லது நிலைப்பாடு அல்லது ஒன்றின்  நிலை இயல்புக்கு மேல் இருப்பின் அல்லது சராசரிக்கு மேல் இருப்பின் இவ்வாறு குறிப்பிடுவர்.
149. Above board  களங்கமற்ற
ஐயத்திற்கிடமில்லாத           
ஒளிவு மறைவற்ற  
திட்டம் அல்லது வணிக ஒப்பந்தம் ஐயத்திற்கிடமின்றி இருக்க வேண்டுமென்றால், நேர்மையானதாகவும் யாரையும் ஏமாற்ற முயலாததாகவும் ஒளிவு மறைவின்றியும் இருக்க வேண்டும்.
150. above citedமேற்சுட்டிய
மேற்காட்டிய  
முன்னர்க் குறிக்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லது தீர்ப்பின் பகுதி அல்லது பத்தி அல்லது வரியைச் சுட்டிக் காட்டுக் கூறுவது.
பார்வையாகக் குறிக்கப் பெறும் புத்தகம், ஆணை, ஆவணம் விதியையும் சுட்டிக்காட்டுவதற்காகக் கூறுவது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்


Sunday, February 4, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் : 141-145

141. Abortive trial  கைவிடப்பட்ட உசாவல்
விசாரணை    முடிவு எட்டப்படாத  உசாவல் / விசாரணை  
சில காரணங்களுக்காக விசாரணை முழுமையுறாத, தீர்ப்பளிப்பதற்கு முன் முடிக்கப்படுகிற உசாவல்/விசாரணை  
142. Aboundமிகுந்திரு
நிரம்பியிரு பொங்கு மல்கு  
மிகுதியான எண்ணிக்கையில் அல்லது பேரளவிலான அளவில் உள்ளனவற்றைக் குறிப்பது.
143. Aboutபற்றி  
குறித்து
இங்குங்குமாய், சுற்றி, ஏறத்தாழ, கிட்டத்தட்ட. கப்பலின் போக்கினை எதிர்ப்புறமாகத் திருப்புதல்   எ.கா. இவ்வழக்கு மகளிர் நலம் பற்றியது. இம்முறையீடு சிறார் நலம் குறித்தது. கிட்டத்தட்ட/ஏறத்தாழ நூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
144. About that dateஅந்த நாளைப் பற்றி  
முதலில் குற்றம் நிகழ்ந்ததாகவோ வேறு எதன்காரணமாகவோ சொல்லப்படும் நாள் குறித்துப் பின்னர்த் தெரிவிக்கையில் அந்தநாள் குறித்த கருத்தை அல்லது வாதுரையைத் தெரிவித்தல்.
145. About to make, a complaint, he isஅவர் முறையிட இருக்கிறார்  
ஒரு தவறு அல்லது முறைகேடு அல்லது குற்றம் நேர்ந்த பொழுது அது குறித்து வழக்கு மன்றத்தில் அல்லது உரிய தக்க அதிகார மன்றத்தில் முறையிடப் போகிறார்.  

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, February 3, 2024

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள்

4/7

Act Done Under Colour Of Office

பதவியைச் சாக்கிட்டு எதனையும் செய்தல் / பதவியின் உருவில்  அதிகாரப் போர்வைச் செயல்

எத்தகைய அரசாங்கப் பொறுப்பும் இல்லாத ஒருவர், ஒரு பொது ஊழியராகப் பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படிப் பொறுப்பில் இல்லாத போது, பொறுப்பில் உள்ள ஒரு பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்வதும் குற்றமாகும். இப்படிப் பொறுப்பில் இருப்பது போல நடித்து எத்தகைய செயல் செய்தாலும் அல்லது செய்ய முயன்றாலும் குற்றமாகும்.

இ.த.தொ.பிரிவு 170 இன் கீழ் இக்குற்றம் ஈராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் தண்டனைக்குரியது.

ஒரு பொது ஊழியர், தனக்குரியதல்லாத பொறுப்பில் இருப்பதாக நடித்துத் தவறான அதிகாரத்தைச் செயல்படுத்துவதும் தண்டனைக்குரிய ஆள்மாறாட்டமே.

இதனைக் குறிப்பதே இத்தொடர். இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act Done Without Criminal Intent And To Prevent Other Harms  –

