Friday, December 31, 2010

science in kurunthogai 3/5: Kurunthogai kuurum ariviyal seydhi 3/5

குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்


- இலக்குவனார் திருவள்ளுவன்


(1/5, 2/5 ஆகியவற்றின் தொடர்ச்சி.

தொடர்ச்சிப் பகுதிகளை 2/5, 3/5, 4/5, 5/5 ஆகியவற்றில் காண்க.)

41. நரந்தம்

நரந்தம் மணம் வீசும்

நரந்தம் நாறும்
பனம்பாரனார்: குறுந்தொகை:52:3

42. நெய்தல்

நெய்தல் பூக்கள் பசுமையான இலைகளுக்கு மேலே உயர்ந்து நிற்கும் திரண்ட தாளையுடையன.

பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
கயமனார்: குறுந்தொகை: 9:4

நெய்தல் பூ  நீலநிறமாய் இருக்கும்.

மணிப் பூ
நெய்தற் கார்க்கியர்:குறுந்தொகை:55:1

நெய்தற் பூவில் தேன் மணக்கும்.

கள்நாறு நெய்தல்
பெரும்பாக்கனார்: குறுந்தொகை:296:4
43. நெருஞ்சி

நெருஞ்சி சிறியதாக இருக்கும். பூ  மலர்ந்த பின்பு முள் தோன்றும்.

                சிறியிலை நெருஞ்சிக்
கட்குஇன் புதுமலர்முள் பயந்தாஅங்கு
அள்ளூர் நன் முல்லையார்: குறுந்தொகை: 202:2-3

44. நெல்லி

நெல்லிக்கனி இனிய புளிப்புச் சுவை உடையது.
நெல்லியம் புளி
புலவர் பெயர் தெரியவில்லை: குறுந்தொகை: 201:4

தீம்புளி நெல்லி
மதுரைக் கண்டரதத்தனார்: குறுந்தொகை: 317:2

நெல்லிக்கனிக்கு நீர் வேட்கையைத் தணிக்கும் தன்மை உண்டு. வறட்சிக் காலத்தில், பாலை நிலம் வழியே செல்வோருக்கு நீர் வேட்கை ஏற்படும் பொழுது அதனைத் தணிக்க நெல்லிக்கனி உதவும். எனவே, அறச் செயல்புரியும் நெல்லிக்கனி எனக் குறிக்கப் பெறும்.

அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
பாலைபாடிய பெருங்கடுங்கோ: குறுந்தொகை: 209:1

மான்கூட்டம் நெல்லிக்கனியைத் தின்னும்

நெல்லி
                           .மரையினம் ஆரும்
மாயெண்டனார்: குறுந்தொகை: 235:2-3

இனிய சுவை வேண்டி, நெல்லிக்கனியைத் தின்ற பின் நீர் பருகுவர்.
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணல்
பாலைபாடிய பெருங்கடுங்கோ: குறுந்தொகை: 262:4-5
45. நொச்சி

நொச்சி இலை மயிலின் காலடி விரல்களும் உள்ளங்காலும் போலும் தோன்றும்; பூங்கொத்தும் பூவும்   கரிய நிறமாய் இருக்கும்.

மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூ
கொல்லன் அழிசி: குறுந்தொகை: 138:3-5
46. பகன்றை
பகன்றை, கஞ்சியில் தோய்த்து முறுக்கித் தண்ணீரில் போடப்பட்டாற் போன்று முறுக்குடன் இருக்கும்.

நலத்தகைப் புலத்தி பசைதோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கி தண்கயத்திட்ட
நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
கழார்க் கீரனெயிற்றியனார்: குறுந்தொகை: 330:1-3

பகன்றையின் இலைகள் பெரியன;  வெண்ணிறம் மிக்கன; இனிய கடுப்புடைய கள்ளைப் போன்று நறுமணமின்றி இருக்கும்.

 பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
 இன்கடுங் கள்ளின் மணம்இல கமழும்
கழார்க் கீரனெயிற்றியனார்:குறுந்தொகை:330:4-5


47. பருத்தி (பரீஇ)
தினைப்புலத்தின் இடையிடையே பருத்திவிதைப்பர்.

பரீஇ வித்திய ஏனல்
மள்ளனார்:குறுந்தொகை:72:4
(பரீஇபருத்தி; ஏனல்  தினை)

48. பலா

ஒருவகைப்  பலாவின் வேர்களிலேயே குலைகள் இருக்கும்.

வேர்க்கோட்பலா
(கபிலர்:  குறுந்தொகை: 18:1)

மற்றொரு வகைப் பலவின் கிளைகள் தோறும் இனிய பழங்கள் தொங்கும்.

 சினைதொறும்
 தீம்பழம் தூங்கும் பலவு
வெண்பூதனார்:  குறுந்தொகை: 83: 2–3
பலா பூக்காமல் காய்க்கும்; ஆனால் பூ மணத்துடன் இருக்கும்.

