(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)
பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்
சென்னை வளர்ச்சிக் கழகம்
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள்
5/7
Act of bad faith – நம்பிக்கை வஞ்சச் செயல்
தீங்கெண்ணச் செயல்
நம்பிக்கை வருவதுபோல் வஞ்சகமாக நடந்து கொண்டு ஏமாற்றும் இரண்டகச் செயல்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act of bad faith for benefit of a person without consent – ஒருவரின் ஆதாயத்திற்காக இசைவின்றிச் செய்யப்படும் தீச் செயல்
ஒருவர், தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தவருக்கு ஆதாயம் ஏற்படுவதற்காகத் தீய நோக்குடன் செய்யும் செயல்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act of conveyance – மாற்றளிப்புச் செயல்
உடைமையின் உரிமைப்பட்டயம், உரிமை, நலன்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுதல்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act of cruelty – கொடுஞ்செயல்
மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ வலி, துன்பம், ஊறு, உயிரிழப்பு நேர்விக்கும் வன்மையான செயல்.
ஒரு பெண்ணிற்கு அவள் கணவனோ கணவனின் உறவினர்களோ கொடுமை இழைத்தால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, ஒறுப்புத் தொகை விதிக்கப்படும். (இ.த.தொ. பிரிவு 498.அ.)
சட்டப்புறம்பான கோரிக்கை மூலமோ தாங்க இயலாக கொடுமை இழைப்பின் மூலமோ பெண்ணின் மரணத்திற்கு அல்லது தற்கொலை முயற்சிக்குக் காரணமானவர்கள், உயிரிழப்பிற்குக் காரணமான அல்லது கொலை முயற்சிக்கான குற்றமிழைத்தவர்களே. கணவனைக் கொடுமைப்படுத்தினால் அதற்குக் காரணமானவர்களுக்கும் இது பொருந்தும். விலங்குகளுக்குக் கொடுமை இழைப்பதிலிருந்து காப்பாற்ற விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1960(The Prevention Of Cruelty To Animals Act, 1960) உள்ளது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act Of God –இயற்கைச் செயல்
இறைமைச் செயல் / தெய்வச் செயல்
நிலநடுக்கம், கடல்கோள், போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரிடர் அலலது பெருமிழப்பு. இவை மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக உள்ளதால் இறைமைச் செயல் அல்லது இயற்கைச் செயல் எனப்படுகிறது.
இங்கு Act என்பது செயல் என்னும் பொருளில் வந்துள்ளது . Act என்பதைச் சட்டம் என்று கையாள்வதை விடச் செயல் என்பதே ஏற்றதாகும்.
இயற்கை இடர்களையெல்லாம் சட்டமாகக் கூறுவது பொருந்தாது அல்லவா?
Act of grace – அருட் செயல்
சட்டச் செயற்பாடு அல்லது தண்டிப்பு நோக்கில் மட்டும் செயலபடாமல் பரிவுக் கண்ணோட்டத்துடன் குற்றவாளியை அணுகுவது அருட் செயலாகும்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act of honour – நன்மதிப்புச் செயல்
நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும்.
இங்கு Act என்பது செயல் என்னும் பொருளில் வந்துள்ளது.
Act Of Indemnity – இழப்பீட்டுச் செயன்மை
இழப்பீட்டு ஒப்பந்தம்; வழுவேற்புச் செயன்மை
ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது செய் சட்டத்தை > செயன்மையைக் குறிக்கிறது; செயலை அல்ல.
வாக்குறுதியளிப்பவரின் அல்லது வேறு ஒருவரின் நடவடிக்கையால் ஏற்படும் இழப்பிலிருந்து மற்றவரைக் காப்பாற்ற ஒரு தரப்பினர் உறுதியளிக்கும் ஒப்பந்தம் இழப்பீட்டு ஒப்பந்தம் எனப்படுகிறது.
இழப்பீடுகள் ‘தீங்கற்ற ஒப்பந்தங்கள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன.
மற்றொரு தரப்பினரால் ஏற்படும் இழப்புகள், சேதங்கள் அல்லது கடன் பொறுப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் ஒப்பந்தங்கள் இழப்பீட்டு ஒப்பந்தங்கள் என்றும் கூறலாம்.
சட்டத்திற்குப் புறம்பானவையாக நிகழ்பவற்றைச் சட்ட முறையாக்கவோ பொதுப்பணியாற்றுங்கால் தொழில்நுட்ப அளவில் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்குத் தண்டனையிலிருந்து அல்லது ஒறுப்புத் தொகையிலிருந்து விலக்களிப்பதற்கோ இயற்றப்படும் சட்டம் வழுவேற்புச் செயன்மை எனப்படுகிறது. வழுவமைப்புச் சட்டம் எனச் சிலர் குறிப்பிடுவதைவிட வழுவேற்புச் செயன்மை என்பதுதான் சரியாக இருக்கும்.
இந்த ஒரே தொடரே பயன்படும் இடத்திற்கு ஏற்பச் செயன்மை, ஒப்பந்தம், எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
Act of insolvency – நொடிப்புச் செயன்மை / நொடிப்புச் செயல்
நொடிப்பு நிலை குறித்த சட்டம் நொடிப்புச் செயன்மை.
நொடிப்பு என்பது பொருளறு நிலை – பொருள் இல்லாமல் அற்றுப்போன நிலை – யாகும்.
நடைமுறையிலுள்ள சட்டப்படி ஒருரை நொடித்தவராகத் தீர்ப்பளிப்பதற்குரிய யாதேனும் ஒரு செயல் நொடிப்புச் செயலாகும்.
திவால் என்பது உருதுச்சொல்.
நொடிப்பொழுது அல்லது கணப்பொழுது எடுக்கப்படும் திரைக்காட்சியை(screen shot)யும் நொடிப்பு என்பர்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை / செயல் .
act of law – சட்ட விதியம்
விதியத்திற்கான சட்டம்
சட்ட விளைவுச் செயல்
சட்ட நடவடிக்கை, சட்டச் செயல் என்கின்றனர். இங்கே act என்பதைச் செயல் அல்லது நடவடிக்கை என்னும் பொருளில் பார்க்கக் கூடாது. Act என்பது சட்ட அமைப்பால் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் – செயப்படும் சட்டம் > செயன்மை. Law என்பது சட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஒழுங்குமுறை விதிகளை அரசு இயற்றுவது. எனவே (சட்ட)விதியம் எனலாம்.
உரியவரது இசைவின்றியே சட்டம் செயற்படுவதன் மூலம் ஓர் உரிமை எழுதல், அழிதல் அல்லது மாறுதல் என்பதைக் குறிப்பது சடட விளைவுச் செயல் ஆகும்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் விதியம் என்பதாகும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)
No comments:
Post a Comment