குற்ற நோக்கின்றியும் பிற தீமைகளைத் தடுப்பதற்காகவும் செய்யப்படும் செயல்

இந்தியத் தண்டிப்புத் தொகையம், பிரிவு 81 இன்படி தீங்கு நேர்விக்கும் செயல், ஆனால், தீங்கு விளைவிக்கும் எந்தக் குற்ற நோக்கமுமின்றி அச்செயல் செய்யப்பட்டிருப்பின் அது குற்றமாகாது என்கிறது. இச்செயல் நன்னோக்கத்தில், தனியருக்கோ உடைமைக்கோ தீங்கு நேர்வதைத் தவிர்ப்பதாகவோ தடுப்பதாகவோ இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாகத் தீ பரவி வரும் இடத்தில், அத்  தீ பிற இடங்களில் பரவுவதை, அதனால் பிற உயிருக்கோ உடைமைக்கோ தீங்கு நேர்வதைத் தடுக்கும் நோக்கத்துடன்,  அந்த இடத்திலோ அருகிலோ உள்ள வீட்டிலுள்ளவரை/ வீட்டில் உள்ளவர்களை அல்லது உடைமைகளை வெளியே இழுத்துப் போட்டாலும்  அதனால் தனியருக்கோ உடைமைக்கோ சேதம் ஏற்பட்டாலும் அது குற்றமாகாது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act, Entitled to – செயற்பாட்டு உரிமையர் / செயற்பாட்டுத்  தகுதியர்

உரிமைக்குரிய சட்டம் என்று குறிப்பது தவறாகும். உரிமையுரை சட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் ‘செயற்பா(ட்)டு’ என்பதாகும்.

Act in his application to a district – உரிய மாவட்டத்திற்குரிய செயற் பயன்பாடு

மாவட்டத்திற்குப் பொருந்தும் வகையிலான செயல் என்பதைக் குறிக்கிறது. இதனை உரிய மாவட்டத்திற்குரிய செயற் பயன்பாடு எனலாம்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயற் பயன்பாடு என்பதாகும்.

Act in his  discretion, to – சதுரப்பாட்டிற்குரிய செயல்

மனத்தேர்விற்குரிய செயல் என்பர்.

குடியரசுத்தலைவர், ஆளுநர், முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள், முடிவெடுக்க இயலாச் சூழல் இருக்கும் பொழுது மனத்தேர்விற்கேற்பச் செயல்பட உரிமையுடையவர்கள். விருப்புரிமை என்பது விருப்பு வெறுப்பு அடிப்படையிலான முடிவு எனப் பொருள்பட வாய்ப்பு உள்ளது. விருப்புரிமை என்றால் விருப்பம்போல் அல்லது ஒற்றையா இரட்டையா பார்ப்பதுபோல் முடிவெடுக்க இயலாது. அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தியே தன்முடிவைத் தெரிவு செய்ய வேண்டும்.  எனவே, சதுரப்பாடு எனக் குறிக்கப்பட்டது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்..

discretion என்பது விருப்பப்படித் தீர்மானிக்கும் உரிமையை  விருப்புரிமையைக் குறிக்கிறது. உசிதம் என்னும் திசைச்சொல்லும் இதற்கு ஏற்றதே.

discertion எனச் சில நூலில் இடம் பெற்றுள்ளது அச்சுப்பிழையாகும்.

Act in operation – செயற்பாட்டிலுள்ள சட்டம்

வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரு பொருள் குறித்துச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நேர்வில் நடைமுறையில் உள்ள சட்டத்தைக் குறிப்பது.

சட்டம் காலாவதியாகவில்லை. நடைமுறைப் பயன்பாட்டில் உள்ளது என்பதைக் குறிப்பது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் சட்டம் என்பதாகும்; செயன்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

operation என்பதைப் பொதுவாக அறுவை மருத்துவம் அல்லது அறுவைப் பண்டுவம்(சிகிச்சை) எனப் பொருள் கொள்கிறோம். எனினும் சட்டத்துறையில் நடவடிக்கை அல்லது செயற்பாடு எனப் பொருளாகிறது.

Act judicially – நீதித்துறைச் செயன்மை

வெவ்வேறு துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இங்கே நீதித்துறைச் செயற்பாட்டிற்காக இயற்றப்படும் செயன்மைகளைக் குறிக்கிறது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும்.

Act making an offence – குற்றம் விளைவிக்கும் செயல்

குற்றம் விளையக் காரணமாகும் எச்செயலும்.

சட்டம், வழக்காறு, விதி போன்றவற்றை மீறல் அல்லது குலைத்தல் குற்றம் நேரக் காரணமாவதால் குற்றச் செயலாகிறது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of a child under seven years of age – ஏழு அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல்

இந்தியத் தண்டிப்புப் தொகுப்பு, பிரிவு 82 இன்படி 7 அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல் எதுவும் குற்றமாகாது. எத்தீங்கும் செய்ய மாட்டாமை(doli incapax) என்னும் இலத்தீன் தொடரில் இருந்து இக்கருத்தாக்கம் உருவானது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of a person of unsound mind – மன நலமற்றவரின் செயல்

செயலின் தன்மையைப் புரிந்து கொள்ள இயலாத அல்லது தான் செய்யும் செயல் தீங்கானது அல்லது சட்டத்திற்கு முரணானது என உணர்ந்து கொள்ள இயலாத சூழலில் மன நலம் குன்றியவர் செய்யும் எச்செயலும் குற்றமாகாது என இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 84 கூறுகிறது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)

Followers

Blog Archive