>>அன்றே சொன்னார்கள்36
பயிரறிவியல் ஆக இருந்தாலும் விலங்கியல் ஆக இருந்தாலும் பழந்தமிழ் மக்கள் உயர்ந்த நிலையில் ஆட்சி செய்துள்ளனர். உயிரினங்களின் பெயர்கள், உறுப்புகளின் பெயர்கள், தன்மை, முதலானவை வெறும் சொற்கூட்டமாகவோ ஒரு பொருளுக்கான பல பெயராகவோ பார்க்கப்படுவது தவறு. இவற்றையே நாம் பிற மொழிகளில் படிக்கும் பொழுது மிகப்பெரிய அறிவியல் உண்மைகளாகப் பார்க்கின்றோம். தமிழில் இலக்கிய வரிகளாக எண்ணிப் புறந்தள்ளி விடுகின்றோம். உவமைகள் மூலம் அறிவியல் செய்திகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெரிவித்து உள்ளார்கள் எனில், மக்களின் அறிவியல் உணர்வு மிகச் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றோம். நாம் இத்தகைய அறிவியல் உண்மைகளை அவ்வப்பொழுது பார்ப்போம். முதலில் யானை குறித்துப் பார்ப்போம்.யானைக்கான எலிபண்ட் (Elephant) என்னும் சொல்லிற்கு இலத்தீன் மொழியில் பெரு வளைவு என்று பொருள். பெரிய விலங்காகவும் வளைந்த தோற்றத்துடனும் காணப்படுவதால் இப் பெயரை வழங்கி உள்ளனர். பொதுவாக யானையின் தோல், செவி, முதலான சில வெளி உறுப்புகள் அல்லது பகுதிகள் குறித்து மட்டுமே அயல்நாட்டு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழில் உள்ள அதன் ஒவ்வொரு பகுதி அல்லது அதன் வேறு பெயர்கள், யானையியல் குறித்து மிகப் பரந்து பட்ட அறிவியலறிவு அன்றைக்கே தமிழர்களுக்கு இருந்ததை வியப்புடன் உணர்த்துகிறது.
யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான 170 பெயர்கள் உள்ளன.
(விக்சனசரி:http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88)
இவற்றுள் சில பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் மறைந்து அயற் பெயர்களாக அமைந்துள்ளன. ஆராய்ந்து பார்த்தால் தமிழ்ப் பெயர் நமக்குப் புலப்படலாம். சான்றாக யானையைக் கசமுகன் என்கின்றனர். இதில் ச என்னும் எழுத்து கிரந்த ஒலிப்புடன் பயன்படுத்துவதால் வேற்று மொழிச் சொல்லாகக் கருதுகிறோம். உண்மையில் கயம் என்னும் தமிழ்ச் சொல் கசம் என மாற்றப்பட்டதால் அச் சொல்லின் சிறப்பை நாம் உணராமல் போய்விட்டோம்.
கயம் என்றால் மென்மை என்றும் பொருள். யானையின் தலை மிகப் பெரியது; ஆனால், உள்ளே கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ’ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும்’ உள்ளன. எனவே மென்மையானது. ஆதலின் மென்மையான தலை என்னும் பொருளில் ’கயந்தலை’ என்றனர். எனவே கயந்தலை என்பது அத் தலையையுடைய யானையையும் குறிப்பதாயிற்று.யானை பற்றிய அறிவியல் சிந்தனையின் விளைவே கயம் என்னும் சொல். ஆனால், கயம் என்பது கசம் ஆக மாறி ஒலிக்கப்பட்டுக் (கசம் + முகம் உடைய) கசமுகன் என மாற்றப்பட்டதால் நாம் உண்மையை உணரவில்லை.
யானையின் பிற பெயர்களும் அதன் தன்மைக்கேற்றனவே என்பதற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
உயரம் கருதி உயரம் என்னும் பொருளில் உம்பல்; திரண்டு இருத்தலால் அப்பொருளில் உவா (60 ஆண்டிற்கு மேற்பட்ட யானை); உரல் போல் பாதம் இருந்தமையால் உரலைக் குறிக்கும் கறை என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கறைபோல் உள்ள அடி உடைய யானை கறையடி; பெரிய பாதத்தை உடைமையால் பொங்கடி; கருப்பு நிறம் உள்ள விலங்கு (மா) என்பதால் கரி அல்லது கருமா; இருள்போல் நிறம் கொண்டதால் இருள்; வேறு எந்த விலங்கிற்கும் இல்லாத வகையில் கை உள்ள - துதிக்கை உள்ள - விலங்கு (மா) என்பதால் கைம்மா; இவ்வாறு பிற விலங்குகளில் இருந்து தனித்து வேறுபட்டுக் (கை உடன்) காணப்படுவதால் அப்பொருளில் ஒருத்தல்; அக் கை துளையுடன் உள்ளதால் தும்பி; அக்கை தொங்கிக் கொண்டு இருத்தலால் தொங்குதல் என்னும் பொருளைக் குறிக்கும் நால் என்னும் சொல்லைப் பயன்படுத்தி நால் வாய்; முகத்தில் புள்ளி உள்ளமையால் புகர் முகம்; கை உடைய, மலைபோல் தோற்றம் கொண்ட விலங்கு என்பதால் கைம்மா; துளையை - புழையை - உடைய கை உள்ள விலங்கு என்பதால் புழைகை அல்லது பூட்கை அல்லது பூழ்க்கை; நீண்ட நெடிய கையை உடையதால் நெடுங்கை; பெருங்கையை உடைய விலங்கு என்பதால் பெருங்கை; அக் கை தொங்கிக் (தூங்கிக்) கொண்டு உள்ளதால் தூங்கல்; ஒற்றைக் கையை - ஒரே ஒரு கையை உடையதால்- ஓர்கை; பெரிய விலங்கு(மா) என்பதால் பெருமா; உருண்டு திரண்டது என்னும் பொருளில் வழுவை; புல்லை வாரிப் போடுவதால் வாரி; வாரணம் எனப்படும் சங்குபோன்ற தலை உடையதால் வாரணம்; நீர்ப்பறவைகளின் விரல்கள் இடையே உள்ள சவ்வுத் தோலாகிய துதி போல் யானையின் கைந் நுனியில் (தோலுடன் விரல் போன்ற உறுப்பு) அமைந்துள்ளதால் துதிக்கை; கம்பத்தில் கட்டப்படும் விலங்கு என்பதால் கம்பமா; கோடு (தந்தம்) உள்ள விலங்கு என்பதால் கோட்டு மா; கூட்டமாக இருக்கும் யானை தன் குழுவைப்பிரிந்து குழு அல்லாமல் தனித்தே திரிந்தால் அல்லியன்; வலிமையான விலங்கு என்பதால் வல்விலங்கு; பெரிய விலங்கு என்பதால் பெருமா; ஒற்றைக் கோடு (கொம்பு) உள்ள யானை ஒற்றைக் கொம்பன்; வளைந்த கோடு உடைய யானை ஏந்து கொம்பன்; பெரிய கொம்புகள்உடைய யானை கொம்பன் யானை; எனப் பலவகையாக யானையின் தன்மைகளை அறிந்து பல பெயர்களைச் சூட்டி உள்ளனர். இவை தவிர போர் யானை (அதவை), பட்டத்து யானை (ஐராவணம்) முதலான வகைப்பாட்டிற்கு ஏற்பவும் யானைகளுக்குப் பெயர்கள் உள்ளன.
யானைகள் பற்றிய இலக்கியக் குறிப்புகளை அடுத்துப் பார்ப்போம்.
யானை பரவலாகப் பயன்படுத்தினாலன்றி இவ்வாறு பல பெயர்கள் தோன்றியிருக்கா; விலங்கினங்கள் குறித்த அறிவியல் அறிவு இருந்தாலன்றி யானைபற்றிய வேறுபாடுகளை உணர்ந்திருக்க மாட்டார்கள்.
சொல்வளமும் அறிவியல் வளமும் மிக்க தமிழ்தான் இன்றைக்குப் பாட மொழியில் புறக்கணிக்கப்படும் கொடுமைக்கு ஆளாகி உள்ளது!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment