குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்
- இலக்குவனார் திருவள்ளுவன்
(1/5 இன் தொடர்ச்சி. இதன்தொடர்ச்சிப் பகுதிகளை 3/5, 4/5, 5/5 ஆகியவற்றில் காண்க.)
21. கள்ளி
இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.
‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி’
வெண்பூதியார்: குறுந்தொகை:174:2
(நொடி - ஒலி)
கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.
‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு’
மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5
22. காஞ்சி
காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள் போல பூங்கொத்துகள் இருக்கும்.
‘பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
(உழவர் வாங்கிய) கமழ்பூ மென் கிளைக்
காஞ்சி’
ஓரம்போகியார்: குறுந்தொகை: 10:2-4 22.
.
23. காந்தள் (கோடல், தோன்றி)
காந்தள் பூக்கள் குருதி போன்று சிவப்பாகப் பூக்கும்; கொத்தாக இருக்கும்.
‘குருதிப் பூவின இலைக் காந்தள்’
திப்புத் தோளார் : குறுந்தொகை: 1-14
காந்தள், மலையைச் சுற்றி வேலிபோல் இயற்கையாய் வளரும்.
‘காந்தள் வேலி ஓங்குமலை’
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை : 76:1
‘காந்தள் வேலி’
குறுந்தொகை : 100:3
காந்தள் மலர் மலைமுழுவதும் மணம் வீசும் அளவு நறுமணம் மிக்கது.
‘சிலம்புடன் கமழும் அலங்குலை’
ஆசிரியர் பெருங்கண்ணனார்: குறுந்தொகை: 239:4
காந்தள் மலர் பல கோடுகள் உடைய பாம்பின் படம் சுருங்குவது போன்று இதழ் குவிந்து காட்சியளிக்கும். (கொண்டல் காற்றில் உதிர்ந்து விழும் இயல்புடையது.)
‘பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலின் தொலைந்த ஒண்செங் காந்தள்’
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்: குறுந்தொகை: 185:4-6
(செங்)காந்தள் ஒளி மிகுந்ததாயும் இதன் குவிந்தும் காணப்பெறும். சேவலின் கொண்டையைப் போல் இருக்கும்.
‘குவிஇணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள்’
மதுரைக் கண்ணனார்: குறுந்தொகை: 107:1-2
24. காயாம்
காயாம் கார்ப்பருவத்தில் மயிலின் கழுத்தைப் போல் பொலிவுடன் விளங்கும்; முதுவேனில் காலத்தில் வெப்பத்தால் வாடும்.
‘புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்’
ஔவையார்: குறுந்தொகை: 183:5-6
(எருத்து-கழுத்து)
25. குரவம்
குரவம் வேனிற்காலத்தில் பூக்கும் ; பல பூக்களாய் மலரும்
‘பல்வீ பட்ட பசுநனைக் குரவம்’
மிளைகிழார் நல்வேட்டனார்: குறுந்தொகை: 341:1
26. குவளை
அகலமும் ஆழமும் உள்ள சுனைகளில் குவளை மலரும்
‘அகல்வாய் குண்டுசுனைக்
குவளை ’
மோசி கீரனார்: குறுந்தொகை: 59:2-3
குவளையின் தாள் குறுகியது.
‘குவளைக்
குறுந்தாள் ’
பாண்டியன்பன்னாடு தந்தான்: குறுந்தொகை: 270:6-7
பெண்களின் அழகிய கண்கள் குவளைமலர்போன்று இருக்கும்.
‘குவளை அம்கண் ’
கபிலர்: குறுந்தொகை:13:5
குவளையின் இதழ்கள் மணம் மிக்கது.
‘நாறிதழ்க் குவளை ’
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை: 62:2
குவளையின் பூவிதழ் கரிய நிறமாய் இருக்கும்.
‘மாயிதழ்க் குவளை ’
பேயார்: குறுந்தொகை: 339:6
27. குறிஞ்சி
குறிஞ்சியின் கொம்பு கரிய நிறத்தில் இருக்கும்.
‘கருங்கோல் குறிஞ்சிப் பூ ’
தேவகுலத்தார்: குறுந்தொகை:3:3
28. குளவி
காட்டு மல்லிகை மிகுந்த மணம் உடையது.
‘குளவி நாறும் ’
மோசிகீரனார்: குறுந்தொகை: 59:3
29. கூதாளம்
கூதளங்கொடியின் தாள் குறுகியதாய் இருக்கும்.
‘குறுந்தாள் கூதள்’
பரணர்: குறுந்தொகை: 60:1
வெண்கூதாளத்து மலர்கள் உள் துளையுடையன.
‘வெண்கூதாளத்து அம்தூம்பு புதுமலர்’
நாகம் போத்தனார்: குறுந்தொகை: 282:6
30. கொன்றை
கொன்றைப் பூங்கொத்துகள் பொன்நிறத்தில் இருக்கும். (எனவே, கொன்றை மரத்தின் தழையிடையே நீண்ட பூங்கொத்துகள் தெரிவது, பெண்கள் கூந்தல் இடையிடையே பொன் அணிகலன் களைச் சூடியது போல் இருக்கும்.)
‘பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை ’
ஓதலாந்தையார்: குறுந்தொகை: 21:2-3
கொன்றை மரத்தின் அடிமரம் பருத்து இருக்கும்.
‘தடவுநிலைக் கொன்றை ’
கோவத்தனார்: குறுந்தொகை: 66:1
கொன்றைப்பூ தவளையின் வாய்போன்று உள்ள, (சதங்கை யிலுள்ள) பொற்காசு போல இருக்கும்.
‘தவளைவாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன போதீன் கொன்றை ’
இளங்கீரந்தையார்: குறுந்தொகை: 148:2-3
(கிண்கிணி-சதங்கை)
கார்காலத்தில் கொன்றைப் பூக்கள் பசுமையாக விளங்கும்.
‘கொன்றைஅம் பசும் வீ ’
ஔவையார்: குறுந்தொகை: 183:1
கொன்றையின் பூக்கள் பொலிவுமிகுந்து இருக்கும்.
‘கொன்றை ஒள் வீ ’
பேயனார்: குறுந்தொகை: 233:2
31. கோங்கு
கோங்கு மலரும் பருவத்தில் இலைகள் முழுமையும் உதிர்ந்து இருக்கும்ங் அரும்புகள் மார் நுனி போன்று அழகாய் மெல்லியனவாய் இருக்கும்.
‘இலையில் அம்சினை இன வண்டார்ப்ப
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கு ’
பார்காப்பார்: குறுந்தொகை: 254:1-2
32. சந்தனம்
சந்தனம் மணம்மிக்கது
‘நறையகில்’
பேயார்: குறுந்தொகை: 339:1
33. சேம்பு
சேம்பின் இலை யானையின் செவி போல் பெரியதாய் இருக்கும்.
‘சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மான ’
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:3-4
34. ஞாழல்
ஞாழலினது பூக்கள் வெண்சிறு கடுகைப் போன்று சிறியனவாய் இருக்கும்.
‘ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்’
குன்றியனார்: குறுந்தொகை: 50:1
ஞாழல் பசுமையான அரும்புகளையும் பல கொம்புகளையும் உடையது.
‘பசுநனை ஞாழல் பல்சினை ’
வடம வண்ணக்கனார்: குறுந்தொகை: 81:2
ஞாழலின் பூக்கள் சிறியனவாய் இருக்கும்.
‘சிறுவீ ’ ஞாழல் ’
பரணர்:குறுந்தொகை: 328:1
ஞாழல் பூக்கள் நறுமணம் மிக்கதாய் இருக்கும்
‘நறுவீ ஞாழல் ’
அம்மூவானர்: குறுந்தொகை: 318:2
அரும்புகள் முதிர்ந்த ஞாழலின் முட்டைபோன்று திரண்டு இருக்கும்.
‘நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள் வீ ’
அம்மூவனார்: குறுந்தொகை: 397:1
35. ஞெமை
ஞெமைமரத்தின் உச்சியில் பருந்து இருக்கும்.
‘ஞெமைத்தலை
ஊனசைஇ ஒரு பருந்து இருக்கும் ’
தேவனார்: குறுந்தொகை: 285:6
36. தடா மரம்
தடா மரத்தின் கிளைகள் உயர்ந்து இருக்கும்.
‘தடவின் ஓங்கு சினை ’
மதுரை மருதனிள நாகனார்: குறுந்தொகை 160:3
37. தாமரை
தாமரை மலர் பல இதழ்களை உடையது.
‘பல்லிதழ் ’
நரிவெரூஉத் தலையார்: குறுந்தொகை:5:5
ஆழமான நீர்நிலையில் தோன்றும் தாமரைமலரின் தாது சிறப்பானது
‘குண்டுநீர்த் தாமரைக் கொங்கு ’
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை: 300:3
38. தாழம் பூ
தாழம்பூவின் மடலுக்கு ஈர்வாள் (இரம்பம்) போன்ற விளிம்பு இருக்கும்.
‘வாள்போல் வாய கொடுமடல் தாழை ’
மாலைமாறனார்: குறுந்தொகை: 245:3
39. தாழை (கைதை)
தாழையின் பூ வௌ்ளையாய் இருக்கும்
‘வௌ்வீத் தாழை ’
அம்மூவனார்: குறுந்தொகை: 163:4
(வீ- பூ)
‘தாழை வெண் பூ
மதுரை எழுத்தாளனார் சேந்தம் பூதனார்: குறுந்தொகை: 226:5
தாழையின் இலை முள்ளுடையது.
‘ முள்ளிலைத்
தடவுநிலைத் தாழை ’
வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்: குறுந்தொகை: 219 :5-6
தாழைக்கு விழுதுகள் உண்டு; தாழையின் அரும்பு மடல் அவிழ்ந்து விரிந்து மலருவது, அன்னம் தன் சிறகைக் கோதுமிடத்து விரிகின்ற இறகுகள் போல இருக்கும்.
‘வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
குருகு உளர் இறகின் விரிபு தோடுஅவிழும் ’
செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்: குறுந்தொகை: 228:1-2
(வீழ்-விழுது; ஊழுறு-மலர்கள் விரிகின்ற; குருகு-அன்னம்; உளர்தல்-அலகாலே சிறகினைக் கோதுதல்)
குளிர்ந்த நீர்நிலைகளில்/ கரையோரங்களில் , கைதை(தாழை) வளரும்.
‘கடைகரைத் தாழை ’
அம்மூவனார்: குறுந்தொகை: 303:2
‘கைதைஅம் தண்புனல் ’
கணக்காயர் தத்தனார்: குறுந்தொகை: 304:7
‘தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி ’
அண்டர்மகன் குறுவழி : குறுந்தொகை : 345:5
40.தாளியறுகு
தாளிப்புல்லின் கொடி குளிர்ச்சியாய் இருக்கும்; இதனைப் பசுக்கள் உண்ணும்.
‘தாளித் தண்பவர் நாள்ஆமேயும் ’
காவன் முல்லைப்பூதனார்: குறுந்தொகை : 104:3
No comments:
Post a Comment