Thursday, August 8, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன்

 





(சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

  601. Act of honour    நன்மதிப்புச் செயல்  

நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும்.
602. Act Of Indemnity    இழப்பீட்டுச் சட்டம்  

இழப்பீட்டு ஒப்பந்தம்  

வழுவேற்புச் சட்டம்  

ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது சட்டத்தைக் குறிக்கிறது; செயலை அல்ல.  

வாக்குறுதியளிப்பவரின் அல்லது வேறு ஒருவரின் நடவடிக்கையால்  ஏற்படும் இழப்பிலிருந்து மற்றவரைக் காப்பாற்ற ஒரு தரப்பினர் உறுதியளிக்கும் ஒப்பந்தம் இழப்பீட்டு ஒப்பந்தம் எனப்படுகிறது.  

இழப்பீடுகள் ‘தீங்கற்ற ஒப்பந்தங்கள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன. மற்றொரு தரப்பினரால் ஏற்படும் இழப்புகள், சேதங்கள் அல்லது கடன் பொறுப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் ஒப்பந்தங்கள் இழப்பீட்டு ஒப்பந்தங்கள் என்றும் கூறலாம்.   சட்டத்திற்குப் புறம்பானவையாக நிகழ்பவற்றைச் சட்ட முறையாக்கவோ பொதுப்பணியாற்றுங்கால் தொழில்நுட்ப அளவில் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்குத் தண்டனையிலிருந்து அல்லது ஒறுப்புத் தொகையிலிருந்து விலக்களிப்பதற்கோ இயற்றப்படும் சட்டம்  வழுவேற்புச் சட்டம் எனப்படுகிறது.

வழுவமைப்புச் சட்டம் எனச் சிலர் குறிப்பிடுவதைவிட வழுவேற்புச் சட்டம் என்பதுதான் சரியாக இருக்கும்.
603. Act of insolvencyநொடிப்புச் சட்டம்

நொடிப்புச்  செயல்  

நொடிப்பு நிலை குறித்த சட்டம் நொடிப்புச்சட்டமாகும்.  

நொடிப்பு என்பது பொருளறு நிலை – பொருள் இல்லாமல் அற்றுப்போன நிலை யாகும்.  

நடைமுறையிலுள்ள சட்டப்படி ஒருரை நொடித்தவராகத் தீர்ப்பளிப்பதற்குரிய யாதேனும் ஒரு செயல் நொடிப்புச் செயலாகும்.

நொடிப்பு நிலை தருவினை என முன்னர்க் குறித்தது நீளமாக உள்ளது. எனவே, இப்பொழுது சுருக்கமாக நொடிப்புச்செயல் எனப்படுகிறது.   திவால் என்பது உருதுச்சொல்.   நொடிப்பொழுது அல்லது கணப்பொழுது எடுக்கப்படும் திரைக்காட்சியை(screen shot)யும் நொடிப்பு என்பர்.
604. act of lawசட்ட விதியம்

விதியத்திற்கான சட்டம்  

சட்ட விளைவுச் செயல்  

சட்ட நடவடிக்கை, சட்டச் செயல் என்கின்றனர்.

இங்கே  act என்பதைச் செயல் அல்லது நடவடிக்கை என்னும் பொருளில் பார்க்கக் கூடாது.

Act என்பது சட்ட அமைப்பால் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் – இயற்றப்படும் சட்டம்.  Law  என்பது சட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஒழுங்குமுறை விதிகளை அரசு இயற்றுவது. எனவே (சட்ட)விதியம் எனலாம். (Law  என வரும் இடங்களில் விதியம் எனத் திருத்த வேண்டும்.)
   உரியவரது இசைவின்றியே  சட்டம் செயற்படுவதன் மூலம் ஓர் உரிமை எழுதல், அழிதல் அல்லது மாறுதல் என்பதைக் குறிப்பது சட்ட விளைவுச் செயல் ஆகும்.
605. Act Of Legislature   சட்டமன்றச் சட்டம்  
மாநிலங்களின் சட்டப் பேரவைகளால்(சட்டமன்றக்கீழவை, மேலவைகளால்) இயற்றி ஏற்கப்பெறும் சட்டங்களைக் குறிக்கும்.
606. Act of misconductதீய நடத்தை  

தனித்தோ பிறருடன் சேர்ந்தோ உயர் அதிகாரியின் சட்டபூர்வமான முறையான ஆணைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை அல்லது பணியாமை.  

முதலாளியின் வணிகம் அல்லது சொத்து தொடர்பில் இரண்டகம், நேர்மையின்மை, நம்பிக்கையின்மை, நாணயமின்மை, திருட்டு, மோசடி யுடன் செயற்படல்.   வெறுப்பு நடத்தை, சேதம், திருட்டு, பாதுகாப்பற்ற நடத்தை, பொதுக்கொள்கை மீறல்கள் ஆகியன முதன்மையான தீய நடத்தைகளாகும்.  

சட்டத்தொழிலில், அதில் ஈடுபடுவோரால் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் செயற்படல். அஃதாவது, தன்னல நோக்கங்களுக்காகத் தொழில் நெறிகளை மீறும் செயல்.
607. act of parliamentநாடாளுமன்றச் சட்டம்  

நாடாளுமன்றச் சட்டங்கள், சட்ட அதிகாரத்தின் சட்டவாக்க அவையால் (மக்களவை, மாநிலங்களைவயால்/ நாடாளுமன்றத்தால்) நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளைக் குறிக்கும்.

சில சமயங்களில் முதன்மைச் சட்டம் (primary legislation) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
608. Act Of Parties    தரப்பினரின் செயல்  

எந்த ஒரு செயல், நிகழ்ப்பாடு(விவகாரம்), ஒப்பந்தம், வணிகப்பரிமாற்றம் அல்லது சட்ட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபாடுள்ள அல்லது ஆர்வமுள்ளவர்கள் தரப்பினர் எனப்படுகின்றனர்.

  வழக்காடியின் எதிர்நிலையில் உள்ளவரும் தரப்பார் எனப்படுகின்றனர்.    

சிலர் குறிப்பதுபோல் கட்சியினர் என்றால் அரசியல் கட்சியைச் சார்ந்தவர் எனப் பொருள் வரும் . எனவே, அச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா.  

ஒப்பந்தம் அ்ல்லது வணிகப் பரிமாற்றத்தில் ஈடுபடுநர் உடன்படிக்கையின் தரப்பாராகக் கருதப்படுவர்.

பூசல் அல்லது தகராறு,  வழக்காக மாறும் பொழுது வழக்காடிகள் வழக்கின் தரப்பினர் என அழைக்கப் படுகின்றனர்.   வழக்கு தொடுக்கப்பட்ட பின்பு கூடுதல் தரப்பினர் சேர்க்கப் படலாம்.  

நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கு தரப்பினர் பொதுவான சொற்களால் அழைக்கப் படுகின்றனர்.   உரிமை வழக்கில், வழக்கு தொடுப்பவர் வாதி என்றும் வழக்கிற்கு ஆளாகிறவர் எதிர்வாதி என்றும் அழைக்கப் படுகின்றனர்.

  குற்ற வழக்குகளில் அரசாங்கத் தரப்பு அரசு என்றும் எதிர்த்தரப்பு எதிரர்/எதிர்வாதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.  

மேல்முறையீடு செய்பவர் மேல் முறையீட்டாளர் என்றும் அதற்கு உள்ளாகிறவர் மேல்முறை யீட்டு எதிரர் எனவும் அழைக்கப் படுகின்றனர்.
609. Act of public enemyபொது எதிரியின்  செயல்  

குமுகாயத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஆளின் செயல்.  

“பொது எதிரி” என்பது 1930 களில் அமெரிக்காவில் முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்.

குமுகாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்கள் புரிவோரையும் சட்ட முரண் செயல்களைச் செய்வோரையும் குறிப்பது.
610. Act Of State   அரசுச் செயல்  

கொள்கை அல்லது அரசின் தேவைக்காக இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. எனவே, இறையாண்மை சார் செயல் என்றும் கூறுகின்றனர்.   இறையாண்மை சார் செயல் அல்லது இறைமை நிலைச் செயல் என்பதன் மூலம், ஒரு நாடு தன்னுடைய இறைமை நிலையில் மற்றோர் இறையாண்மை நாட்டுடன் அல்லது அம்மக்களுடன் மேற்கொள்ளும் செயலைக் குறிக்கின்றனர். இச்செயல் அந்நாட்டின் செயலாண்மைப் பணியிலிருந்து – நிருவாகச் செயலிலிருந்து – வேறுபட்டது. இது குறித்து எந்த நீதிமன்றத்திலும் வழக்கிட முடியாது.  

அரசுச்செயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அச்செயலைச் செய்தவர் பொறுப்பாக மாட்டார். சான்றாகப் பொதுநலன் கருதி சாலையை அகலப்படுத்துதல், பாலம்அமைத்தல், போன்ற நலப்பணிகளைப் புரிய நிலத்தைக் கையகப்படுத்தும் அரசின் செயலைப் புரியும் சட்ட முறைமையான அதிகாரி குற்றவாளியாக மாட்டார்.   அஃதாவது, இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய சட்டப்படியான அதிகாரி பொறுப்பாக மாட்டார். ஆனால், உரிய சட்டத்தில் இழப்பீடு குறிக்கப்பட்டிருந்தால் மட்டும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.  

அரசின் அனைத்துச் செயல்களையும் குறிப்பிடாமல், சட்டத்தால் உருவாக்கப்பட்ட தனி விலக்குரிமைகள், தடைகள், வழக்காய்வு செய்யலாகாது என நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுறை விளம்புரைகள் ஆகிய சிலவற்றைச் சுட்டும் செய்கை. (சவுராட்டிர அரசு எதிர் ஃகாசி இசுமாயில் 1960 உ.நீ.அ.(SCR) 537)

Tuesday, August 6, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்

      07 August 2024      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

591. Act judiciallyநீதித்துறைச் சட்டம்  

வெவ்வேறு துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இங்கே நீதித்துறைச் செயற்பாட்டிற்காக இயற்றப்படும் சட்டங்களைக் குறிக்கிறது.
592. Act making an offenceகுற்றம் விளைவிக்கும் செயல்

குற்றம் விளையக் காரணமாகும் எச்செயலும்.  

சட்டம், வழக்காறு, விதி போன்றவற்றை மீறல் அல்லது குலைத்தல் குற்றம் நேரக்/நிகழக்  காரணமாவதால் குற்றச் செயலாகிறது.
593. Act of a child under seven years of ageஏழு அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல்  

இந்தியத் தண்டிப்புப் தொகுப்பு, பிரிவு 82 இன்படி 7 அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல் எதுவும் குற்றமாகாது.  

எத்தீங்கும் செய்ய மாட்டாமை(doli incapax) என்னும் இலத்தீன் தொடரில் இருந்து இக்கருத்தாக்கம் உருவானது.  

காண்க: Acts of child
594. Act of a person of unsound mindமன நலமற்றவரின் செயல்  

செயலின் தன்மையைப் புரிந்து கொள்ள இயலாத அல்லது தான் செய்யும் செயல் தீங்கானது அல்லது சட்டத்திற்கு முரணானது என உணர்ந்து கொள்ள இயலாத சூழலில் மன நலம் குன்றியவர் செய்யும் எச்செயலும் குற்றமாகாது என இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 84 கூறுகிறது.
595. Act of bad faithநம்பிக்கை வஞ்சச் செயல்

தீங்கெண்ணச் செயல்   நம்பிக்கை வருவதுபோல் வஞ்சகமாக நடந்து கொண்டு ஏமாற்றும் இரண்டகச் செயல்.
596. Act of bad faith for benefit of a person without consentஒருவரின் ஆதாயத்திற்காக இசைவின்றிச் செய்யப்படும் தீச் செயல்  

ஒருவர், தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தவருக்கு ஆதாயம் ஏற்படுவதற்காகத் தீய நோக்குடன் செய்யும் செயல்.

இது தண்டனைக்குரிய குற்ற செயலாகும்.
597. act of conveyance  மாற்றளிப்புச் செயல்  

மாற்றுரிமை  

உரிமை மாற்றச் சட்டம்  

உடைமையின் உரிமைப்பட்டயம், உரிமை,  நலன்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுதல்.

பொதுவாக நாம் conveyance என்றால் பயண வகை, ஊர்தி வகை, கொண்டு செல்கை, வையம்(வாகனம்), இவரி(சவாரி – உருதுச் சொல்),  செல்கலம்/ செல்கலன் (செல்வதற்குரிய வண்டி), வண்டி,ஊர்தி, போக்குவரத்துச் செலவு, பயணப்படி எனப் போக்குவரத்துத் தொடர்பிலேயே கருதுவோம். ஆனால் சட்டத்துறையில் உரிமைமாற்றளிப்பு, உரிமைமாற்றளிப்பாவணம் என உரிமை மாற்றச் செயற்பாட்டையே குறிக்கிறது.
598. Act of crueltyகொடுஞ்செயல்  

மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ வலி, துன்பம், ஊறு, உயிரிழப்பு நேர்விக்கும் வன்மையான செயல்.  

ஒரு பெண்ணிற்கு அவள் கணவனோ கணவனின் உறவினர்களோ கொடுமை இழைத்தால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, ஒறுப்புத் தொகை விதிக்கப்படும். (இ.த.தொ. பிரிவு 498.அ.)

சட்டப்புறம்பான கோரிக்கை மூலமோ தாங்க இயலாக கொடுமை இழைப்பின் மூலமோ பெண்ணின்மரணத்திற்கு அல்லது தற்கொலை முயற்சிக்குக் காரணமானவர்கள், உயிரிழப்பிற்குக் காரணமான அல்லது கொலை முயற்சிக்கான குற்றமிழைத்தவர்களே.

கணவனைக் கொடுமைப்படுத்தினால் அதற்குக் காரணமானவர்களுக்கும் இது பொருந்தும்.  

விலங்குகளுக்குக் கொடுமை இழைப்பதிலிருந்து காப்பாற்ற விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1960(The Prevention Of Cruelty To Animals Act, 1960) உள்ளது.

விலங்குகள் இழுக்கும் வண்டிகளில் அதிகச் சுமை ஏற்றுதல், அடைத்து வைத்தல் சங்கிலியால் அல்லது வேறு வகையில் முரட்டுத்தனமாகப் பிணைத்து வைத்துத் தேவையற்ற துன்பங்களை ஏற்படுத்தல், உணவு அல்லது தண்ணீர் வழங்காமல் இருத்தல், அழுக்கு அல்லது ஒட்டுண்ணி நிலையில் வைத்தல், கால்நடை மருத்துவ உதவி வழங்காமை, முதலான பலவும் தடைசெய்யப்பட்ட பட்டியலாக இச்சட்டம் தெரிவிக்கிறது.  

மான் முதலிய விலங்கின வேட்டையும் கொடுஞ்செயல் பாற்பட்டதே.
 599. Act Of Godஇயற்கைச் செயல்  
இறைமைச் செயல்
தெய்வச் செயல்  

நிலநடுக்கம், கடல்கோள், போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரிடர் அலலது பெருமிழப்பு. இவை மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக உள்ளதால் இறைமைச் செயல் அல்லது இயற்கைச் செயல் எனப்படுகிறது.  

இயற்கைச் சட்டம், இறைமைச் சட்டம், தெய்வச் சட்டம் என Act என்பதைச் சட்டம் என்று கையாள்வதை விடச் செயல் என்பதே ஏற்றதாகும். அல்லது நிகழ்வு எனலாம். நேர்ச்சி என்பதும் பொருந்தும்.

