Wednesday, April 20, 2011

andre' sonnaargal 48 - buildings 10 :அன்றே சொன்னார்கள் 48 - கட்டடங்கள் 10

அன்றே சொன்னார்கள் 48

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 20, 2011


கட்டடங்கள், அகலமாகவும் உயரமாகவும் நன்முறையிலும் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாகரிகச் சிறப்பிற்கு எடுத்துக்  காட்டாகவும் பாதுகாப்பு ஏந்து(வசதி)களுடனும் அமைக்கப் பட்டன என முன்னரே கண்டோம். வீடுகள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன பற்றிய புலவர்கள்  சிலர் கருத்துகளைப் பார்ப்போம். புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கடிமனை ( கலித்தொகை : 24.9)  என்றும் புலவர் மதுரை மருதனிளநாகானர், கடிமனை மாடத்து (அகநானூறு: 255.18) என்றும் பாதுகாப்பு அமைந்த மாளிகைகளைக்  குறிப்பிடுகின்றனர்.
பெரிய காவலுள்ள வலிமையான வீடுகளையும் வீடுகளைச் சுற்றி அமைந்த புலால் மணம் மிக்க அம்புகள் ஏந்திய வீரர்களின் காவல் கட்டுகளையும் குறிப்பிட்டு இன்றைய வல்லம் என்னும் ஊர்க் காட்சியைப் புலவர் கருந்தும்பியார்,
பெரும்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅ அம்பின் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே
(புறநானூறு : 181. 4 -6) எனக் குறிப்பிட்டுள்ளார். (குறும்பு-அரண்; கடிமிளை-காவல்காடு; வலாஅரோனே – வல்லார் என்னும் ஊரைச் சேர்ந்தவனே)
ஓவியத்தில் தீட்டப்படும் அழகை விட மிகுந்த அழகுடன்  உள்ள  உயரிய மண்ணால்  எழுப்பப் பெற்ற மதிலால் சூழப்பட்ட பாதுகாப்பான நீண்ட பெரிய வீட்டைப் புலவர் கபிலர்,
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் (பதிற்றுப்பத்து : 68.16-17) என்கிறார்.
அகலமான பரப்பிலும் பல மாடிகளுடன் உயரமாகவும் வளமைக்கு எடுத்துக்காட்டாகவும் நகரத்தைப் போல் சிறப்பாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர்கள் குறித்துள்ளனர் என்பதை நாம் கண்டோம். நகர் என்பது நகரத்தைக் குறிக்கும் இடங்களும் உண்டு. ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் வானம்போல் பரந்த செல்வம் மிகுந்த வளமையான நகரத்தை
வானத் தன்ன வளநகர் (மதுரைக்காஞ்சி : 741)  என்கிறார்.
புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், நிலா முற்றங்கள் உடைய  நீண்ட மதில்கள் சூழ்ந்த மாளிகைகள் வரிசையாய் நிறைந்த ஊரை
அரமிய வியலகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே (அகநானூறு : 124.15-16)
என்கிறார்.
மிகுந்த செல்வம் நிலையாகப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க நகரான உப்பங்கழிப் பக்கங்களை உடைய மருங்கூர்ப்பட்டினத்தைப் புலவர் நக்கீரர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து (அகநானூறு: 227.19-20)
என்கிறார்.
புலவர் கோவூர்கிழார், தைமாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலவும் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவையுமுடைய அகன்ற நகரத்தைத்
தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு : 70.7) என்கிறார்.
செல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன  என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.
அரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில பார்ப்போம்.
புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப்
புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378.7) என்கிறார். (சுதை-
சுண்ணாம்பு; பனிக்கயம் – குளிர்ந்த நீர்நிலை)
புலவர் உறையூர் ஏணிச்சேரி  முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை
முரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு : 127.10) என்கிறார்.
புலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை,
நெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு : 36.10) என்கிறார்.
ஆசிரியர் மாங்குடி மருதனார், எல்லாக் காலத்திலும் அனைத்துப் பயன்பாட்டிற்கும் உரிய வளமான அரண்மனையை,
பயனற வறியா வளங்கெழு திருநகர் (மதுரைக்காஞ்சி : 216) என்கிறார்.
தம் முன்னோர்கள்போல் இமயமலையில் வில் கொடியைப் பொறித்த சேரலாதனின் மாந்தை என்னும் நகரில் உள்ள இலக்கணப்படிக் கட்டப்பெற்ற முற்றம் உடைய அரண்மனையைப் புலவர் மாமூலனார்
நல் நகர் மாந்தை முற்றத்து (அகநானூறு : 127.6) எனக் குறிப்பிடுகிறார்.
அரண்மனையை நகர் எனக் குறிப்பது போல் கோயிலையும் நகர் என்றே குறித்துள்ளனர்.
புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ தெய்வம் உள்ள கோயிலையும் நகர் என
அணங்குடை நகரின் (அகநானூறு :99.9) என்னும் தொடரில்
குறிப்பிடுகிறார்.
இதுபோல் முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய  செல்வரது  கோயிலை வலம் வருவதைக் குறிக்கும் வகையில் புலவர் காரிகிழார்
முனிவர்
முக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு (புறநானூறு : 6.18)
என்று சொல்லும் பொழுது கோயிலைக் குறிக்க நகர் என்னும் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.
புலவர் மருதன் இளநாகனார் கடவுள் குடிகொண்டுள்ள பாதுகாப்பான கோயில் என்னும் பொருளில்
கடவுள் கடி நகர் (கலித்தொகை 84.6) என்கிறார்.
ஆசிரியர் நல்லந்துவனார் கடம்பமர் செல்வனாகிய திருமுருகனின் திருக்கோயிலைக்
கடம்பமர் செல்வன் கடிநகர் (பரிபாடல் 8.126) என்கிறார்.
எனவே, சிறப்பான நகரங்களைப் போலவும் பெரிய அரண்மனைகளைப் போலவும் கோயில்களைப்போலவும், வீடுகளை உயர்ந்தோங்கிய மாளிகைகளாகக் கட்டி உள்ளனர் என்பது கட்டடவியலில் நம் முன்னோர் தலைசிறந்து விளங்கியமைக்குச் சான்றாகும்.

No comments:

Post a Comment