>>அன்றே சொன்னார்கள்38
கட்டடக்கலையில் தமிழ் மக்கள் பிற துறைகளைப் போல் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்கு மிகவும் முன்னோடியாக உள்ளனர். விரிவான இப்பொருளில் வானளாவிய கட்டடங்கள் குறித்து முதலில் பார்ப்போம்.19ஆம் நூற்றாண்டு வரை வானுயர் கட்டடங்கள் (skyscrapers) என்பது நினைக்க இயலாத ஒன்றாக இருந்தது. அதன் பின்னர்தான் இட நெருக்கடியாலும் மக்கள் பெருக்கத்தாலும் இது குறித்த சிந்தனை பிற நாட்டார்க்கு வந்துள்ளது.
இயேசு போகர்தசு (James Bogardus: 1800–1874) என்பவர் 1848இல் இரும்பு வார்ப்புகளைப் பயன்படுத்திக் கட்டுமானப் பணியில் ஈடுபடும் முறையைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையில் 1856இல் என்றி பெசெமர் (Henry Bessemer) என்பார் தேனிரும்பை எஃகாக மாற்றும் முறையைக் கண்டுபிடித்தார். இதனால், எஃகு பயன்பாடு எளிதாகி 1860இல் வணிகமுறைப் பயன்பாட்டிற்கு வந்தது. இவ்வளர்ச்சியால் பன்மாடிக் கட்டடங்கள் உருவாகத் தொடங்கின.
1873ஆம் ஆண்டுதான் முதன்முதலில் புதுயார்க்கு (நியூயார்க்கு) நகரில் 8 தளம் கொண்ட 142 அடி உயரக் கட்டடம் எழுப்பப்பட்டது. (இக்கட்டடம் 1912இல் தீக்கிரையாகியது.) ஆனால், பழந்தமிழ் நாட்டில் வானுயர் கட்டடங்கள் மிக இயல்பாகக் காணப்பட்டுள்ளன. இவை குறித்த இலக்கியக் குறிப்புகளைக் கற்பனை என்றோ உயர்வு நவிற்சி என்றோ ஒதுக்க முடியாது. இவை பொய்யான தகவல்களாக இருப்பின் நூல்களின் அரங்கேற்றத்தின் பொழுதே அவை அகற்றப்பட்டிருக்கும். இவை குறித்துப் புலவர்கள் பலரும் பாடி உள்ளதால் அனைவரும் பொய்யான புகழுரையைச் சொல்லி இருக்கத் தேவையில்லை. மேலும், பன்மாடக் கட்டடங்களுடன் இணைத்தே பெருநகரங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர்கள் வானளாவி அல்லது வான்தோய் அல்லது வானுயர் பன்மாடக் கட்டடங்கள் கட்டுவதில் சிறப்பான தேர்ச்சியும் நாகரிகமும் பெற்றிருந்தனர் எனலாம்.
இவை குறித்த இலக்கியச் சான்றுகளைக் காணலாம். முகில் கூட்டங்கள் திரளும் அளவிற்கு மாடங்கள் அமைந்து உயரமான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,
மழைஎன மருளும் மகிழ் செய்மாடம் (பொருநராற்றுப்படை 84)
எனப் புலவர் முடத்தாமக் கண்ணியார் கூறுகிறார்.
ஆறுபோல் அகன்று இருந்த தெருக்களில் அமைந்த வீடுகள், காற்றுமோதும் அளவிற்கு வானுயர அமைந்திருந்தன என்பதை,
வகைபெற எழுந்து வானம் மூழ்கி
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்
யாறுகிடந்தன்ன அகல்நெடுந்தெரு (மதுரைக்காஞ்சி 357)
எனப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்.
நெருக்கமும் உயரமும் அமைந்த படிகளையும் படிகள் திரும்பும் வகையில் வளைவான படியிடைத்தளங்களையும் (கொடுந்திண்ணை:கொடு-வளைவு) பல கட்டுகளையும் சிறியனவும் பெரியனவும் ஆகிய வாயில்களையும் பெரிய இடைகழி(நடை)களையும் உடைய முகில் தங்கும் உயர்ந்த மாடங்கள் எங்கும் அமைக்கப்பட்டிருந்தன என்பதைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
குறுந்தொடை நெடும் படிக்கால்
கொடுந்திண்ணை பல்தகைப்பின்
புழைவாயில் போகு இடைகழி
மழைதோயும் உயர்மாடத்து (பட்டினப்பாலை 142-145)
என்னும் வரிகளில் விளக்குகிறார்.
இடைகழி என்பதே சில வகுப்பாரால் ரேழி எனப்படுகிறது. புழை என்பது சிறிய வாசலையும் வாயில் என்பது பெரிய வாசலையும் குறிக்கிறது.
விண்ணை முட்டும் அளவிற்குக் கோபுரங்கள் அமைந்திருந்தன; வாயில்கள் வையை ஆற்றைப்போல் அகலமாக அமைக்கப்பட்டன; மழைமுகில்கள் மோதும் அளவிற்கு உயரமாயும் அமைக்கப்பட்டன (நாள்தோறும் வாயில் கதவுகள் திறக்கப்பட்டமையால், உரிய கருவிகள் தேய்மானத் தவிர்ப்பிற்கும் ஒலி எழுப்பாமல் எளிதாகப் பயன்படுத்தவும் நாள்தோறும் நெய்ஊற்றி மெருகு ஏற்றப்பட்டன). இதனைப் புலவர் மாங்குடி மருதனார்
விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை
(தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்)
மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்குடை வாயில் (மதுரைக் காஞ்சி 352-356)
என விளக்குகிறார்.
கோபுர வாயில்கள் மலையை வெட்டி அமைக்கப்பட்டாற் போன்றும் யானைகளில் வெற்றிக் கொடியைத் தூக்கிப் பிடித்து வரும் வகையில் மிக உயரமாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
வானம்ஊன்றிய மதலைபோல
ஏணிசாத்திய ஏற்றுஅருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை (பெரும்பாணாற்றுப்படை : 346-351)
என விளக்குகிறார்.
எஞ்சிய செய்திகளைத் தொடர்ச்சியில் காண்போம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment