தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்!
பா.ச.க.விற்குத் தமிழ்ப்பற்று இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம் தன் உண்மை முகத்தைப் பாசக காட்டியுள்ளது. இரு நாளுக்கு முன்னர் கருநாடகா மாநிலம் சிவமோகா நகரில்தான், துணிவாகத் தன் முகமூடியைக் கழற்றி எறிந்துள்ளது பா.ச.க.
தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வந்த பாசக நிகழ்ச்சித் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கத் தொடங்கியதும் இடையிலேயே நிறுத்தச் செய்துள்ளது. அவ்வாறு நிறுத்தச் சொன்னது பாசகவின் மூத்த தலைவரும் அத்தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினருமான ஈசுவரப்பாதான். அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவகளில் ஒருவர் தமிழ்நாட்டுப் பாசக தலைவரும், கருநாடக பாசக விவகாரங்களின் இணைப் பொறுப்பாளருமான அண்ணாமலை என்பவர்.
சில தொகுதிகளில் தமிழ் வாக்காளர்கள் மிகுதியாக உள்ளனர். எடுத்துக்காட்டாகப் பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேரவைத்தொகுதிகளில் 5.5.நூறாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். சிவாசி நகர் சட்டப்பேரவைத்தொகுதியில் 1.67நூறாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறான தொகுதிகளில் ஒன்றுதான் சிமோகா என்றும் சிவமோகா என்றும் அழைக்கப்படும் தொகுதி.
வரும் மே 10 அன்று மாநிலச்சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இங்குத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் நிகழ்ந்த இடத்தில் சங்க முயற்சியால் 1000 தமிழ் வாக்காளர்கள் கூடியுள்ளனர்.
தமிழர்கள் மட்டுமே கூடியுள்ள அங்குதான் தமிழ்த்தாயை அவமதித்துள்ளனர். தமிழ் மக்களின் வாக்கு மட்டும் தேவை. ஆனால் அவர்களின் மொழியை இழிவு படுத்துவோம் என்பவர்களைத் தமிழர்கள் எப்படி ஏற்க இயலும்? தமிழ்த்தாயைப் புறக்கணிப்பவர்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டாவா? கண்டிப்பாகப் புறக்கணிக்க வேண்டும்; புறக்கணிக்கிறார்கள்.
யார் இந்த அவமதிப்பாளர் கே.எசு.ஈசுவரப்பா? முன்னாள் கருநாடகத் துணை முதல்வர்(2012-2013) ஊரக வளர்ச்சி-ஊராட்சி அமைச்சர்(2019-2022), பா.ச.க.மூத்த தலைவர், சட்ட மன்ற உறுப்பினர் கே.எசு.ஈசுவரப்பா, கருநாடகா சட்டமன்றத் தேர்தலில் தமக்கு அல்லது மகன் கந்தேசுக்கு சிவமோகா தொகுதியைக் கேட்டு அடம்பிடித்தும் யாருக்கும் கிடைக்கவில்லை. எனவே, பா.ச.க.வை விட்டு விலகும் முடிவில் இருந்தார். எப்படியோ அவரைச் சரிக்கட்டிக் கட்சியில் இருக்க வைத்திருக்கிறார்கள்.
வலதுசாரி அமைப்பான இந்து வாஃகினி என்ற அமைப்பின் தேசியச் செயலாளரான சந்தோசுபாட்டீல், “தனக்கு அரசின் சார்பாக, உரூ.4 கோடிக்கு வேலை ஒதுக்கப்பட்டது; வேலையை முடித்த பின்னரும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை; மாறாக அதில் 40 விழுக்காடு தரவேண்டும் என்று அமைச்சர் கே.எசு.ஈசுவரப்பா, உதவியாளர்கள் மூலம் கேட்டார்” எனக் குற்றம் சுமத்தினார். தான் இறந்தால் அதற்குக்காரணம் ஈசுவரப்பாதான் என்று நண்பர் ஒருவருக்குக் குறுந்தகவலும் அனுப்பினார். பின்னர் இவர் விடுதி அறை ஒன்றில் தன் தற்கொலைக்குக் காரணம் ஈசுவரப்பாதான் என எழுதி வைத்துத் தற்கொலை புரிந்தார். இதனால் மக்களிடையே எழுந்த எதிர்ப்பலையால் பதவியை விட்டு விலகினார். கன்னட மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்ட அத்தகைய ஊழல் பேர்வழிதான் கன்னட மக்களிடையே பெரிய ஆளாகக்காட்டிக் கொள்ள இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் எனக் கன்னட மக்கள் கூறுகின்றனர்.
பொய்மலையாய்த் திகழும் தமிழ்நாட்டுப் பாசக தலைவர் மேடையில் இருந்து அமைதி காத்ததால் அவரிடம் இது குறித்து ஊடகத்தினர் கேட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, அவிழ்த்து விட்டப் பொய்மூட்டைகளில் சிதறியவை வருமாறு:
1. “கே.எசு.ஈசுவரப்பா முதலில் கன்னட நாட்டுக் கீதத்தை ஒளிபரப்புமாறுதான் கூறினார். ஆனால், தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒலிபரப்பிவிட்டனர்.”
விழாவிற்கு வருவதற்கு முன்னரோ வந்தபின் மேடை யேறியதுமோ அவ்வாறு ஈசுவரப்பா கூறவில்லை. மேடை நிகழ்ச்சியின் காணொளிக்காட்சியிலேயே மேடையில் அவர் எதிர்ப்பைக் காட்டுவதுதான் உள்ளது. அவர் சொன்னபடிக் கேட்காததால் நிறுத்தச் சொல்லியிருந்தால், இரண்டாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கச் சொல்லியிருக்கலாமே!
2. “அந்த பாடலில் மெட்டு சரியாக இல்லை. எனவே, நிறுத்தச் சொன்னார்.”
மெட்டு சரியாக இல்லை என்றால் யாரோ தவறான மெட்டில் பாடி விட்டதாகப் பொருள் வருகிறது. யாரும் அவ்வாறு பாடவில்லை. அண்டப்புளுகு, ஆகாசப் புளுகையெல்லாம் விஞ்சி பொய்மலைப்புளுகு என்னும் புது மரபைத் தோற்றுவித்துள்ளார். ஏனெனில் இது குறித்து விழா ஏற்பாட்டாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள், “எங்களுக்குப் பாடத் தெரியாது. தமிழ்நாட்டில் இசைக்கப்படும் தமிழ்நாட்டு அரசால் ஏற்கப்பட்ட இசைப் பாடலைத்தான் இங்கும் இசைக்கிறோம். அவர் பொய்யில் புரளும் மன்னர். நிகழ்ச்சிக்கு வராதவர்களிடம் தவறான கருத்தை விதைக்கப் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.” என்கின்றனர்.
3. “மெட்டு சரியாக இல்லை. உடனே அதை பற்றி ஈசுவரப்பாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். உடனே அவர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்தச் சொன்னார். அதன் பிறகு, கன்னட நாட்டு கீதம் ஒலிபரப்பப்பட்டது.”
மேடையில் நேர்நில்(attention) முறையில் அசையாமல் நின்று கொண்டுள்ளதும் பின்னர்க் கைகட்டி நின்று கொண்டிருப்பதும்தான் தெரிகிறது. அவர் இடத்தை விட்டுச்சிறிதும் அசையவில்லை. ஈசுரப்பாவிடம் எதுவும் சொல்ல வில்லை. பெரிய இடத்துப்பிள்ளையிடம் பெயர் வாங்குவதற்காக இவ்வாறு கூறுகிறார்.
4. “மெட்டு சரியில்லை. அதனால்தான் நிறுத்தச் சொன்னார்”
முந்தைய கூற்றுக்கு முரணானது. முதலில் தான் சொன்னதால்தான் நிறுத்தச் சொன்னதாகக் கூறியவர், இப்பொழுது தானே நிறுத்தச் சொன்னதாகக் கூறுகிறார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். இங்கே எட்டு நிமிடம் கூடத் தாக்கு பிடிக்கவில்லை. அவ்வாறு மெட்டு சரியில்லை என்று கவலைப்படுபவர் சரியான முறையில் பாடலை இசைக்கச் செய்வதுதானே முறையாக இருந்திருக்கும்.
5. “மெட்டு சரியில்லாததால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் போட வேண்டா என நான் கூறிவிட்டேன்.”
முதல் கூற்றுக்கு முரணாகக் கூறியுள்ளார். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அவ்வாறு யாரிடமும் பொய்மலை கூறிய காட்சி எதுவும் காணொளியில் இல்லை.
6. “தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் முழுமையாக இசைக்கப்பட்டது.”
பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மீண்டும் பாடப்படவில்லை என்று முன் வரிசையில் இருந்த இதழாளர் தண்டபாணி கூறியுள்ளார். நிகழ்ச்சிக் காணொளியும் இதனை மெய்ப்பிக்கிறது.
7. தமிழ்நாட்டில் தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்கிறவர் , அங்கே கன்னட நாடு என்று கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் பேசுகையில் தமிழ்த்தாய் அவமதிப்பிற்குக் கண்டனமோ வருத்தமோ தெரிவிக்காத பொய்மலை, அவமதித்த கே.எசு.ஈசுவரப்பாவுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனைக் கன்னடர்கள் இடையேயோ அவரது வகுப்பைச் சார்ந்தவர் மத்தியிலோ சொன்னால் அவர்களை மகிழ்விக்கச் சொன்னதாகக் கருதலாம். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தச் சொன்ன கூட்டத்தில் பொய்மலை கூறியுள்ளார். இது ஈசுவரப் பாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்பற்காக மிரட்டியதாகக் கருதப் படுகிறது.
நிகழ்ச்சியை நடத்துவது தமிழ்மக்கள். அப்படியானால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைப்பதுதானே முறை. அதைத்தான் அவர்கள் செய்தனர். ஆனால் தமிழர்கள் கன்னடர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் கன்னட வெறியைத் தூண்டும் வகையிலும் ஈசுவரப்பா நடந்து கொண்டுள்ளார். இது குறித்து எதிர்க்கருத்து எதுவும் கூறாவிட்டாலும் அவமதிப்பின்பொழுது அமைதியாக இருந்ததுபோல் பின்னரும் அமைதிகாத்திருக்கலாம் பொய்மலை.
கூட்டத்தைக் கூட்டியது தமிழர்களின் வாக்கை பெறுவதற்காக, ஏற்பாட்டாளர்கள் பா.ச.க.வினர். இந்நிலையில் தமிழர்களின் வாக்கை அறுவடை செய்ய முயலும் கட்சி தமிழ்த்தாய் வாழ்த்தை எதிர்ப்பது ஏன்? என அங்குள்ள மக்களும் செய்தியை அறிந்த பிற பகுதி மக்களும் கேட்கின்றனர்.
இதனால், “கருநாடகா சட்டமன்றத் தேர்தலில் பாசகவைக் கருநாடகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” எனக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. கருநாடகத் தமிழர்கள் பா.ச.க.புறக்கணிப்பை மேற்கொள்ளட்டும்! தமிழ்நாட்டில் பாசகவில் உள்ள தமிழன்பர்கள் தமிழ்நாட்டிற்குள் பொய்மலையைப் புறக்கணிக்கட்டும்! எனவே, பொய்மலையை மன்னிப்பு கேட்கச் சொல்லி யாரும் வற்புறுத்த வேண்டா. அவரைத் திருத்தச் செய்வதற்கு வாய்ப்பாக அவரைப் புறக்கணிப்போம்!
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 821)
தமிழுடன் உள்ளத்தால் ஒன்றாதவர்களும் தூக்கி எறியப்பட வேண்டியவர்களே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
19.04.2054/02.05.2023
No comments:
Post a Comment