இந்தியாவா? – பாரதமா?
1
நாடுகள், நகரங்கள், அமைப்புகள் பெயர்கள் மாற்றப்படுவது இயற்கைதான். அந்த வகையில் இந்தியா என்பதைப் பாரத்>பாரதம் என மாற்றுவதையும் இயற்கையாகக் கருதலாம். ஒரு செயல் நன்றாக இருந்தாலும் அதைச் செய்வது யார், அதன் நோக்கம் என்பதைப் பொருத்தே, அது குறித்து முடிவு எடுக்க முடியும். அப்படித்தான் பாசகவின் இந்தியப் பெயர் மாற்றம் குறித்தும் கருதப்படுகிறது.
வடக்கே இந்தியா என்னும் சொல்லாட்சி ஏற்பட்டாலும் பன்னெடுங்காலமாக இந்நிலப்பகுதி பரதம் என்றே அழைக்கப்பட்டுள்ளதை நோக்குவோம்.
தமிழ் மக்கள் நிலத்தை இயற்கையோடியைந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்தனர். கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல் நிலமாகும். நாட்டின் முப்புறமும் கடல் சூழ்ந்து பெரும்பகுதி நெய்தல் நிலமாக இருந்தமையால் நெய்தல் நிலத்தவரான பரதவர் பெயரால் இந்நாட்டை முன்னோர் பரதநாடு, பரதவர் நாடு, பரதர் நாடு என்றெல்லாம் அழைத்தனர்.
நெய்தல் நில மக்கள் சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் என அழைக்கப்பட்டனர். தமிழ் இலக்கியங்களில் இவற்றைக் காணலாம். இருப்பினும் மக்கள் வழக்கில் பெரும்பாலும் பரதவர் எனபது இடம் பெற்றது. பரதவர் நிலம், பரத நிலம் எனப் பட்டினப்பாலை கூறுகிறது. பரதவர் கடலில் கையாளும் கப்பல்கள் பரதர் என்றும் பின்னர் இதனடியாகப் பாரதி என்றும் அழைக்கப்பட்டன. சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டில் இடம் பெற்ற, சோணசைலமாலை, சிறப்புப் பாயிரத்தில்
பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன்
என மரக்கலம்(கப்பல்) குறித்த நூல் பாரதி நூல் எனப்பட்டுள்ளது.. (இதன் மூலம் கப்பல் குறித்த அறிவியல் நூல் இயற்றப்பட்டமையை அறியலாம்.)
பாரதவருடம் – தென்கடற்கு மிமயமென்னுங் கிரிக்கு நடுப் பாரதமாம் என்கிறது கந்தபுராணம். அஃதாவது தெற்கே உள்ள குமரிக்கடலுக்கும் (இந்தியப் பெருங்கடலுக்கும்) வடக்கே உள்ள இமயமலைக்கும் இடையிலுள்ள பகுதி. வருடம் என்பது பிரிவு, கண்டம் என்னும் பொருள்களில் இங்கே குறிக்கப்பெறுகிறது. குரு வருடம், இரணியவருடம், இரமியவருடம், இளாவிருத வருடம், கேதுமாலவருடம், பத்திரவருடம், அரிவருடம், கிம்புருடவருடம், பாரதவருடம் எனப்பட்ட நவவருடத்தில்(ஒன்பது பெரும்பிரிவுகளில்) ஒன்று என்றும் இலக்கியங்கள் விளக்குகின்றன. (இதன் பழந்தமிழ்ப் பெயர்களை வல்லோர் அறிந்து தெரிவிக்க வேண்டும்.)
பரதகண்டம் – விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பிரதேசம் என்கிறது தமிழ்ப்பேரகராதி(பக்.2495). பனிமலையும் இன்றைக்கு இந்தியா என அழைக்கப்படும் நிலத்தின் வடபகுதியும் இல்லாத தெற்கில் முழுகிப்போன குமரிக் கண்டத்தொடு கூடிய நிலப்பகுதி என்பதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் வழி அறியலாம். ( செ.சொ.பி. பே.முதலியில் இச்சொல்லிற்கான விளக்கம்.)
கன்னியாகுமரி என்னும் சொல்லுக்கான பொருள் தரும் செ.பேரகராதி,பரதகண்டத்தின் தென்கோடிமுனை என்கிறது.
பரதம்-கடல் சூழ்ந்த தென்னிந்தியப் பகுதி என்கிறது செ.சொ.பே.முதலி. எனினும், பரதம் என்பதை [த. பரவை → பரதம் → Skt.Bharata → த. பரதம்] என்று விளக்குகிறது. இதுவே பாரதம் என்பதைச் சமற்கிருத்தில் இருந்து வந்ததாகக் கூறுகிறது[Skt. {} → த. பாரதம்]. தமிழ்ச்சொற்களைச் சமற்கிருதச் சொற்களாகக் காட்டும் செ.சொ.பே.முதலியின் தவறான விளக்கங்களுள் இதுவும் ஒன்றாகும்.
இரிக்கு வேதத்தில் பாரதம் குறிக்கப்பெறுவதாகக் கூறுவர். அதில் பழங்குடியினர் எனக் குறிக்கப் பெறுவது தமிழ்ப்பழங்குடியினராகிய பரதவரையே எனக் கருத வேண்டும். அதில் மன்னர்களின் பெயர்களில் குறிக்கப்பெறுவது கற்பனையே.
அதனடிப்படையில், இராமாயணத்தில் வரும் பரதன் பெயரில் பாரதம் அல்லது பரத நாடு என்று அழைக்கப் பெறுவதாக இப்போது ஒரு சாரார் கருதுகின்றனர். சகுந்தலைக்கும் துசுயந்தனுக்கும் பிறந்த பரதன் என்னும் அரசன் பெயரில் பரதகண்டம் என்று இந்தியாவிற்குப் பெயர் வழங்குவதாகச் சிலர் நூற்களில் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் வரலாறு அறியாதவராலும் வடநாட்டார் முதன்மைப்படுத்த வேண்டும் என்பவர்களின கற்பனையாலும் புகுத்தப்பட்டவையே.
பரதம் முதலிய சொல்லாட்சிகள் தமிழிலக்கியங்களிலேயே மிகுதியும் உள்ளமையால், உண்மையில் பரதம் என்ற பெயர் தமிழ்ப் பெயரே, தமிழ் நிலம் சார்ந்த பெயரே என உணரலாம்.
பரதர், பரதவர், முதலான சொற்கள் தமிழிலக்கியங்களில் குறிக்கப்படுகின்றமைக்குச் சான்றாகச் சிலவற்றைப் பார்ப்போம்.
துணை புணர் உவகையர் பரத மாக்கள் – அகநானூறு 30/3
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் – பெரும்பாணாற்றுப்படை 323
பரதர் தந்த பல் வேறு கூலம் – மதுரைக்காஞ்சி 317
கடலொடு உழந்த பனித் துறை பரதவ (பதிற்றுப்பத்து 48/4)
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் – பொருநராற்றுப்படை 218
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறுபாணாற்றுப்படை 159
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப – மதுரைக்காஞ்சி 97
தென் பரதவர் போர் ஏறே – மதுரைக்காஞ்சி 144
புன் தலை இரும் பரதவர் – பட்டினப்பாலை 90
கொடும் திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும் – பட்டினப்பாலை 112
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் – நற்றிணை 4/1
பாட்டம் பொய்யாது பரதவர் பகர – நற்றிணை 38/2
மீன் எறி பரதவர் மகளே நீயே – நற்றிணை 45/3
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்/ (நற்றிணை 63/1)
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற்றிணை 74/4
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும் – நற்றிணை 87/8
மீன் எறி பரதவர் மட_மகள் – நற்றிணை 101/8
வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர் – நற்றிணை 111/3
நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர் – நற்றிணை 175/1
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர் – நற்றிணை 199/6
முடி முதிர் பரதவர் மட மொழி குறுமகள் – நற்றிணை 207/9
பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர் – நற்றிணை 219/6
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்- நற்றிணை 239/2
வன் கை பரதவர் இட்ட செம் கோல் – நற்றிணை 303/9
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற்றிணை 349/10
இரும் கழி துழவும் பனித் தலை பரதவர் – நற்றிணை 372/11
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ – நற்றிணை 388/4
நுண் வலை பரதவர் மட_மகள் – குறுந்தொகை 184/6
கொடும் திமில் பரதவர் கோட்டு_மீன் எறிய – குறுந்தொகை 304/4
பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின் – குறுந்தொகை 320/1
வளை படு முத்தம் பரதவர் பகரும் – ஐங்குறுநூறு 195/1
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர் – கலி 106/24
பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகநானூறு 10/10
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் – அகநானூறு 65/11
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என – அகநானூறு 70/1
பெருங் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் – அகநானூறு 140/1,2
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகநானூறு 187/22,23
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர் – அகநானூறு 210/1,2
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் – அகநானூறு 226/7
அம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடி – அகநானூறு 250/11
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் – அகநானூறு 300/1,2
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த – அகநானூறு 330/15
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் – அகநானூறு 340/19,20
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் – அகநானூறு 350/11,12
இரு நீர் பரப்பின் பனித் துறை பரதவர் – அகநானூறு 366/6,7
திண் திமில் வன் பரதவர் – புறநானூறு 24/4
தென் பரதவர் மிடல் சாய – புறநானூறு 378/1
கானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கே – அகநானூறு 280/14
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணிமேகலை: பதிகம் /22
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணிமேகலை:18/57
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணிமேகலை:26/25
பல்லினார்களும் படு கடல் பரதவர் முதலா – சிந்தாமணி:13, 2751/2
பன்னும் மா மொழி பாரத பெருமையும் பாரேன் – வில்லிபாரதம்:1 6/2
பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை – வில்லிபாரதம்:10 46/1
எந்தை பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய் – வில்லிபாரதம்:12 128/2
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லிபாரதம்:27 31/3
நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி – வில்லிபாரதம்:27 32/1
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும் – வில்லிபாரதம்:2737/3
பாரத அமர் புரி பச்சை மா முகில் – வில்லிபாரதம்:41 205/3
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லிபாரதம்:46 8/4
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார் – வில்லிபாரதம்:46 107/4
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே – வில்லிபாரதம்:27 32/4
வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான் – வில்லிபாரதம்:27 33/4
பாரதம் இன்றே பற்று அறும் என்றார் – வில்லிபாரதம்:42 94/4
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே – வில்லிபாரதம்:46 204/4
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லிபாரதம்:46 215/3
துன்னு பாரதம் தோன்றிய நாள் முதல் – வில்லிபாரதம்:46 226/1
அன்ன பாரதம்-தன்னை ஓர் அறிவிலேன் உரைப்பது – வில்லிபாரதம்:1 3/3
பாரதம்-தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி – வில்லிபாரதம்:5 5/2
(சொற்றிரட்டு உதவி: முனைவர் ப.பாண்டியராசா, அருஞ்சொற் களஞ்சியம், தமிழ் இலக்கியத் தொடரடைவு < http://tamilconcordance.in >
எனவே, நம் நிலப்பகுதியைப் பாரத நாடு என்று அழைத்த முன்னோடி நம் பழந்தமிழ் மக்களே.
(தொடரும்)
– அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
No comments:
Post a Comment