Monday, November 24, 2025

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): தொடர்ச்சி)

தமிழைப்போல் வேறு சில மொழிகளையும் செம்மொழிப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது அல்லவா?

ஏதோ ஒரு கட்டாயச் சூழலில் தமிழுக்கான செம்மொழி ஏற்பை இந்திய அரசு வழங்கிவிட்டதே தவிர அதற்கு முழு உடன்பாடு இல்லை என்பதுபோல் நடந்து கொள்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியினரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தத்தம் மொழிக்குச் செம்மொழி ஏற்பு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆழமும் அகலமும் நுண்மையும் திண்மையும் தொன்மையும் பழமையும் புதுமையும் இளமையும் வளமையும்  எனப் பெரிதுபட்ட இலக்கியப் பரப்பைக் கொண்ட தமிழின் சிறப்பை நாம் அவர்களுக்கு உணர்த்தத்  தவறிவிட்டோம். திருவள்ளுவர் காலத்திற்கு முந்தைய அல்லது கிறித்துவக் காலத்திற்கு முந்தைய. இலக்கியச் சிறப்பு உடைய மொழிகளை மட்டும் கருதிப் பார்ப்போம் என்று அறிவிக்காமல் 1000 ஆண்டுப் பழமையான மொழி என வரையறுத்துப் பின்னர் 2000 ஆண்டுகள் தொன்மை என்ற கால அளவினை வலியுறுத்திய நமது போராட்டங்களுக்குப் பின் 1500 ஆண்டுகள் தொன்மையான மொழி எனக் காலவரையறை செய்தனர். எனவே,   தெலுங்கு, கன்னடம் முதலான மொழியினர் உடனே செம்மொழி ஏற்பினை வேண்டினர். இதனை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே வழக்கு முடிவிற்கு உட்பட்டு எனத் தெரிவித்து தெலுங்கு, கன்னட மொழிகளைச் செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். எனவே, செம்மொழிப் பட்டியல் என்ற பெயரில் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளையும் சேர்த்து, ஒப்புக்குச் சப்பாணியாக நிதியுதவி வழங்குவதே இந்திய அரசின் நோக்கமாக உள்ளது.

? நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

# உலக மொழிகளில் மூத்த மொழியாகவும் பிற மொழிகளுக்குத் தாயாகவும் விளங்கும் செந்தமிழை ஒவ்வொரு மொழியினரும் தத்தம் தாய்இன மொழி எனப் போற்றும் வகையில் நமது பரப்புரை அமைய வேண்டும். எனவே, வெறும் செம்மொழி அறிந்தேற்பை வழங்கிவிட்டதுடன் தன் கடமை முடிந்துவிட்டது என இந்திய அரசு கருதாமல் இந்தி, சமசுகிருதம் ஆகிய மொழிகளுக்குச் செலவழிப்பதற்குச் சமமான தொகையையாவது தமிழ் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் என ஒதுக்கிப் பெருமை கொள்ள வேண்டும். தமிழக அரசும்  செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தியது போல் தமிழே தமிழ்நாட்டில் தலைமையிடம் பெறவும் தமிழரே முதன்மை பெறவும் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசு அடிமையாக இருப்பதாகவே மாண்புமிகு முதல்வர் உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்கள். எனவே, அவரே அடிமைத்தளையை அறுத்தெறிய ஆவன செய்ய வேண்டும். படைப்பாளர்களும் ஊடகங்களும் நல்ல தமிழைக் கையாளவும் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கவும் மட்டுமே துணை நிற்கும் வகையில் நமது மொழிக் கொள்கை அமைதல் வேண்டும். வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பிற்கான அடிப்படை மொழியாகத் தமிழை மாற்ற வேண்டும். நம் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகா; நனவாக்கித் தீருவோம்   என இந்திய, தமிழக அரசுகளின் நடவடிக்கைகள் அமைதல் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாட்டில் தமிழ்ச் சூழலை உருவாக்குவதை ஒரு கண்ணாகவும் உலகநாடுகளில் தமிழைப் பரப்புவதை மற்றொரு கண்ணாகவும் கொண்டு தமிழக அரசும் இந்திய அரசும் செயல்படவேண்டும். இவ்வாறான செம்மொழி எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தினக்குரலுக்கும் தினக்குரல் வாசகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday, November 23, 2025

குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

 




(குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! –jதொடர்ச்சி)

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௯ – 449)

முதல் இல்லாதவர்க்கு ஆதாய ஊதியம்(இலாபம்) இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்கியுதவும் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை.

பதவுரை: முதல்=முதற்பொருள், முன்பணம், அஃதாவது மூலதனம்; இலார்க்கு=இல்லாதவர்க்கு; ஊதியம்=வருவாய், இலாபம், பேறு, ஆக்கம்; இல்லை=இல்லை; மதலை-முட்டுத்தூண், பாரந்தாங்கும் தூண், உத்தரம், வன்மையுடையது; ஆம்-ஆகும்; சார்பு-துணை; இலார்க்கு-இல்லாதவர்க்கு; இல்லை-இல்லை; நிலை-நிலைபேறு, சலியாது நிற்றல்.

சிறு கடை வைப்பதாக இருந்தாலும் பெருந் தொழிலாக இருந்தாலும் அடிப்படைத் தேவை முதலீடே. முதலீடு இன்றி வணிகம் தொடங்கவும் இயலாது. அப்படியே தொடங்கினாலும் சிறக்கவும் இயலாது. முதலீட்டு அடிப்படையிலேயே வணிக வளர்ச்சியும் அதன் அடிப்படையிலேயே ஆதாயமும் கிட்டும். அதுபோல்தான் செயல் சிறப்பதற்குத் தேவை துணை.

இடையூறு வரும்போது தாங்கிப்பிடிக்கும் சார்பாக, நல்ல தூணாக விளங்குவது பெரியாரின் துணையே. பெரியாரின் நல் வழிகாட்டலும் அறிவுரையும் நெறிப்படுத்தலும் நல்ல துணையாக விளங்கி அரசை நிலைபேறாக்கும். பிறருக்கும் பெரியாரின் தக்க அறிவுரையே அவர்களைச் சிறக்கச் செய்யும்.

முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்று சொல்வதன் மூலம் அதனால் இழப்பும் கேடும் வரும் என உணர்த்துகிறார். அதுபோல் பெரியாரின் துணை இல்லாதவர்க்கும் தீங்கு நேரும் என உணர்த்துகிறார். கட்டடத்தில் தூண் தளத்தைத் தாங்குவதுபோல் பெரியாரின் துணை நம்மைத் தாங்கும். அத் துணை இல்லையேல், தகாதன நேரும்பொழுது அதனைத் தடுத்து நிறுத்துவோர் இன்மையால் தீங்குதான் நேரும். எனவே, தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ள பெரியே்ாரின் துணை நம்மைத் தாங்கும் தூணாகத் தேவை.

துணை என்பது நல்லாற்றுப்படுத்தும் பெரியோரை, அவர்கள் தரும் அறிவுரையை, அவர்களின் வழிகாட்டுதலை,அவர்களின் நெறியுரையை. நம்மைத் துன்பச் சுமையிலிருந்து தாங்கும் சுமைதாங்கியாய் இருப்போர் பெரியோரே.இஃது ஆட்சியாளர்களுக்கும் மட்டுமல்ல. எந்த நிலையிலிருக்கும் யாராயினும் அவர்களுக்குப் பொருந்தும்.

நிலை என்பதற்கு நிலைபேறு என அனைவரும் பொருள் கூறியுள்ளது சரிதான். என்றாலும் நிலை என்று நன்னிலையைக் கூறுவதாகவும் கருதலாம். பெரியாரைத் துணையாகக் கொள்ளாதவர்க்கு நன்னிலை இல்லை எனலாம் அல்லவா?

எனவே, எக்காலத்திலும் எச்சூழலிலும் நாம்  நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் இடுக்கண்களிலிருந்து காத்துக் கொண்டு நன்னிலை எய்த பெரியோரைத் துணையாகக் கொள்வோம்!

Saturday, November 22, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 4: தொடர்ச்சி)

நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அரசு நிறுவனத்தில் செம்மொழி ஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்கேற்றேன். அப்போதே நிதி நிலை அறிக்கையில் இருந்து மொழிகளுக்கான பல்வேறு நிதி குறித்துக் குறிப்பிட்டு இருந்தேன். இன்னின்னவாறு ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு இல்லையே என்பதாக குறிப்பிட்டு இருந்தேன். பல்வேறு ஒதுக்கீடுகள். ஆனால் இப்பொழுது இன்னும் கூடுதலாக இருக்கிறது. இந்தக் கூடுதலான நிதி ஒதுக்கீட்டிற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஒன்றிய அரசைக் கேட்க வேண்டும். மீண்டும் கேட்க வேண்டும். கேளுங்கள். கட்சி வேறுபாடு இன்றி மக்களைத் திரட்டி அணி சேர்ந்து ஒன்றிய அரசுக்குக் குரல் கொடுங்கள், செய்யுங்கள் இங்கே வந்து நீங்கள் தமிழை வாழ்த்தினால் போதாது. தமிழுக்கான செயற் திட்டத்தை நிதி ஒதுக்கீட்டுடன் தாருங்கள் என்று கேட்க வேண்டும் அல்லவா அதைச் செய்வதற்கு நமக்குத் தெம்பு இருக்க வேண்டும். நான் கூட “**யாருக்கும் வெட்கமில்லை**” என்று கட்டுரை எழுதி இருக்கிறேன். அப்போதைய செம்மொழி விருது அறிவிப்புக்கு எழுதி இருந்தேன். இதற்கு முன்பு என்னென்ன எழுதி இருந்தேனோ, அஃது இன்றைக்கும் பொருந்துவதாய் இருக்கிறது செம்மொழிக்கு ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை தமிழ்நாடு அரசும், தமிழகக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை. விருது கொடுத்தபோது கூட ஏன் மூத்த அறிஞர்களுக்கு விருது கொடுக்கவில்லை என அப்பொழுதே கேட்டிருந்தேன். அதை அந்த யாருக்கும் வெட்கமில்லை என்ற கட்டுரையில் எழுதி இருந்தேன். அஃதாவது அரபி, பெருசியன் போன்ற மொழிகளுக்கு கூட பல கோடி நிதி உதவி தருகிறது. ஆனால் தமிழுக்குக் குறைவு. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குப் போன அரபி, பெருசியன், சமற்கிருதம் அதற்கெல்லாம் போகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விருதுக்கு உரிய பணத்தைத் தரவில்லை. ஏன் அப்படி? ஆண்டுதோறும் 22 சமற்கிருத அறிஞர்களுக்கு மூத்த செம்மொழி விருது தரும் ஒன்றிய அரசு ஏன் ஒரு மூத்த தமிழறிஞருக்குக்கூட விருது தரவில்லை, அதைத் தட்டிக் கேட்கும் திறன் ஏன் இவர்களுக்கு இல்லை. இவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாவிட்டால் அதுவும் தவறு. நாம் பல்வேறு இடங்களிலே பார்த்துத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் அரசு நிருவாகத்தில் குறை என்றாகிவிடும். உளவுத்துறை, செய்தித்துறை அரசின் கருத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2008 சூனில் நடத்தினார்கள் அப்பொழுது கூட அறிவித்திருக்கலாம். இல்லை. 2008 இல் இருந்து இன்று வரை எண்ணிப் பாருங்கள். 17 ஆண்டுகள். இந்த 17 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 15 விருதுகள் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் ஆண்டிற்கு 5 அல்லது 10 பேர் என்றாவது எத்தனை பேர் என்று எண்ணிப் பாருங்கள். இல்லையே நமக்கு! எங்கு சென்றன அவை?

சரி, பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொள்வோம். சமற்கிருதப் பல்கலைக்கழகங்கள் 18, செருமனியிலே 17. பத்தாததற்கு 121 சமற்கிருதக் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. நேரடியாக ஒன்றிய அரசு மாணவர்களுக்கு நிதி உதவி செய்து தருகிறது. இவ்வாறு பல நாடுகளில் ஒன்றிய அரசு சமற்கிருதக் கல்விக்கு உதவி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம். 1947 இல் 26 மாவட்டங்கள் மொழிவாரி மாநிலம் வந்த பிறகு 12 மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டிலே அப்படி இருக்கும்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கழித்து விட்டுப் பார்த்தால் இன்னும் 11 பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். குறைந்தது, பழைய மாவட்ட கணக்கில் வைக்கலாமே, மாவட்டங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வைக்கலாமே, இதற்கான திட்டத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்கு ஒரு தமிழ் பல்கலைக்கழகத்தை வைத்து அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை வைக்க வேண்டும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல்வேறு இடங்களில் தமிழ்த்துறையின் பொறுப்பாளர்களாக வேறு துறையைச் சார்ந்தவர்கள் தான் இருப்பார்கள் அல்லது பேச்சு மொழிக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ் படித்த அறிஞர்களாக இருப்பார்கள். தமிழ் அறிஞர்கள்தான் ஆனால் பேச்சு மொழியை வாழ வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவினரைத் தமிழறிவு தேவையில்லாமல் எடுத்தார்கள். ஒன்றிய அரசைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் போது தமிழ் அறிவு தேவை இல்லையா? தமிழக அரசியல் இதழில் இது குறித்து வந்த என் செவ்வியை ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்தேன். , செம்மொழி நிறுவனத்தில் அப்போதைய பதிவாளராக முனைவர் முத்துவேல் இருந்தார் அவரும் அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து அவர்கள் நியாயமான கேள்வி என்றார்கள். உடனடியாக அக்குழுவை மாற்றினார்கள்.

அதேபோலச் செம்மொழி விருது கொடுக்கும் பொழுது, அவ்விழாவிலே தமிழிலே அறிமுகம் இல்லை. தமிழ் அறிஞன் தமிழில் விருது பெறுகிறான், தன்னைப் பற்றி என்ன சொல்கிறான் என்று கேட்கக் கூடிய அறிவு வேண்டாமா? இஃது எப்படி? தமிழில் தான் நடத்து என்று சொன்னவுடன், இது நியாயமான கோரிக்கை என்று கேட்டார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒன்றிய அரசு சொன்னால் கேட்கிறார்கள், சொல்ல வேண்டிய முறையில் நாம் சொல்ல வேண்டும். மேம்போக்காகக் கட்சியைத் திட்டுவதாலேயும் ஒன்றிய அரசைத் திட்டுவதாலேயும் பயனில்லை. இன்னமும் அப்படித்தான். திட்டிப் பயனில்லை. நாம் சரியாகக் கேட்க வேண்டும். இவ்வாறு பலவற்றை நாம் சொல்லலாம். அவ்வாறு நாம் கேட்க வேண்டியதைக் கேட்டுப் பெற வேண்டியதைப் பெற்றுத்தான் ஆக வேண்டும்

(தொடரும்)

13.07.2025

நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- தொடர்ச்சி)

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா

உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும்

சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்

இறுகாலத்து என்னை பரிவு

(நாலடியார் 110)

பதவுரை:

சிறுகா=சிறுத்துப் போகா; குறைய மாட்டா; பெருகா=பெருத்துப் போகா; கூடா;

முறை பிறழ்ந்து வாரா=முறை மாறி வாரா;

உறுகாலத்து=துன்புறுங்காலத்து,

ஊற்று ஆகா=ஊன்றுகோல் போல் துணை ஆகா

ஆம் இடத்தே=ஆகும் காலத்தில்

ஆகும்= நிகழும்

சிறுகாலை=முற்காலத்து,

பட்ட= உண்டாகிய,

பொறியும்=நல்வினைகளும்,

அதனால்=ஆதலால்,

இறு காலத்து=(தீவினைப்பயனால்) கேடுவருங் காலத்து,

பரிவு=வருந்துவது,

என்னை=யாது?

சிறுகாலை யென்றது பிறவித்தொடக்கம் என்றும் அதனால் கருவியின் நிலையை உணர்த்துவதாகவும் விளக்கம் தருகின்றனர். இதனடிப்படையில் கருவமையுங் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகள்  அல்லது கருவிலேயே அமைந்து விட்ட பழவினைகள் என்கின்றனர்.

முறைபிறழ்ந்து வாரா-முறை மாறி வாரா என்றால், தீச்செயல்களுக்கு நற்பயன், நற்செயல்களுக்குத் தீப் பயன் என நேர்மாறாக அமையா எனப் பொருள்.

நிகழ்வு, இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் குறைதல் கூடுதல் மாறுதல் இன்றி வினைப்பயனுக்கேற்ப நிகழத்தான் செய்யும் என்கின்றனர். அஃதாவது எது எது எவ்வப்பொழுது நடக்க வேண்டுமோ அது அது அவ்வப்பொழுது நடக்கும் என்பதே ஊழ்வினை என்கின்றனர்.

அந்தந்தப் பிறவியிலேயே நாம் செய்யும் நற்செயல் தீச் செயல்களுக்கேற்ப வினைப்பயனை அடைவர் என்றுதான் கொள்ள வேண்டும்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.   (திருக்குறள், ௩௱௰௯ – 319)

என்கிறார் திருவள்ளுவரும்.

ஒளவையாரும்

முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்

 (கொன்றை வேந்தன் 74(

என்கிறார்.

இந் நன்மொழி,  மக்களிடையே, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்னும் பழமொழியாக உலா வருகிறது. 

இவற்றின் பொருள் ஒரே நாளிலேயே வினைப்பயன் விளையும் என்றில்லை. அதனை    விரைவு கருதிய தொடராக எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, நாம் செய்யும் நற்செயல்கள் என்றும் நமக்கு உற்ற துணையாக நற் பயன் விளைவிக்கும். தீச் செயல்கள் உடனே நன்மை தந்தாலும் துன்பத்தையே விளைவிக்கும் என்பதை உணர்வோமாக!

Friday, November 21, 2025

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010):தொடர்ச்சி)

  1. 20. பண்பாட்டுத் துறை / மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் மட்டும் அல்லாமல், கல்வித்துறை மூலம் மிகுதியான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு வேண்டியதை இந்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இதன் மூலம் வீண் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு ஏமாற்றம் அடைய வேண்டா என இந்திய அரசு உணர்த்துகிறது போலும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். செம்மொழி ஏற்பளிப்பால் விளையும் நன்மைகள் யாவை என நான் உட்படப் பலரும் எழுதிய கட்டுரைகளைப் படித்தாலே அவை யாவும் காற்றில் கட்டிய கோட்டைகளோ என்று எண்ணத் தோன்றும். எனினும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டாவது இவற்றை நிறைவேற்றும் முயற்சிகளில் அரசுகள்  இறங்கும் என நம்பிக்கை வைப்போம்.

? இளம் தமிழறிஞர்களுக்கு விருதுகள் கொடுத் துள்ளார்களே. அது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே?

#  நாம் மேம்போக்காக எண்ணுவதால் நமது உரிமைக்கு ஊறு நேர்வதை உணராமல், உலகின் மூத்த மொழியான செந்தமிழுக்கு உரிய சமநிலை மறுக்கப்படுவதை உணராமல் பெருமையாக எண்ணுகிறோம். 2005-06 முதல் மூன்றாண்டுகளுக்கு ஆண்டிற்கு ஐவர் என்ற அளவில் பதினைந்து இளம்அறிஞர்களுக்கு விருதுத்தொகை நூறாயிரம் உரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதைப் பிற மொழிஅறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் அவர்கள்தாம் வழங்குகின்றார்.  குடியரசு நாளன்று வழங்க முடியாமல் போனாலும் பிறகு பல்வகை விருதுகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றது போல் இளம்தமிழறிஞர் விருது வழங்குவதை நிகழ்த்தியிருக்கலாம். மாண்புமிகு முதல்வர் தில்லி சென்ற பொழுதுகூட இந்நிகழ்ச்சியை வைத்து இருந்திருக்கலாம். அவ்வாறு தராமல் காலந் தாழ்த்தியதால் தமிழக அளவில் விருதுத் தொகைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன; ஆனால் விருதுச் சான்றிதழ்  இதுவரை வழங்கப்படவில்லை. 2004-05 ஆம் ஆண்டிற்கான விருதுகளும் சேர்க்கப்படவில்லை. 2005-06 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதும் 2006-07 ஆம் ஆண்டிற்கான குறள்பீட விருதும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஆண்டு வழங்கப்பட வேண்டிய விருதுகள் தரப்படவில்லை. இவ்வாறு விடுபட்டமைக்கு ஏதும் நடைமுறைக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அதைவிட முதன்மையான ஒன்றாகும். ஆண்டிற்கு 15 சமற்கிருத அறிஞர்களுக்கு  வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் தொடர் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பாலி அல்லது பிராகிருத அறிஞர் ஒருவருக்கும் அரபு அறிஞர் மூவருக்கும் பெருசியன் அறிஞர் மூவருக்கும் வாழ்நாள் முழுமைக்கும் ஆண்டுதோறும் மதிப்பூதியம்  50,000 உரூபாய் வழங்கப்படுகிறது. 2002 இலிருந்து, 8 சமற்கிருத இளம் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை விருதுத்தொகையாக உரூ1.00 நூறாயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சமற்கிருதத்திற்கு ஒருமுறை மதிப்பூதியமும் ஆண்டுதோறும் மதிப்பூதியமும் என 23 பேருக்கு வழங்குகையில்  தமிழுக்கு ஒருமுறை மதிப்பூதியம் மட்டும் ஐவருக்கு மட்டுமே வழங்கப்படுவது அநீதியல்லவா? எனவே, ஒரு வேளை தமிழுக்குச் செம்மொழி ஏற்பால் நிதியுதவி வழங்கப்படுகின்றது என்றால் அவ்வுதவி தமிழைத் தாழ்த்தும் வகையிலும் நம் உரிமையைப் பறிக்கும் வகையிலும்தான் இருக்கிறது  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

? வேறு ஏதும் சமற்கிருத மொழி வளர்ச்சிக்கென உதவிகள் வழங்கப்படுகின்றனவா?

#  தமிழுக்கு இளம்அறிஞர் விருதுகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. ஆனால், சமற்கிருதத்திற்கு எண்ணற்ற வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. மற்றொரு சமசுகிருத அமைப்பின் மூலம்  ஏழு பிரிவுகளில் எண்மருக்கு ஆண்டுதோறும் உரூபாய் 21,000 முதல் உரூபாய் 51,000 வரை பொற்கிழியும் வெள்ளிக் கலசமும் பொன்னாடையும் மேலாடையும் பாராட்டுரையும் வழங்கப்படுகின்றன. அகில பாரதிய சமசுகிருதச் சேவை சன்மானம், அகில பாரதிய ஆயுர்வேதச் சன்மானம், அகில பாரதிய சோதிட சன்மானம் எனப் பலவகைகளில் சமற்கிருதம் படிப்பவர்கள், அறிந்தவர்கள், படிப்பிப்பவர்கள், எழுதுபவர்கள், பதிப்பவர்கள், மொழிபெயர்ப்பவர்கள்  என அனைத்துத் தரப்பாருக்கும்  நிதி யுதவிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சமசுகிருத் சன்மானம் மூலம் நிதியளிக்கப்படுகின்றது. 100 விழுக்காட்டுத்  தேர்ச்சியைத் தரும் சமசுகிருத ஆசிரியர்களுக்கு  ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. இந்தியா முழுமையும் 30 நிறுவனங்களுக்குச் சமசுகிருதப் பயிற்சிக்கும் பரப்புதலுக்கும் என ஆண்டுதோறும் பத்துக்கோடி உரூபாய்க்கும் மேலாக நிதியுதவி வழங்கப்படுகிறது. பகுதிநேரம் சமசுகிருதம்  கற்பிப்போருக்கான ஊதியத்தை மத்திய அரசே தருகின்றது. நூல்கள், குறுந்தகடுகள், ஒளிப்பேழைகள், அட்டவணைப் படங்கள், விளம்பர ஒட்டிகள் முதலான பல்வகை வெளியீடுகளுக்கென கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துவருகின்றது. சாத்திர சூடாமணித் திட்டம் என்ற பெயரில்  ஓய்வு பெற்ற சமசுகிருத ஆசிரியர்களுக்குப் பணிநீட்டிப்பு வழங்கி சமசுகிருதம் கற்றுத் தரச் செய்வதற்கு எனத் திட்டச் செலவில் 17.00 கோடியும் திட்டம் சாரா செலவில் 16.50 கோடியும் ஒதுக்கப்படுகின்றன.

இவை தவிர சமற்கிருத வளர்ச்சித் திட்டத்திற்கென  நடைமுறையில் உள்ள திட்டங்களுக்காக 11 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 32,985 நூறாயிரம் உரூபாய் ஒதுக்குவதற்குத் திட்டம் தீட்டியுள்ளார்கள்.  புதிய திட்டங்கள் தலைப்பில், சமசுகிருதம், பாலி, பிராகிருதம், பெருசியன், அரபி, திபேத்தியன் மொழிகளுக்கான கல்விக்கென ஒதுக்கீடு கோரியுள்ளனர். இதில் தமிழுக்கு ஒதுக்கீடு இல்லை. இவ்வாறாகச் செவ்வியல் மொழி என்ற போர்வையில் சமசுகிருத வளர்ச்சிக்குச் செலவிடும் ஒட்டு மொத்தத் தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுகூடத் தமிழுக்கு ஒதுக்கப்படவில்லை.

Thursday, November 20, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – தொடர்ச்சி)

தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும்.

திருவள்ளுவரும், திருக்குறளும் உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற அளவுக்கு தொல்காப்பியமும், தொல்காப்பியரும் உலக அளவில் சிறப்படையவில்லை. தொல்காப்பியரும், அதங்கோட்டாசானும், பனம்பாரனாரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என வரலாற்று நிலையில் வரையறுக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலம் வடமொழி இலக்கண நூலான பாணினியின் காலமான கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும், புத்தர் காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. தொல்காப்பியர் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது என்கிறார் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் மு. மீனாட்சிசுந்தரம் .

உலக அளவில் இலக்கியத்தையும், வாழ்வியலையும் ஒருசேர கூறிய நூல் தொல்காப்பியம் மட்டுமே.

இதை உலகளவில் எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் நன்னூல் இலக்கணம் அறிமுகம் செய்யப்பட்ட அளவுக்குத் தொல்காப்பியம் அறிமுகம் செய்யப்படவில்லை. தொல்காப்பியத்தைப் பாடத்திட்டத்தில் விரிவான அளவில் சேர்க்க வேண்டும். என்கிறார் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத்தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா)

கவிதை வாயிலாகத் தொல்காப்பியத்தின் சிறப்பு

காலங்கள் தோறும் தொல்காப்பியத்தைப்பின்பற்றியும் வந்துள்ளனர் பாராட்டியும் வந்துள்ளனர். சான்றாக, ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிற் காப்புப் பருவத்தில்,

வடுவில் காப்பிய மதுர வாய்ப்பொருள் 

மரபு வீட்டியதால்

என்கிறார்.

வடுவில் காப்பியம்’ என்றது. குற்றமற்ற தொல்காப்பியத்தை. “மதுரவாய்ப் பொருள் மரபு” என்றது, இனிமையமைந்த பொருளிலக்கணத்தைக் கூறும் பொருளதிகாரப் பகுதியை. இதுபோல் இப்போதும் கவிஞர்கள் தொல்காப்பியத்தைப் பாராட்டி வருகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளைக் கவிதைகள் வாயிலாகவும் கூறி வருகின்றனர். எடுத்துக்காட்டிற்காக ஒன்று:

எழுத்துக்கும்   சொல்லுக்கும்   இலக்க ணத்தை

எடுத்தியம்பும்   நூல்கள்பல்  மொழிகளி   லுண்டு

ஒழுக்கத்தை   வாழ்வியலை   எடுத்துச்   சொல்லும்

          ஒப்பற்ற   பொருளென்னும்   இலக்க  ணத்தை

வழுவின்றி   சொல்லும்நூல்   தமிழி   லன்றி

          வாழுமெந்த   மொழிகளிலும்   இல்லை   யிங்கே

பழுதில்லாத்   தொல்காப்பி  யமெனும்   நூலே

          பார்தன்னில்   உள்ளஒரே   நூலாம்   இன்று !

என்றும் 

நன்னூலோ   எழுத்தோடு   சொல்லைக்   கூற

          நம்பிஇறை   தந்தநூலோ    அகத்தைக்   கூற

பன்னிரண்டு   படலமொடு   ஐயனா   ரிதனார்

          படைத்தளித்த   இருநூல்கள்   புறத்தைக்   கூற

தண்டிமாறன்   வடித்தநூல்கள்   அணியைக்   கூற

          தமிழ்ப்பாக்கள்   இயற்றயாப்பை   காரிகை   கூற

மண்மீதில்   ஐந்துவகை   இலக்க  ணத்தை

          மறையாகக்  கூறுகின்ற   ஒரேநூல்   இந்நூல் !  (3)

என்றும்

உந்திமுதல்   எனத்தொடங்கும்   நூற்பா   தன்னில்

          உருபெற்றே   எழும்காற்று   சென்னி   மிடறு

நெஞ்சென்னும்   இடங்களிலே   நிலைத்தி   ருந்து

          நெகிழ்ந்தேபல்   உதடுநாக்கு   மூக்கு  அண்ணம்

அய்ந்துறுப்பின்    தொழிலாலே   வேறு   வேறாய்

          அக்காற்று   எழுத்தொலியாய்   பிறக்கு   மென்று

முந்துரைத்த   கருத்தைத்தான்   இற்றை   நாளில்

          முயன்றுரைத்தார்   உடற்கூறு   வல்லு  நர்கள் !

இக்கால   ஒலியியலார்   எழுத்தொ   லிக்க

            இயங்குகின்ற   காற்றறைகள்   துணையாய்  நிற்கும்

தக்கஒலி   எழுப்பிகளாய்க்   கண்டு   ரைத்த

            தகுஉறுப்பை   காப்பியனார்   அன்றே   சொன்னார்

என்றும்

அறிவியலார்   உயிரினத்தை   நின்று   வாழ்தல்

          அசைந்தசைந்து   சென்றுவாழ்தல்  எனப்பி   ரித்தார்

அறிவார்ந்த   காப்பியரோ   உயிரி   னத்தை

          அறுவகையாய்   உயர்அஃறிணை   எனப்பி  ரித்தார்

விரிவாக   அவருரைத்த   உயிரின   வகையை

          வியந்தின்றும்   அறிவியலார்   போற்று   கின்றார்

அரிதாகக்   கிடைத்தயிந்த   நூலைப்   போன்று

          அகிலத்தில்   வேறெந்த   மொழியிலு   மில்லை !

ஓரறிவு   ஈரறிவு   மூவறி  வென்றே

            ஒன்றுமுதல்   ஆறறிவாய்   உயிரி  னத்தை

தேரறிவு   காப்பியர்தாம்   வகைப்ப   டுத்தித்

            தெளிவாக   உயிரினத்தின்   பெயரும்   சொல்லி

பேரறிவு   அறிவியலில்   கொண்ட  வர்தாம்

            பெருந்தமிழர்   என்பதற்குச்   சான்றாய்  இங்கே

ஊரறிய   உலகறிய  திகழு   மிந்த

            உயர்தொல்காப்   பியத்திற்கே   ஈடு   முண்டோ !  (6)

என்றும்

 பாவலர் கருமலைத் தமிழாளன் தொல்காப்பியத்தின் சிறப்புகளைக் கூறும் கவிதையைக் குறிப்பிடலாம். ( தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா கவியரங்கம், நாள்: 26.06.2047/10-07 -2016, தரவு அகரமுதல மின்னிதழ்)

பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம்

ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை, “ஆர்ய” என்னும் வடசொல்லின் திரிபாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்  ஐயர் கரணம் யாத்தனரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்தியதென்பதும், அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ எனத் தொல்காப்பியனார் தமக்கு முன்னோர் கூற்றாக வைத்துரைத்தலால் இக்கரண வரையறை அவர் காலத்துக்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் விதிக்கப்பட்டதென்பதும் நன்கு துணியப்படும். முன் பொய்யும் வழுவும் தோன்றாத களவு மணத்தில் பின் அவை தோன்றியதற்குத் தமிழரொடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும். (வெள்ளை வாரணனார்: தொல்காப்பிய வரலாறு)

இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார்,

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்னும் தொல்காப்பிய அடிகளுக்குத் தவறானஉரை தருகின்றனர் பலர்.  காதலால் இணைந்த பின் பிரிவு ஏற்பட்டமையால் பிராமணர்கள் திருமண முறையை வகுத்தனர் என்பதுபோல் நச்சினார்க்கினியர் முதலானோர்  தெரிவிக்கின்றனர். இவர் போன்றவர் களிடமிருந்து மாறுபட்ட சரியான பார்வையைக் கொண்டுள்ளார் இலக்குவனார், ‘ஐயர்’ என்பது பிராமணரைக் குறிக்காது என்றும் தமிழில் தலைவனையும் தந்தையையும் குறிக்கும் என்றும், ‘கரணம்’ என்பது  எழுத்து மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும் என்பதையும் விளக்குகிறார்; கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளையைக் கரணம் எனச் சொல்லும் இக்காலவழக்கையும் சான்றாகக் காட்டுகிறார்; காதலர்கள் மனம் மாறி இணைந்துவாழும் உறுதியில் இருந்து பின் வாங்கியதால் தமிழர்களுக்காகக் தமிழகத்தலைவர்கள்  தமிழ்த் திருமணமுறையைக் கொண்டுவந்தனர் என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணப்பதிவு  முறையைக் கொண்டுவந்தவர்கள் தமிழர்களே என்றும் மெய்ப்பிக்கிறார். 

(தொடரும்)

Followers

Blog Archive