>>அன்றே சொன்னார்கள்
பெண்களைப் பழங்காலத்தில் இருந்தே அடிமையாக எண்ணியுள்ளதாகப் பலர் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். ஆரிய எண்ணங்களால் சிலர் இடைக்காலங்களில் அத்தகைய போக்கிற்கு ஆளானாலும் பழந்தமிழர் நெறி என்பது பெண்ணையும் ஆணையும் இணையாக எண்ணிப் போற்றியதே. காலச்சூழலால் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்னும் வினாத் தோன்றிய அவலம் ஏற்பட்டுள்ளது. பெண்களைப் பற்றி உலக மொழியியல் அறிஞர் தொல்காப்பியர்,செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான
என்கிறார். பெண்களுக்கான பண்புகளில் அறிவையும் தொல்காப்பியர் கூறுகிறார் எனில் பெண்களுக்கும் கல்வி என்பது கட்டாயமான ஒன்றுதானே. இதனைப் புரிந்து கொள்ளாமல் பரிமேலழகர் ஆரிய வழியில் பெண்களுக்கு அறியும் ஆற்றல் கிடையாது என எழுதிச் சென்று விட்டார் (திருக்குறள் 69 உரை).
எனவே, பழந்தமிழர் நெறியில் பெண்ணும் ஆணும் இணை என்பதை உணர்த்தினால்தான் பெண் குழந்தைகளைக் கருவிலும் பிறந்தவுடனும் அழிக்கும் கொடுமைகள் நிற்கும். இனியேனும் பெண்மையைப் போற்றுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment