இந்திச் செயற்பாடு: அமித்து சா விற்குப் பாராட்டு!
பல தேசிய மொழி இன மக்கள் வாழும் இந்தியாவில் பெரும்பான்மை இன மக்களின் தாய்மொழிகளுக்கு எதிராக நாளும் செயற்படுவதே இந்திய அரசின் செயற்பாடு. அண்மையில் சட்டப் பெயர்களை இந்தியில் மாற்றிய கொடுமைகூட அரங்கேறியது. இந்தியைப் பயன்படுத்துவோருக்கு இந்தியில் சட்டப் பெயர்கள் குறிக்கப்பெற்றுப் பயன்படுத்தி வந்துள்ளன. அவ்வாறிருக்க அனைத்து மொழியினருமே சட்டங்களின் பெயர்களை இந்தியில் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் அண்மையில் மூன்று சட்டங்களை இந்திமயச் சமற்கிருத்தில் குறிப்பிட்டுப் பெயர் மாற்றம் செய்து சட்டமியற்றியது.
“தற்போது இந்தி மொழி ஏற்பு என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்” என அலுவல் மொழிக்கான 38 ஆவது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்துசா பேசியுள்ளார்.
“அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.” என இந்தியையே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அமித்துசா பேசியுள்ளார்.
கடந்த செட்டம்பர் 16ஆம் நாள் ‘இந்தி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டபோது அமித்து சா, இந்திதான் அலுவல் மொழி என்றார். இப்போது அவர் தலைமையிலான குழு இந்தியைப் பொதுமொழி என்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி என்றும் கட்டாயமாகத் திணிப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
இவ்வாறிருக்க இந்தியைத் திணிப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்து சா வைப் பாராட்டுவதேன் என எண்ணலாம்.
இந்தி என்பது இன்று நேற்று புகுத்தப்படுவது அல்ல! இந்திய விடுதலைக்கு முன்பும் புகுத்தப்பட்டது. அதன் பின்னும் எல்லா வகையிலும் அரசியல் யாப்பின்படி புகுத்தப்பட்டுக் கொண்டுள்ளது. இது குறித்துப் பன்முறை எழுதியுள்ளோம். அகரமுதல மின்னிதழில் வெளிவந்த பின்வரும் கட்டுரைகளில் வெவ்வேறு நிலைகளில் இந்தி புகுத்தப்படுவதும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் தலைவர்களும் வீர முழக்கமிட்டுக் குளிர் காய்வதுடன் நிறுத்திக் கொள்வதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!(12.06.2016), இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?(04.12.2016), இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! (02.04.2017),தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே!(09.04.2017), இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது!(23.04.2017),இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்?(30.04.2017), அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது!(07.05.2017), ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? (28.12.2022).
தலைவர்கள் தெரிந்தே செய்யும் தவறுகள் என்பதால் யாரும் திருத்திக் கொள்ளவில்லை. இபபொழுது அரசியல் யாப்பின்படி உள்துறை அமைச்சர் பேசுவதையோ ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதையோ நாம் கண்டித்துக் கூக்குரலிடுவதில் பயனில்லை. உண்மையில் அரசியல் யாப்பு வரையறுத்ததன்படியும் அதனடிப்படையிலான சட்டங்களின்படியும் அவரும் ஒன்றிய அதிகாரிகளும் செயற்படுவதற்குப் பாராட்டத்தான் வேண்டும். கண்டிப்பதோ குறை சொல்வதோ தவறு.
அப்படி யென்றால் இந்தியை ஏற்க வேண்டும் என்று சொல்கிறாேமா? என்றால் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! ஆனால், தமிழ்நாட்டரசின் துறைகளின் முத்திரைகளில் இந்தியைப்பயன்படுத்தும் தமிழ்நாட்டரசிற்கும் அதை நடத்துவோருக்கும் இந்தியைத் திணிக்காதே என்று சொல்லத் தகுதியில்லை என்கிறோம். உள்ளத்திலிருந்து இந்தி எதிர்ப்பும் தமிழ்க்காப்புணர்வும் வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்தி திணிக்கப்படாத அளவிற்கு அரசியல் யாப்பில் தொடர்புடைய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். “இந்திய அரசியல் யாப்பில் உள்ள பதினேழாம் இயல் அடியோடு நீக்கப்பட்டுப் புதிய விதிகளுடன் அவ்வியல் சேர்க்கப்படவேண்டும். தமிழை இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திய அரசியல் யாப்பில் இந்தி என முதன்மையாகக் குறிக்கப்படும் எல்லா நேர்வுகளிலும் தமிழ் என்பதும் இடம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.” என்பதைச் செய்து காட்டாமல் இந்தியை எதிர்ப்பதில் பயனே இல்லை.
தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலக் காதலியுடன் உலகறிய உலா வருவதிலும் இந்திக்கள்ளக்காதலியுடன் கமுக்கமாக உறவாடுவதிலும் காணும் இன்பம் தலைவியாம் தமிழைக் காக்கும் பொறுப்பில் இல்லை. எனவே தாய்த்தமிழ் மீது பற்றுடைய மக்கள், கிளர்ந்து எழுந்து தமிழைக் காக்க முன் வரவேண்டும். ஆனால் அவர்களை வழி நடத்தும் தமிழறிஞர்களோ தலைவர்களோ யாருமில்லை என்பதுதான் வருந்தத்தக்க நிலை. இந்நிலை என்று மாறுமோ?
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். (திருவள்ளுவர், திருக்குறள் 848)
தமிழறிஞர்கள் தமிழுக்குச் செய்ய வேண்டியன யாவை எனச் சொன்னாலும் கேட்பதில்லை. தாமாகவும் அறிந்து செய்வதில்லை. இவ்வாறிருப்பின் தமிழுக்கு அது துன்பம்தானே.
தி.மு.க.வைப் பொறுத்தவரை ஆங்கிலம் அகன்றால் அந்த இடத்தில் இந்தி வந்து அமர்ந்து விடும் என்பது நம்பிக்கை. அதனால்தான் முன்பு ஆங்கிலப் பாதுகாப்பு மாநாடே நடத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் திட்டமும் ஆங்கிலத்தை அகற்றி விட்டால் அங்கே இந்தியைப் புகுத்தி இந்தியா முழுமையும் இந்தியை வீற்றிருக்கச் செய்யலாம் என்பதுதான். ஆனால் நாம் தெளிவாக இருந்தால், தமிழ் நாட்டிற்குள் அனைத்து நிலைகளிலும் தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியே தொடர்பு கொள்ள ஆங்கிலம் மட்டும் தேவை என்பதை உணர்ந்து ஆள்வோர் செயற்பட்டால், ஆங்கிலத்தினிடத்தில் இந்தி வந்து விடும் என்ற அச்சம் தேவையில்லை. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழே இருந்தால் அங்கே இந்தி வரவே வாய்ப்பில்லை. தமிழ் இல்லா இடங்களில் ஆங்கிலம் அகன்றால் இந்தி இடம் பெயர்ந்து அமரும் என்பதில் ஐயமில்லை. இதற்குப் பேரறிஞர் அண்ணா சொன்ன இரு மொழிக் கொள்கை என்றால் தமிழ்நாட்டிற்குள் தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழி என்ற அறியாமை ஆள்வோரிடமிருந்து நீங்க வேண்டும். பேரறிஞர் அண்ணா கனவு கண்டாற்போல், அக நாட்டிற்குள் அன்னைத் தமிழே திகழ வேண்டும். புற நாட்டுடன் ஆங்கிலம் வேண்டும் என்று செயற்படுத்த வேண்டும். எனவே, நாம் இந்தியைத் திணிக்காதே என்று சொல்லிக் கொண்டிராமல் அதற்கான வாயிலை அடைக்க வேண்டும். அரசியல் யாப்பு திருத்தம்தான் இந்தி நுழைவிற்கான கதவடைப்பு. அக்கதவை அடைக்க முயலாமல் திறந்த கதவிற்குள் நுழைவோரை ஏசிப் பயனில்லை.
“மொழிவழி மாநிலங்கள் முழுத் தன்னாட்சி பெற்று முழு உரிமையுடன் சாதி மத வருக்க வேறுபாடு அற்ற மக்களாட்சிச் சமநிலைக் குடியரசுகளாய் இணைந்து வாழும் வன்மைமிக்க பாரதக் கூட்டரசை உருவாக்கவும், அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகட்கே முதன்மை என்ற அடிப்படையில் மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே வாழ்நாட் பணியாகும். (குறள்நெறி (மலர்2: இதழ் 12): காரி 16: 1.12.65)” எனத் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் கூறியதை அனைவரும் உறுதி மொழியாக ஏற்றுச் செயற்பட வேண்டும். அயற்மொழித் திணிப்புகளை அகற்றி அன்னைத் தமிழைக் காக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
No comments:
Post a Comment