இன்றைய தமிழ்ப்பேராசிரியர்களுக்கு
எடுத்துக்காட்டாக வாழ்பவர் முனைவர் ப.மகாலிங்கம். நாநலம் என்னும் நலனுடைமை
நிறைவால் மாணாக்கர்களை அரவணைத்துச் செல்பவர்.
திருவாளர்கள் அர.பழனிசாமி –
செல்வநாயகிஇணையரின் நன்மகனாய், திருப்பத்தூர் (வேலூர்) நகரில் பிறந்தவர்;
திருவாளர்கள் கா.அ.ச.இரகுநாயகன் – சரசுவதி இணையர் வளர்ப்பில் சிறந்தவர்.
‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’
என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். ‘திருவிகநூல்களில்
சமுதாய நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.
‘திருவிக காலமும் கருத்தும்’, ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’
என்னும் தலைப்புகளில் நூல்கள் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திருவிகவை
ஆய்ந்து தோய்ந்தமையால், அவரடி ஒற்றித் தனக்கெனத் தனி நடை வகுத்துக்
கொண்டவர். திருவிகவின் சமுதாய நோக்கு, ஒலிக்கீற்று, மலையொளி, கம்பர் படைத்த
காவிய மாந்தர் முதலான இவரின் பிற நூல்கள் இவரது நடைச்சிறப்பை
உணர்த்துகின்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின்
நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினைத் திறம்படச்
செயல்படுத்தியவர். இதனால், நாட்டுநலப்பணியில் மாணாக்கர்களை ஈடுபடுத்தி,
பாவேந்தர் கூறுவதுபோல்,
“நாட்டின்
முழு நலத்தில் பொறுப்புடனும்
முன்னேற்றக் கருத்துடனும்”
முனைப்புடன் உழைத்தமையால் இவர் ஆற்றிய அரும்பணிகள் பல.
திறனறிந்து சொல்லும் பாங்கும் நிரந்தினிது
சொல்லும் வன்மையும் கொண்டு செயலாற்றியமையால், பிறர் இவர் சொற்கேட்பது
எளிதாயிற்று.இவரது அரவணைப்பு உள்ளமும் பழகும் எளிமையும் கண்டு இவர் மீது
ஈடுபாடு கொண்ட நாட்டுநலப்பணித்தொண்டர்கள் ‘மனிதநேயச் செம்மல்’என்னும்
விருதினை இவருக்கு வழங்கி உள்ளனர்.
சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என மாநில அளவில் சிறந்த விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை
மாணாக்கராக இருக்கும் பொழுதே மாணவர் தமிழ்ப்பேரவையின் தலைவர், செயலர் ஆகச்
செயல்பட்டுத் தமிழுணர்வை வளர்த்தார். பின்னர், அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை, அண்ணல் அம்பேத்கார் கலைக்கல்லூரி, மாநிலக்கல்லூரி
முதலானவற்றில் பணியாற்றும் பொழுதும்இலக்கிய விழாக்களை ஆளுமையுடன் நடத்தி,
மாணாக்கர்களை இலக்கிய ஈடுபாடு கொள்ளச் செய்த இனியவர். யாவர்க்கும் உதவும்
நேயநெஞ்சாலும் பழகுதற்கினிய பண்பாலும் சுற்றம் சூழ வாழ்பவர்.30 ஆய்வியல்
நிறைஞர்களும் 20 முனைவர்களும் இவரால் பட்டைத்தீட்டப்பெற்று
ஒளிவிடுகின்றனர்.
சென்னை மாநிலக்கல்லூரியின்
தமிழ்த்துறைத்தலைவர் என்ற முறையில் பிற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, கணிணி
மாநாடு, வரிவடிவக்காப்பு தொடர்பான கருத்தரங்கம் எனத் தமிழ் காக்கும்
நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்திய இவரது பெருமை என்றும் பாராட்டிற்குரியது.
கா.அ.ச.இரகுநாதன் அறக்கட்டளை
ஒருங்கிணைப்பாளர், செல்லம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், காஞ்சி
மணிமொழியார் தமிழ்ப்பேரவையின் செயலர், பன்னாட்டு அரிமா சங்கம், சென்னை
அரிமா மாவட்ட (324 ஏ) நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பிற்கான மாவட்டத்
தலைவர், பன்னாட்டு அலயன்சு சங்கத்தின் மாவட்டத் துணை ஆளுநர் முதலான
பொறுப்புகள் இவரின் மக்கள் நலப்பணிகளை மன்பதைக்கு அளித்து வருகின்றன.
கல்லூரிகளில் மட்டுமல்லாமல்
பொதுநிலையிலும்தன்மேடைப்பொழிவுகளாலும் பட்டிமன்ற வாதுரைகளாலும் கவியரங்கப்
பாக்களாலும் சென்னை வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களாலும் தமிழ்
பரப்பி, பொதுமக்களால்அறியப்பெறும் ஆன்றோராய் உயர்ந்து நிற்கிறார்.
மனிதம் அறுபது
சென்னையில்,
ஆடி 17, 2045 / ஆக.2,2014 சனி மாலை 4.00 மணியளவில், பேராசிரியர்
ப.மகாலிங்ம் – பொறி.கலைச்செல்வி மணிவிழாவை மாநிலக்கல்லூரி மாணாக்கர்கள்,
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மனிதம் 60 என
விழாவாகக் கொண்டாடினர். அப்பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள்
துணைவேந்தரும் செம்மொழி நிறுவனத்துணைத்தலைவருமான அறிஞர் ஔவை நடராசன்,
விழா மலரை வெளியிட்டார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்புச் செயலர்
பேரா.கரு.நாகராசன் விழா மலரைப் பெற்றுக் கொண்டார்.
முனைவர் சகாயராசா, மரு.ப.விசாகப்பெருமாள், மாநிலக்கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது இப்ராகிம், விழா நாயகர்கள் பொறி. கலைச்செல்வி – பேரா.ப.மகாலிங்கம், விழிப்பூட்டும் எழுத்தாளர் இலனோ தமிழ்வாணன், அரிமா இரத்தின நடராசன், பேரா.பெ.மாது, ஆகியோர் இப்படத்தில் உள்ளனர்.
விழாவில், பேரா.ப.மகாலிங்கம் எழுதிய, திரு.வி.க.வியம், தமிழ்வெளி-அன்றும்
இன்றும்,ஆளுமை அலைவரிசை ஆகிய மூன்று நூல்களும் குறுந்தகடும் ஆவணப்படமும்
வெளியிடப்பட்டன.
விழாவில் திரளான மாணாக்கர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், பணி நிறைவுற்ற
பேராசிரியர்கள், தமிழ்ப்படைப்பாளிகள், தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment