Wednesday, May 7, 2025

சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – இலக்குவனார் திருவள்ளுவன்

 



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி)

                    – புறநானூறு  55, 10.

திணை :  பாடாண்திணை

துறை செவியறிவுறூஉ

பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார்

பாடப்பட்டோன் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

 (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.)

கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது பொருந்தாது. எனவே, அரசாட்சி எனச் சிலர் பொருள் தருவது சரியாகாது.

யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளையும் சிறப்பாக வைத்திருக்கும் மன்னனிடம், ‘இப்படைகள் உனக்கு வெற்றி தராது; அறநெறி ஆட்சிதான் வெற்றி தரும்’ எனப் புலவர் கூறுகிறார்.

இவ்வரிக்குப் பின்னர்,

அதனால், நமரெனக் கோல்கோ டாது,

பிறர்எனக் குணங் கொல்லாது,

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும் மூன்றும்

உடையை ஆகி இல்லோர் கையற

நீநீடு வாழிய நெடுந்தகை!

என வாழ்த்துகிறார் புலவர்.

இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமலும், இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்பண்புகளை ஒதுக்கித் தள்ளாமலும், சூரியனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே! என்கிறார் புலவர்.

அறநெறியில் வாழ இவையும் இன்றியமையாமை என்பதால் இவற்றை வலியுறுத்துகின்றார் புலவர்

திருவள்ளுவர் ‘அறன் வலியுறுத்தல்’ என ஓர் அதிகாரமே வைத்துள்ளார். அவரைப் பின்பற்றி நாலடியாரிலும் அறன்வலியுறுத்தல் அதிகாரம் இடம் பெற்றுள்ளது.

திருவள்ளுவர் ‘இறைமாட்சி’ அதிகாரத்திலும் ஆட்சிக்கு அறநெறி தேவை என வலியுறுத்துகிறார்.

‘செங்கோன்மை’ அதிகாரத்திலும்,

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.  

(திருக்குறள், ௫௱௪௰௬ – 546)

எனத் திருவள்ளுவர் இதனையே வலியுறுத்துகிறார்.

வேல் தருவது வெற்றியல்ல என்றால் என்ன பொருள்? வெற்றிக்குக் காரணம் வீரப் படைகள் அல்ல என்றுதானே!

அறநெறியிலான செங்கோன்மைதான் உண்மையான வெற்றி என்கிறார் திருவள்ளுவரும்.

ஆள்வோர் மட்டுமல்ல. ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து அறநெறி வழுவாமல் வாழ வேண்டும்.

எனவே, நாம் அறநெறியே வெற்றி நெறி என வாழ்வாங்கு வாழ்வோம்!

Sunday, May 4, 2025

குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(குறள் கடலில் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – தொடர்ச்சி)

(திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்: ௪௱௪௰௧ – 441)

பதவுரை: அறன்-அறவழி; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.

பொழிப்பு:

அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை அதன் ஆற்றலை அறிந்து, ஆராய்ந்து அடைய வேண்டும்.( சி.இலக்குவனார்)

“அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.” என்கிறார் மணக்குடவர்

இங்கே புரோகிதர் எங்கே வந்தார் என்று தெரியவில்லை. மணக்குடவர் உள்ளத்தில் ஆரியச் சிந்தனை ஆதிக்கம் செலுத்தியதால் புரோகிதர் உள்ளே நுழைந்து விட்டார். திருவள்ளுவர் எங்கும் சடங்கு பற்றியும் அதனைச் செய்பவர் பற்றியும் கூறாத பொழுது இங்கே எங்ஙனம் சடங்கு செய்வோர் துணை பெற வேண்டும் என்றிருப்பார். எனவே, இவ்விளக்கம் தவறாகும்.

“அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க” என விளக்குகிறார் பரிமேலழகர்.

பரிமேலழகர் குறிப்புரை: அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், ‘அறம் அறிந்து’ என்றார். மூத்தல் – அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். [உய்த்துணர்வானும்- உலக நடையை ஆராய்தலானும்; சீலம் – ஒழுக்கம்]

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (௪௱௰௫ – 415)

என்கிறார் திருவள்ளுவர். எனவே, பரிமேலழகர் அறிவுடையார் கேண்மை என்பதற்கு ஒழுக்கத்தையும் சேர்த்துள்ளது சரியே. 

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.   (௬௱௩௰௭ – 637)

என உலக இயல்பறிந்து நடப்போரே துணையாக  இருக்க வேண்டும் என்பார்.

எனவே, உலக இயல்பையும் அறிந்தவர்களாகவும் துணையாகக் கொள்வோர்  இருத்தல் வேண்டும் என்பதும் சரியே.

ஆதலின், நூலறிவாலும் பட்டறிவாலும் முதிர்ந்த அறிவு உடையவரது துணையை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அறிவுடையார் கூறிய எல்லையில் இருத்தல்;அன்பால் நீங்காமல் இருத்தல் எனவும் பரிமேலழகர் விளக்குகிறார்.

இப்பண்புகள் உடையவர்களே என்றும் நீங்காமல் துணை நின்று வழிகாட்டுவர்.

எனினும் இவ்வறிவுரை அரசனுக்கு மட்டுமல்ல. நல்வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொருவருக்குமே யாகும்.

வாழ்வியல் அறநூலான திருக்குறள் அறத்தை வலியுறுத்தும்போது நமக்குத் துணையாகக் கொள்ள வேண்டியவரும் அறவாணராக இருத்தல் வேண்டும் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துவது இயல்புதானே. எனவேதான் முதலிலேயே அறனறிந்தவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுகிறார்.

அறிவுடையார் துணை எப்போது தேவைப்படுகிறது? ஒரு சிக்கல் வரும் பொழுது அதனைக் களைவதற்கு அறிவு தேவைப்படும். ஒரு செயலைத் தொடங்கும் பொழுது திட்டமிடுவதற்கும் செயல் முறைக்கும் அறிவுரை தேவைப்படும். ஒரு தொழிலைத் தொடங்கும் பொழுது தொழில் தொடர்பான நூலறிவும் பட்டறிவும் உடைய முதிர்ந்த அறிவுடையவரின் வழிகாட்டல் தேவைப்படும். எனவேதான் திருவள்ளுவர் அறிவுடையார் கேண்மையைத் திறனறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

எனவே நாம்

அறனறிந்த திறனாளரைத் துணையாகக் கொள்வோம்!

Saturday, May 3, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

966. Attendance     (S. 7(9) ROBDA, 1969)வருகை  

முன்னிலையாதல்  

கல்வியகம், பணியகம், தொழிலகம் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் பயிலுவோர் அல்லது பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் வருவதைக் குறிப்பது.  

முறை மன்றம் போன்ற இடங்களில் அதன் தலைவர் முன்னர் நேர் நிற்பதை அல்லது முன்னிலையாதலைக் குறிப்பது.  

தொல்பொருள், கருவூலப் பொருள்கள் சட்டம் 1972(Antiquities and Art Treasures Act), இருப்பூர்தித் துறை(சட்ட முரண் உடைமை)ச் சட்டம், 1966(The Railway Property (Unlawful Possession) Act, 1966), பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 (ROBDA, 1969) ஆகியவற்றில் உசாவல் (விசாரணை) தொடர்பில் நேர்நிற்றல், முன் நிற்றல், வருகை பற்றி விதிகள் இருக்கின்றன.)
967. Atomஅணு  

அணு  என்பது நுண்ணிய அளவைக் குறிக்கும் ஒரு சொல்.   “அணு அளவு இலாபத்திலும் அரைப்பங்கு பாழ்”,   “அணு மாமேரு ஆகுமா?”,    

“அணுவும் மலையாச்சு மலையும் அணுவாச்சு”    
என்னும் பழமொழிகள்  மக்கள் மத்தியில் அணு இடம் பெற்றுள்ளதை உணர்த்துகிறது.  

1,075, 200 இல் ஒரு பங்கு. 
1
—————————–
1,075, 200          

இதனினும் சிறியது அணு.

அணுவைப் பகுக்க முடியாது என்பர் இக்கால அறிவியல் அறிஞர்கள். ஆனால், “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்கிறார் ஒளவையார்.

கற்பனை மிகையாகப் பாராட்டிய சொல் என அறியார் கூறுகின்றனர்.

அணுவின் நூற்றில் ஒரு பங்கு குறித்துக் கம்பர் கூறுகிறார். கம்பராமாயணத்தில்(பாடல் 6312), அணுவினைச் சதகூறிட்ட கோணினு முளன் (இரணியன் வதைப் படலம், 124) என்கிறார் அவர்.  அணுவைச் செந்து எனவும் குறிப்பர். இதனை உயிரணுவைக் குறிக்கப் பயன்படுத்தலாம்.  

இலெக்குசிசுநெக்குசிசு(LexisNexis) என்னும் தரவுத் தளம், “அணு” என்ற சொல், அறிவியல் பொருளில் மட்டுமல்ல, எந்தவோர் அடிப்படை அலகு அல்லது கட்டுமானத் தொகுதியைக் குறிக்கச் சட்டச் சூழல்களிலும் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்தப்படலாம் என்கிறது. சுருக்கமாக, “அணு” அதன் அறிவியல் பொருளைக் கொண்டிருந்தாலும், அதன் சட்டப் பயன்பாடுகள் முதன்மையாக அணுவாற்றல், தொடர்புடைய தொழில்நுட்பங்களின் ஒழுங்குமுறை, இயல்நிலையான மடக்கடிகள்(hazards) ஆகிவற்றுடன் தொடர்புடையவை.  

அணு ஆற்றல் சட்டம்
அணுசக்திப் பாதுகாப்பு
அணுக்கழிவு அகற்றல்
அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம் (NRC)
அணுபற்றிய பன்னாட்டுச் சட்டங்கள் முதலியவற்றில் அணு தொடர்பான சட்டப்பிரிவுகள் உள்ளன.  
968. Attender‌உழையர்  

உடனாள்  

கையாள்    

நோயர் அருகில் உள்ளவர்களும் பயணத்தில் துணையாக உடன் வருபவர்களும் குடும்பத்தினர்களாகவோ உறவினர்களாகவோ நண்பர்களாகவோ இருக்கலாம். அவர்களை ஏவலர் என்று சொல்வதைவிட உழையர் என்றோ, உடனாள் என்றோ சொல்லலாம்.  

பணித்தலைவருக்கு உடனிருந்து எடுபிடி வேலைகளையும் அவர் சொல்லும் வேலைகளையும் செய்பவரைக் கையாள் எனலாம்.  

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நாற் கூற்றே மருந்து.(குறள் 950) என்கிறார் திருவள்ளுவர். அஃதாவது நோயுற்றவன்; நோயைத் தீர்க்கும் மருத்துவன்; நோய் தீர்க்கும் மருந்து; பக்கத்திருந்து மருந்து கொடுத்தல் முதலியவற்றிற்கு உதவுவான் என்னும் நான்கு பிரிவுகளையுடையது மருத்துவம் என்கிறார். உழைச்செல்வான் என்பதன் சுருக்கமாக உழையர் எனலாம்.
969. Attentionகவனம்  

மறுவடிவம்  

உன்னிப்பு  

துணைஞர்  

துணையாள்  

பார்வை  

சட்டச் சூழலில், “கவனம்” என்பது “கவனிப்பு உரிமை”, ஒப்பந்தங்களில் “கவனிப்புத் தொடர்”,  கவனத்தன்மை குறித்த சட்டப்படியான தாக்கங்கள், குறிப்பாகக் கவனம் செலுத்தாமை, செறிவுக்கான ஒருமுகப்படுத்தலில் சட்ட ஒழுங்குமுறைபோன்ற பலவற்றைக் குறிக்கிறது.
970. Attestசான்‌றொப்பமிடு

சான்றொப்பமிடுதல்  

சான்றொப்பமளி  

சட்டப்பூர்வச் சூழலில், “சான்றளி” என்பது ஓர் ஆவணத்தின் செயல்பாட்டை முறையாகச் சரிபார்ப்பது அல்லது சான்றுரையளிப்பது, அதன் நம்பகத்தன்மை, செல்லுபடியை உறுதிப்படுத்துவது.  

இஃது ஓர் ஆவணத்தில் கையொப்பமிடுவதற்குச் சான்றாகக் கையொப்பமிடுவதை உள்ளடக்கியது,  

விருப்ப முறிகள்,  வழக்கறிஞரின் ஆவணங்கள், ஒப்பந்தங்கள் போன்ற சட்ட முதன்மை வாய்ந்த ஆவணங்களுக்குச் சான்றளிப்பு தேவைப்படுகிறது.  

சான்றிதழ்களின் மூலப்படிகளை அளிப்பதற்கு மாற்றாக, அவற்றின் நேர்படிகளில்(True Copies)சான்றொப்பம் தேவை.  

சான்றிதழ்களில் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவை என முன்பு இருந்தது. இவ்வகைப்பாடு நீங்கி அ, ஆ, இ, ஈ பிரிவு அலுவலர்கள் என வந்து விட்டதால், அ அல்லது ஆ பிரிவு அலுவலர் சான்றொப்பம் தேவை.    

சான்றாவண அலுவலரின் (notary public) சான்றொப்பமும் நீதித்துறை, வருவாய்த்துறை, பதிவுத்துறை முதலான அரசுத் துறைகளில் சான்றாவணங்களுக்கு அல்லது சான்றிதழ்களுக்கு அல்லது உறுதி ஏற்பிற்குத் தேவை.

(தொடரும்)

நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

     04 May 2025      கரமுதல


(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – தொடர்ச்சி)

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா

வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா

மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல்

அம்மனைக்கோ லாகிய ஞான்று.

-நாலடியார், இளமை நிலையாமை 14

பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர் மயங்கும் வகையில் இருந்தாள்இளமை நிலையாமையை உணர்ந்து இளமையிலேயே நல்லன  செய்க!

சொல் விளக்கம்: தாழா=முதுகு தாழ்ந்து; தளரா=உட ற்கட்டுத் தளர்ந்து; தலை நடுங்கா=தலை நடுங்கி, தண்டு ஊன்றா=கைத்தடியை ஊன்றி, வீழா=விழுந்து, இறக்கும்=இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும்=இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா=உறுதியான அறிவில்லாத; மம்மர்கொள் மாந்தர்க்கு=காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல்=அவள் இப்போது கைத்தடியாக வைத்திருக்கும் ஊன்றுகோல்; அம்மனைக்கோல் ஆகிய ஞான்று= இதே ஊன்றுகோல், அவள் தாயின் கைத்தடியாக இருந்த காலத்தில்; அணங்கு ஆகும் – வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும். (மூப்பு அடைந்துள்ள இவள், இவளின் தாயாக மூப்பில் இருந்த பொழுது இளமையாக இருந்திருப்பாள்)

முதுகு வளைந்து தாழ்ந்து கூன் அடைந்த நிலை தாழா எனப்படுகிறது. காழ் என்பது இங்கே அறிவு உரத்தைக் குறிக்கிறது.

இளமையானவள் முதுமை அடைவாள் எனக் கூறாமல் இன்று முதுமையுற்றிருப்பவள் முன்பு பலரை மயக்கும் இளமை நலத்துடன்தானே இருந்திருப்பாள் எனக் கூறுகிறார் புலவர். அன்றைய இளமை இன்றைக்கு இல்லையே என்பதன் மூலம் இளமை நிலையாமையை உணர்த்துகிறார்.

செங்கையில் ஓர் தடியும் ஆகியே

வருவது போவது ஒருமுதுகூனும்

என்னும் பாடலடிகள் கொண்ட, பட்டினத்தார் முதுமையைக் கூறி இளமை நிலையாமையைச் சொல்லும் நீண்ட பாடல், ‘பட்டினத்தார்’ திரைப்படத்திலும் இடம் பெறும்.

பாலன் இளையன் விருத்தன் என நின்ற

காலம் கழிவன கண்டும் அறிகிலார்

(முதல் தந்திரம், 4. இளமை நிலையாமை, பாடல் 181)

என்கிறார் திருமூலரும்.

நீங்கள் கேட்டவை’ படம் மூலம் கவிப்பேரரசு வைரமுத்துவும்

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருக்கின்றது என்பது மெய்தானே

என்கிறார்.

இளமை நிலையாமையை உணர்த்துவதற்குத்தான் திருவள்ளுவரும் இப்போது இளமைப்பருவம்தானே, பிறகு அறச்செயல்கள்புரியலாம் என எண்ணாமல் உடனே செய்ய வேண்டும் என்கிறார்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௩௰௬ – 36) என்பதே அக்குறள்.

பிறரை மயக்கும் அழகும் காலம் செல்லச் செல்ல உடல் தளர்ந்து அழகிழக்கும். எனவே, நிலையற்ற அழகில் மயங்காமல் நிலையான நல்வினை புரிய வேண்டும்.

நில்லா அழகில் மயங்கி நிலையான பயன் தரும் நற்செயலை மறக்காதே!

Followers

Blog Archive