இயற்கை இடர்களையெல்லாம் சட்டமாகக் கூறுவது பொருந்தாது அல்லவா?  

கடல்வழிச் சரக்குகளின் இந்தியச் சட்டம் 1925, இயற்கைச் செயலால் ஏற்படும் இழப்பு குறித்துக் கூறுகிறது.
600. Act of graceஅருட் செயல்  

சட்டச் செயற்பாடு அல்லது தண்டிப்பு நோக்கில் மட்டும் செயல்படாமல் பரிவுக் கண்ணோட்டத்துடன் குற்றவாளியை அணுகுவது அருட் செயலாகும்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை(திருக்குறள் 579) எனத் தண்டனைக்குரியவரையும் பொறுத்து – மன்னித்து விடுமாறு திருவள்ளுவர் கூறும் கண்ணோட்டம் இதுவே.

Sunday, August 4, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

581. Act Done By Consent In Good Faith For Person’s Benefitஒருவரின் நலன் கருதி அவர் இசைவுடன் மேற்கொள்ளப்படும் நன்னம்பிக்கைச் செயல்  
இந்தியத் தண்டிப்பு த் தொகுப்புப்  பிரிவு 93, நன்னம்பிக்கையிலான தகவல் தொடர்பை வரையறுக்கிறது.

நன்னம்பிக்கையின் அடிப்படையில் ஒருவரின் நன்மை கருதி அவருக்குத் தெரிவிக்கப்படும் தகவல். இதனால் அவருக்கு எத் தீங்கு ஏற்பட்டுத் துன்புற்றாலும் குற்றமாகாது.  

மருந்துகள், ஒப்பனைப்பொருள்கள் சட்டம், 1940 பிரிவு 37 நன்னம்பிக்கையில் மேற்கொள்ளப்படும் செயல்களுக்குப் பாதுகாப்பு தருகிறது. இதன்படி நன்னம்பிக்கையில் செய்யப்பெற்ற அல்லது செய்யத் திட்டமிட்டுள்ள செயலுக்காக ஒருவர் மீது வழக்கு தொடுக்கவோ குற்றம் சுமத்தவோ வேறு சட்ட நடவடிக்கை எடுக்கவோ இயலாது.
582. Act Done In Good Faithநன்னம்பிக்கைச் செயல்   நல்லெண்ணச் செயல்
நல்லெண்ண நம்பிக்கையுடன்  செய்யப்படும் செயல்.  

இ.த.தொகுப்பு 92, நன்னம்பிக்கைச் செயலைக் குறிப்பிடுகிறது.   நனனம்பிக்கையில் செய்யப்படும் எச்செயலும் குற்றமாகாது என்பதே இவ்விதி. உரியவரின் ஒப்புதலின்றி நன்னம்பிக்கையில் செய்யப்படும் செயலால் உரியவருக்குத் தீங்கு நேர்ந்தாலும் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.   பொதுவாக நல்லெண்ணச் செயல் என்றே கூறுவர். நல்லெண்ணம் மட்டுமல்ல. தான் நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளும் செயலால் தீங்கு நேராது என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்.   சான்றாக ஒருவர் எதிர்பாரா நேர்ச்சியால் குற்றுயிரும் குறையுயிருமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். மயக்க நிலையில் இருக்கும் அவரிடம் இசைவு பெற இயலாமலும் அவரது உற்றார் உறவினர் யாரென அறியாமலும் அவரைக் காப்பாற்ற வேண்டி மருத்துவர் பண்டுவம் அல்லது அறுவை மருத்துவம் மேற்கொள்கிறார். ஒருவேளை இதனால் அவருக்குத் தீங்கு நேர்ந்தாலும் இது குற்றமாகாது. காண்க: 581.:              Act Done By Consent In Good Faith For Person’s Benefit
583. Act done in good faith  for the benefit of childகுழந்தை/சிறார் நலனுக்கான நன் னம்பிக்கை செயல்  

இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 89இன்படி,   மன நலங்குன்றியவருக்கு அல்லது 12 அகவைக்குட்பட்ட சிறாருக்கு, அவரின் பேணாளர் அல்லது சட்டப்படியான பொறுப்பாளர் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒப்புதலுடன் அல்லது ஒப்புதல் இன்றி நல்லெண்ணத்தில் மேற்கொள்ளப்படும் செயல் தீங்கு விளைவித்தாலும் குற்றமாகக் கருதப்பட மாடடாது.  

எடுத்துக்காட்டாக,   ‘அ’ என்பவர் தன் குழந்தை நலன்கருதி குழந்தையின் ஒப்புதலின்றி,  அக்குழந்தைக்கு இறப்பு நேர வாய்ப்புள்ளதை அறிந்தாலும்,  ஆனால், அக்குழந்தையை இறக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கமின்றி அறுவை மருத்துவத்திற்கு ஒப்புக் கொள்வது. இதனால், அதுபோல் நலமடையவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மருத்துவர் மேற்கொள்ளும் செயலால் தீங்கு நேர்ந்தாலும் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.

காண்க : 581. Act Done By Consent In Good Faith For Person’s Benefit & 582. Act Done In Good Faith
584. Act done in private defenceதனிப்பட்ட பாதுகாப்பிற்காக மேற் கொள்ளப்படும் செயல்   இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 100, தனிப்பட்ட பாதுகாப்பிற்கான செயலை  ஏற்கிறது.

          இல்லாவிட்டால் பேரிடர் அல்லது ஆபத்து விளைவிப்பவரால் உயிர் போகலாம் அல்லது பெருந் தீங்கு நேரலாம் அல்லது கற்பழிப்பிற்கு ஆளாகலாம் அல்லது அமில வீச்சிற்கு  ஆளாகலாம் அல்லது கடத்தப்படலாம் அல்லது அடைத்து வைக்கப்படலாம் போன்று நேர உள்ள பேரிடரைத் தவிர்க்க வேறு வழியின்றித் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் செயல் குற்றமாகாது.   இதேபோல், எதிர்பாராப் பேரிடரை அல்லது ஆபத்தை எதிர்நோக்க வேறு வழியின்றி மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூடும் குற்றமாகாது.    

தில்லியில் 2012இல் குழுக் கற்பழிப்பால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிருபயா வழக்கின் பின், குற்றவியல்  (திருத்தம்) சட்டம் 2013 இயற்றப்பட்டுத் தனியர் பாதுகாப்பிற்குச் சட்ட ஏற்பை முழுமையாக அளிக்கிறது.
585. Act Done Under Colour Of Officeஅதிகாரப் போர்வைச் செயல்  

எத்தகைய அரசாங்க பொறுப்பும் இல்லாத ஒருவர், ஒரு பொது ஊழியராகப் பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படிப் பொறுப்பில் இல்லாத போது, பொறுப்பில் உள்ள ஒரு பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்வதும் குற்றமாகும். இப்படிப் பொறுப்பில் இருப்பது போல நடித்து எத்தகைய செயல் செய்தாலும் அல்லது செய்ய முயன்றாலும் குற்றமாகும்.

இ.த. தொ.பிரிவு 170 இன் கீழ் இக்குற்றம் ஈராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் தண்டனைக்குரியது.

ஒரு பொது ஊழியர், தனக்குரியதல்லாத பொறுப்பில் இருப்பதாக நடித்துத் தவறான அதிகாரத்தைச் செயல்படுத்துவதும் தண்டனைக்குரிய ஆள்மாறாட்டமே.
586. Act Done Without Criminal Intent And To Prevent Other Harmsகுற்ற நோக்கின்றியும் பிற தீமைகளைத் தடுப்பதற்காகவும் செய்யப்படும் செயல்

இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 81 இன்படி தீங்கு நேர்விக்கும் செயல், ஆனால், தீங்கு விளைவிக்கும் எந்தக் குற்ற நோக்கமுமின்றி அச்செயல் செய்யப்பட்டிருப்பின் அது குற்றமாகாது என்கிறது.

இச்செயல் நன்னோக்கத்தில், தனியருக்கோ உடைமைக்கோ தீங்கு நேர்வதைத் தவிர்ப்பதாகவோ தடுப்பதாகவோ இருக்க வேண்டும்.   எடுத்துக்காட்டாகத் தீ பரவி வரும் இடத்தில், அத்  தீ பிற இடங்களில் பரவுவதை, அதனால் பிற உயிருக்கோ உடைமக்கோ தீங்கு நேர்வதைத் தடுக்கும் நோக்கத்துடன்,  அந்த இடத்திலோ அருகிலோ உள்ள வீட்டிலுள்ளவரை/ வீட்டில் உள்ளவர்களை அல்லது உடைமைகளை வெளியே இழுத்துப் போட்டாலும்  அதனால் தனியருக்கோ உடைமைக்கோ சேதம் ஏற்பட்டாலும் அது குற்றமாகாது.
587. Act, Entitled toசெயற்பாட்டு உரிமையர்
செயற்பாட்டுத்  தகுதியர்  

நிலம் கையகப்படுத்தல் சட்டம், பிரிவு 3 (எ)/ Section 3(g), L.A.A. செயற்பாட்டு உரிமையாளர்கள் குறித்துப் பின் வருமாறு வரையறுக்கிறது.  
அ) பயனளிக்கும் வகையில் ஆர்வமுள்ள பிறருக்கான அறங்காவலர்கள், அத்தகைய வழக்கு தொடர்பாக,  – பயனுறும்  ஆர்வமுள்ளவர்கள் செயல்படும்  அதே அளவிற்குச் – செயல்படத் தகுதி யுள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்,  

ஆ.) சிறார்களின் பாதுகாவலர்,  மன நலங்குன்றியோர் அல்லது பிறவி மந்த மனம் கொண்டோருக்கான குழுக்கள் அல்லது மேலாளர்கள், அத்தகையோர் இயலாமையிலிருந்து விடுபட்டிருந்தால் செயற்படுவதற்குரிய அதே அளவில் செயற்படத் தகுதியுடையவர்கள்.

  உரிமைக்குரிய சட்டம் என்று குறிப்பது தவறாகும். உரிமையுரை சட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
588. Act in his application to a districtமாவட்டத்திற்குப் பொருந்தும் வகையிலான செயல்  

உரிய மாவட்டத்திற்குரிய செயற்பயன்பாடு
589. Act in his  discretion, toசதுரப்பாட்டிற்குரிய செயல்

மனத்தேர்விற்குரிய செயல்  

குடியரசுத்தலைவர், ஆளுநர், முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள், முடிவெடுக்க இயலாச் சூழல் இருக்கும் பொழுது மனத்தேர்விற்கேற்பச் செயல்பட உரிமையுடையவர்கள்.

விருப்புரிமை என்பது விருப்பு வெறுப்பு அடிப்படையிலான முடிவு எனப் பொருள்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா.

சதுரப்பாடு எனக் குறிப்பதும் சரியான சொல்லே.

discertion எனச் சில நூலில் இடம் பெற்றுள்ளது அச்சுப்பிழையாகும்.
590. Act in operationசெயற்பாட்டிலுள்ள சட்டம்  

வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரு பொருள் குறித்துச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நேர்வில் நடைமுறையில் உள்ள சட்டத்தைக் குறிப்பது.  

சட்டம் காலாவதியாகவில்லை. நடைமுறைப் பயன்பாட்டில் உள்ளது என்பதைக் குறிப்பது.    

Thursday, August 1, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன்

      02 August 2024      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

Acrobaticவான் சூழ்ச்சிச் செலவு

  கழைக்கூத்தாடி
செப்பிடு வித்தைக்காரன்
கழைக் கூத்தாடிக்குரிய,
குட்டிக்கரணம் இடுகிற  

வான்வழிப்பயணத்திற்குத் தேவையில்லாத பொழுது மேற்கொள்ளப்படும்  சூழ்ச்சியான வான்வழிச் செல்லுதலைக் குறிக்கிறது.
Acrossகுறுக்காக,

கடந்து   ஒரு பரப்பின் ஊடாகச் செல்லுதல்
Across a customs frontier, taking itசுங்க எல்லை முழுவதும்  

ஒரு சுங்க எல்லையைக் கடந்து, எடுத்துச் செல்லுவதைக் குறிக்கிறது.
Act  சட்டம்  
சட்டகை,
செய்சட்டம்,  
செயல்/செய்கை  
  நடி, நடிப்புக் களம்,
தொழில்,
நாடகம்,
வினை,  
மத்திய மாநிலச் சட்ட அவைகளால் –  நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளால் – நிறைவேற்றப்படும் விதி, சட்டம் எனப்பெறுகிறது. சட்டவிதி என்றும் கூறப்படும்.  

இந்தியத்தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 33,  செயல்களின்/ செய்கைகளின் வரிசையையும் – அஃதாவது – தொடர் செயல்களையும் – ஒரே செயலாகக் குறிக்கிறது.

குற்றம் அல்லது தீங்கு இவற்றைக் குறிக்கும் பொழுது செயல் என்ற சொல் செயல் வரிசைகளையும் செய்தக்க செய்யாமைகளையும் உட்படுத்தும்(பொதுவிளக்கச்சட்டம்).
Act abetted different from that intended by the abettorகுற்றச் செயல் விளைவிற்குப் பொறுப்பாகும்  

குற்ற உடந்தையர் செயல் குற்ற உடந்தையர் நோக்கத்திலிருந்து வேறுபட்டது.
Act and lawசட்டமும் விதியமும்  

Act என்பது சட்ட அமைப்பால் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் – இயற்றப்படும் சட்டம். 

Law  என்பது சட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஒழுங்குமுறை விதிகளை அரசு இயற்றுவது. எனவே (சட்ட)விதியம் எனலாம்.
Act bonafideநம்பிக்கைச் செயல்  

நல்லெண்ணச் செயல்  

நன்னம்பிக்கையுடன் அல்லது நல்லெண்ணத்துடன் கபடமோ வஞ்சகமோ இன்றிச் செய்யப்படுவது.  

நன்னம்பிக்கை அல்லது நல்லெண்ணச் செயலால் தவறு விளைந்தாலும் அறிந்தே செய்த குற்றமாகக் கருதப்படாது.

  காண்க: act done in good faith
Act constituting an offenceகுற்ற உருவாக்கச் செயல்  

ஒருவரின் அல்லது ஒரு கூட்டத்தாரின் செயலால் குற்றம் நேரும் பொழுது அச்செயல் குற்ற உருவாக்கச் செயல் எனப்படுகிறது.
Act,centralமத்தியச் சட்டம்  

ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்படும் மாநிலங்களுக்குப் பொதுவான சட்டம்.  

மத்தியச்சட்டம் என்பது நாடாளுமன்றச் சட்டம்.  இந்திய அரசியல் யாப்பு நடைபெறுவதற்கு முன்பு தன்னாட்சி அரசால் இயற்றப்பட்ட சட்டம் அல்லது தலைமை ஆளுநரால் இயற்றப்பட்ட சட்டம்.
Act Done At Requestவேண்டியதால் மேற்கொள்ளப்பட்ட செயல்  

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 இன்படி உறுதியர்(வாக்குறுதி அளிப்பவர்/promisor) வேண்டுதலுக்கேற்பச் செய்யப்படும் செயல்கள். இவற்றால் உறுதியருக்குத் தனிப்பட்ட பயன் இல்லை என்றாலும் நல்ல  கருதுகையாக எண்ணப்பட்டுச் சட்டத்தாலும் செயற்படுத்தப்படுகிறது.

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive