Monday, July 8, 2024

நினைவில் நிற்கும் ஆம்சுட்டிராங்கு!- இலக்குவனார் திருவள்ளுவன்

 



பகுசன் சமாசு கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் வழக்கறிஞராகவும் பலரது முன்னேற்றத்திற்கு ஏணியாகவும் திகழ்ந்த  ஆமிசுட்டிராங்கு(K.Armstrong)(18.01.2008/31.01.1977-21.06.2055/05.07.2024) படுகொலை செய்யப்பட்ட செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. வளர்ந்து வரும் தலைவரான அவர் கொலையுண்டு மறைந்த செய்தி பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் தலைவர்களுக்குரிய நிறைகுறைகளைப் போல் செயற்பட்டுத் தொண்டர்களின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கியவர். இவரைப்பற்றி அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. இப்பொழுது இவரின் துயர மறைவு அந்நினைவலைகளை எழுப்பியுள்ளது.

அவருடைய அறிமுகம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அவர் அப்பொழுது மயிலாப்பூரில் மிதியூர்தி (auto rickshaw) ஓட்டுநராக இருந்தார். என்னிடம் ஒருநாள், “ஐயா, உங்களிடம் ஓர் அறிவுரை கேட்க வேண்டும்” என்றார். “என்ன செய்தி? என்ன தயக்கம்?” என்றேன். “எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள்? நான் கூறியது உங்களுக்கு உடன்படா விட்டால் என்ன செய்வீர்கள்?” என்றேன்.

“நீங்கள் வெறும் வண்டியோட்டிபோல் என்னைக் கருதுவதில்லை. சிலர் ஏளனமாகப் பார்ப்பதுபோல் இல்லாமல் மதிப்பாக நோக்குவீர்கள். என் கருத்துகளைச் செவி மடுத்துப் பாராட்டுவீர்கள். மேலும் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம் என்றீர்கள். எனவே, எதிர்கால நலன் குறித்து உங்களிடம் பேசலாம் என முடிவிற்கு வந்தேன்.” என்றார்.

“நான் இரு நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன். இதற்கு முன்பு ஓரெழுத்து எழுத்தாளர், தான் கட்சி அரசியலில் ஈடுபட விரும்புவதாகவும் வாசகர்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தன் இதழ் மூலம் கேட்டிருந்தார்.

நான் அவருக்கு, “நீங்கள் எந்தக் கட்சியில் சேர விரும்புகிறீர்கள் என்று தெளிவாகக் கேட்டால், விடையிறுக்கலாம். பொதுவாகக் கேட்டால், வாசகர்கள் நீங்கள் சேர விரும்பும் கட்சி குறித்து ஊகமாகக் கருதி அதற்கேற்பத் தங்கள் கருத்தை  ஆதரித்தோ எதித்தோ எழுதுவார்கள். இவ்வாறு பொதுவாகக் கேட்பது வாசகர்களை அவமதிக்கும் ஆணவச் செயலுமாகும். வாசகர்களை மதிப்பதாக இருந்தால் எந்தக் கட்சியில் சேர விரும்புகிறீர்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.”  என எழுதிப் போட்டேன். நீங்களும் நீங்கள் சேர விரும்பும் கட்சி குறித்துத் தெரிவியுங்கள்.” என்றேன்.

மற்றொன்று “தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கம் ஒன்றின் தலைவரிடம் தேர்தலைப் புறக்கணிக்கும் திட்டத்தைக் கைவிட்டுத் தேர்தலில் பங்கேற்று நீங்களும் இயக்கத்தினரும் சட்டமன்ற மக்களளவைகளில் பங்கேற்றுத் தொண்டாற்றுங்கள் என்றேன். இது குறித்து விளக்கவும் செய்தேன். அவர் அமைப்பிலுள்ள பிறரிடம்கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறினார். மறுநாள் அவர் சந்தித்து என் கருத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால், இம்முறை தேர்தலைப் புறக்கணித்து விட்டு, அதற்கான பரப்புரையை மேற்கொள்ளாமல், பின்னர்த் தேர்தல் பங்கேற்பு குறித்து இயக்கத்தினரிடம் தெரிவித்து விட்டு அடுத்த தேர்தலில் இருந்து பங்கேற்போம் என்றார். அன்படி நடந்து இன்றைக்குக் குறிப்பிடத்தகுந்த தலைவராக விளங்குகிறார்” என்றேன்.

“நான் ஆணவமாக நடந்து கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட தலைவரைப்போல் புகழ் பெறுவேன்” என்றார்.

“அப்பா திராவிடர் கழக ஈடுபாட்டில் இருந்தமையால், நான் படிக்கும் பொழுதே அரசியலில் ஆர்வம் காட்டினேன்” என்றார்.

என்றாலும் தான் தங்கள் வகுப்பினர் முன்னேற்றத்திற்கான கட்சியிலேயே சேர விரும்புவதாகவும் அப்படிப்பட்ட கட்சிகளில் புரட்சிப் பாரதக் கட்சி இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் பகுசனக் கட்சியையும் முதலிடங்களில் வைத்திருப்ப தாகவும் தெரிவித்தார்.

“உங்கள் இன மக்கள் முன்னேற்றத்திற்காக அரசியலில் ஈடுபட விரும்புவது நல்லதுதான். ஆனால்,அதே நேரம் பிற வகுப்பார் நலனிலும் கருத்து செலுத்துங்கள்” என்றேன். வடக்கே எந்தக் கட்சி தொடங்கப்பட்டாலும் அந்த மாநிலத்தில் கிளைகள் தொடங்கப்படா விட்டாலும் தமிழ்நாட்டில் அதன் கிளையைத் தொடங்கி விடுவார்கள். இது தவறு. என்றாலும் வழக்கமாக நிகழும் இதுகுறித்து இப்போது கூற விரும்பவில்லை. நீங்கள் உங்களுக்கான தகுதியை வளர்த்துக்கொண்டு பகுசனக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு மதிப்பு இருக்கும். இல்லையேல் கீழ் நிலைப் பொறுப்புகளில்தான் இருப்பீர்கள். முதலில் சட்டப்படிப்பை முடியுங்கள். பிறருக்கு உதவுங்கள். அதன்பின் மதிப்பார்ந்த பதவிகள் தேடி வரும்” என்றேன்.

பகுசனக் கட்சி மீதான நாட்டத்தை வைத்துக்கொண்டு வெவ்வேறு அமைப்புகளில் ஈடுபட்டார். மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதைத் தெரிவித்த பொழுது வாழ்த்தினேன். மாமன்ற உறுப்பினரான பின்பு பகுசனக் கட்சியிலும் சேர்ந்து உயர்ந்தார். என்றாலும் பின்னர் அவருடனான சந்திப்பு நிகழவில்லை. அவர் பெரம்பூர் சென்றுவிட்டார். நான் மடிப்பாக்கம் வந்து விட்டேன். இருப்பினும் அவரைப்பற்றிய செய்திகள் வந்தால் படித்துப் பார்ப்பேன். அப்படி வந்த ஒரு செய்திதான் துயரச்செய்தியாய் அமைந்து விட்டது. இச்செய்தியால் ஏற்பட்ட நினைவலைகளையே துயரத்துடன் பதிந்துள்ளேன்.

ஒன்றாக நல்லது கொல்லாமை”  என்கிறார் திருவள்ளுவர்(குறள் 323). மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் மனிதர்களுக்கு உடம்பு, சொல், செயலால் ஏற்படும் பத்துத் தீமைகள் குறித்து விளக்குகிறார்.

      “கொலையே களவே காமத்தீ விழைவு

       உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்

      பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்

      சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்

      வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று

      உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்

      பத்து வகையால் பயன்தெரி புலவர்

(மணிமேகலை 24.125-131) என்பதே அவற்றைக் குறிப்பிடும் பாடல்.

இத்தீமைகளுள் முதலாவதாகக் கூறப்படுவது கொலையே.

புலையும் கொலையும் களவும் தவிர்

என்கிறார் ஒளவையார்(கொன்றை வேந்தன்).

 சொத்து, பணம், உறவு, குடும்பம், விரும்பாத் திருமணம், காதல், காமம், அரசியல், பதவி, பழிக்குப்பழி முதலியன தொடர்பான பல காரணங்களால் கொலைகள் நிகழ்கின்றன. இக்கொலைக்கு இரங்கல் தெரிவிப்போரும் துயரம் அடைவோரும் கொலை நிகழாத நாடாக நம் நாட்டை ஆக்க வேண்டும்.

இதையே நாம் செலுத்தும் அஞ்சலியாகக் கருத வேண்டும்.



Sunday, July 7, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

471. Accumulative judgement

 
திரள் தீர்ப்பு  

கூடுதல் தீர்ப்பு  

மற்றொரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு. முதல் தீர்ப்பின்படியான தண்டனை முடியும் வரை இரண்டாம் தீர்ப்பு செயலாக்கம் ஒத்திவைக்கப்படும்.

ஒரு வழக்கில் இரண்டு அல்லது மேற்பட்ட வெவ்வேறு குற்றச்செயல்களைப் புரிந்ததற்காக விதிக்கப்பெறும் தனித்தனி இரண்டு தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் செயற்படும் என்று தீர்ப்பு வழங்கல்.

தொடரியல் தீர்ப்பு  என்கின்றனர். தொடர் என்பதை அறிவியல் போன்று தொடரியல் என்பது பொருந்தாது. திரண்டு வருவதுபோல் அடுத்தடுத்து  அளிக்கப்படுவதைத் திரள் தீர்ப்பு என்கிறோம்.
472. Accumulative legacyதிரள் விருப்பாவணக்கொடை  

விருப்புறுதி வழியே நன்கொடையாக அளிக்கப்படும் அசையும் சொத்து அடுத்தடுத்துச் சேருவது.
473. accumulateகுவி   சேர் திரட்டு  

காண்க: accumalation-குவிப்பு  
474. accumulation of incomeவருவாய்க் குவிப்பு  

திரள்  வருவாய்  

ஒரு நிறுவனத்தால் தன் முதன்மைச் செயல்பாடுகளில் மறுமுதலீடு செய்ய அல்லது மூலதனச் செலவினங்களில் முதலீடு செய்ய இருத்தி வைத்துக் கொள்வதற்காகத் திரட்டப்படும் தொகை  திரள்  வருவாய் எனப்படுகிறது.  

நிறுவனத்தின் ஐந்தொகையில்(balance sheet) பங்குதாரரின் பங்கு முதலீட்டின் கீழ் வரவு வைக்கப்படுவதாகும். பெரும்பாலும் தக்க வைக்கப்பட்ட வருவாய் எனக் குறிக்கப் பெறுகிறது.   
475. accumulation ruleதிரள் விதி  

சிறு சிறு முயற்சிகளின் திரட்சியே பெருவினை என்பதே திரள் விதியாகும். எனவேதான் சிறு சேமிப்புகள் திரண்டு குவியும் பொழுது பெருஞ்செல்வமாகிறது.
476. Accumulative  திரள்நிலை  
சேர்‌த்துவை  

மறு ஈடு  (மறுமுதலீடு)

  சிறுகச் சிறுகச் சேர்ந்து திரண்டு உருவாகும் நிதி.
ஒரு நிதியம் மூலம் உருவாகும் வருவாயை மீண்டும் அதே நிதியத்தில் மறு முதலீடு செய்வது.

மறு முதலீடு என்பதைச் சுருக்கமாக மறு ஈடு எனலாம்.
477. accumulative sentenceதொடர் தண்டனை  


ஒரு வழக்கில்  ஒரு குற்றத்திற்காக முதல் தண்டனை வழங்கப்பெற்றவருக்கு அதே வழக்கில், மற்றொரு குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையும் விதிக்கப்படுகிறது என்றால், இரண்டு தண்டனைகளும் ஒரு சேர அளிக்கப்படாமல், முதல் தண்டனை முடிந்த உடன் இரண்டாம் தண்டனை தொடரும் எனத் தீர்ப்புரையில் வழங்கப்படுவதே தொடர் தண்டனை.  

தொடரியல் தண்டனை எனப் பொதுவாகக் குறிப்பிடுகின்றனர். தொடரியல் என்பது அறிவியல், பொறியியல், பொருளியல், சட்ட இயல் போன்று அறிவுத் துறையைக் குறிக்கும்.

திரள் என்பதைத் தண்டனைக்குக் கூறுவது பொருந்தாது. எனவே, திரள் தண்டனையும் ஏற்றதாகாது. எனவே, தொடர்ச்சியாகத் துய்க்கப்படும் வகையில் அளிக்கப்படும் தண்டனையைத் தொடர் தண்டனை என்பதே சரியாக இருக்கும்.  
இதற்கு மாறாக ஒரே காலத்தில் தண்டனையைத் துய்க்குமாறு அளிக்கப்படுவது concurrent sentence – ஒருங்கு தண்டனை.
478. Accumulatorசட்ட ஏடு   குவிப்பவர்,

திரட்டுபவர்,
பணம் பெருக்குபவர்,
அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர்,

மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி எனப் பல பொருள்கள் உள்ள சொல்.

இதனைச்சட்டத்துறையில் மின் சேமக்கலம் என்பது பொருந்தாது. சட்டப்படியான பதிவுகளை மேற்கொள்வதற்கான  பொதுக் குறிப்பேட்டைக் குறிக்கிறது. சட்டப் பொதுக் குறிப்பேடு என்பதன் சுருக்கமாகச் சட்ட ஏடு எனலாம்.
479. accuracyதுல்லியம்  

நோக்கு மதிப்பிற்கும்(observed value) ஏற்புக் குறிப்பு மதிப்பிற்கும்(accepted reference value) இடையிலான ஒப்பந்தப் படிநிலை அளவைத்(degree of agreement) துல்லியம் குறிக்கிறது.
480. accurateதுல்லியமான

காண்க: accuracy- துல்லியம்

(தொடரும்)

Thursday, July 4, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்

 





(சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

451. accreditationமதிப்புச் சான்றளிப்பு

  குறிப்பிட்ட நிரல் அல்லது நிறுவனம், உரிய தரப்பாடுகளுக்குப் பொருந்தி வருகிறதா என மதிப்பிட்டுத் தரச் சான்றளிப்பது.  

தூதரைச் சான்றளித்து அனுப்புதல், அதிகாரப்பூர்வச் சான்றளிப்பு.

ஒன்றின் தகுதியைக் குறிப்பதால் தகுதிக் குறியீடு என்றும் சொல்வர்.
452. accreditedஏற்கப்பட்ட மதிப்பு

ஏற்கப்பட்ட   முறைப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற எனவும் சொல்கின்றனர்.

எனினும் சுருக்கமாக ஏற்கப்பட்ட அல்லது மதிப்பேற்கப்பட்ட என்றே சொல்லலாம்.
453. accredited agentஏற்கப்பெற்ற முகவர்

  குறிப்பிட்ட பொருள்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு அதிகாரபூர்வமாகவும் பொதுவாகவும் ஏற்கப்பெற்ற முகவர்.
454. accretion    சேர்மானம்;
சேர்க்கை  

வெள்ளப் பெருக்கு, ஆறு திசைமாறுதல் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளினால் மண்வளம் கூடிச் சேர்ந்த நில வள உயர்வு.  

சொத்து உயர்வு என்று சொல்கின்றனர்.  நில வள உயர்வால் சொத்துமதிப்பு உயர்ந்தாலும்,  அது பொருந்தி வரவில்லை.
455. Accrualசேர்வு  

கொடுப்பனவு, நன்மை முதலிய எதையாவது காலப்போக்கில் குவித்தல் அல்லது மிகுத்தல்.
456. accrual of interestசேர்வு வட்டி  

கடனுக்காக அல்லது பிற நிதிச் செயற்பாட்டிற்காகக் கொடுக்கப்பட வேண்டிய ஆனால் கொடுக்கப்படாது சேர்ந்து வரும் வட்டி.  

பொதுவாகக் கணக்காண்டு இறுதியில்,  பத்திரங்கள்  அல்லது கடன்களுக்கான வட்டி திரண்டு சேர்வதாகும்.    
457. accrual of rightஉரிமைச்சேர்வு  

அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட,
ஏற்கப்பெற்ற, ஒப்புக்கொள்ளப்பட்ட செயலுக்கான உரிமைச் சேர்வு.
458. accrual of right to sueவழக்குத் தொடரும் உரிமைச்சேர்வு  

வழக்கு தொடுப்பதற்கான உரிமைச்சேர்வு  

வழக்கு தொடருவதற்கு உரிமை யுடையவர், உரிமையை அடைவதற்கு முன்னர் இறந்துவிட்டால், சட்டபூர்வமாகச் சார்பாளர் வழக்கு தொடுப்பதிலிருந்து காலம் கணக்கிடப்படும்.
459. accrual        வந்துறுகை   (பெயர்ச்சொல்)

சிறுகச் சிறுகத் தொகு, தொகை ஏற்றம்

சேர்வுறுகை,

அடைவுறு,

சேர்ந்தடைவு
460. accrueசேர்ந்தடை   (வினைச்சொல்)

சிறுகச் சிறுகத் தொகு,

சேர்வுறு,

அடைவுறு,

வந்துறு  

தனிப்பட்டவரின் அல்லது வணிகத்தின் வருவாய்,வட்டி, செலவைக் குறிக்கையில் திரண்டு அல்லது குவிந்து சேருவதைக் குறிக்கிறது.

(தொடரும்)

Tuesday, July 2, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

441 .      accountancy      கணக்கியல்

கணக்குப் பதிவியல்,

வணிகக்கணக்கியல் எனவும் குறிப்பிடுகின்றனர்.

442.       accountant         கணக்காளர், கணக்கர்

வணிக நிறுவனத்தின் அல்லது அலுவலகத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதிப் பேணுநர். அவை தொடர்பான அனைத்தையும் மேற்கொள்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர்.

443.       accountant book             கணக்கேடு

கணக்கு பேணப்படுகின்ற புத்தகம்.

444.       Accountant of the Superior Court of Justice         உச்சநீதிமன்றக் கணக்காய்வாளர்

உச்சநீதிமன்ற நீதிபதியின் உத்தரவுப்படி குழந்தைகளுக்கான சொத்துகள் உட்படப் பணத்தை ஏற்பவர், கையாள்பவர். வீட்டு உரிமையாளர், குடியிருப்பாளர்களுக்கான சட்டம் அல்லது சீர்திருத்தம் தொடர்பான சிறு குற்றங்கள் தொடர்பான நீதிமன்றம் சார்ந்த சட்ட நடவடிக்கைகளுக்கான பணத்தை இவர் ஏற்றுக் கொள்ளமுடியாது. இருப்பினும் கணக்காய்வாளர் சட்ட அறிவுரைவழங்க முடியாது.

445.       accountant-general        கணக்காய்வுத் தலைவர்

மாநிலக் கணக்காய்வுத் தலைவர்

கணக்கு-தணிக்கைத் துறையின் தலைவர்.

அரசுத் துறைகளில் உள்ள வருவாய்ச் செலவுகள், உடைமைகள்,பொறுப்புகள் தொடர்பான பயனுள்ள பணியாளுமையைப் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் பொறுப்புள்ள உயர்நிலைத் தணிக்கை அலுவலர் ஆவார்.

இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியல் யாப்பின் கீழ்ப் பணி யமர்த்தப்படுபவர். எனவே அவருக்குக் கட்டுப்பட்டவரேயன்றி எந்த அரசிற்கும் கட்டுப்பட்டவரல்லர்.

446.       accounting procedure    கணக்கியல் நடைமுறை

கணக்கு வைப்பு முறை

கணக்கியல் நடைமுறை என்பது கணக்கியல் துறைக்குள்

ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளத் தரப்படுத்தப்பட்ட வழிமுறையாகும்.

447.       accounting year               கணக்காண்டு

வணிக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளைக் கணக்கிட்டு, நிதிச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் குறிப்பிட்ட காலத்திற்கான – குறிப்பாக 12 மாதங்களுக்கான / ஓராண்டிற்கான கணக்கு ஆகும்.

உணவில் சுவைக்காகச் சேர்க்கப்படும் கூடுதல் பொருள்களைக் குறிக்கிறது.

வீரர்கள், மாலுமிகள், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள்,  தனியார் நிறுவனப்  பாதுகாப்புக் காவலர்கள் போன்ற காப்புப் பணியாளர்களின் உடைவகைகளிலும் ஆயுதங்களிலும் சேராத புறநிலைக் கருவிக்கலன்கள்.

449.       accounts officer               கணக்கலுவலர்

நிறுவனத்தின் அல்லது துறையின் வருவாய்-செலவுக் கணக்குகளை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தும் அலுவலர் கணக்கலுவலர் /கணக்கு அலுவலர்/கணக்கதிகாரி/கணக்கு அதிகாரி எனப்படுகிறார்.

450.       accredit               மதிப்பேற்பு

நிறுவனம்,  கல்வியகம், அல்லது  இவை போன்ற ஒன்றை மதிப்பிட்டு

அதிகார முறையிலான அறிந்தேற்பு அல்லது ஒப்புதல் வழங்குவது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Followers

Blog Archive