Wednesday, August 29, 2012

மெய்ம்மிகள் (திசுக்கள்) / tissues

மெய்ம்மிகள் (திசுக்கள்) / tissues

மெய்ம்மிகள் (திசுக்கள்)  (Tissues)

- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 29, 2012    12:03  இந்தியத் திட்ட நேரம்
உடல் என்றும் கூறப்பெறும் மெய்அமைய ஏதுவாக ஓரே திறனும் ஒத்த பண்பும் கொண்ட உயிர்மிகள்(cells) இணைவதற்கு மெய்ம்மிகள் என்று பெயர். திசு எனத் திஃச்யூ (tissue) என்னும் சொல்லின் தமிழ் ஒலிவடிவமாகக் கூறப்படுவது இதுவே ஆகும். நெய்வு என்னும் பொருளுடைய இலத்தீன் சொல், பழைய பிரெஞ்சில் இடம் பெற்று, . அதிலிருந்து இடைக்கால ஆங்கிலத்தில் உயர்வகைத் துணியைக்குறிக்கும் (tissu என்னும்) சொல்லில் இருந்து பிறந்ததே திஃச்யூ(tissue) என்னும் சொல். இவ்வாறே நெய்வு அல்லது இழைமம் என நெசவுடன் தொடர்பு படுத்திக் கூறுவதைவிட மெய்யுடன் தொடர்புபடுத்தி மெய்ம்மி என்னும் பொழுது மிகப் பொருத்தமாக அமைகின்றது.
இவ்வாறு உயிர்மிகளின் இணைப்பால் உருவாகும் மெய்ம்மி பலவகைப்படும். இவற்றுள் முதன்மையானவை வருமாறு:- 
1. பரப்பு மெய்ம்மி (Epithelial tissue)

2. இணைப்பு மெய்ம்மி (Connective tissue)

3. தசை மெய்ம்மி (Muscle tissue)

4. நரம்பு மெய்ம்மி (Nervous tissue)

உடலின் ஆழத்தில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் மெய்ம்மி பரப்பு மெய்ம்மி ஆகும். இது பெரும்பான்மை உயிர்மிகளையும் மிகச்சிறுபான்மை உயிர்ம இடைப் பொருள்களையும் கொண்டது. சுரத்தல், உறிதல், நகர்த்தல். சேமித்தல் தன்மை உடையது.

எ.கா.:-

புறத்தோல் உணவுக்குழாய் மெய்ம்மி - காக்கும் தன்மை

இரைப்பையின் உட்பரப்பு மெய்ம்மி - சுரக்கும் தன்மை

குடலின் உட்பரப்பு மெய்ம்மி - உறிஞ்சும் தன்மை

மூச்சுக்குழாய் உட்பரப்பு மெய்ம்மி - நகர்த்தும் தன்மை

கல்லீரல் மெய்ம்மி - சேமிக்கும் தன்மை
உறுப்புகளுக்கு உறுதியும் வலிமையும் அளிக்கும் மெய்ம்மி இணைப்பு மெய்ம்மி. இணைப்பு மெய்ம்மியில் உயிர்மி எண்ணிக்கை குறைவு; இடைப்பொருள் மிகுதி. சவ்வுமெய்ம்மி,கொழுப்புமெய்ம்மி, நார்மெய்ம்மி, குருத்தெலும்பு மெய்ம்மி, எலும்பு மெய்ம்மி, குருதி மெய்ம்மி, ஊனீர் சவ்வு மெய்ம்மி என இது பிரிக்கப்பட்டுள்ளது. குருதி மெய்ம்மியின் உயிர்ம இடைப்பொருள் குருதம்.
உடலின் அசைவிற்கும் நடமாட்டத்திற்கும், உடலில்அமைந்துள்ள பல்வேறு பாதைகளில் உள்ள பொருள்களை நகர்த்துவதற்கும் உதவுவது தசை மெய்ம்மி. தசை மெய்ம்மியில் உள்ள உயிர்மிகள் சுருங்கும் தன்மை உடையன. ஆதலால் உடல் அசைவிற்கும் நடமாட்டத்திற்கும் உடல் பாதைகளில் அமைந்துள்ள பொருள்களின் நடமாட்டத்திற்கும் உதவுகின்றன.
நரம்புமெய்ம்மியால் ஆன மிகப் பெரிய உறுப்பு மூளை நரம்பு. மெய்ம்மியின் உயிர்மிகள் நரம்பன்கள் எனப் பெறும்.
மெய்ம்மிகளைப் பற்றி ஆராயும் துறை மெய்ம்மியல் (histology) ஆகும். நோயறிதலுக்காக மெய்ம்மிகளை ஆராயும் துறை மெய்ம்மிநோயியல் (histopathology)ஆகும்.

(பயிர்மெய்ம்மிகள்பற்றித் தனியே பார்க்கலாம்.)
நன்றி : 
 

No comments:

Post a Comment