அகரமுதல
கலைஞர் கருணாநிதியின்
சிறப்புகளைக் கூறுவது தவறா?
கொடுந்தவறுகளைச்
சுட்டிக்காட்டுவது தவறா?
உலகில் நிறையில்லாத மனிதனும் இல்லை. குறையில்லாத மனிதனும் இல்லை. நிறையையும் குறையையும் கணக்கிட்டு மிகுதியானவற்றின் அடிப்படையில்தான் ஒருவரை மதிப்பிட இயலும். மிகுதி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் தன்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒருவரின் நிறையையோ குறையையோமட்டும் சுட்டிக்காட்டுவதுதான் தவறே தவிர, இரண்டையும் சுட்டிக்காட்டுவது தவறல்ல.
கலைஞர் கருணாநிதி மரணப் படுக்கையில் இருக்கிறார். எனினும் எமனின் அழைப்பை வென்று வாழ்கிறார். அவர் நலன் எய்தி நூறாண்டுக்கு மேலும் வாழ வாழ்த்துவோம்!
கலைஞர் கருணாநிதி சிறந்த உழைப்பாளி. நல்ல ஆளுமையாளர். கவிதை, உரைவீச்சு, கதை, நாடகம், திரைக்கதை, உரையாடல், திரைப்பட ஆக்கம், கட்டுரை, பேச்சு எனப் பல்துறைகளில் முத்திரை பதித்த வித்தகர். அவரது வரிகளை வாசித்தே பெரும்பான்மையர் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவரது உரைகளைப் படித்தும் கேட்டுமே பலர் தமிழ் உணர்வாளர்களாக மாறினர் அல்லது தங்கள் உணர்வை வளர்த்துக் கொண்டனர்.
செயலலிதா மறைவால் துளிர்த்த அரசியல் பண்பாட்டால் அதிமுகவினரும் கலைஞரைப் போற்றுகின்றனர். நோய்வாய்ப்பட்ட அவரைக் காண வருகின்றனர். தேர்தல் அரசியல் காரணமாகப் பல்வேறு கட்சியினரும் அவர் நலம் நாடிக் கருத்துகளை வழங்குகின்றனர். அதே நேரம் அவருக்கு எதிரான பதிவுகள் இணையப் பக்கங்களில் நிறைந்து காணப்படுகின்றன.
கலைஞர் கருணாநிதியின் தமிழக அரசியல் சார் பிழைபாடுகளையோ குறைபாடுகளையோ பெரிதும் குற்றம் சொல்லவில்லை. எல்லா அரசியல் வாதிகளிடமும் காணக்கூடியது என்று விட்டுவிட்டனர்.
ஆனால், தமிழ் ஈழமக்கள் படுகொலையின் பொழுது அவர் காட்டிய அமைதி, பாராமுகம், அழிவு கண்டு வருந்தாமை போன்றவற்றால்தான் மனம் ஆறாமல் இச்சூழலிலும் கண்டிக்கின்றனர்.
நெருக்கடி நிலையின் பொழுது கலைஞர் கருணாநிதி அஞ்சா நெஞ்சுடன் செயல்பட்டார்; அடக்குமுறைக்கு ஆளாகுவோருக்கு அடைக்கலம் அளித்தார். இருப்பினும் அவர் நினைத்தால் எப்படித் தமிழ் ஈழப் படுகொலையை நிறுத்தியிருக்க முடியும் என்று அவரின் ஆதரவாளர்கள் கேட்கின்றனர். என்றாலும் அவர் தமிழ் ஈழத்தின் உண்மையான நிலையை உணர்த்தியிருந்தார் எனில் சிங்களர் அட்டூழியம் தொடர்ந்திருந்தாலும் பேரினப் படுகொலை நிகழ்ந்திருக்காது. அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள தணியா வருத்தமே இதுதான்.
கொலைக்கு எதிரான செயல்பாடே தமிழர் பண்பாடு என்பதற்கு வரலாற்று நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்.
சங்கக்காலத்தில் பூழி நாட்டை ஆண்ட சிற்றரசன் நன்னன். ஆழியாற்றங்கரையில் இருந்த அரச தோட்டத்தில் ஒரு மாமரம் வளர்த்தான். இது காவல் மரம். எனவே, இம் மரத்தின் கிளைகளையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிட் டிருந்தான். ஒரு முறை ஆற்றில் நீராடிய இள நங்கை ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த மாங்கனியை எடுத்துத் தின்று விட்டாள். போற்றுதலுக்குரிய காவல் மரததிற்குத் தீங்கிழைத்ததாகக் கூறி அப்பெண்ணிற்கு மரணத்தண்டனை அளித்துவிட்டான்.
பெண்ணின் தந்தை கழுவாயாக 81 யானைகளும் அப்பெண்ணின் எடைக்கு எடை பொன்னும் தருவதாகக் கூறியும் ஏற்க மறுத்து விட்டான். அவனைப் பொறுத்தவரை நாட்டை அவமதித்தல் பெருங்குற்றம். செல்வரோ ஏழையோ தண்டனை ஒன்றுதான். இருப்பினும் ஆன்றோர்கள் அவளாகப் பறிக்கவில்லை என்பதைச் சொல்லி அப்பெண்ணிற்கு வாழ்வு தர வேண்டினர். யார் கருத்துக்கும் செவி மடுக்காமல் கொலைத்தண்டனையை நிறைவேற்றிவிட்டான். இதனால் புலவர்கள், நாட்டு நலன் கருதி ஆட்சி புரிந்திருந்தாலும் தவறான கொலைக்காக அவனையோ அவன் மரபினரையோ பாடுவதில்லை என்ற முடிவெடுத்து அவனைப் புறக்கணித்தனர். பேரிசை நன்னன், நன்னன்சேய் நன்னன், பாரத்துத் தலைவன் ஆர நன்னன், நன்னன் உதியன், நன்னன் ஆய், நன்னன் வேண்மான் என வரலாற்றில் புகழிடம் பெற்ற நன்னன் என்னும் பெயர் கொண்ட மன்னர்கள் பலரைப் பாடிய புலவர்கள் பெண்கொலை புரிந்த நன்னன் என்று இவனைப்பாடவில்லை.
இதுதான் தமிழர் பண்பாடு; தமிழர் மரபு. ஒருவன் எத்தகைய பெரியவனாக இருந்தாலும் அற வாழ்வில் வழுக்கி விழுந்தான் எனில் அவனைப் புறக்கணிப்பர். இப்பொழுது கொத்தடிமைக்காலம். எனவே, அல்லன செய்தாலும் பொருட்படுத்தாமல் போற்றும் இவ்வுலகம். அதே நேரம், சங்கப்புலவர்கள் வழியில் தீச்செயலைச் சுட்டிக் காட்டுவோரும் இருக்கின்றனர். வரலாற்றில் இருமுகப்பதிவும் தேவை. எனவே, இதைக் குற்றமாகச் சொல்ல வேண்டா. அதே நேரம் இத்தகையோர் அழியட்டும், ஒழியட்டும் என்பனபோல் கூறுவது பண்பாடாகாது. அவரைப் பாராட்டாமல் அல்லது புகழாமல் புறக்கணியுங்கள். தவறில்லை. ஆனால் நயத்தகு நாகரிகச் சொற்களைப் பயன்படுத்தாமல் பழிதூற்றாதீர்கள்!
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும்
என்னும் கண்ணதாசன் வரிக்கேற்ப வாழ்கின்றவர் கலைஞர் கருணாநிதி. எனவே, அவரைப்பற்றிய கருத்தீடுகளுக்கு எதிர் வாதுரை தேவையில்லை.
ஒரு கொலைக்கே நாட்டுத்தலைவனைப் புறக்கணித்த பண்பாட்டில் வந்தவர்கள், தலைவன் பன்னூறாயிரம் கொலைக்குக் காரணம் என எண்ணும்பொழுது அமைதி காப்பது கடினம்தான். ஆனால், உலகவரலாற்றில் நம்மால் போற்றப்படும் தலைவர்களின் இன்னொரு முகம் கொலை முகமாகத்தான் உள்ளது. அதனை அறிந்தோ அறியாமலோதான் அவர்களைப் புகழ்ந்து கொண்டுள்ளோம். கொலைமுகம் கொண்ட அயல்நாட்டவரைப் போற்றும் நாம், நற்செயல் புரிந்தமைக்காக நம் நாட்டவரைப் புகழந்தால் என்ன தவறு?
நம் குடும்பத்து மூத்த உறுப்பினர் கொடுந்தவறு செய்யும் பொழுது கண்டித்தாலும் தண்டனை தர விரும்பினாலும் குடும்பத்தைக் கட்டிக்காத்ததில் அவருக்குள்ள பங்கை எண்ணி வெறுக்க மாட்டோம். தமிழ்க்குடும்பத்தில் கலைஞர் கருணாநிதி நிலையும் இதுதான்.
கலைஞர் கருணாநிதி இல்லாமல் தமிழக வரலாறு இல்லை. அவரில்லாமல் இந்திய வரலாறு முழுமையடையாது. அவரது பணிகளை உலக வரலாறு புறந்தள்ள முடியாது. இச்சூழலில்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (திருவள்ளுவர், திருக்குறள் 965)
என்னும் தமிழ்நெறியைத் தலைவர்கள் நினைவில் கொள்ளட்டும்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர், திருக்குறள் 504).
என்பதை மக்கள் நினவில் நிறுத்தட்டும்!
கடந்த ஆண்டில் (2017) அவர் பிறந்தநாளின் பொழுது
பாசங்கொண்டு மக்கள் நலம்கண்டவர்
பாசம்மிகுந்து தன்மக்களையே போற்றினார்!
பாசச்சங்கிலியில் பிணைத்துக் கொண்டமையால்
பாசம் தமிழர் மீது இல்லாமல் போனதே!
என வருத்தத்தைப் பதிவு செய்துள்ளோம்.
மன்னிப்பு கேட்காவிட்டாலும்
மன்னித்து விட்டோம்!
மன்பதை காக்க
மனம் திறந்து பேசுக!
கழுவாய் காண
எழுவீர் எழுச்சியுடன்
இனியேனும் தமிழ் காக்கும்
துணிவோடு ஈழம்காக்கும்
தன்னிகரில்லாத் தலைவனாய்
மீண்டு வருக! மீண்டும் வருக!
என நலம் பெற வாழ்த்தியுள்ளோம்.
மீண்டும் வாழ்த்துவோம்/
நலன் எய்தி வருக!
எழுச்சி தர எழுந்து வருக!
கழுவாய் தேடி நிலைத்து வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment