(சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

551. Acquisition Of Possession  உடைமையைக் கையகப்படுத்தல்  

உரிமையாளரிடமிருந்து அவரது இசைவுடனோ இசைவின்றியோ அவரின் உடைமையைக் கைப்பற்றல். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.  

கீட்டன் என்பார் கூறுவதற்கிணங்க, விடுதிக் காப்பாளர், விடுதியில் தங்கியிருப்பவர் விடுதிக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அவரது உடைமையைக் கைப்பற்றல் சரியான நடவடிக்கையே. இருப்பினும் இவற்றைக் காவல்துறையினர் முன் மேற்கொள்வது ஏற்றதாகும்.
552. Acquisition Of Propertyசொத்து கையகப்படுத்தல்  

ஒருவரது உடைமையாக அல்லது அவரின் கட்டுப்பாட்டில் அல்லது அவரின் உரிமையின் கீழ் உள்ள சொத்தை வேறொருவர் தனக்குரியதாகக் கையகப்படுத்தல்.  

உடைமை யுரிமை, துய்ப்புரிமை, ஒப்பந்தம், பரம்பரை ஆகிய நான்கு வழிகளில் சொத்து கையகப்படுத்தம் நிகழும்.
553. Acquisition Of Rightஉரிமை பெறுதல்  

துய்ப்புரிமை, மீட்பு உரிமை, பிற உரிமைகளைப் பெறுதல்.
554. Acquisition Of Surplus Landsமிகை நிலங்களைக் கையகப் படுத்தல்
  – தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நிலத்தில் உச்சவரம்பு வரையறை) சட்டம், 1961 (தமிழ்நாடு சட்டம் 58/1961) கீழ் கையகப்படுத்தப்பட்ட மிகை நிலங்கள், தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (மிகை நிலத்தை அகற்றுதல்) விதிகள், 1965 இன் கீழ் ஒருவருக்கு அதிக அளவு 5 நிலையான காணி(ஏக்கர்)வரை ஒதுக்கப்படலாம்.
555. Acquisition Reference Suitகையகப்படுத்தல் எடுகோள் வழக்கு  

கையகப்படுத்தலைக் குறிப்பது தொடர்பான வழக்கு.
556. Acquisition, Compulsory  கட்டாயக் கையகப்படுத்தல்  

ஈட்டுதல் [குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 பிரிவு 4.83(S. 4(viii) PCRA, 1955)]

கையகப்படுத்துதல்
[இந்திய-தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையச் சட்டம், 1988, பிரிவு 13 (S. 13 NHWA, 1988)]
[மாற்றாள் சொத்துப் பரிமாற்றத் தடைச் சட்டம், 1988, பிரிவு 5. அ (S. 5 BT(P)A,1988)]
[போதை மருந்துகள் – மனநோய் பொருள்கள் சட்டம், 1985, பிரிவு 9.அ.,2 (S. 9A (2) NDPSA,1985)]
    

கட்டாயக் கையகப்படுத்தல் என்பது, நிலத்தின் உரிமையாளர் அல்லது பயன்பட்டாளரின் விருப்பார்ந்த உடன்பாடின்றிப், பொதுநோக்கத்திற்காக  நிலத்தின் உரிமைகளை அரசே எடுத்துக்கொள்ளும் அதிகாரமாகும். – கெய்த்து, 2008 /Keith, 2008
557. acquisitiveஅடைதல்  

ஈட்டம்  
பொதுவான ஒன்றை அல்லது பிறர்க்குரியதை அடைதல், அதிலிருந்து பொருளை ஈட்டுதல்
558. Acquitவிடுவி  

குற்றமின்மையை அறிவி

கட்டணத் தள்ளுபடி

குற்றச்சாட்டினின்று விடுவி

பழி நீக்கு கடனாற்று,

நிறைவேற்று,  

குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், அக்குற்றத்திற்கு எவ்வகையிலும் தொடர்பற்றவர் என அறிந்து முழுக் குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தல்.  

விடுதலை என்பது தண்டனை முடிந்து விடுவிக்கப்பெறுவதைக் குறிக்கிறது. குற்ற விடுவிப்பு தண்டனை வழங்காமல் குற்றமற்றவர் என விடுவிப்பதைக் குறிக்கிறது.
559. Aequitas erroribus medaturசமன்மை தவறுகளால் இணக்குவிக்கப் படுகிறது.  

இரு தரப்பாரிடையே சந்து செய்கையில்(Mediation) அவரவர் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி  இணக்கம் ஏற்படுத்தல்.
560. Ac-equitas Factum Habet Quod Fleri Oportuitசெய்தக்கன செய்வதே நேர்மை நெறி.  

நேர்மை நெறி என்பது சட்டத்திற்கு முரணாகாது என்பது இலத்தீன் தொடரின் பொருள். அஃதாவது நேர்மை நெறிக்கு முரணாகச் சட்டம் செல்லக்கூடாது என்பது இதன் அடிப்படைப் பொருளாகிறது.  

தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் திருவள்ளுவர்   செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.(திருக்குறள் 466) என்பது சட்ட நெறிக்கும் பொருந்துகிறது.
சட்டநெறி நேர்மை நெறிக்கு முரணாகக் கூடாது என்னும் தமிழ் நெறியே இதைச் சிறப்பாக உணர்த்தும்.