Monday, August 27, 2012

அசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

அசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

நட்பு பதிவு செய்த நாள் : 27/08/2012



-          இலக்குவனார் திருவள்ளுவன்
அசாமில் காலம்காலமாக வாழும் மண்ணின் மைந்தர்களுக்கும் குடிபெயர்ந்து வந்தவர்களுக்கும் இடையே ஏற்படும் போராட்டங்கள் நமக்கு விழிப்புணர்வுப் படிப்பினைகளைத் தருகின்றன. இவை குறித்துத் தனியே பார்க்கப்பட வேண்டும். இப்பொழுது அப் போராட்டங்களின் தொடர்ச்சியாக வட மாநிலத்தவர் அயல் மாநிலங்களில் இருந்து வெளியேறிய நிகழ்வுகள் மூலம் நாம் உணர வேண்டியவை யாவை என்பதைப் பார்க்க வேண்டும்.
கருநாடகா, ஆந்திரா, தமிழ்நாடு முதலான மாநிலங்களில் இருந்து  வட மாநிலத்தவர் விரட்டியடிக்கப்படவில்லை. அவர்களே கூறுவதுபோல், தங்கள் மாநிலத்தில் ஏற்படும் கலவரங்களால் தங்கள் குடும்பத்தினருக்குத் தீமை ஏற்படுவதில் இருந்து தடுக்க, அந்நேரத்தில் குடும்பத்துடன் உறுதுணையாக இருக்க என்பன போன்ற காரணங்களே அவர்களைத் தாய்மண் நோக்கிப் புறப்படச் செய்தது. அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் எடுத்துச் சென்ற பயண உடைமைகளைப் பார்க்கும் பொழுது அவர்கள் பணியிட நகர்களில் ஓரளவேனும் வசதியாகத்தான் இருந்துள்ளனர் என்பதும் புரிகின்றது. எனவேதான் மீண்டும்  பணிவாழ்விடங்களுக்கே திரும்பி வருவோம் எனக்  கூறியுள்ளனர்.

இவ்வாறு வட மாநிலத்தவர், குடும்பத்தினரின் பாதுகாப்பு உணர்விற்காகத் தாய் நிலம் நோக்கிச் செல்லும் பொழுது மத்திய அரசும் மாநில அரசுகளும் நடந்து கொள்ளும் முறைகளுக்கும் தமிழர்கள் தங்களின் மூதாதையர் மண்ணிலிருந்து அடித்து விரட்டியனுப்பப்படும் பொழுதெல்லாம்  நடந்து கொண்ட முறைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உண்மையிலேயே இந்தியத்திற்காக உயிர் கொடுக்கும் தமிழர்களுக்கு இந்தியாவில் உள்ள உரிமை நிலை என்ன என்பதைப்  புரிந்து கொள்ளலாம்.
பொறை ஒருங்குமேல் வருங்கால் தாங்குவதாக நாடு இருக்க வேண்டும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்(குறள் 733) கூறுகிறார். எனவே, பிறநாட்டினரின் சுமை நம்மீது வரும்பொழுது தாங்குவதாக நாடு இருக்க வேண்டும் என்பதற்கேற்ப அயலர் வரவு  என்பது காலங்காலமாகப் பலநாடுகளும் சந்திப்பதாகத்தான் உள்ளது. ஆனால், அவ்வாறு அச்சுமையைத் தாங்குவதில் இநதிய அரசு காட்டும் வேறுபாடுதான் மிகப் பெருங்குற்றமாகும். சீனத்தைக் காரணம் கூறித் தமிழினப் பேரழிவைச் செய்யும் சிங்களத்திற்குத் துணைநிற்கும் இந்திய அரசு, தலாய்லாமாவிற்கும் திபேத்தியர்க்கும் தரும் சிறப்பான ஒத்துழைப்பும் ஆதரவும் உதவிகளும் சீனாவிற்கு எதிரானவை என்பதை ஏன் நாம் புரிந்து கொள்ளவில்லை? ஈழம் என்றாலே சிங்கள இறையாண்மைக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரானதாகக் கூறும் இந்திய அரசு, பாக்கிசுதான்  இறையாண்மைக்கும் வங்கத்தேச இறையாண்மைக்கும் எதிரான  செயல்பாடுகளை வரவேற்பது ஏன்? அந்நாடுகளால் இந்தியாவிற்குப் பேரிடர் வராதா? அதை நம்மால் சமாளிக்க இயலும் என்றாலும் தேவையற்ற அப்பேரிடர்களை வரவேற்பது தேவைதானா? வங்கத்தேசத்திலிருந்து வந்தவர்களுக்குக் குடியுரிமை முதலான வாழ்வுரிமை தரப்படும் பொழுது ஈழத்திலிருந்து படுகொலை முயற்சிகளில் இருந்து குண்டடிபட்டும் குற்றுயிராகவும் குடும்பத்தினரை இழந்தும் வரும் தமிழர்களுக்கு மட்டும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைக்கொட்டடியா? அசாமில் அயலவர்க்குத் தரப்படும் உரிமைகளையும் உதவிகளையும் பார்க்கும் பொழுது இத்தகைய எண்ணம் நம்மைப் பற்றுவதை யாராலும் தடுக்க இயலாது.
இப்பொழுது  வடமாநிலத்தவர் தத்தம் மாநிலத்திற்குத்திரும்பும் பொழுது  முண்டியடித்து மத்திய அரசும் மாநில அரசுகளும் அவர்களைத் தடுத்துக் காத்துத் தங்க  வைப்பதில் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கும் பொழுது பாராட்டத் தூண்டுகின்றது. ஆனால், உள்ளமோ இதே போன்ற நிலைப்பாட்டில் இதற்கு முன்பு இவ்வரசுகளின் செயல்பாடுகள் என்னவாக இருந்தன? தமிழ் மக்கள் தங்கள் உழைப்பைக் கொட்டி வளர்த்த தங்கள் மூதாதையர் மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பொழுது – துரத்தியடிக்கப்பட்ட பொழுது – செல்வங்களைப் பறிகொடுத்து உதைபட்டு  வந்த பொழுது – உயிரிழப்பிலும் உடைமை இழப்பிலும் தப்பிவந்த பொழுது – மயிலிறகால் விசிறிக் கொண்டு இருந்தனவா? அல்லது இதே போல் தமிழ் மக்களுக்கு எல்லாப் பாதுகாப்பும் தரப்படும் அங்கேயே இருக்கலாம் என வாக்குறுதி அளித்து உரிய பாதுகாப்பைத் தந்தனவா? என எண்ணிப் பார்க்கும் பொழுதுதான் இந்தியப்பிணைப்பில்  தமிழ் மக்களுக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என்பதே நடைமுறையாகும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

இப்பொழுது கருநாடகாவில் உள்ள அமைச்சரும் பல அமைப்பினரும் வடமாநிலத்தவர் தங்குமிடங்களுக்கே சென்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக அங்கேயே தங்குமாறும் பாதுகாப்பு தருவதாகவும்  தெரிவித்துள்ளனர். துணை முதல்வரே அயல்மாநிலத்தவரை நேரில் சென்று சந்திக்கின்றார்; அசாம் சென்று  அம்மாநில முதல்வரைச் சந்தித்து அனைவரையும் மீள கருநாடகாவிற்கே அனுப்புமாறும் எத்தொல்லையும் வராமல் பாதுகாப்பதாகவும் உறுதி தருகின்றார். அங்கே தமிழர்கள் வதைபடும் பொழுதும் உதைபடும்பொழுதும் “இங்குள்ளோர் அமைதி இழந்தால் என்னாகும்?  இங்கு வாழும் அம்மாநில மக்கள் நிலை குலைந்து போகாதா” என்றெல்லாம் மனித நேய ஆர்வலர்கள் வினா தொடுத்தனர். என்றாலும் பயன் இல்லை. இத்தகைய பேச்சுகளின்  பொழுது, முதல்வரோ “இவ்வாறு பேசினால் அங்குள்ள நம் தமிழ் மக்கள் மேலும் துன்புறுவர். எனவே,  இங்குள்ள அயல் மாநிலத்தவர்க்குப் பாதுகாப்பு தரப்படும்” எனச் செயல்பட்டார். மாநிலத் தன்னுரிமை என முழங்கிய வாய் பிற மாநில முதல்வர்களிடம் எச்சரிக்கை விட்டுப் பாதுகாப்பு வாங்கித் தரவில்லை. ஒரு முறை நிகழ்வல்ல இது. ஒவ்வொரு முறையும் தமிழர்கள் அயல் மாநிலங்களில் தாக்கப்படும் பொழுது ஆள்வோருக்கு இந்தியப்பற்று மிகுந்து தமிழர் நலன் புறக்கணிக்கப்படும்.
மத்திய அமைச்சராகத் தமிழர்கள் இருந்தாலும் மத்திய அரசில் பங்குவகித்தாலும் இன்றைய இந்திய அமைப்பில் தமிழர்களுக்கு அறம் வழங்கப்படாது. எனவே, தமிழ் மக்கள் தாங்கள் இந்தியத்தால் புறக்கணிக்கப்படுவதை உணர வேண்டும். தமிழர்கள் நலன் குறித்தும் தமிழர்கள் தொடர்பான சிக்கல்கள் குறித்தும் அயல்வாழ் தமிழர் நலன் குறித்தும் தமிழரல்லாதவர்தான் பேசி முடிவெடுக்கும் நிலை உள்ளதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்புகளில் அயலவர் இருப்பதுபோல் மத்திய அரசில் தமிழர்நலன் தொடர்பான துறைகளில் தமிழர் நலனுக்கு எதிரான அயலவரே பொறுப்பு வகிக்கின்றனர். இச் சூழலில் நம்மவர்க்கு  நல்லறம் எங்கே கிடைக்கும்?
தமிழகக்  காவல் துறைத்தலைவரோ அயலவர்க்குத் தரும் பாதுகாப்பை நாடகமாடி உறுதி செய்கிறார். தமிழ்நாட்டில் அயலவருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரிகளும் அரசும் அயலகங்களில் உள்ள  தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவதேன்?
எனவே,  இச்சிக்கலால் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை உள்ளத்தில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும்; நம் மொழியும் இனமும் தமிழ்த்தேசியமே என்பதை உணர வேண்டும்; தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறு பான்மையராக மாறும் நிலையைத் தடுக்க வேண்டும்; தலைமைப் பொறுப்புகளில் தமிழுணர்வு மிக்கத் தமிழ்த்தேசியர்களே இருக்க வேண்டும்; மத்திய அரசிலும் தமிழ்த்தேசியர்கள் பொறுப்பு வகிக்கும் வகையில் வாக்குரிமையைப்பயன்படுத்த வேண்டும். இத்தகைய சூழல் அமையாதவரை தமிழர்க்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதையும் உணர வேண்டும்.
                                                                             தமிழ்த்தேசியம் வெல்க! உலக ஒப்புரவு ஓங்குக!

No comments:

Post a Comment