அன்றே சொன்னார்கள் 5 சேமக்குடுவையின் முன்னோடி
சேமக்குடுவையின் முன்னோடி
அறிவியல் ஆய்வகங்களில் ஒரு பொருளை அதன் வெப்பம் அல்லது குளிர்ச்சி மாறாமல் காப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. இதற்கு 1892இல் ஒரு தீர்வு கண்டார் அறிவியல் அறிஞர் சேம்சு திவியார் (Sir James Dewar). அவர் கண்டுபிடித்த வெப்பக்குடுவை (Thermos Flask) வெப்பத்தைப் பாதுகாக்கவும் குளிர்ச்சியைப் பாதுகாக்கவும் உதவியது. அறிவியல் உலகில் இப்படி ஒரு தேவை உள்ளதை அக்கால நம் நாட்டவர் உணர்ந்திருந்தார்கள் எனில் நம் முன்னோரைப் பின்பற்றி எளிதில் சேமக்கலனை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கலாம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ச்சியை அல்லது வெப்பத்தை உள்ளவாறே சேமிப்பதற்குச் சேமச்செப்பு என்னும் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளனர் பழந்தமிழர்கள்.
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பல் பெறீஇயரோ (குறுந்தொகை 277).
என்கிறார் ஓரில் பிச்சையார் என்னும் புலவர் பெருந்தகை.
அற்சிரம்-பனிக்காலம்; வெய்ய-விரும்பத்தக்க; பெறீஇயரோ-பெறுவாயாக; பனிக் காலத்தில் விரும்பிக் குடிக்கும் வகையில் வெப்ப நீரைச் சேமித்து வைக்கும் சேமச்செப்பினைப் பெறுவாயாக எனக் குறிப்பிடுகிறார். புலவரின் பெயர் தெரியாததால் இப்பாடலில் இடம் பெறும் ஓரில் பிச்சை என்னும் தொடரின் பெயரால் ஓரில் பிச்சையார் என அழைக்கப்படுகிறார். எனவே குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்பே புலவரும் சேமச் செப்பும் இருந்திருக்க வேண்டும் எனலாம்.
சேமக்குடுவையின் அமைப்பு முறை வெவ்வேறாக இருந்தாலும் அதன் நோக்கமும் பயனும் ஒன்றுதானே! அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களான நாமே அதை அறிந்து உணராதபொழுது அயலவர் எவ்வாறு உணர்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment