(இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 தொடர்ச்சி)
முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 27
மாண்புமிகு முதல்வர் அவர்களே! நீங்கள், தமிழ், தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது “இது தமிழை, தமிழினத்தைக் காக்கும் ஆட்சி” என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.
சான்றாக, வடஅமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது (சூலை 2022)
“தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து வருகிறது. தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஆட்சியாகத், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. உலகளாவிய தமிழாட்சியை இங்கிருந்து நடத்தி வருகிறோம்.” எனப் பேசியுள்ளீர்கள்.
மேலும், ” நம்மை நாடுகள் பிரிக்கலாம்! நிலங்கள் பிரிக்கலாம்! ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. அந்த மொழியை வளர்ப்போம்! தமிழினத்தைக் காப்போம்! ” என்றும் பேசியுள்ளீர்கள்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரைக் கழகத்தைத் தொடக்கி வைத்த பொழுது (செட்.2022) “”தமிழ் வெறும் மொழியல்ல.. நம் உயிர்” என்று பேசியுள்ளீர்கள். இவ்வாறு பலவற்றைக் கூறலாம்.
ஆனால், தமிழ் இருக்கும் இடத்திலும் இருக்க வேண்டிய இடத்திலும் ஆங்கிலத்தைத் திணித்தால் தமிழ் எங்ஙனம் வாழும்? அதனை எவ்வாறு வளர்க்க இயலும்? எவ்வாறு காக்க முடியும்? நீங்கள் அறிந்த ஒன்றுதானே இது. அவ்வாறிருக்க ஆங்கிலக் காதலராக ஆட்சி செய்தால் தமிழ் விரட்டப்படத்தானே செய்யும்?
பலமுறை ஆட்சியின் உச்ச நிலையிலுள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். மாறுதல் ஆணைகளைக்கூடத் தமிழில் வழங்க இயலவில்லை என்றால் அப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு ஏன் ஆட்சி நடத்த வேண்டும்? அப்படிப்பட்ட ஆட்சி தேவைதானா என மக்கள் எண்ண மாட்டார்களா?
பலமுறை மாறுதல் ஆணைகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். இப்பொழுது(05.08.2023) உள்துறையில் இ.கா.ப. அலுவலர்கள் குறித்த மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பெயர்கள், இப்போதைய பணியிடங்கள், மாற்றப்படும் இடம் ஆகிய விவரங்கள்தான் இடம் பெறுகின்றன. இவற்றைக்கூடத் தமிழில் குறிக்கத் தெரியாதவர்களைக் கொண்டு நீங்கள் எங்ஙனம் தமிழைக் காக்கப் போகிறீர்கள்? பொதுவாகப் பொதுத்துறை, உள்துறை முதன்மைப் பணியிடங்களுக்கான ஆணைகளை வழங்குகின்றன. இப்போதைய பணியிடங்களில் அதிகாரிகளை இல்லாமல் ஆக்குவதுபோல், தமிழையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.
இப்போதைய முதன்மைச் செயலர் அமுதா இ.ஆ.ப., தமிழிசை ஆர்வலர். பல்வேறு சிறப்பான பணிகளை ஆற்றிப் பாராட்டு பெற்று வருபவர். அவரால் தமிழில் ஆணை வழங்கச் செய்ய இயலாதா? ஆனால் ஆணையில் தமிழ் இல்லையே! ஏன்? இது தமிழருக்கான ஆட்சியாக, தமிழர் நலனுக்கான ஆட்சியாக உள்ளத்தில் பதியவில்லை. அதுதான்.
இவற்றுக்கெல்லாம் முதல்வரைக் குறைகூற வேண்டுமா என்றால் தமிழ்நாட்டின் ஆட்சித்தலைவர் அவர்தானே! அவரைத்தானே சுட்டிக்காட்ட இயலும். நல்லன நடக்கும் பொழுது என்னுடைய ஆட்சி எனப் பெருமைப்படும் பொழுது அல்லன நடக்கும் பொழுதும் பொறுப்பேற்க வேண்டுமல்லவா? நிறைகளாயினும் குறைகளாயினும் அவற்றிற்குப் பொறுப்பு முதல்வர்தானே!
ஓரிடத்தில் தீநேர்ச்சி(விபத்து) நிகழ்கிறது எனில் அவ்விடத்தின் உரிமையாளர் வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்தாலும் இதனை அறியாதவராக இருந்தாலும் அவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடுக்கிறார்கள் அல்லவா? அப்படியானால் முதல்வர் அன்றாடம் வந்து செல்லும் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் தமிழ் எனதிர் செயல்களுக்கும் அவர்தானே பொறுப்பு?
ஒரு முறையாவது – ஒரே ஒரு முறையாவது – முதல்வர் தாலின் எதற்கு ஆங்கிலம் எனக் கேள்வி கேட்டுத் தமிழில் ஆணை பிறப்பிக்கச் சொன்னால் – கடுமையாகக்கூட அல்ல மென்மையாகச் சொன்னால் – தானாகவே அனைத்தும் தமிழாகிவிடும். வாதத்திற்காக அப்படி எதுவும் நடக்காது என்றால் முதல்வர் பொறுப்பில் இருப்பது பயனற்றது என்றாகி விடும்.
கண்ணசைவிலேயே தமிழைக்காக்கக்கூடிய இடங்களில்கூடப் பாராமுகமாக இருந்து கொண்டு தமிழை வாழ வைப்போம் எனப் பேசினால் வெற்றுப் பேச்சாக மக்கள் கருத மாட்டார்களா?
இப்பொழுதுகூட அமித்துசாவின் இந்திப்பேச்சிற்குக் கிளர்ந்து எழுந்துள்ளீர்கள்.( அமித்துசாவின் பேச்சு சரியே என அடுத்துக்கட்டுரை எழுத உள்ளேன்.) உள்ளத்தில் இருந்து வந்த கிளர்ச்சிதான், வேறு அரசியல் நோக்கு இல்லை என்றால் முதலில் தமிழ்நாட்டில் முழுமையாகத் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும். அதைச் செய்வதற்கான வாய்ப்பும் அதிகாரமும் இருந்தும் வாளாவிருந்துவிட்டுத் தமிழைக் காப்போம்! தமிழினத்தைக் காப்போம்! என்று பேசிப்பயனில்லை.
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் தெரிவித்ததுபோன்று தலைமைச்செயலகத்தில் தமிழ்வழி படித்தவர்களையும் தமிழில் பட்டம் பெற்றவர்களையும் இனிமேல் அமர்த்தல் வேண்டும். இப்பொழுது பணியாற்றுபவர்களில் தமிழில் வரைவு எழுதத் தெரியாதவர்களை எல்லாம் பிற துறைகளுக்கு அனுப்பி விட வேண்டும். அங்குள்ள தமிழ் வரைவு எழுதுவதில் வல்லவர்களைத் தலைமைச்செயலகத்திற்கு மாற்றி அமர்த்திக் கொள்ள வேண்டும். சட்டத்துறையில் சட்டத்தேர்ச்சியாளர்களை அமர்த்துவதுபோல் தமிழ் படித்தவர்களை அமர்த்தும் முடிவு சரியாக இருக்கும்.
மு.க.தாலின் அவர்களே! உங்களின் தன்மான, தமிழ்மான உரைகளைக் கேட்பவர்கள் எல்லாம் உங்கள் மீது பெரும நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆரியத்திலிருந்து விடுதலை பெற்றுத் தர வந்த திராவிடத் தலைவன் என உங்களை நம்புகிறார்கள். ஆனால், அந்தப் பிம்பத்தை உடைக்கும் வகையில் உங்களின் ஆங்கிலக் காதல் உங்களைத் தமிழுக்கு எதிரானவராகக் காட்டுவதை உணரவில்லையா?
ஆங்கிலக் காதலர்கள் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என மக்கள் கிளர்ந்து எழுந்து போராடும் முன்னர், அந்த நிலையைத் தடுப்பதற்காகவாவது தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், 448)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment