Tuesday, September 24, 2024

சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!)- இலக்குவனார் திருவள்ளுவன்

 




மரு.சுதா சேசையனைச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக அமர்த்திய பொழுது செய்தி ஆசிரியர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார். தெரிவித்தவர், “தமிழறிஞர் அல்லாத ஒருவரை எப்படி நியமிக்க முடியும்? கண்டித்து அறிக்கை வெளியிடுங்கள். வெளியிடுகிறோம்” என்றார். நான் அதற்குத், “தமிழ் தொடர்பான துறை என்றால் தமிழறிஞரல்லாதவர் அல்லது தமிழறியாதவர் அல்லது தமிழரல்லாதவரை அமர்த்துவதுதான் மரபு. இம்மரபைப் பின்பற்றி யுள்ளனர். இதில் கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது” என்றேன். மேலும் “இஃது ஓர் அதிகாரமில்லாத பதவி. இதை அறியாமல் அவர் வந்திருக்கலாம். இவர் வந்த பின்னராவது இப்பதவிக்கு அதிகாரம் கிடைக்கட்டுமே! எனவே, அவரை வரவேற்கலாமே!” என்றேன்.

ஆனால் நாளிதழ் ஆசிரியர் ஒருவர் இவரை வரவேற்றதுடன் நில்லாது,”தமிழைப் போலவே சமற்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் புரிதல் உள்ள ஒருவர்தான் அந்தப் பதவியை வகிப்பதற்குத் தகுதியானவர். என்னதான் தனித்தமிழ் குறித்துப் பேசினாலும், சமற்கிருதத்துடனான ஒப்பீட்டுப் பார்வை இல்லாமல் தமிழாய்வு என்பது முழுமை யாகாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.  பூனைக் குட்டியை வெளியே விட்டுவிட்டனர்

பிற்காலத்தில் மணிப்பிரவாளம் செல்வாக்காக இருந்த பொழுது தமிழ் மட்டும் அறிந்த புலவரை அரைப்புலவர் என்று எள்ளி நகையாடினர். அதைப்போல் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.  மருத்துவக் கல்லூரி, சிற்பக் கல்லூரிகளில் சமற்கிருதம் பாடமாக இருந்ததை  அரும்பாடுபட்டு நீக்கிய பின் மீண்டும்  அம்முறையைக் கொண்டுவர எண்ணுகிறார்கள் போலும். தமிழறிஞர்கள் பிற எந்த மொழியையும் எத்தனை மொழியையும் அறிந்திருப்பது சிறப்பதுதான். ஆனால், செம்மொழி யல்லாத சமற்கிருதம் அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இனிச் செம்மொழி நிறுவனப் பதவிகளுக்கெல்லாம் சமற்கிருத அறிவு தேவை எனக் கொண்டு வந்தால் வியப்பதற்கில்லை. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எனவே நாம் இக்கருத்தைக் கண்டிக்க வேண்டும்.

  மேலும் இவர்பற்றிய குறிப்புகள் எதிலும் இவர் சமற்கிருதப் புலவர் எனக் குறிப்பிட வில்லை. ஒரு வேளை இவர் சார்ந்த குலத்தின் அடிப்படையில் சமற்கிருதம் அறிந்திருப்பார் எனக் கருதி அதைப் புலமையாகக் குறிப்பிடுகிறார் போலும். ஒருவேளை இவர் சமற்கிதத்தில் புலமை மிக்கவராக இருந்தாலும் அது குறித்து நமக்குக் கவலையில்லை.

மேலும், “சங்க இலக்கியமானாலும், சமய இலக்கியமானாலும்…. … ஒருசேரப் புலமை வாய்ந்த ஒருவர் ” என்கிறார்.

இவர் சங்க இலக்கியப் புலமை மிக்கவராக எங்கும் கூறியதில்லை.  ஆன்மிக/ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்றுதான் கூறப்படுகிறார். அதுவும் அரசுப் பதவியில் இருந்த பொழுதே பெரும்பாலும் இவற்றிலேயே நேரத்தைச் செலவழித்தவர் என்றும் கூறப்படுகிறார். அப்படியானால் இனி, இறைநெறிச் சொற் பொழிவாளர்கள், கதைப் பொழிவாளர்கள், தொகுப்பாளர்கள் முதலானோர் தமிழ் சார்பான பணிகளுக்கு நியமிக்கப்படுவார்களோ?

 சமய இலக்கியம் என்பது கி.பி. 7 ஆம் நூற்றாண்டுதான். “கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்க்குமுகம் பற்றிய ஆய்வுகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது” என இதன் நோக்கம் தெளிவாகக் கூறுகிறது. எனவே, செம்மொழிக் காலம் இல்லாத பிற கால இலக்கியப் புலமை குறித்துப் பேசுவதற்கே வாய்ப்பில்லை. எனவே, இவற்றைத் தகுதியாகக் கொள்ள இயலாது. சிறந்த பல் மருத்துவர் என்பதற்காகக் கண் மருத்துவம் பார்க்க அவரிடம் ஒப்படைக்க இயலாது. மரு.சுதா சேசையன் மருத்துவக் கல்வியிலும் மருத்துவப் பணியாண்மையிலும் பட்டறிவு மிக்கவர். அவர் பட்டறிவிற்கும் பணியறிவிற்கும் ஏற்ற பதவியை அளித்தால் வரவேற்கலாம். அனைத்திந்திய மருத்துவக் குழு, தேசிய மருத்துவ ஆணையம் போன்றவற்றில் பதவி வழங்கினால் மகிழலாம். அதைவிட்டு விட்டுச் செம்மொழி நிறுவனத்தில் புகுத்துவது ஏன் என்பதுதான் தமிழறிஞ்களின் கேள்வி; தமிழன்பர்களின் வருததம்.

இன்னும் சிலர் “இதன் தலைவர் முதல்வர். அவரே பாசகவிற்கு அஞ்சி வாய்மூடி அமைதி காக்கிறார். நீங்கள் ஏன் குதிக்கிறீர்கள்” எனத் தமிழன்பர்களைக் கேட்கின்றனர். அவருக்கும் சேர்த்துத்தான் தாங்கள் குரல் கொடுப்பதாகத் தமிழன்பர்கள் கூறி வருகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் கீதையைப் புகுத்தியதுபோல் கல்வித்துறைகளில் வரணாசிரமத்தை – சனாதனத்தை – புகுத்தி வருவதுபோல் தமிழாய்வு நிறுவனம் மூலம் இவற்றைப் புகுத்துவதே ஒன்றிய அரசின் நோக்கம் என்கின்றனர். இதை நாம் மறுப்பற்கில்லை. எனவேதான்  தமிழாய்வு நிறுவனத்திற்குச் சமற்கிருதப்புலமை அறிந்தவர் இருப்பதே சிறப்பு என்று குரல் எழுகிறது.

இந்தியாவில் 18 சமற்கிருதப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. உலகெங்கும் ஒன்றிய அரசு பல்வேறு சமற்கிருத அமைப்புகளை நடத்துகின்றது. இவற்றிலெல்லாம் உலகின் மூத்த செம்மொழியான தமிழ் அறிந்தவர் அமர்த்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தால் இவரின் நாணயத்தைப் பாராட்டலாம். அவ்வாறில்லாமல் தமிழ் நிறுவனங்களில் மட்டும் சமற்கிருதம் வேண்டும் என்பது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியே!

பிற அமைப்புகள் போல் இந்நிறுவனத்தின் அதிகாரம் மிக்க அமைப்பு ஆட்சிக் குழுதான். இதில் இவரைத் துணைத்தலைவராகச் சேர்த்திருப்பதன் மூலம் துணைத் தலைவர் பதவியை அதிகாரம் மிக்க பதவியாக மாற்றி அதன் மூலம் சமற்கிருதத்தைத் தமிழுக்கு மேம்பட்டதாக அறிவிக்கச் செய்யச் சதி நடப்பதாக உணர்வதால் இது கண்டிக்கத்தக்கதே! எனவே, இவரின் நியமனமும் கண்டனத்திற்குரியதே கண்டனத்திற்குரியதே!

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.   (திருவள்ளுவர்திருக்குறள்௬௱௫௰௨ – 652)

தலைவர்

தமிழ்க்காப்புக் கழகம்

Sunday, September 22, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

791. Administration Bondபணியாட்சிப் பத்திரம்

பிணை முறி விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட அல்லது நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சொத்துரிமை விண்ணப்பத்தில் நீதிபதியால் கோரப்பட்ட பிணையர்கள் உறுதிமொழி.

உடைமையின் பணியாட்சியரால்,  விருப்புறுதி/இறுதி முறிக்கேற்பச் செயற்படுவதற்கான உறுதி மொழி அளிக்கும் பத்திரம். – இந்திய மரபுரியமையர் சட்டம் 1925(Indian Succession Act, 1925)
792. Administration Of Justice    நீதிப் பணியாண்மை  

நீதிப் பணியாண்மை என்பது அரசின் முதன்மைச் செயல்பாடாகும்.

இது பொதுவாக உரிமையியல் நீதிமன்றப் பணியாண்மை, குற்றவழக்கு நீதிமன்றப் பணியாண்மை என இரு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.   குற்றவழக்கு நீதிப் பணியாண்மை என்பது, தவறு செய்தவர்களைத் தண்டிப்பது. குற்றவாளிகளைத் தண்டிப்பது அரசுதான்.
793. Administration Suits   பணியாண்மை வழக்குகள்.  
பணியாண்மையால் ஏற்படும் சிக்கல்கள், பாதிப்புகள், தீய விளைவுகள், கேடுகள் தொடர்பான அல்லது அவற்றிற்கு எதிரான வழக்குகள்.
794. Administration, Letters Of    பணியாண்மை ஆவணங்கள்.  

letter  என்பது பொதுவாக மடலைக் குறித்தாலும், நடைமுறையில் எழுதப்பட்டுள்ள எதையும் குறிக்கும். எனவே, இந்த இடத்தில் ஆவணம் என்று பொருள்படும். சிலர் பத்திரம் என்பர். பொறுப்பு அமர்த்தல் ஆணையைப் பத்திரம் எனச் சொல்வதைவிட ஆவணம் என்பது பொதுவானதாக அமையும்.

விருப்புறுதியாளரின் இறுதி முறி அல்லது விருப்ப முறி இல்லாத பொழுது, அவருடைய சொத்தின் பணியாண்மைப் பொறுப்பை ஏற்பதற்கு அல்லது அதனைக் கையகப்படுத்துவதற்கு அல்லது அதனை முடிவு கட்டுவதற்கு குறிப்பிட்ட ஒருவரை அமர்த்தும் சட்ட முறையான ஆவணம்.
795. Administrative Adjudicationபணியாட்சித் தீர்ப்பு

நிருவாக நீதிமுறைத் தீர்மானிப்பு

துறைக்குள்ளேயே பகுதி நீதித்துறைபோல் செயல்பட்டு  உசாவல் மேற்கொண்டு அளிக்கப்படும் தீர்ப்பு.

வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை முதலான பல துறைகளில்  துறையுடன் பிணக்கு உள்ள பொதுமக்களுக்கும்  பொதுவாகத் துறைகளில் துறைப்பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளில் அந்தந்தத் துறைத்தலைமையும் உசாவித் தீர்ப்பளிக்கின்றன.

பல்வேறு மாநிலங்களும் ஒன்றிய அரசும் பணியாட்சித் தீர்ப்பிற்கென் தீர்ப்பாயங்கள் வைத்துள்ளன.

இந்திய அரசு, பணியாளர்கள் பொதுக் குறைகள் ஓய்வூதிய அமைச்சகம், பணியாளர் – பயிற்சித் துறை, பணியாட்சித் தீர்ப்பாயங்கள் சட்டம் 1985 (மத்திய சட்டம் 13/1985) கீழ் 12.12.1988 முதல் தமிழ்நாடு மாநிலத் தீர்ப்பாயம் செயல்பட்டது.  சில ஆண்டுகளில் தமிழ்நாட்டரசின் பரிந்துரைக்கிணங்கக் கலைக்கப்பட்டது.  
796. Administrative Body   பணியாண்மைக் குழாம்  

பணியாளுமையை மேற்கொள்ளும் பணியாளர், அலுவலர் தொகுதி.  

உள்நாட்டு/வெளிநாட்டு/தேசிய/கூட்டாட்சி/மாகாண/மாநில/நகராட்சி/ பிற உள்ளாட்சிகள்/ அல்லது ஒழுங்குமுறை அமைப்பு, மற்றும் எந்த ஒருகோட்டம்/பிரிவு/ முகவாண்மை/ அமைச்சு/ ஆணையம்/ வாரியம் அல்லது அதிகாரத்துவம் அல்லது அரசு சார் அமைப்பு அல்லது தனியார் அமைப்பு அல்லது பன்னாட்டு நீதி மன்றம்/நீதித்துறை அதிகார அமைப்பு/ தீர்ப்பாயம்/பணியாண்மை நீதிமன்றம்/ ஆணையம்/கழகம்/நிறுவனம் அல்லது முற்கூறியவற்றின் கீழ்ச் செயல்படும் அமைப்பின் அலுவலகத்தை நடத்தும் குழு.  

அலுவலக ஆட்சியைக் கவனிப்பதைப் பணியாட்சி என முதலில் குறித்திருந்தேன். மேலாண்மை என்பதுபோல் பணியாண்மை என்பது ஏற்றதாக இருக்கும் என்பதால் பணியாண்மை எனக் குறித்துள்ளேன்.   நிருவாக அமைப்பு என்பர். நிருவாகம் என்பதைவிடத் தமிழ்ச்சொல்லான பணியாண்மையே ஏற்ற சொல்லாகும்.  பணியாண்மையிலேயே அமைப்பு முறையும் அடங்கி விடுகிறது. எனவே, தனியாக அமைப்பு என்று சொல்ல வேண்டா. Body என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அமைப்பினைச் செயற்படுத்தும் குழுவைக் குறிப்பதால் பணியாண்மைக் குழு எனலாம்.
797. Administrative Decision          பணியாண்மை முடிவு  

பணியாண்மை முடிவு என்பது, உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைத் தீர்மானித்தல், புறநிலைத் தரங்களைப் பயன்படுத்துதல், ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி விதிமுறைகளைச் செயற்படுத்துதல், பணியாண்மை செய்தல் அல்லது நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும்.
798. Administrative Discretion       பணியாண்மை உளத்தேர்வு  

பணியாண்மையில் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் கொண்டுள்ள பணியாண்மை உளத்தேர்வு உரிமை ஆகும்.  

முடிவெடுக்க ஒருவருக்கு இருக்கும் அளிக்கப்படும் உரிமையும் அதிகாரமும் பொதுவாக விருப்புரிமை அல்லது தன் விருப்புரிமை எனப்படுகிறது. விருப்பு வெறுப்பற்று ஆராய்ந்து வழங்கப்பட வேண்டிய தீர்ப்பை விருப்பின் அடிப்படையில் வழங்குவதாகக் கூறுவது சரியாக அமையாது. தீர்ப்புரிமை என்பது பொதுவான சொல்லாக அமையும்.   தனக்கு ஏற்றதாகக் கருதப்படுவதைத் தெரிவிக்கும் உரிமை என்ற பொருளில் தனக்கேற்புமை என்கின்றனர். இதனையே தன் மனம் / உள்ளம் தேர்ந்தெடுக்கும் முடிவினை அறிவிப்பதால் மனத்தேர்வு/ உளத்தேர்வு என்கின்றனர்.   இருவகையில் எவ்வகை முடிவு சரி எனத் தெளிவு இல்லாத பொழுது மனம் தேர்ந்தெடுக்கும் கருத்தினைத் தெரிவிக்கும் உரிமை அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது சட்ட முறையான ஒன்றாகும்.
799. Administrative Finality         பணியாண்மை அறுதி முடிவு  

பணியாண்மையில் மேற்கொண்டு முடிவு எடுக்கவோ கருத்து தெரிவிக்கவோ வழியில்லா நிலையில் எடுக்கப்படும் இறுதி முடிவாகும்.
800. Administrative Law    பணியாண்மைச் சட்டம்  

பணியாண்மைச் சட்டம் என்பது, அரசின் பணியாண்மை நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட அமைப்பு ஆகும்.  

செயலாண்மையால் அல்லது இதன் துணை அமைப்புகளால் செயற்படுத்தப்படும் முறைகேடான அதிகாரப்  பயன்பாட்டிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் செயன்மை(நிறைவேற்று) அதிகாரத்தை ஒழுங்கமைப்பதற்கும் பணியாண்மைச் சட்டம் உறுதுணையாய் அமைகிறது.

Friday, September 20, 2024

தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! – தொல்காப்பிய மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரை

 




எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் நேரிடையாகவும் இணைய வழியாகவும் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்களே! தமிழன்பர்களே, தொல்காப்பியப் பற்றாளர்களே, அனைவருக்கும் வணக்கம்.

 மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியும் பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டியும் வரும் தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் செல்வநாயகி சிரீதாசு அவர்களே! துணைத் தலைவர் திரு சுகந்தன் வல்லிபுரம் அவர்களே! நன்றி நவில உள்ள  செயலாளர் திரு சண்முகராசா சின்னத்தம்பி அவர்களே! துணைச் செயலாளர் திருவாட்டி வாசுகி நகுலராசா அவர்களே! பொருளாளர் திருவாட்டி கலாதேவி அரியராசா அவர்களே! சிறப்பாக இயங்கி வரும் அனைத்துப் பொறுப்பாளர்களே! அனைவருக்கும் மனங்கனிந்த பாராட்டுகளுடன் கூடிய வணக்கங்கள்.

வரவேற்புரை யாற்றிய செயற்குழு உறுப்பினர் திரு குமரகுரு கணபதிப் பிள்ளை அவர்களே! அறிமுக வுரை ஆற்ற உள்ள முனைவர் இல.சுந்தரம் அவர்களே! முதன்மை விருந்தினர் மருத்துவர் இராமநாதன் இலம்போதரன் அவர்களே! வாழ்த்துரை வழங்க உள்ள மருத்துவர் விசய் சானகிராமன் அவர்களே! சிறப்புரை ஆற்ற உள்ள முனைவர் இளங்கோவன் அவர்களே! வருங்காலச் சிறப்பிற்கு அடையாளமாகத் தமிழ்த்திறன் பேச்சினை வழங்க உள்ள செல்வர்களே! நடனமணி வனிதா குலேந்திரன் நெறியாள்கையில் நாட்டியம் வழங்க உள்ள கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரிக் குழுவினரே!

நிகழ்வுகளைச் சீராக இணைக்கும் தொகுப்புரையாளரே!

சிறியோருக்கும் பெரியோருக்குமான தொல்காப்பிய விநாடி வினா பங்கேற்பாளர்களே!

தொல்காப்பிய வில்லுப்பாட்டு, அன்பின் ஐந்திணை, கவியரங்கம், திருக்குற்றாலக் குறவஞ்சி, பறையிசை, காத்தவராயன் கூத்து,  சதிராட்டம், நடனம், முதலியவற்றில் பங்கேற்கும் கலைக்குழுவினரே, தமிழ்த்திறன் போட்டிகளின் வாகையரே, பங்கேற்பாளர்களே,  அனைவருக்கும் பாராட்டுகள்.

தொல்காப்பிய ஆய்வுகளை முன்னிலைப்படுத்தும் மாதக் கருத்தரங்குகள், சிறாரை ஊக்குவிக்கும் தமிழ்த் திறன் போட்டிகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று  பல்வேறு வகைகளில் கடந்த 9 ஆண்டுகளாகக் கனடா தொல்காப்பிய மன்றம் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. தமிழின் தொன்மைச் சிறப்பையும் மொழிச் சிறப்பையும் அறிய உதவும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தை வகுப்புகள் வாயிலாக இன்றைய தலைமுறையினருக்குப் பயிற்றுவிக்கும் முனைவர் செல்வநாயகி அவர்களுக்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது. அதுபோல் ஆர்வமுடன் தொல்காப்பியத்தைப் பயில்வோருக்கும் பாராட்டுகள்.

தொல்காப்பிய மன்றத்தினர் நமக்கு அழைப்பிதழை அனுப்பவில்லை. மாறாக அழைப்பு நூலை – 60 பக்க அழைப்புப் புத்தகத்தை அனுப்பியுள்ளனர். அழைப்பிதழ் உருவாக்கவே அரிதில் முயன்றிருப்பர். இதுவே இவர்களின் உழைப்பை நமக்குத் தெள்ளிதின் விளக்குகின்றது.

ஊழையும் உப்பக்கம் காணும் வகையில் தளரா முயற்சியுடன் இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தி வரும் தொல்காப்பிய மன்றத்தினருக்கும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழன்பர்கள், விளம்பரதாரர்கள், நன்கொடையாளர்கள், பிற தொண்டர்கள் அமைப்பினருக்கும் மீண்டும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது.  தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில.  ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது.  தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்.  எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே  இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று.  தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன.  தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமன்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது.  ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல் நூல் என்று கருதிவிடுதல் கூடாது.”

இவ்வாறு தொல்காப்பியப் பேரறிஞர் முனைவர் சி.இலக்குவனார் கூறுகிறார். தொல்காப்பியர் 287 இடங்களில் முந்துநூல் கண்ட நூலாசிரியர்களைக் குறிப்பிடுகின்றார் என்கிறார் இலக்குவனார். இதன் மூலம் தமிழ்நூல்களின் தொன்மைக்காலத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பேராசிரியர் இலக்குவனார் புலவர் வகுப்பு பயிலும்பொழுதே கல்லூரி நூலகத்தில் உள்ள நூல்களையெல்லாம் படித்துள்ளார். எனவே, மாணாக்க நிலையிலேயே தொல்காப்பியம் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். அப்பொழுதே தொல்காப்பியக் கால ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். தம் கல்லூரி முதல்வர் தொல்காப்பியத்தை ஆரியத் தழுவலாகத் தவறாகக் காட்டியமையால் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதன் பெருமையை உலகறியச் செய்ய முடிவெடுத்தார். அவ்வாறே தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முனைவர் பட்டமும் பெற்றார். தொல்காப்பியத்தை எல்லா நிலைகளிலும் மக்களிடையே பரப்பவும் செய்தார்; கல்விநிலையங்களில் எல்லாம் தொல்காப்பியர் நாள் கொண்டாடினார். தொல்காப்பியம் பாடமாக இடம் பெறவும் வகை செய்தார். இலக்குவனார் குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய இடைச்செருகல்களை நற்றமிழ் உலகம் ஏற்றுக்கொண்டது. தொல்காப்பியர் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு என இலக்குவனார் ஆய்ந்த முடிவைத் திருக்கோவிலூர் ஆதினமும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் நடத்திய கால ஆராய்ச்சி மாநாடு ஏற்றுக் கொண்டது. எனவே, இன்றைய தலைமுறையினரிடையே தொல்காப்பியச் சிறப்பைப் பரப்பும் கனடா தொல்காப்பிய மன்றமும் தொல்காப்பியப் பேரறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் அமைந்த இலக்குவனார் இலக்கிய மன்றமும் இணைந்து இப்போது முதலாவது உலகத் தொல்காப்பிய  மாநாட்டை நடத்துகின்றன.

உரையாசிரியர்கள் தம் காலத்திற்கேற்ற தவறான சில விளக்கங்களை அளித்திருந்தாலும் அவர்களின் பங்களிப்பு பெரிதும் போற்றற்குரியது. அதுபோல்,

ஆறுமுக நாவலர்(18.12.1822 – 5.12.1879)

சி.வை. தாமோதரம் பிள்ளை (12.09.1832 – 1.01.1901)

மழவை மகாலிங்க ஐயர்

தி. த. கனகசுந்தரம் பிள்ளை (24.08.1863 – சூன் 1922)

அரசன் சண்முகனார் (1868-1915)

அறிஞர் வ.உ. சிதம்பரனார் ,(5.09.1872 – 18.11.1936)

புன்னாலைக்கட்டுவான் சி. கணேச ஐயர்(1.04.1878 – 8.11.1958)

மு. இராகவையங்கார் (26.07.1878 – 02.02.1960)

 நாவலர் சோமசுந்தர பாரதியார் (27.07.1879 – 14.12.1959)

பா.வே. மாணிக்க நாயகர் (2.02.1871 – 25.12.1931)

முனைவர் பி.சா.சுப்பிரமணிய சாத்திரி (26.07.1890-20.05.1978)

தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (15.08.1892-02.01.1960)

மே. வீ. வேணுகோபாலன் (31.08.1896 – 4.02.1985)

தேவநேயப் பாவாணர் (7.02.1902 – 15.01.1981)

முனைவர் சி.இலக்குவனார் (17,11.1909- 03,09.1973)

அடிகளாசிரியர் (எ) குருசாமி (17.04.1910 – 08.01.2012)

பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் (14.01.1917- 13.06.1988)

கந்தசாமியார் (சனவரி 14.01.1917- 13.06.1988)

முனைவர் வ. சுப. மாணிக்கம் (17.04.1917 –25.04.1989)

முதுபெரும்புலவர் ஆ.சிவலிங்கனார்(30.11.1922 – 09.11.2014)

அறிஞர் புலியூர் கேசிகன் (16.10.1923-17.04.1992)

பேராசிரியர் ச. பாலசுந்தரம் (18.01.1924 – 1.08. 2007)

கலைஞர் மு. கருணாநிதி(3.06. 1924 – 7.08.2018)

அறிஞர் தி.வே. கோபாலையர் (22.01.1926 – 1.04.2007)

அறிஞர் கமில்சுவலபில் (Kamil Zvelebil: 17-11-1927 -17.01.2009)

புலவர்மணி இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021)

 முனைவர் தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் (12.08.1928 – 29.12.2015)

முனைவர் ச. அகத்தியலிங்கம் (19.08.1929 – 4.08.2008) முனைவர் ச.வே. சுப்பிரமணியம் (31.12.1929 – 12.01.2017)

பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி(14.04.1930 – 24.02.2014)

முனைவர் க. ப. அறவாணன் (9.08.1941 – 23.12.2018)

சீனி. நைனா முகமது(மலேசியா) (11.09.1947-7.08.2014)

எனப் பல அறிஞர்கள் பதிப்பிப்பு, ஆராய்ச்சி, உரையாக்கம், வகுப்புரை எனப் பல வகைகளில் தொல்காப்பியப் பரவலுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

அறிஞர்கள் சாமுவேல் பிள்ளை , இராசகோபால பிள்ளை, சுப்பராய செட்டியார், கா. நமச்சிவாய முதலியார் ,இரா.வேங்கடாசலம் பிள்ளை, ம.ஆ.நாகமணி, தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, ஆ. பூவராகம் பிள்ளை, இராம. கோவிந்தசாமி,,, தண்டபாணி தேசிகர் ,ஆபிரகாம் அருளப்பன், வடலூரனார், கு.மா.திருநாவுக்கரசு, வையாபரி, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், இரா. சீனிவாசன், மு. அருணாசலம் பிள்ளை, தாயம்மாள் அறவாணன், கு. பகவதி வ.வேணுகோபாலன் ச. திருஞானசம்பந்தம் ,பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன், பேராசிரியர் ப. மருதநாயகம் எனப் பல அறிஞர்கள் தொல்காப்பிய உரைகள் பதிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுதல் முதலான பணிகளிவலி ஈபட்டனர்,ாழும்அறிஞர்கள் ஈடுபட்டும் வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் முனைவர் செவிலியருடு (Dr Jean-Luc Chevillard)(1956), முனைவர் ஆல்பருட்டு,முனைவர் நிருமல் செல்வமணி முனைவர் வ. முருகன் முதலான சிலர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.  அறிஞர் இளையபெருமாள்,  எசு.வி.சுப்பிரமணிய பிள்ளை இணைந்து தொல்காப்பியத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.

அறிஞர்கள் பாலசுப்பிரமணியமும் நாச்சிமுத்துவும் தொல்காப்பியத்தை இந்தியில் மொழி பெயர்த்துள்ளார்கள்.

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று குன்னூரில் ஒரு நூலகம் அமைத்தவர். மூவாத் தமிழின் தொல்லிலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய பேராசான் தொல்காப்பியருக்கு அங்குச் சிலை எழுப்பியுள்ளார். தொல்காப்பியரை என்றென்றும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக முதன்முதலில் அவருக்குச் சிலை எழுப்பிய பெருமை செம்மொழிப்புரவலர் மா.கோபாலசாமி இரகுநாதரையே சாரும்.

தொல்காப்பியரைப் போற்றும் நாம் இத்தகைய அறிஞர்களையும் என்றும் நினைவில் கொள்ள உரிய பணி ஆற்ற வேண்டும்.

சென்னை கடற்கரைச்சாலையில்  சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலும்  மதுரையில் நீதி மன்றம்  அருகிலும் குமரி மாவட்டம் காப்பி(ய)க்காட்டிலும் தொல்காப்பியர் சிலைகள் உள்ளன.

தமிழ் நலனுக்காகப் பணியாற்றும் தமிழ்நாடு அரசு ஆற்ற வேண்டிய பணி ஒன்று உள்ளது. தொல்காப்பியரைப் போற்றுவதற்கு அரசிடம் திட்டம் ஏற்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தொல்காப்பியர் புகழரங்கம் முதலான ஐந்து புகழரங்கங்கள் நிறுவுவதாகச் சட்ட மன்றத்தில் அப்போதைய கல்வி அமைச்சர் தம்பிதுரை கலைபண்பாட்டுத் துறை,  கொள்கை விளக்கக்குறிப்பு 2001-2002 கோரிக்கை எண் 51இல்  அறிவித்தார்.  அதற்கான இடம் தேடுதல் தொடர்பான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே, வள்ளுவர் கோட்டம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் திருமகனான முதல்வர் தாலின் தொல்காப்பியப் புகழரங்கம் அமைக்க வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்திய மொழிகள் பத்திலும் உலக மொழிகள் பதினைந்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்து வருவது பாராட்டிற்குரியது. அதன் இயக்குநர் முனைவர் சந்திரசேகரனுக்கும் ஒன்றிய அரசிற்கும் பாராட்டுகள்.

கட்டுரைகளைக் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கூர்ந்து பார்த்த நடுவர்களைப் பாராட்டுகிறேன். தொல்காப்பியம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருவதற்கான காரணங்கள், தொல்காப்பியமும் தமிழ் நூற் காவலர்களும்இ இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி, தொடரும் தொல்காப்பிய மரபு, தொல்காப்பியமும் பிராகிருதமும் ஒரு பார்வை, தொல்காப்பிய உரையாசிரியர்கள், மெய்ப்பாட்டியல், கணிப் பொறியியலில் தமிழ் மொழிச் சொற்களின் சிதைவைத் தடுப்பதற்குத் தொல்காப்பியத்தின் பங்களிப்பு, தொல்காப்பியக் கோட்பாடுகள், தொல்காப்பியமும் பாணினியமும், தொல்காப்பியத்தில் நாட்டுப்புறக் கூறுகள், மரபு வழி மாண்புகள், புலியூர்க்கேசிகர் உரைவளம் என வெவ்வேறு கோணங்களில் ஆங்கிலக் கட்டுயாளர்கள் மூவர் உட்பட 54 கட்டுரையாளர்கள் தொல்காப்பியம் இன்றைக்கு மட்டுமல்லாமல் இனி என்றைக்கும் நிலைத்து நிற்கும் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார்கள். தொல்காப்பிய மன்றத்தலைவர் முனைவர் செல்வநாயகி அவர்கள், தொல்காப்பியப் ‘பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும்  காட்டும் பெண்களின் சமூக நிலை’ என்று விரிவாக 635 பக்க அளவில் ஒரு நூலை வெளியி்டுள்ளார். அவரின் கட்டுரையும் மாநாட்டில் இடம் பெறுகிறது.

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் படிக்காமல் சாகக் கூடாது என்பார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார். அந்த வகையில் ஒவ்வொருவரும் தொல்காப்பியத்தைக் கற்கக் கனடா தொல்காப்பிய மன்றம் அதன் தலைவர் முனைவர் செல்வநாயகி மூலம் கடந்த 9 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறது.

இம்மாநாட்டினை ஒட்டித் தொல்காப்பியச் சுடரொளி விருதுகளும்  இலக்குவனார் விருதுகளும் வழங்குவதாக அறிவித்திருந்தோம். இவற்றை மதுரையில் 12.10.24 அன்று நடைபெறும் மாநாட்டின் தொடர் நிகழ்வில் வழங்குவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். தொல்காப்பியத்தைப் பிற  மொழிகளில் மொழி பெயர்ப்பின் மூலமோ ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலமோ எடுத்தியம்பியவர்களுக்கும் தொல்காப்பியத்தை முனைவர் செல்வநாயகிபோல் வகுப்புகள் மூலமோ ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலமோ வேறு வழியிலோ படைத்துத் தொல்காப்பியத் புகழ் பரப்புவோருக்கும் விருதுகள் வழங்கப்பெறுவதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இனியும் மூன்று நாள்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொல்காப்பிய அன்பர்கள் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

என்றார் தொல்காப்பியர்.

வடசொல் என்பது பாலி, பிராகிருதம், பின் வந்த சமற்கிருதம் ஆகிய மொழிச்சொற்களே. உரையாசிரியர்கள் விளக்கியவாறு தொல்காப்பியர் குறிப்பது பெயர்ச்சொற்களையே. பிற சொற்கள் தமிழாகத்தான் இருக்க வேண்டும்.

பேராசிரியர் இலக்குவனார் இக்கால மொழிப்பயன்பாடுகளுக்கேற்ப

அயற்சொற் கிளவி அயலெழுத் தொரீஇ

எழுத்தொடுபுணர்ந்த சொல்லாகும்மே

என அயலெழுத்துகளை நீக்கி எழுத அறிவுறுத்துகிறார். எனவே, தொல்காப்பிய அன்பர்கள் பிற மொழிச் சொற்களையும் பிறமொழி எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் நீக்கித் தமிழிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் என நாம் உறுதியேற்போம்!

தமிழ் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களைப் புலம் பெயர் நாடுகளில் பல்லின, பல்பண்பாட்டு மக்களும் அறியும் வகையில் செயலாற்றியும் வரும் தொல்காப்பிய மன்றம் அதன் ஒரு பகுதியாகக் கருத்தரங்கங்கள் மாத நிகழ்ச்சிகள் போட்டிகள் பயிற்சிகள் எனப் பல வகையில் செயற்பட்டு வருகிறது. அவ்வழியில் இன்றைக்குத் தொடங்கும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடும் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் உலகத் தொல்காப்பிய மாநாடு உலகமெங்கும் மாநாட்டு நிகழ்வுகளை நடத்தவும் பணிகளைப் பரப்பவும் வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். தமிழே விழி! தமிழா விழி!


Followers

Blog Archive