 பூநாறு பலவுக் கனி
மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்:  குறுந்தொகை: 90:4



49. பனை (பெண்ணை, போந்தை)

இளம்பனைகளில் மடல் தாழ்ந்து இருக்கும்.
மடல்தாழ் பெண்ணை
வடம வண்ணக்கனார்: குறுந்தொகை: 81:7
கரிய பனையின் குருத்தால்  பூக்கூடை  செய்வர். (மாலையில் பிச்சி அரும்புகளை இட்டு மூடி மறுநாள் காலை திறந்தால்,  பூவும் கூடையும் நறுமணமும் குளுமையும் கொண்டு இருக்கும். குளிர் கலன் தேவையில்லை.)
இரும்பனம் பசுங்குடை
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை: 168:2
பனைமடலிலே அன்றில் பறவை வாழும்.
பெண்ணை மடல்சேர் வாழ்க்கை அன்றில்
உலோச்சனார்: குறுந்தொகை: 177:3

பனைமரத்தின் முதிர்ந்த பெரிய மடலால் குதிரை செய்வர். (தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்குத் தன்னைத்துன்புறுத்திப் பெண் வீட்டாரை வலியுறுத்துவதற்கு மடலேறுதல் என்னும் பழக்கம் உண்டு.)

விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
மடல் பாடிய மாதங்கீரனார்: குறுந்தொகை: 182:1

பனை மரத்தின் அடிப்பகுதி குடமுழா என்னும் இசைக்கருவி போன்று இருக்கும்.

 முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணை
குன்றியனார், குறுந்தொகை:301:1
(அரைய-அடிப்பகுதி;  தடவு-வளைந்த)

மணலில்  பசுமையாயும் திரட்சியாயும் தழைத்துப் பனை வளரும்.

வெண்மணல் பொதுளிய பைங்கால் கருக்கின்
கொம்மைப் போந்தை
குடவாயில் கீரத்தனார்: குறுந்தொகை: 281:1-2
(பொதுளுதல்-தழைத்தல்; கொம்மை-திரட்சி)
மணற் பரப்பில் வளருவதால்.கடற்கரையில் கடுங்காற்று அடிப்பின் பனைமரத்தை மறைக்கும் வண்ணம் மணலைக் குவித்து விடும். கடுங்காற்றின் விளைவை விளக்கப் பனை ஓர் அளவாகக் கூறப்பட்டுள்ளது.

பனைத்தலைக் கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பை
விற்றூற்று மூதெயினனார்: குறுந்தொகை: 372:1-2

பனைமரம் நீண்டும் கரியதாயும் இருக்கும்.
நீடு இரும் பெண்ணை
உறை பல்காயனார்: குறுந்தொகை: 374:6



50. பாதிரி
பாதிரிப் பூ வளைந்து இருக்கும்; வேனில் காலத்தில் மலரும்.

வேனில் பாதிரிக் கூன்மலர்
கோப்பெருஞ்சோழன்: குறுந்தொகை: 147:1


51. பிச்சி (பித்திகம்)

பிச்சி மழைக்காலத்தில் மலரும்.

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
சிறைக்குடி யாந்தையார்: குறுந்தொகை: 222:5

52. பிடவம்
கார்கால மழைப் பொழுதில் பிடவம் பூக்கும்
காலமாரி பெய்த்தென
.....பிடவும் பூத்தன
இடைக்காடனார்: குறுந்தொகை: 251:2-3


53.  பிரம்பு

பிரப்பங் கொடி ஒன்றுடன் ஒன்று பிணங்கி இருக்கும். அதன் பழத்தில் வரிகள் இருக்கும். இக்கனியைக் கெண்டை மீன் உண்ணும்

              பிரம்பின் வரிப்புற விளை கனி
குண்டுநீர்இலஞ்சிக் கெண்டை கதூஉம்
ஔவையார்: குறுந்தொகை: 91:1-2
(குண்டு நீர் இலஞ்சி-ஆழ்ந்த நீர் நிலை; கதூஉம் - கவ்வும்)

54. பீரம் (பீர்க்கம் )

கார்ப்பருவத்தில் (மழைக்காலத்தில்) பீர்க்கம் பூக்கும்.

மாரிப் பீரத்து அலர்
கோக்குள முற்றனார்: குறுந்தொகை: 98:5


55. புன்கு


புன்க மரத்தின்  பூக்கள் நெற்பொரி போல் இருக்கும்


நனைமுதிர் புன்கின்  பூத்தாழ் வெண்மணல்
........................................................
செந்நெல் வான்பொரி சிதறியன்ன
கோப்பெருஞ் சோழன்: குறுந்தொகை: 53:2-4

பொரிப்பூம் புன்கு
மிளைகிழார் நல்வேட்டனார்: குறுந்தொகை: 341:2




56. புன்னை

குருகுகள் தங்குவதற்கேற்ப இனிய நிழல் தருவது புன்னை.

வதிகுருகு உறங்கும் இன்னிழல் புன்னை
நரிவெரூஉத்தலையார்: குறுந்தொகை: 5:2
புன்னை
அலங்குசினை இருந்த அஞ்சிறை நாரை
பெரும்பாக்கனார்: குறுந்தொகை: 296:2


புன்னை மரத்தின் கொம்புகள் கரிய நிறமாய் இருக்கும்.

கருங்கோட்டுப் புன்னை
ஐயூர் முடவனார்: குறுந்தொகை: 123:3
புன்னையின் கொம்புகள் பெரியனவாய் இருக்கும்.

 புன்னை மாச்சினை
 உலோச்சனார்: குறுந்தொகை: 175:3


புன்னை மரத்தின் கிளைகள் நிலத்தைத் தொடுமாறு தாழ்ந்து இருக்கும்.  அயல் நாடுகளில்  இருந்து புதிதாய் வரும் நாரைகள் இக்கிளைகளில் தங்கும்.
             இவ்வாறு கூறுவதன் மூலம் வலசை அல்லது இடப்பெயர்வு (migration) பற்றிய அறிவியல் செய்தியை நன்கு உணர்ந்து இலக்கியங்களிலும் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் எனலாம். இதேபோல் குறுந்தொகை 5 ஆம் பாடலில், வதிகுருகு என வருவதால், இடம் பெயராமல் தம்நாட்டிலேயே இருக்கும் பறவைகளைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தனர் எனலாம்.

புன்னை நிலந்தோய் படுசினை
 வம்பநாரை சேக்கும்
நரிவெரூஉத் தலையார்: குறுந்தொகை: 236:4-5


புன்னை மரத்தில்  கண்ணுக்கினிமை தரும் வகையில் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப்  பூக்கும்.
இணரவிழ் புன்னை
வெண்மணிப்பூதியார்: குறுந்தொகை: 299:3
இன்னிணர்ப் புன்னை
அம்மூவனார்: குறுந்தொகை:303:6



தாழ்ந்து வளரும் இயல்பினது புன்னை

தாழ்ந்த புன்னை
சேந்தன் கீரனார்:  குறுந்தொகை: 311:5

மணம் மிக்கது புன்னைப் பூக்கள்
நறுவீ...புன்னை
அம்மூவனார்: குறுந்தொகை: 381:2

புன்னை மலர்கள் நன்கு விரிந்தும் பொன்னிறமாயும் இருக்கும்.
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னை
தும்பிசேர் கீரனார்: குறுந்தொகை: 320:6-7

57. புளி
தலைச்சூலுடைய மகளிர் புளிச்சுவையை விரும்புவர்.

 பசும்புளி வேட்கைக்
கடும்சூல் மகளிர்
கச்சிப்பேட்டு நன்னாகையார்: குறுந்தொகை: 287:4-5



58. மருதம்
மருதப் பூக்கள்  செந்நிறமாக இருக்கும்.

செவ்வீ  மருது
குன்றியனார்: குறுந்தொகை 50:2


59. மல்லிகை (குளவி)

மலைமல்லிகை இலைகள் பெரியனவாய்ப் பருத்து இருக்கும். (தினைப்புலத்தில் தாமே விளையும் காட்டுமல்லிகையையும் மரல் என்னும் கொடியையும் களை பறிப்பர்.)

பருஇலைக் குளவி(யொடு பசுமரல் கட்கும்)
கபிலர்: குறுந்தொகை: 100:2

60. மரல்

மரல் என்னும் ஒருவகைக் கொடி தினையின் இடையே தோன்றும். தினை நிலத்தில் இது களையாகும்.

ஐவனம் வித்தி
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
கபிலர்: குறுந்தொகை: 100:1-2


61. மாணை

மாணை என்னும் ஒருவகைக் காட்டுக் கொடி, பெரியதாய் இருக்கும்.

மாணை மாக் கொடி
பரணர்: குறுந்தொகை:36-1

62. மாம்பூ
மாம் பூவில்  தாதுக்கள் மிகுதியாக இருக்கும். எனவே, வண்டுகள் மிகுதியாக உண்டு மயங்கும்.
காமர் மாஅத்துத்  தாதுஅமர் பூவின்
வண்டுவீழ்பு அயரும்
அம்மூவனார்: குறுந்தொகை: 306:4-5


63. மிளகு (கறி)

மிளகுத் தளிரைக் குரங்கு தின்னும்

கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து குரங்கு
கபிலர்: குறுந்தொகை: 288:1-2




64. முண்டகம்

முண்டகத்திற்கு வளைந்த முட்கள் இருக்கும். இதன் பூ கரிய நிறமாய் இருக்கும்.
கூன்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
 குன்றியனார்: குறுந்தொகை: 51:1)

அணிலின் பல்லைப் போன்ற முட்களை உடையதாகவும் தாது முதிர்ந்தும் இருக்கும்.

அணில் பல்லன்ன கொங்குமுதிர் முண்டகம்
அம்மூவனார்: குறுந்தொகை: 49:1


65. முருக்கம்பூ

முருக்கம்பூ  சிவந்த நிறத்தில் இருக்கும்.

செம்பூ முருக்கு
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்: குறுந்தொகை: 156:2



No comments:

Post a Comment