(சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

801. Administrative Machinery              பணியாண்மை இயங்கமைவு  

Machinery என்றால் இயந்திரம் என நேர் பொருளில் சொல்வதை விட இயந்திரத்தின் இயக்கம் போன்று இயங்கு நிலையைக் குறிப்பதால் இயங்கமைவு எனலாம்.  

பணியாண்மைக்கான செயற்தொகுதியைக் குறிப்பதே பணியாண்மை இயங்கமைவு ஆகும்.
802. Administrative Office  பணியாண்மை அலுவலகம்  

ஒரு துறை அல்லது ஓர் இயக்ககம் அல்லது ஒரு செயலகம் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஓர் அமைப்பு போன்றவற்றின் அன்றாடப் பணிகளைப் பார்க்கும் அலுவல் அமைப்பே பணியாண்மை அலுவலக மாகும்.
803. Administrative Power     பணியாண்மை அதிகாரம்  

ஒரு துறை அல்லது ஓர் இயக்ககம் அல்லது ஒரு செயலகம் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஓர் அமைப்பு போன்றவற்றின் அன்றாடப் பணிகளின் ஆளுமைகளையும் பணியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உடைய அதிகாரம் பணியாண்மை அதிகாரம் ஆகும்.

பணியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் என்னும் பொழுது பணியாளர்களின் ஊதியம், விடுப்பு முதலிய பணியாளர் நலன்களை வழங்குதல், நிறுத்தி வைத்தல், நீக்குதல், பணியிடங்களை நீக்குதல்  அல்லது மாற்றியமைத்தல் ஆகியவற்றிற்கான அதிகாரம் அல்லது இவற்றிற்கான அதிகாரம் உடைய மேலலுவலர்க்குப் பரிந்துரைத்தல்,  தவறு அல்லது குற்றம் புரியும் பணியாளர்களை உசாவுதல் (விசாரித்தல்) தண்டித்தல், மன்னித்தல் அல்லது இவற்றிற்கான அதிகாரம் உடைய மேலலுவலர்க்குப் பரிந்துரைத்தல் ஆகியனவும் அடங்கும்.
804. Administrative Procedure     பணியாண்மை நடைமுறை  

அரசு அல்லது தனியார் நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரங்களைச் செயற்படுத்தும் பாங்கு அலுவலக நடைமுறையாகும்.  

பணியாளர் அல்லது அதிகாரி தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அல்லது அதிகாரத்திற்கு உட்பட்ட செயல்களை நடைமுறைப்படுத்துவதையும் குறிக்கிறது.
805. Administrative Reforms Commission        பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம்  

பணிகள், பணியாளர்களிடையே உள்ள குறைகளைக் களைதற்கும் செயற்பாடுகளைத் தரப்படுத்துதற்கும் உயர்த்துவதற்கும் அமைக்கப்படும் குழுவே பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம் ஆகும்.  

இந்தியப் பொதுப்பணியாண்மையை மதிப்பாய்வு செய்வதற்கு முதலில் 05.01.1966 இல் பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம்(ப.சீ.ஆ.) அமைக்கப்பட்டது. மொரார்சி தேசாய் இதன் தலைவராக முதலில் இருந்தார். அவர் துணைத் தலைமையமைச்சராக ஆன பின்பு அனுமந்தையா இதன் தலைவரானார். 37.08.2005இல் வீரப்ப மொய்லி தலைமையில் இரண்டாவது பணியாண்மைச் சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்டது.  

மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், தேர்வாணையம் முதலான தன்னாட்சி அமைப்புகள் தத்தம் அதிகார வரம்பிற்குட்பட் பணிகளில் சீர்திருத்தம் காணவும் தனித்தனிச் சீர்திருத்த ஆணையம் அமைக்கலாம்.  

சிறைத்துறைச் சீர்திருத்த ஆணையம், காவல் துறைச் சீர்திருத்த ஆணையம் எனத் தனித்தனியே துறைகளின் பணிகளை மேம்படுத்துவதற்காகவும் பணியாண்மைச் சீர்திருத்த ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.
806. Administrative Remedies      பணியாண்மைத் தீர்வுகள்  

நிறுவனம், வாரியம், முகவாண்மை, ஆணையம் முதலியவற்றால் வழங்கப்படும் நீதித்துறை சாராத பணியாண்மை முறையிலான தீர்வு பணியாண்மைத் தீர்வாகும்.
807. Administrative Tribunal        பணியாண்மைத் தீர்ப்பாயம்  

பணியாண்மைத் தீர்ப்பாயம் என்பது நீதித்துறை அதிகாரங்களை வழங்கிச் சட்டப்படி அமைக்கப்படும் பணியாளர்களுக்குத் தீர்வு வழங்கும் அமைப்பாகும்.  

எல்லாப் பொருண்மைகளிலும் நீதிமன்றத்திற்குப் பொது அதிகார வரம்பு உள்ளது.

தீர்ப்பாயம் பணித் தொகுதிச் சிக்கல்களைக் கையாளுகிறது.

பணியாண்மைத் தீர்ப்பாயம் குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கு வரம்பிற்குட்பட்ட அதிகாரம் உடையது.
808. Administrator (Also Estate Trustee)    பணியாட்சி அலுவலர்  

நிருவாக அலுவலர் சட்ட உரித்தாளர் உரியர்   இறுதிமுறி இல்லாமல் இறந்த ஒருவரின் அல்லது இறுதிமுறியில் பெயர் குறிப்பிடப்பட்ட நிறைவேற்றுபவரின் சொத்துகளை பணியாட்சி /நிருவாகம் செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர்.  

பணியாட்சி /நிருவாக அலுவலர் இப்போது (காலமானவரின்) உடைமைப் பொறுப்பாளர் / சட்ட உரித்தாளர் என அழைக்கப்படுகிறார்.  

இறப்பிற்குப் பின் முடிவெடுப்பதைத் தத்துவமாகக் கருதித் தத்துவகாரர் என்று அழைத்துள்ளனர்.
809. Admiralty Actionகடலாண்மை நடவடிக்கை

கடல் எல்லை,

பன்னாட்டு நீர்ப்பயன்பாடு,

கப்பல் பயணம், மீன்பிடித்தல் முதலியவற்றைக் கையாளும் பன்னாட்டுச் சட்டத்தின் கிளை கடற்சட்டமாகும். இது தொடர்பான நடவடிக்கைகள் கடலாண்மை நடவடிக்கை ஆகும்.
810. Admiralty Court      கடலாண்மை தீர்ப்பாயம்  

கடலாண்மை நீதிமன்றம் என்பது கடல்சார் தீர்ப்பாயம்/ நீதிமன்றம் (maritime court)என்றும் அழைக்கப்படுகிறது.  

கடற்சட்டம், கடல், கப்பல், கடற்சட்டம் தொடர்பான வழக்குகள் மீதான பணிவரம்பு கொண்ட தீர்ப்பாயம் ஆகும்.

முன்பு நீதிமன்ற அமைப்பின் தனிப்பகுதியாகவே கடல்சார் தீர்ப்பாயங்கள் இருந்தன.  அப்பொழுது நீதிமன்றம் எனக் குறிப்பது பொருத்தமாக இருந்தது. இப்போது, நீதிமன்றம் எனப் பெயரில் இருந்தாலும் பணியமைப்பு அடிப்படையில் தீர்ப்பாயம் என்பது சாலப் பொருத்தமாக அமையும்.