Thursday, April 28, 2011

andre' sonnaargal 53 - buildings 15: அன்றே சொன்னார்கள் - கட்டடங்கள் 53


கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 28, 2011




 
வானளாவியும் அகன்றும் உருவாக்கிய பழந்தமிழர்  கட்டடப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடை என்னும் இலக்கியச் சான்றை முன்னர்ப் பார்த்தோம். கட்டுமானப் பணி சார்ந்த தச்சுப்பணியைப் பற்றிய குறிப்பை இப்பொழுது காண்போம்.
கட்டடம் கட்டும்பொழுது முதலில் வாயில் நிலைகளை அமைத்தல் இப்போதைய வழக்கம். இப்பழக்கம் காலங்காலமாக நம்மிடம் இருந்து வந்துள்ளது. எனவே, முதலில் உயர்ந்த வாயிலுக்கான நெடுநிலை அமைப்பது குறித்து ஆசிரியர் நக்கீரனார் பின்வருமாறு கூறி உள்ளார்:-
பருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்
துணைமாண் கதவம் பொருத்திஇணைமாண்டு
நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி கால்அமைத்து
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பில்
கைவல் கம்மியன் முடுக்கலில் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல்வாடை 80-86)
உயரமும் அகலமும் உடைய வாயில்களுக்கு – ஒற்றைக் கதவுகளாக இல்லாமல் இருபுறமும் மூடும் வகையில் – இரட்டைக் கதவுகளே அமைக்கப்பட்டன. மிக அகலமான வாசல்களுக்கு  மடக்கி மூடும் கதவுகள் அமைக்கப்பட்டன (துணைமாண்கதவம்). அவ்வாறு அமைக்கும் பொழுது அவற்றைப் பிணிப்பதற்கு ஆணி முதலான இரும்புப் பொருள்கள் பயன்படுத்தப் பெற்றன. மரக் கதவுகளுக்கு நிறம் ஊட்டுவதற்குச் செவ்வரக்கு (சாதிலிங்கம்) பூசப்பட்டது,



அழகிய வேலைப்பாடு, உறுதி, தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிறப்பு பெற்றனவாய் அவை அமைந்தன. பல இணைப்புகளாகக் கதவுகள் உருவாக்கப்பட்டாலும் இணைக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியாதவகையில் மாட்சிமை மிக்கதாக (இணைமாண்டு) அக் கதவுகள் அமைந்தன. உத்தரம் என்பது ஒரு விண்மீனின் பெயர். கதவு நிலையில் மேல் இடப்படும் பாவுகல்லின் பெயர் உத்தரக்கற்கவி என்பதாகும். எனவே, உத்தரம் என்னும் விண்மீன் பெயர் உடைய உத்தரத்தில்(நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து) குவளைப் பூ வடிவிலான புதுமையான பிடியைப் பொருத்தினர் (போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்து); கதவின் பகுதியாகவே தாழ்ப்பாளைப் பொருத்தினர்; கைத்திறன் மிகுந்த கம்மியர்கள் நன்கு முடுக்கினர்; இடைவெளி தெரியாத அளவில் (புரை தீர்ந்து) ஒற்றைக் கதவுபோல் உருவாக்கினர்; வெண்சிறுகடுகினை (ஐயவி)யும் நெய்யையும் அதில் பூசினர். இவ்வாறு வாயிலுக்குரிய நெடிய நிலையினை அமைத்தனர்.
இவ்வாறு கதவுகளில் வெண்சிறுகடுகையும் நெய்யையும் கலந்து கதவுகளில் பூசும் வழக்கத்தை ஆசிரியர் மாங்குடி மருதனார்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மாடம் (மதுரைக்காஞ்சி : 253-255)
எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் உறையூர் கதுவாய்ச் சாத்தனார்
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்கு நகர் விளங்க (நற்றிணை : 370.3-4) என்கிறார்.
நெய் என்பதைப் பாலில் இருந்து பெறும் நெய்என்றே அனைவரும் பொருள் கொண்டுள்ளனர். அவ்வாறு பொருள் கொண்டதால் தெய்வ வணக்கத்திற்காக நெய் பூசியதாகத் தவறாகக் கருதி உள்ளனர். எள்ளில் இருந்து பெறப்படுவதை எள் நெய் என்பது போல் நெய் என்பது பொதுச்சொல். கதவுகளுக்கு மெருகேற்றப் பயன்படுத்திய நெய்யை – மெருகெண்ணெய்யை – நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.
கதவுகளை அமைக்கும் பொழுதே சீரும் சிறப்புமாகவும் உலுத்துப் போகாமலும் அரிக்கப்படாமலும் நிலைத்து நிற்கும் வகையில் சிறந்த மரத்தால் (விழுமரத்து) அமைத்ததுடன் மெருகுநெய்யும் பூசிப் பாதுகாத்து உள்ளனர் என்பதே சரியானதாகும்.
இவற்றின் தொடர்ச்சியான சிறப்பை அடுத்தும் காண்போம்.

No comments:

Post a Comment