குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்
- இலக்குவனார் திருவள்ளுவன்
(1/5, 2/5, 3/5 ஆகியவற்றின் தொடர்ச்சி. தொடர்ச்சிப் பகுதிகளை 4/5, 5/5 ஆகியவற்றில் காண்க.)
66.முல்லை
முல்லைப்பூ காட்டுப் பூனை சிரிப்பது போன்று தோற்றமளிக்கும்.
‘வெருக்குப் பல்லுருவின் முல்லை’
கொல்லனழிசியார்: குறுந்தொகை: 240:3
‘முல்லை
வெருகு சிரித்தன்ன’
ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்தொகை: 22
முல்லை அரும்புகள் பற்களைப்போல் தோற்றமளிக்கும்.
‘பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கு எயிறுஆக”’
ஒக்கூர்மாசாத்தியார்: குறுந்தொகை: 126:3-4
‘முல்லை மென்கொடி
எயிறென முகைக்கும்’
ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்தொகை: 186:2-3
முல்லைப் பூ இரவிலே மணம் வீசும்.
‘எல்லுறு மௌவல் நாறும்’
பரணர்: குறுந்தொகை: 19:4
முல்லைப் பூவின் நிறம் தூய வெண்மை
‘பாசிலை முல்லை ஆசில் வான் பூ’
வாயிலான் தேவனார்: குறுந்தொகை: 108:3
(ஆசில்-குற்றமற்ற; தூய)
‘சிறுவெண்முகை’
கருவூர்ப் பவுத்திரனார்: குறுந்தொகை: 162:4
(நவ்வி – மான்; மறி – குட்டி; செவ்வி - (வரகு கதிர் ஈனும்) பருவம்)
67. மூங்கில் (வேரல், கழை, அமை, வேய்)
மூங்கில் வானளாவி வளரும்.
‘விசும்புதோய் பசுங்கழை’
விட்ட குதிரையார்: குறுந்தொகை: 74:2
68. யா
யா மரத்தின் கிளைகள் மெல்லியனவாய் இருக்கும். யா மரத்தின் பட்டை யானையின் உணவாகும். (பெண்யானையின் பசியைப் போக்குவதற்கு யா மரத்தின் பட்டையை ஆண் யானை உரித்துத் தரும்.)
‘பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினையாஅம் பொளிக்கும்’
பாலை பாடிய பெருங்கடுங்கோ: குறுந்தொகை: 37:3
யா மரத்தின் பட்டையை உரித்து யானை தின்னும்
‘களிறு(தன்
உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது)
நிலையுயர் யாஅம் தொலையக் குத்தி
வௌ்நார் கொண்டு கை ’
கடம்பனூர்ச் சாண்டிலியனார்:, குறுந்தொகை:367:4-7
யாஅமரம் உள்துளை இல்லாமலும் உறுதியாயும் இருக்கும்.
‘பொத்தில் காழ அத்த’
கடுகு பெருந் தேவனார், குறுந்தொகை:255:1
69. வரகு
வரகின் கதிர் விளையும் பருவத்தில் கதிர் தோன்றுவதற்கு முன்பு வளமுடைய மடல் தோன்றும்; இதன் இலை கருநிறமாய் இருக்கும். இதன் ஓர் இலையே பசியைப் போக்கும் அளவு பெரியதாய் இருக்கும். எனவே, மானினது குட்டி, இலையைத் தன் காலை உணவாய்க் கொள்ளும்.
‘செவ்விகொள் வரகின் செஞ்சுவல் கலித்த
கௌவை நாற்றின் காரிருள் ஓர் இலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும் ’
நாகம் போத்தனார்: குறுந்தொகை: 282:1-3
70. வாகை (உழிஞ்சில்)
நெற்றாக விளைந்த வாகை கடும் வெயிலால் வற்றலாக ஆகும்.
‘நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்’
ஔவையார்:குறுந்தொகை:39:3
வாகைப் பூவின் நீண்ட காம்புடைய மலர், மயிலின் அழகிய உச்சிக் கொண்டை போல் இருக்கும்.
‘குமரி வாகைக் கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியில் தோன்றும் ’
காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார்: குறுந்தொகை: 347:2-3
71. வாழை
வாழைக் குருத்து சுருண்டு இருக்கும்.
‘சோலைவாழைச் சுரி நுகும்பு’
பெருந்தோட் குறுஞ்சாத்தனார்: குறுந்தொகை:308:1
(சுரி நுகும்பு-சுருண்ட குருத்து)
72. வெட்சி
வெட்சியின் கொம்புகள் வளைந்து இருக்கும்.
‘முடச்சினை வெட்சி’
பாலைபாடிய பெருங்கடுங்கோ: குறுந்தொகை: 209:5
73. வேங்கை
வேங்கை மரத்தின் தாள்கள் வலிமை வாய்ந்ததாயும் கரிய நிறமாயும் இருக்கும்.
‘கருங்கால் வேங்கை’
கொல்லனிழிசி, குறுந்தொகை:26:1
நெடுவெண்ணிலவினார்: குறுந்தொகை:47:1
(வேங்கைப் பூக்கள் பாறையில் உதிர்ந்து இருப்பது இரவில் புலிக்குட்டிபோல் தோற்றமளிக்கும் என்றும் இவர் கூறுகிறார்.)
மேலும் பருத்தும் நீண்டும் இருக்கும்.
‘நெடுந்தாள் வேங்கை’
கோவேங்கைப் பெருங்கதவனார்: குறுந்தொகை: 134:3
‘நெரிதாள் வேங்கை’
கபிலர்: குறுந்தொகை: 208:2
74. வேம்பு
வேம்பின் தாள் கருப்பாகவும் பழம் ஒளிமிகுந்ததாகவும் (பளபளப்பாகவும்) இருக்கும்.
‘கருங்கால் வேம்பின் ஒண்பூ’
பரணர்: குறுந்தொகை: 24:1
வேப்பம்பழத்தைக் கிளி உண்ணும்.
‘கிள்ளை
வளைவாய் கொண்ட வேப்ப ஒண்பழம் ’
அள்ளூர் நன் முல்லையார்: குறுந்தொகை: 67:2
விலங்குகள்:
75. ஆமை
ஆமைக்குட்டித் தாய்முகம் நோக்கி வளரும் இயல்புடையது.(இதனை ‘யாமையிளம் பார்ப்புத் தாய்முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு’ என ஐங்குறுநூறும் கூறுகிறது.).
‘யாமைப் பார்ப்பின் அன்ன
காமம்’
கிளிமங்கலங்கிழார்: குறுந்தொகை: 152:4-5
76. எருமை
முறுக்கிய கொம்புகளையும் இருள் போன்ற நிறத்தையும் உடையது காட்டெருமை.
‘திரிமருப்பு எருமை இருள்நிற மைஆன்’
மதுரை மருதனிளநாகனார்: குறுந்தொகை: 279:1
77. எறும்பு
சிறியனவாயும் பலவாயும் உள்ள சுனைகள், எறும்பின் வளைகளைப்போல் இருக்கும்.
‘எறும்பி அளையிற் குறும்பல்சுனை’
ஓதலாந்தையார்:குறுந்தொகை:12:1
(எறும்பி அளை-எறும்பு வளை)
78. ஓந்தி
ஓந்தியின் முதுகில் ஈர்வாளின் வாய் (இரம்பத்தின் பற்கள்) போன்று முட்கள் இருக்கும்.
‘வேதின வெரிநின் ஓதி முது போத்து’
அள்ளூர் நன்முல்லையார்: குறுந்தொகை: 140:1
(வேதினம்-ஈர்வாய் (இரம்பம்)
ஓதி முது போத்து -முதிய ஆண் ஓந்தி)
79.குதிரை (மா)
குதிரை (கழுத்திலே கட்டப்பட்ட மணி விளரிப்பண் போல் ஓசை எழுப்பும் வகையில்) மிகுவிரைவாகச் செல்லும்.
‘சிறுநா ஒண்மணி விளரி ஆர்ப்பக்
கடுமா’
குன்றியனார்: குறுந்தொகை: 336:3-4
80. குரங்கு (கடுவன், மந்தி, முசு, மயிர்க்கலை,
ஊகம்)
கடுவன் (ஆண் குரங்கு) முள்போலும் கூரிய பற்களை உடையது.
‘முள்எயிற்றுத் துவர்வாய்
. . . .
கடுவன்’
கொல்லனிழிசி: குறுந்தொகை: 26:6-8)
ஆண்குரங்கு தாவுவதைத் தொழிலாக உடையது. இதன் கண் கரிய நிறமாய் இருக்கும்.
‘கருங்கண் தாக்கலை’
கடுந்தோட்கர வீரனார்: குறுந்தொகை:69:1
குரங்கின் உடல் முழுவதும் முடியாக இருக்கும்.
‘மயிர்க் கலை’
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்: குறுந்தொகை: 90:3-4
(ஒருவகை)ஆண்குரங்கின் முகம் கரிய மையைத்தோய்த்தாற் போன்று கரியதாய் இருக்கும்.
‘மைபட்டன்ன மா முக முசுக்கலை’
கபிலர்: குறுந்தொகை: 121:2
குரங்கு மழைக்கு வருந்தும்; மலையில் வளரும் மிளகுத்தளிரைத் தின்னும்.
‘கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறியருந்து குரங்கு’
கபிலர்: குறுந்தொகை:228:1-2
71. செந்நாய்
செந்நாய் வேட்டையாடி உயிர் வாழும்.
‘வேட்டச் செந்நாய்’
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை: 56:1
செந்நாயின் கண் பச்சையாய் இருக்கும்.
‘பைங்கண் செந்நாய்’
மதுரைப் பெருங்கொல்லனார்: குறுந்தொகை: 141:6
82. தேரை
தேரையின் வாய்கள் பிளவுபட்டிருக்கும்.
‘பகுவாய்த்தேரை’
அரிசில்கிழார்: குறுந்தொகை: 193:2
83. நண்டு
பொன்னிறமான வரிகளை உடையது நண்டு.
‘பொன்வரி அலவன் ’
அம்மூவனார்: குறுந்தொகை: 303:7
84.பசு (ஆ, ஆன், கறவை, செருத்தல்)
பசுக்கள் தாளியறுகின் குளிர்ந்த கொடியை மேயும்
‘தாளித் தண்பவர் நாள் ஆமேயும்’
காவன்முல்லைப் பூதனார்: குறுந்தொகை: 104:3
85. பல்லி
பல்லியின் கால்கள் சிவப்பாக இருக்கும்.
‘செங்காற்பல்லி
(பாலைபாடிய பெருங்கடுங்கோ: குறுந்தொகை: 16:4)
86.பாம்பு (அரா, அரவு)
சிறுவௌ்ளைப் பாம்பிற்கு (குட்டிக்கு) அழகிய கோடுகள் இருக்கும்.
‘சிறு வௌ்ளரவின் அவ்வரிக் குருளை’
சத்திநாதனார்: குறுந்தொகை: 11:1
87. பாம்பு தன் தோலை உரித்துக் கொள்ளும்.
‘பாம்பின் உரி நிமிர்ந்தன்ன’
மதுரைச் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:1-2
உயர்ந்த மலைகளில் தங்கியுள்ள பாம்புகள் இடியோசை உணர்ந்து அதிரும்.
‘நெடுவரைமருங்கின் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇ’
ஔவையார்: குறுந்தொகை: 158:1-2
பாம்பின் உடலில் புள்ளிகளும் கோடுகளும் இருக்கும். பாம்பு சினத்துடன் தோற்றமளிக்கும்.
‘பொறிவரி வெஞ்சின அரவு’
பூரம்புலவனார்: குறுந்தொகை:190:3-4
88. புலி
புலி வலிமை வாய்ந்தது.
‘வயப்புலி’
மதுரைக்கதக்கண்ணனார்: குறுந்தொகை: 88:2
புலியின் கை (முன்னங்கால்) சிறியதாய் இருக்கும்
‘குறுங்கை இரும்புலி’
மதுரைப் பெருங்கொல்லனார்: குறுந்தொகை: 141:5
புலியின் உடலில் வளைந்த கோடுகள் இருக்கும்.
‘கொடுவரி இரும்புலி’
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்:
குறுந்தொகை:215:6
89. மான் (இரலை, உழை, வருடைமான், கலை, நவ்வி, மரை)
மான் கதிர்களை உண்ணும்
‘வரகின்
இரலை மேய்ந்தகுறைத்தலைப் பாவை
இருவி சேர்’
(பாவை-மான் மேய்ந்து எஞ்சிய தாள்; இருவி-கதிர் கொய்து எஞ்சிய தட்டை. ஆண்மான் மேய்ந்தமையால் குறைந்த தாளையுடைய கதிர் அரிந்த தாள் எனப் பொருளாகும்)
ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்தொகை: 220:2
90. மரையா
மரையா என்னும் ஒருவகை காட்டு விலங்கு மென்மையாய் நடக்கும்; இலைகளை விரும்பி உண்ணும்.
‘இலைகவர்பு
...............
மென்னடை மரையா’
கபிலர்: குறுந்தொகை: 115:3-5
No comments:
Post a Comment