செம்மொழி மாநாடும் எழுத்துப் பாதுகாப்புப் போரும்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்பு மாநாடு நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடந்தது போல் மற்றொரு கருத்துப் போரும் நடைபெற்றது. தமிழ் எழுத்தை மாற்றியமைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் மாநாட்டு முடிவில் எழுத்துச் சீர்திருத்த ஆணை வரும் என்று சொல்லியும் எழுதியும் வந்தனர்.
இது கண்டு பொங்கி எழுந்த தமிழறிஞர்கள் எழுத்துச்சிதைவு முயற்சிகளுக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்தரங்கங்கள் நடத்தியும் இணையம் வாயிலாகவும் தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் சிங்கப்பூரிலும் பெரும் கருத்துப் போரினை நடத்தினர். உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள் இது கண்டு பல்வகையிலும் இதனைத் தடுக்க முறையிட்டனர். இதனால் தமிழக முதல்வர் சார்பாக மாநாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரான தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவ்வாறு எத்தகைய முயற்சியும் தமிழ் எழுத்துஅமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை என அறிவித்தார். அத்துடன் நில்லாது முதல்வர் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் குழுவரங்கம் முதலியவற்றை நீக்கச் செய்தார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகக் கட்டுரைகள் வாசிக்க மொழியியல் பிரிவில்தான் ஆய்வரங்கம் ஒதுக்கினார்.
25.06.10 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்குக் கோவூர் கிழார் அரங்கத்தில் இவ்வாய்வரங்கம் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து பேராசிரியர் மணியம் (எழுத்துத் திருத்தம் தேவையா ? - இவர் அதே நேரம் வேறு ஆய்வரங்கத்தில் தலைமை தாங்கியமையால் இவர் சார்பில் பிரான்சில் இருந்து வந்த பேராசிரியர் லெ.பொ, பெஞ்சமின் கட்டுரையை வாசித்தார்.), துபாயில் இருந்து பொறியாளர் நாக.இளங்கோவன் (தமிழ் எழுத்துத் திருத்தத்தில் பொதிந்த பெருங்கேடுகள்), பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (தமிழ் எழுத்து முறையின் தனித்தன்மையும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும்) தமிழ்நாட்டில் இருந்து திரு இலக்குவனார் திருவள்ளுவன் (வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு) ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள். (பேராசிரியர் லெ.பொ.பெஞ்சமின் 27.06.10 நண்பகல் 12.30 மணிக்குச் சாத்தனார் அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.)
பெரும்பாலான ஆய்வரங்கங்களில் சிலரே பார்வையாளராக இருந்த நிலைக்கு மாறாக இவ்வரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி இருந்தனர். பலர் இடமில்லாமல் திரும்பிச் சென்றனர். சிங்கப்பூர், மலேசியா எனக் கடல்கடந்துவந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர் இரு நாளும் மாநாட்டு அறிஞர்கள் இவ் வாய்வரங்கச் சிறப்பு குறித்தே பேசினர் எனில் இவ்வாய்வரங்கச் சிறப்பு குறித்தும் எழுத்தைச் சிதைக்கக் கூடாது என்பதில் உலகெங்கும் உறுதியான கருத்து இருந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அத்துடன் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாகத் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தம் கட்டுரையில் மேலும் சில கருத்துகளைச் சேர்த்து எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! எனச் சிறு கையேட்டையும் வெளியிட்டார். இக் கையேட்டிற்கும் மாநாட்டில் பெரும் வரவேற்பு இருந்தது. மாநாட்டுக் கட்டுரையின் தொடர்ச்சியாக அமைந்த இக்கட்டுரையை நட்பு வெளியிட்டு ஒரு விவாதக் களத்தைத் தொடங்கி வைக்கிறது. எனவே, உங்கள் கருத்துகளைச் சான்றுகளுடன் பதியுங்கள்.
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
எழுத்துச்சிதைவு முயற்சிகள் தோற்கும். தமிழ் வெல்லும்! ஆனால், கட்டுரை எங்கே? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++
(within the last minute)
(8 hours ago)
No comments:
Post a Comment