>>அன்றே சொன்னார்கள்43
பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன. இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன.
இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2: 13). அஃதாவது 7 நிலைகளை உடைய மாளிகையின் இடைப்பகுதியான 4 ஆம் நிலையில் இருந்துள்ளதாக உரையாசிரியர்கள் விளக்கி உள்ளனர். இவற்றுள் மொட்டைமாடி என்று இப்பொழுது நம்மால் அழைக்கப்படும் மேலே உள்ள திறந்த வெளிப்பகுதிகள் முகில் கூட்டம் தவழும் வண்ணமும் நிலா ஒளியில் மகிழும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன. நிரைநிலை மாடம் என்றும் அரமியமான சூழலைத் தருவதால் அரமியம் என்றும் பொது வழக்கில் நிலா முற்றம் என்றும் அழைத்துள்ளனர். நான்காம் மாடத்திலிருந்து நிரைநிலை மாடத்திற்கு அவ்விருவரும் சென்றதையும் இளங்கோ அடிகள்
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும் நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி (சிலப்பதிகாரம் : 1:2: 26-27)
மகிழ்ந்ததாக விளக்குகிறார். (விரை மலர் - மணம் வீசும் மலர்; வாளி-அம்பு; வேனில் வீற்றிருக்கும் - மலர்க்கணையை உடைய அழகன் (மன்மதன்) இருக்கும் ; அரமியம் - காதல் உணர்விற்கு உரிய அழகிய சூழல் உடைய நிலா முற்றம்)
தாய், தன் மகளும் மருமகனும் வர இருப்பதால், தன் வீட்டின் அலங்கரிக்கும் சிறப்புடைய மாண்புற்ற புறச்சுவரில் செம்மண் பூசினாள்; இல்லத்தின் முன் பக்கத்தில் மணலைப் பரப்பச் செய்தாள்; மாலைகளை வீட்டில் தொங்க விடச் செய்தாள்; மகிழ்வுடன் எதிர்பார்த்திருந்தாள் எனக் கூறும் புலவர் கயமனார்,
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி மனைமணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் (அகநானூறு: 195.4 )
என விளக்குகிறார்.
இப்புலவரைப் போல், வீட்டுச் சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டிருக்கும் என்பதைப் புலவர் ஆலங்குடி வங்கனார், பூவல் படுவில் (புறநானூறு 319.1) என்றும் இளங்கோ அடிகள் பூவல்ஊட்டிய புனைமாண் (சிலப்பதிகாரம் : 16: 5) என்றும் சோழன் நல்லுருத்திரன் இல் பூவல்ஊட்டி (கலித்தொகை : 114) என்றும் கூறுகின்றனர்.
மனை பற்றிய குறிப்புகள் சிலவற்றை முன்பு கண்டோம். மேலும் பல புலவர்கள் மனைகள், மாளிகைகள், இல்லங்கள் முதலானவை குறித்துக் குறிப்பிட்டுள்ளனர்.
மனைகள் குறித்தும் மனையில் நடத்தப்பெறும் மணவினைகள், இல்லறம் குறித்தும் புலவர்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (மண மனை கமழும் கானம்-அகநானூறு: 107.21), வேம்பற்றூர்க் குமரனார் (மனைஒழிந்திருத்தல் -அகநானூறு: 157.14), கயமனார் (மனைமருண்டு இருந்த -அகநானூறு: 189.12), மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (மனை புறந்தருதி-அகநானூறு: 230.8; இம்மனைக் கிழமை மனையறம்- அகநானூறு 230.9), மதுரை மருதனிளநாகானர் (மனைவலித்து ஒழியும் மதுகையள்-அகநானூறு 245.3; அல்குமனை வரைப்பில் -அகநானூறு 245.9), பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் (மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து -அகநானூறு: 373.2), ஆசிரியர் புலவர் உருத்திரங்கண்ணனார் (மனை சேர்த்திய வல்லணங்கு - பட்டினப்பாலை: 87), ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மகமுறை படுப்ப மனைதொறும் பெறுகுவிர் -மலைபடுகடாம்: 185), புலவர் இளங்கீரனார் (மனைமாண் சுடர் - நற்றிணை 3.9), புலவர் சாத்தந்தையார் (தாய்மனை - 26.4), புலவர் பிரமசாரி (வெறிமனை-நற்றிணை 34.9), புலவர் ஓரம்போகியார் (மனைமடி துயிலே - நற்றிணை 360.11) ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றின் மூலம் வீடுகள் வெவ்வேறு வகைகளில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டடச் சிறப்புகளையும் காவல் சிறப்பையும் பிற சிறப்புகளையும் அறிய முடிகிறது.
நுண்ணிய முள்வேலியைச் சிறப்பாக அமைத்து அருமையான காவலை உடைய மாளிகை குறித்துப் புலவர் தும்பி சேர் கீரனார்
மனைஉறக் காக்கும் மாண்பெரும் கிடக்கை நுண்முள்வேலி (நற்றிணை 277.5-6) எனக் குறிப்பிடுகின்றார்.
அருமன் என்பவனின் புகழ்மிகுந்த சிறுகுடி என்னும் ஊரில் தொன்மையான வீடுகள் பல இருந்தன எனப் புலவர் நக்கீரர்
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற்றிணை 367.6)
என்னும் வரியில் விளக்குகிறார்.
இவ்வாறு வீட்டுக்கட்டடங்கள் அமைந்த சிறப்புகளைத் தொடர்ந்தும் காண்போம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment