“நீராருங்கடலுடுத்த” என்னும் மனோண்மணியம் சுந்தரனாரின் பாடல் அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே! தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை எதிர்ப்பவர்கள் அறியாமையால் இதனைத் திராவிட வாழ்த்தாகப் புரிந்து கொண்டு எதிர்க்கிறார்கள். இதன் மூலம் போலித் தமிழ்த்தேசியவாதிகள் ஆரியத்திற்குத் துணைநிற்கிறார்கள். அதே நேரம் ஆளுநர் இரவி போன்ற பா.ச.க. தலைவர்களுக்குத் திராவிடம் என்ற சொல்லே எட்டிக்காயாக இருப்பதால் இதனை எதிர்க்கிறார்கள்.

பாசக தலைவர் இரவி “திராவிட நல் திருநாடு” என்னும் தொடரை நீக்கியமை குறித்து ஏதும் கண்டிக்கவில்லையே அல்லது மறுப்பு தெரிவிக்கவில்லையே என நாளும் சிலர் கேட்டு வருகின்றனர். பாசக தலைவர் இரவிக்கு மறுப்பாகவும் கண்டிப்பாகவும் முதல்வர் தாலின் முதலான அமைச்சர் பெருமக்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்து விட்டனர். இனி நாம் கூற என்ன இருக்கிறது என்று கருதி அமைதி காத்தோம். பின் கருத்தை மாற்றிக் கொண்டோம். திராவிடத்திற்கு அஞ்சும் பாசகவினருக்கு மறுமொழி அளிக்கா விட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை எதிர்க்கும் அறியாப் பிள்ளைகளுக்கு விளக்கம் தரவேண்டியது கடமை அல்லவா? எனவே விளக்க வந்துள்ளோம்.

தமிழ்த்தேசியம் என்னும் போர்வையில் திராவிடத்தைப் பழிப்போர் “நீராரும் கடலுடுத்த” பாடலைத் திராவிடத் தாய் வாழ்த்து என்றும் தமிழ்த்தாய் வாழ்த்து அல்ல என்றும் தவறாகப் பரப்புகிறார்கள்நாம் தமிழர் சீமான் உண்மையை உணர்ந்தால் தன் தவறான கருத்தைத் திருத்திக் கொள்பவர். அவருக்காகவும் தமிழன்பர்களுக்காகவும் பிறருக்காகவும் இப்பாடலை விளக்க வேண்டியது நம் கடமையாகிறது.

தமிழ்த்தாயாகப் பாடப்படும் “நீராருங் கடலுடுத்த” பாடல், 1891-இல் சுந்தரனார் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில்  இடம் பெற்றுள்ளது.

‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ என்னும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியே இது. நம்மைப்போல் தமிழ்த்தாய் என அவர் கூறவில்லை.  தமிழைத் தெய்வமாகப் போற்றிப் பாடியுள்ளார். இஃது எங்ஙனம் திராவிட வாழ்த்துப் பாடலாகும்?

மிகச் சிறந்த உயர்ந்த பாடல் இந்தப் பாயிரம்.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே (1)

என்று நில மடந்தையைக் குறிப்பிட்டு அதன் முகமாகப் பரதக் கண்டத்தை விளக்கி அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவைக் குறிப்பிடுகிறார். தக்கணம் எனக் குறிக்கும் பொழுதே நாம் நினைக்கும் திராவிட நாடு வந்து விடுகிறது. அந்நெற்றியின் பொட்டாகத் ‘திராவிட நல் திருநாடு’ என்கிறார். திராவிட நாட்டைக் குறிப்பிட்டு மீண்டும் திராவிட நாடு என்பாரா? தெக்கணத்தில் சிறந்த திராவிட நல் திருநாடு என்பது தென்னிந்தியாவில் சிறந்து திகழும் தமிழ்நாடே! அப்பொட்டின் நறுமணமாக எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கைத்தானே குறிப்பிட்டு வாழ்த்துகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி ஆகிய ஐம்மொழி நாடுகளும், வடவரால் முறையே திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் ஆகிய பஞ்ச திராவிடம் என அழைக்கப்பெற்றன. கூர்ச்சரம் என்பது இன்றைய குசராத்தே. குசராத்தியர் தமிழ்க்குடும்ப மொழியினரே. இதன்படி நரேந்திரரும் அமித்து சாவும் தமிழ்க்குடும்ப மொழியினரே. எனவேதான் அவர்களை அறியாமல் உள்ளுணர்வால் அவ்வப்பொழுது தமிழின் உயர்வைப் பேசுகின்றனர்.

12-ஆம் நூற்றாண்டில் காசுமீரத்தில் கல்ஃகானர்  இராசதரங்கிணி என்னும் நூலை எழுதியுள்ளார். அதில் மேற்குறித்த ஐந்து பகுதிகளில் உள்ள பிராமணர்களைத்  திராவிடப் பிராமணர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் தமிழைத் திராவிடம் எனக் குறித்துள்ளதைக் காணலாம்.

“திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்” என்கிறார் அறிஞர் ந.சி.கந்தையா, தமிழகம் என்னும் நூலி்ல். “தமிழ் என்னும் சொல் தோன்றிய காலத்தது; திராவிடம் என்பது பிந்தையது” என்கிறார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 279). எனவே, முன்னால் இருந்த தமிழைப் பின்னால் வந்த திராவிடம் குறித்ததில் வியப்பில்லை. திராவிடம் தமிழைக் குறிக்கும் வரலாறு பல கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன. திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்!(இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல நாள் 03.04.2016), திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்!(கொளத்தூர் மணி, பெரியார் முழக்கம்,08.04.201), வி.இ.குகநாதன்- முகநூல், 02.04.2021; நமது வலைப்பூ, 13.04.2021, தோழர் தியாகு தாழி மடல் 175 முதலியவற்றிலும் காணலாம். எனவே, அவற்றை இங்கே விவரிக்கவில்லை. ஆனால் இவற்றின் அடிப்படையில் மனோண்மணீயம் குறிப்பிடும் திராவிடம் தமிழே என்பதை உணரலாம்.

எனவே, இனி நாம் பிற பாடலடிகளைப் பார்க்கலாம்.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும் துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.” (2)

பல உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அளித்தாலும் பரம்பொருள் தன் நிலையிலிருந்து குன்றாமல் உள்ளது. அதுபோல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு எனப் பல மொழிகள் தமிழிலிருந்து தோன்றினாலும் தன் சீரிளமை குன்றாமல் தமிழ் உள்ளது; ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாமல் உள்ளது என வியக்கிறார். வியந்து தமிழ்த் தெய்வத்தைப் போற்றுகிறார். இங்கே எங்கே திராவிட வாழ்த்து வந்தது?

கடல் குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்

தொடுகடலை உனக்குவமை சொல்லுவதும் புகழாமே. (1)

ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்

அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. (2)

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்

முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே. (3)

இவற்றின் பொருள் வருமாறு

கடலையே குடித்த ஆற்றல் மிக்கவர் குடமுனிவர் அகத்தியர். அத்தகு திறமை வாய்ந்த அகத்தியரே தமிழை அறிய விரும்பி் தமக்குக் குருவாக இறைவனை நாடினார். உன்னை அறிய விரும்பிய அகத்தியர் குடித்த கடலை உனக்கு எப்படி உவமையாகச் சொல்ல இயலும்? அஃது உனக்குப் புகழாகாதே!

சிவபெருமான் எழுதிக்கொடுத்த (”கொங்குதேர் வாழ்க்கை” எனத்தொடங்கும்) பாடலில் தமிழ்ப் புலவராகிய நக்கீரர் பிழை கண்டு இறைவனிடம் வினவினார்; அதற்கு விடையிறுக்க இயலாமல் இறைவனே விழித்தார். இறைவனாலே உணரப்படாத உனதிலக்கணத்தின் சிறப்பையும் அதன் அற்புதத்தையும் தமிழே எப்படிப் புகழ்வது!

ஆரியம் வரும் முன்பே உலகம் முழுதும் இருந்த மொழி தமிழே என வாழ்த்தும் பொழுது இது தமிழ் வாழ்த்துப்பாடலா அன்றி திராவிட வாழ்த்துப்பாடலா என்பதை அறிவுள்ளோர் சிந்திக்க வேண்டும்

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு

காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. (04)

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்

உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே. (05)

இவற்றின் பொருள் வருமாறு:

சைவர்களுக்கும் சமணர்களுக்கும் இடையே அனல்வாதம் புனல்வாதம் எனச் சமயப் போர் நடைபெற்றது. அப்பொழுது  சைவத்தமிழ் பனுவல்களும் பிறமொழி சமணப் பனுவல்களும் வையை ஆற்றில் விடப்பட்டன. சமற்கிருத நூலாகிய அத்தி நாத்தி  எழுதப்பட்ட ஏடு, வையை ஆற்றின் நீரோட்டத்தை எதிர் கொள்ள முடியாமல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தமிழ்ப் பனுவல்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் சென்று கரையை அடைந்தன. இந்நிகழ்வு தமிழானது வையை ஆற்றை மட்டும் எதிர்கொள்ளவில்லை. காலம் என்னும் ஆற்றையும் எதிரேறி பன்னேடுங்காலம் கன்னித்தமிழாய் நடைபோடும் என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது என்பதை விளக்குகிறது.

 அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபெருமான் கடையூழிக்காலத்தில் தன் பணியின் பொழுது ஏற்படும் களைப்பைப் போக்குவதற்குத் தமிழ்ப் பனுவலாம் திருவாசகத்தைத் தானே தன் கைப்பட ஒரு படி எடுத்துக்கொண்டார். அப்படி என்றால் தமிழே உன் சிறப்பை எவ்வாறு புகழ்வது!

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை

மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. (06)

சங்கக்காலப் புலவர் அவையின் சங்கப் பலகை தகுதியுடைய நூல்களை மட்டும் ஏற்கும். பிறவற்றைப் புறந் தள்ளும். எனவே, தகுதியுடைய நூல்களை மட்டுமே தமிழ் கொண்டுள்ளது என்னும் சிறப்பை உடையதன்றோ!

வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்

கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே. (07)

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். (08)

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்

வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்? (09)

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே. (10)

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்

உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி? (11)

மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.(12)

வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் அறிவில்லாவரே எனத் தமிழின் உயர்வைச் சிறப்பிக்கிறாரே அன்றித் திராவிடத்தின் உயர்வை அல்ல! பத்துப்பாட்டில் மனம் பற்றியவர்கள் எள்ளளவும் இலக்கணச் சிறப்பு இல்லா ஆரிய மொழிமீது பற்றுக்கொள்வார்களோ? உலகப்பொது அற நூலாம் திருக்குறளை உணர்ந்தவர்கள் ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் ஆரிய மனு நூலை ஏற்பரோ? என்றெல்லாம் கேட்கிறாரே! இதை அறிந்தவர்கள் இதனைத் திராவிட வாழ்த்தாகக் கூறும் பே்தையராக இருப்பார்களா?

எனவாங்கு,

நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்

பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்

பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்

நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்

அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்

கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்

ஆயினும் நீயே தாயெனும் தன்மையின்

மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி

உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்

வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு

ஒள்ளிய சிறுவிர லணியாக்

கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்

அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே

சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய்- நமையுமிந்த

நாடகமே செய்ய நயந்தால் அதற்கிசைய

ஆடுவம்வா நாணம் அவம்.

நீயே தாய் எனப் போற்றும் இப்பாயிரத்தை அறிந்தவர்கள் இதனைத் திராவிட வாழ்த்தாகக் கூறும் அறியாமையில் மூழ்குவரோ? உண்மையான முழுமையான தமிழ்த்தாய் என்பதைத் தெளிவார்களா?

தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்ற முழுப்பாடல்களையும் பார்த்து விட்டோம். தமிழைக் குறிக்கும் திராவிட நல் திருநாடு என்னும் தொடர் தவிர எங்கேனும் திராவிடத்தை வாழ்த்தியோ போற்றியோ இயல்பாகவோ ஏதும் குறிப்பு உள்ளதா? முழுக்க முழுக்கத் தமிழ்த்தாயைப் போற்றி வாழ்த்தத்தானே செய்துள்ளார் சுந்தரனார். தலைப்பே முதலில் குறிப்பிட்டவாறு தமிழ்த்தெய்வ வணக்கம்தானே!

எனவே, நீராருங் கடலுடுத்த பாடலை நீக்க வேண்டும் என்று யாரும் முழங்கக் கூடாது. அவ்வாறு முழங்குவோர் வாய்க்குப் பூட்டுப் போட வேண்டும். “ஆட்சிக்கு வந்தால் நீராருங் கடலுடுத்த பாடலை நீக்குவோம்” என்போர் யாரும் ஆட்சிக்கு வரவும் தேவையில்லை!