கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13http://natpu.in/?p=5999
பதிவு செய்த நாள் : April 25, 2011முன்னரே குறிப்பிட்டவாறு உயிரியறிவியலும் பயிரறிவியலும் தனியே பார்க்கப்பட வேண்டியவையே! இருப்பினும் இங்கே நாம், கட்டட அறிவியல் குறித்துப் பார்த்தாலும் கட்டட அமைப்பிற்குத் துணைநிற்கும் தோட்ட வளர்ப்பு குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும், சிறிது அறிவதும் பொருத்தமானதே என்பதால் நாம் மனைத்தோட்டம் குறித்துப் பார்த்தோம். இனி மனைவளர்ப்பு உயிரினங்கள் சில குறித்துக் காண்போம்.
தோட்ட அமைப்பைச் சார்ந்தே வீடுகள் அமைக்கப்பட்டமை போல் உயிரினங்களின் வளர்ப்பிற்கும் ஏற்ற அளவில் அவை சிறப்பாக அமைக்கப்பட்டன.
வீடுகளில் பறவைகள் வளர்க்கப்பட்டன.; அதற்கேற்பவே வீடுகளும் அமைக்கப்பட்டன. வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர் மனையுறை புறவு (நற்றிணை:162.1) என்றும் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மனைஉறை புறவின் செங்காற்சேவல் (அகநானூறு : 254.5) என்றும் (செங்காற்சேவல் – கால்கள் சிவப்பு நிறமாக உள்ள ஆண்புறா) குறிப்பிடுகின்றனர்
கோழிகள் வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார்,
மனையுறை கோழிக் குறுங்கால் பேடை (குறுந்தொகை : 139.1) என்றும்,
புலவர் பரணர், மனைச் செறிகோழி (அகநானூறு: 122.16) என்றும், புலவர் மாமூலனார், மனைஉறை கோழி (அகநானூறு: 187.14) என்றும், கருவூர் நன்மார்பனார்,
மனைஉறைக் கோழி (அகநானூறு : 277.15) என்றும், மதுரை நக்கீரர்,
மனைக்கோழி (புறநானூறு 395.9) என்றும் குறிப்பிடுகின்றனர்.
குருவிகள் மனைகளில் வளர்க்கப்படுவதைப் புலவர் மாமலாடனார் (குறுந்தொகை : 46.2) பெருங்குன்றூர்க்கிழார் (புறநானூறு : 318.4) ஆகியோர் மனையுறை குரீஇ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகளில் நாய் வளர்க்கப் பட்டதும் புலவர் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் என்பவரால்
மனைவாய் ஞமலி (நற்றிணை : 285.5) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
கறவை மாடுகள் வளர்க்கப்படுவதைச் சோழன் நல்லுருத்திரன் கலித்தொகை (111.2)யில் குறிப்பிட்டுள்ளார்.
கன்றை ஈன்ற பசுக்களின் கூட்டம் வீடுகளில் நன்றாகப் பசியார புல் மேய்ந்து இருக்கும் நிலையை விளக்கி வீடுகள் பசுக்கூட்டத்தை வளர்க்கும் வகையில் பெரிதாக இருந்தன என்பதையும் பசுக்கள் வளர்க்கப்பட்டதையும் புலவர் கபிலர் (புறநானூறு :117.4-5)
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடுநிரை நன்புல் ஆர
என்னும் வரிகளில் தெரிவிக்கிறார்.
இவ்வாறு தோட்டப்பயிருக்கும் கால்நடைகள், பறவைகள் வளர்ப்பிற்கும் ஏற்ற முறையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கையோடு இயைந்த சூழலில் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர் நம் முன்னோர் – அன்று!
இயற்கையாலும் செயற்கையாலும் இடருற்று அழிகின்றனர் நம்மவர்கள் – இன்று!
No comments:
Post a Comment