அகரமுதல
வருமானவரித்துறையினரைக் கைது செய்க!
வருமானவரித்துறை என்பது ஒரு தண்டத்துறை. அரசிடமிருந்து மாத வருவாய் பெறுபவர்களிடமிருந்து மட்டும் வரிக்கொள்ளை யடிக்கிறதே தவிர உண்மையில் வருமானவரி கட்டாமல் கொள்ளையடிப்போரிடம் மண்டியிடும். இயல்பான சீரான வரி விதிப்பு முறை இருப்பின் வரி ஏய்ப்பு என்பதற்கு வாய்ப்பிருக்காது. தவறான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தி அதற்கென ஒரு துறையைச் செயல்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்?
இத்துறையை மூடிவிட்டு, அவர்களாகவே வருமானவரி செலுத்தும் எளிய முறையை நடைமுறைப்படுத்தினால், கூடுதல் வரி வருவாயும் கிடைக்கும். வருமானவரித்துறை ஊழியர்களுக்கான சம்பளம், கட்டட வாடகை முதலான பிற செலவினங்கள் ஆகியவற்றிற்கான செலவினமும் ஆதாயமாகும்.
அவ்வப்பொழுது அரசியல் கெடுபிடிகளுக்காகவும் மத்திய அரசின் ஏவலுக்காகவும் அதிரடி ஆய்வினை மேற்கொள்ளும் வருமானவரித் துறையினர் கணக்கில் வரா ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் பணம், நகைகள் முதலியவற்றைக் கைப்பற்றுகின்றனர்.
வருமானவரித்துறையின் வேலை கணக்கில் வராப் பணத்திற்காகத் தண்டத்துடன் வரித் தொகையைப் பிடித்தம் செய்வதுதான். சொத்துவந்த வழியை ஆராய வேறு துறை உள்ளது. கணக்கில் வராத சொத்து என்பதா லேயே குறுக்கு வழியில் அல்லது ஊழலில் சம்பாதித்ததாகப் பொருள் இல்லை.
அதே நேரம் ஊழலில் திளைப்போர் அச்சமின்றித் தொடர்ந்து சொத்துகளைச் சேர்த்துக் கொண்டுதான் வருகின்றனர். இவர்களைப்பற்றிய விவரங்கள் திடீரென்று வானத்திலிருந்து வருமான வரித்துறைக்கு வருவதில்லை.அவ்வப்பொழுது திரட்டப்படும் தகவல்களைச் சேர்த்து வைத்துத்தான் நடவடிக்கை எடுக்கின்றனர்.
அரசியல் தொடர்பில்லாதவர்களிடமும் உடனே நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மேலும் ஏய்ப்பதற்கு வாய்ப்பு தந்துவிட்டுப் பின்னர் சென்றால்தானே மிரட்டி ஆதாயம் அடைய முடியும் என அத்துறைப் பணியாளர்களே கூறுகின்றனர். அவ்வாறிருக்க அரசியல் தொடர்புடையவர்களிடம் உடனே செல்வார்களா?
வருமானவரித்துறை நேர்மையான துறையாக இருந்தால் என்ன செய்யும்? ஒருவர் வருமானக் கணக்கைக் காட்டாமல் அல்லது குறைத்துக் காட்டி ஏய்க்கிறார் எனத் தெரிய வரும் பொழுதே இயல்பான ஆய்வே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். அவ்வாறாயின் அதிரடி ஆய்வுகளுக்கே தேவை ஏற்படாது.
அதிரடி ஆய்வுகள் மூலம், ஆயிரம் கோடிக்கணக்கில் செல்வக் குவியலை இதுவரை கைப்பற்றி யுள்ளது. இவ்வாறு சொத்துகளைக் குவிக்கும் வரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தது ஏன்? இதற்காகத் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் இனியும் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாது. ஒருவர் ஊழலில் நுழையும் பொழுதே நடவடிக்கை எடுத்தால் அவர் ஊழலில் திளைத்து அரசையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு முன்னேற முடியாது அல்லவா?
இனிமேல் வரிஏய்ப்பின் தொடக்கத்திலேயே – குறுக்கு வழியில் சொத்துகளைக் குவிக்கும் தொடக்க நிலையிலேயே, நடவடிக்கை எடுக்கவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் காலங்கடந்து நடவடிக்கை எடுப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment