Sunday, September 6, 2026

இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

      06 September 2026      அகரமுதல



(பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் – தொடர்ச்சி)

அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968), வள்ளுவர்‌ கண்ட இல்லறம் (1971)  எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம்,
5.
பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்,
7.
ஒப்புமைக் கருத்துகளைச் சுட்டுதல், 8. எக்காலத்திற்கும் ஏற்ற உரை,
9.
தனியர் தாக்குதல் இன்மை, 10. கருத்தில் வன்மை, 11. நடையில் மென்மை,
12.
வகுத்தும் தொகுத்தும் விவரித்தல்,
13.
சொல்விளக்கமும் இலக்கணக் குறிப்பும்,
14.
அறிவியல் பார்வை, 15. புரட்சி எண்ணம்.

ஒருபாலரைக் குறிப்பது மறுபாலருக்கும் பொருந்தும்

“கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்” (திருக்குறள் 54) என்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்’ எனக் கற்புநெறி இருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை விளக்குகிறார்.

“பெய்யெனப் பெய்யும் மழை” (திருக்குறள் 55) என்பதை விளக்கும் பொழுது, ‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமலை.

‘திருடியவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல் வேண்டும்.

“தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம் நல்குகிறார்.

‘‘ஆலந்தூர் கிழார் என்பவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுங்காலத்தில்,

 “நிலம் புடைபெயர்வதாயினும் ஒருவன்

செய்திகொன்றோர்க்கு உய்திஇல்லென

அறம்பாடிற்றே ஆயிழை கணவ”

என்று பாடுகின்றார் (புறநானூறு 34). இதில்,

 “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற குறளை (110)

எடுத்தாண்டு திருக்குறளை ‘அறம்’ என்றும் சுட்டுகிறார்.

‘‘திருவள்ளுவர் “மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் சான்றோர் பழித்தது ஒழித்து விடின்” என்ற குறளில் மழுங்கச் சிரைக்கும் புத்தமதக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, புத்தமதம் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். அசோகன் காலத்தில்தான் புத்தமதம் தமிழ் நாட்டிலும் பரவிற்று.

ஆதலால் அசோகன் காலமே வள்ளுவர் காலம் என்று கூறலாம். அசோகன் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பர்’’ என என ஆராய்ந்து நிறுவுகிறார்.

பேராசிரியர் சி.இலக்குவனார் ஆய்ந்தாய்ந்து கொண்ட ஆராய்ச்சிப் புலமையால் பின்வரும் கருத்துகளை நிலைநாட்டி உள்ளார்.

  1. திருவள்ளுவர் உலகத்தின் முதல் புரட்சியாளர், 2.பெண்களுக்கான முதல் புரட்சியாளர், 3. எண்ணப் புரட்சி செய்தவர் திருவள்ளுவர், 4. தமிழ்ப் பண்பாட்டை அழிந்து போகாமல் காத்தவர் திருவள்ளுவர், 5. திருவள்ளுவர் ஒரு சீர்திருத்தப் பெரியார், 6. திருக்குறள் உலகத்திற்கான நூல், 7. வள்ளுவர் வரலாறு குறித்தன புனைந்துரைகளே!, 8. திருவள்ளுவர் காலம் சங்கக்காலம், 9. திருவள்ளுவர் காலம் அசோகர் காலம், 10. திருக்குறள் தனித்தமிழ் நூல், 11. திருக்குறள் தமிழ்மரபு தழுவியே இயற்றப்பட்டுள்ளது, 12. இன்பத்துப்பால் தமிழர் காதலறத்தின் நெறிமுறையே, 13. இன்பத்துப் பால் ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாக அமைந்துள்ளது, 14. திருக்குறளின் கற்பியல் உயர்ந்த இலக்கியம், 15. குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்

திருக்குறள் பற்றிய வினாக்கள், புதிர்கள், போட்டிகள், திருக்குறள் நூல் பரிசாக அளித்தல் மூலம் மாணவர்களிடம் திருக்குறள்பால் நாட்டத்தை உண்டாக்கினார்.

கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றும் நகர்களிலும் திருக்குறள் கழகங்கள் அமைத்துக் குறள்நெறிப் பரப்புப் பணியை மேலும் விரிவாக்கினார்.

பாடத்திட்டத்தின்படியான கற்பித்தலை மட்டும் கடமையாகக் கொள்ளாமல் மக்களிடையே தமிழ்நெறியைக் கற்பித்தலையும் கடமையாகக் கொண்டு ஒழுகினார்.

புராணக் கதைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களைப் பிற்போக்காகக் கருதிய பெரியார் ஈ.வெ.இராமசாமியின் கருத்தை மாற்றினார். திருக்குறளைப் பற்றிய அவரின் தவறான எண்ணத்தையும் போக்கினார்.

பேரா.இலக்குவனார் மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருந்த பெரியார் ஈ.வெ.இராமசாமி திருக்குறள் நெறியே அவரது தன்மானப் பொழிவிற்கு வலு சேர்க்கும் என்னும் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

திராவிடர் கழக மாநாடுகளில் திருக்குறள் கருத்தரங்கத்திற்கும் ஒரு பொழுதை ஒதுக்கினார். இம்மாநாடுகளில் இலக்குவனாருக்குச் சிறப்பான இடத்தை அளித்தார்.

பேரா. இலக்குவனார் விருதுநகரில் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முதலானோரும் பங்கேற்றனர். 

இன்றைக்கு அரசியல் கட்சிகள் கட்சி மாநாடுகளில் இலக்கிய அமர்வுகளையும் சேர்த்திருப்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்  பேரா. இலக்குவனார்.

அரசியலாளர் மூலம் திருக்குறள் நெறி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் தோற்றுவித்த பெருந்தகையாய்ப் பேரா. இலக்குவனார் விளங்குகிறார்.

தாய் மின்னிதழ் 06.09.2026

Wednesday, September 2, 2026

பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்



தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.

இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை.

அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.)  குறள்நெறிக் காவலர், 4.)  குறள்நெறிச் செம்மல் முதலிய பட்டங்கள் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் புலமையையும் திருக்குறள் பணிகளையும் தெரிவிப்பன.

குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகளைப் பின்வரும் வகைப்பாட்டில் காணலாம்.

அ.) திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள்

ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள்

இ.) திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்

ஈ.) யாரும் செய்யாத திருக்குறள் சாதனைகள்

அ.) திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள்

இலக்குவனார் பள்ளிப் பருவத்திலேயே திருக்குறளில் ஈடுபாடு காட்டி அனைத்துத் திருக்குறள்களையும் மனப்பாடம் செய்து விட்டார்.

பள்ளி நிகழ்ச்சிகளில் பேசும் பொழுது திருக்குறளையும் மேற்கோளாகக் காட்டிப் பேசினார்.

மாலை நேரங்களில் அல்லது விடுமுறை நாள்களில் ஊரார் கூடியிருக்கும் இடத்தில் திருக்குறளைப் பற்றிப் பேசிப் பரப்பினார்.

ஊர்ப்பெரியவர்கள் “நம்மூர்ச் சிறுவன் அழகாகப் பேசுகிறானே! கேட்டு ஊக்கப்படுத்துவோம்” என்று ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர்.

இவரது பேச்சைக் கேட்டும் இவருக்குக் கிடைத்த பாராட்டுகளைப் பார்த்தும் பிற மாணா்கருக்கும் திருக்குறள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாகக் கல்லூரி மாணாக்கனாகப் புலவர் பட்டம் பயிலும் பொழுது நண்பர்கள் மூவரைச் சேர்த்துக் கொண்டு அக்கம் பக்க ஊர்களுக்கெல்லாம் சென்று திருக்குறளைப் பரப்பினார்.

உடன் தொல்காப்பியம் சங்க இலக்கியச் சிறப்புகளையும் பரப்பினார்.

திருக்குறள் பற்றிய வினாக்கள், புதிர்கள், போட்டிகள், திருக்குறள் நூல் பரிசாக அளித்தல் மூலம் மாணவர்களிடம் திருக்குறள்பால் நாட்டத்தை உண்டாக்கினார்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியில் சேர்ந்த பின்னும் விடுமுறைதோறும் கால அட்டவணை போட்டு ஊர் தோறும் சென்று திருக்குறளைப் பரப்பினார்.

உடன் தமிழின் சிறப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழர் தமிழறிந்த தமிழராய் வாழவேண்டியதன் இன்றியமையாமை முதலியவற்றையும் பேசித் தமிழ் உணர்வையும் மொழியறிவையும் இலக்கிய அறிவையும் ஊட்டினார்.

தாம் பணியாற்றிய கல்வியகங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் ஆண்டுதோறும் விழாக்களை நடத்தி மாணாக்கர்களுக்குத் தமிழ் உணர்வை உண்டாக்கினார்.

தாம் பணியாற்றிய கல்லூரிகளில் ஆண்டுதோறும்‌ “முத்திறப்‌ பொருளின்‌ மும்மை நெறியில்‌ மக்கள்‌ சென்று மாண்புறு வாழ்வின்‌ இன்பம்‌ துய்த்திட இன்னெறி காட்டிய வாழ்வியல்‌ வல்லுநர்‌ வள்ளுவர்‌ திருநாள்‌” (‘துரத்தப்பட்டேன்’) நடத்தினார்.

தொல்காப்பியர்‌ திருநாள்‌, திருவள்ளுவர்‌ திருநாள்‌, இளங்கோவடிகள்‌ திருதாள்‌, ஒளவையார்‌ திருநாள்‌, தமிழ்‌ மறுமலர்ச்சி நாள்‌ என்று மொத்தம் ஐந்து விழாக்கள்‌ நடத்தினார்.

விழாக்கள் மூலம் தமிழ்ப் புலவர்கள் சிறப்பையும் தமிழின் சிறப்பையும் உணர்த்தியதுடன் தனித்தமிழ்ப் பற்றையும் விதைத்தார்.

இவ்விழாக்கள் மூலமும் திருக்குறள் கருத்துகளைப் பரப்பினார். இவ்விழாக்கள் தொடரவும் நிலையான ஏற்பாட்டை  உருவாக்கினார்‌.

பாடலாயினும் கட்டுரையாயினும் தம் படைப்புகளில் திருக்குறளை முழுமையாக அல்லது குறள் தொடராகப் பயன்படுத்தியே எழுதுவார்.

“இன்னாமை இன்பம்‌ எனக்‌ கொளின்‌ ஆகும்‌ தன்‌ ஒன்னார்‌ விழையும்‌ சிறப்பு எனும்‌ தமிழ் மறையின்‌ இன்மொழிக்கேற்ப எவரும்‌ போற்றும்‌ இனிய தலைவராய்‌ ‌நேரு விளங்கினார்‌” எனத் திருக்குறளை மேற்கோளாக்கி நேருவின் பண்பினை வெளிப்படுத்துகிறார்.

சொலல்வல்லர்‌; சோர்விலர்‌; அஞ்சார்‌; சொல்லுறு

கலைகள்‌ போற்றும்‌ காவலர்‌; கட்டுரை வன்மையர்‌; பகைவரும்‌ நண்பராய்ப்‌ பண்புடன்‌ பொருந்த

அமைதி நாடிய அரசியல்‌ அறிஞர்‌;

உள்ளத்‌ தூய்மையர்‌; உணர்ச்சிப்‌ பெருக்கினர்‌;

என்று

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (திருக்குறள், ௬௱௪௰௭ – 647)

என வரும் திருக்குறளில் இருந்து தொடரைக் கையாண்டுள்ளார்.

புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேரா.சி. இலக்குவனாரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினார்.

அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் திருக்குறள் நூல்களும் பிற நூல்களும் வெளியிடப்பட்டன.

திருக்குறள் கழகம் மூலம் இலக்குவனார் வாரந்தோறும் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தினார்; மக்களிடையே இதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது.

தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, இது குறித்துப் பாராட்டி ‘விடுதலை’ நாளிதழில்  செய்தி வெளியிட்டிருந்தார்.

“ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் 8-30 மணிக்குத் தொடங்கி முறையாகக் குறள்வகுப்பு நடைபெற்று வருகின்றது.

நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெரியோர்களும் வந்து கேட்கின்றார்கள், மாலையில் 6-30 மணிக்குத் தொடங்கிச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.

ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கு இருந்து சொற்பொழிவைக் கேட்கின்றனர்.

குறளிடத்தில் மக்களுக்கு ஆர்வம் உண்டாகி ஞாயிற்றுக்கிழமை வருவதை எதிர்பார்த்திருக்கின்றனர்.”

“இவ்வாறு தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும்.

இராமாயணம், பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செய்து வந்துள்ளமை அறிவோம்.

ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்.”

‘குறள்நெறி’ என்னும்‌ பெயரில்‌ தனிச்சுற்று இதழையும் நடத்தினார்.

“குறள்நெறி ஓங்கின்‌ குடியரசு உயரும்‌” என்று குறள்நெறியை உயர்த்தும் முழக்கத்தைப் பரப்பினார்.

இம் முழக்கத்தை தமது குறள்நெறி இதழின்‌ முகப்புப்‌ பக்கத்தில்‌ இடம்‌ பெறச்‌ செய்து வந்தார்‌.

சில பாடல்களிலும் இம்முழக்கம் இடம் பெறச் செய்தார். சான்றாகப் பொங்கல்‌ வாழ்த்துப்‌ பாடலில் இடம் பெற்றதைப் பார்ப்போம்.

‘குறள்நெறி’ ஓங்கி குடியர சுயர்ந்து

பசியும்‌ பிணியும்‌ பகையும்‌ நீங்கி

வசியும்‌ வளனும்‌ சுரந்து வாழியர்‌

வையகம்‌ வாழ்க; வான்தமிழ்‌ வெல்க;

இசைப் பாடல்களை இயற்றினார். நிகழ்ச்சி மேடைகளிலும் இப்பாடல்கள் இடம் பெற்றன. திருக்குறளை இசைப்பாடல் மூலம் பரப்பியதற்குச்சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

“கற்றதனால்‌ பயன்‌ என்ன – கலைபல நற்றமிழ்ச்‌ செல்வர்காள்‌ (கற்ற) இடைநிலை பெற்ற கல்வியின்‌ பயன்‌ பேரிறைவன்‌ தாளை உற்றவர்‌ அன்புடன்‌ உறுதியாய்த்‌ தொழுவதே (கற்ற) இறுதிநிலை இருவினை இடும்பைகள்‌ என்றுமே அடையா கருவினில்‌ வருவதும்‌, கவலையும்‌ இலையாம்‌ இருநில மிசைதனில்‌ என்றுமே வாழ்வாம்‌ அருள்மிகு இறைவனை அன்புடன்‌ தொழாவிடில்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.   (திருக்குறள் ௨ – 2)

என்னும் திருக்குறளை இசைப்பாடல் மூலம் மக்களிடையே கொண்டு சென்றார்.

(தொடரும்…)

  • இலக்குவனார் திருவள்ளுவன்

03.09.2026 – தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனாரின் 53 ஆவது நினைவாண்டு

  • தாய் மின்னிதழ் 02.09.26

Followers

Blog Archive