Thursday, January 13, 2011

andre' sonnaargal:அன்றே சொன்னார்கள் 6: சுற்றுப்புற அறிவியலின் முன்னோடி

சுற்றுப்புற அறிவியலின் முன்னோடி
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதும் வளர்ந்த துறை சுற்றுப்புற அறிவியல் அல்லது சூழமைவியல் எனலாம். இதன் அடிப்படையே மாசுக்கட்டுப்பாட்டினை ஏற்படுத்திச் சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்துவதுதான்.
பழந்தமிழர்கள் சுற்றுப்புறத் தூய்மையில் கருத்து செலுத்தி வந்துள்ளமைக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். புறந்தூய்மை நீரான்அமையும் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவதில் இருந்தே புறந்தூய்மை பற்றிய விழிப்புணர்வு அன்றே இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சுற்றுப்புறத் தூய்மையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு விழாவே எடுத்துள்ளார்கள் என்பது வியப்பிற்குரிய செய்தியன்றோ? ஆம்! போகித் திருநாளைத்தான் கூறுகிறேன். போகி என்பது போக்கியில் இருந்து வந்தது என்பர். பழைய ஆண்டைப் போக்கிப் புது ஆண்டை வரவேற்க ஆயத்தம் ஆவதாகச சிலர் கூறுவர். பயனற்றவற்றைக் கழித்துப் போக்கிப் புதுப்பூச்சு வீட்டிற்கு ஏற்றி மிகுதியான பயன்பாடில்லாமல் இருந்தவற்றைத் தூய்மையாக்கி,  வீட்டை மெழுகிப் புதிய நலமான சூழலை உருவாக்குவதற்கென்றே விழா எடுத்துக் குடும்பம் குடும்பமாகக் கூட்டம் கூட்டமாக அனைவரும் கொண்டாடியுள்ளனர் என்னும்பொழுது சுற்றுப்புறத் தூய்மையை மரபு வழியில் வழியாக வழியாகப் போற்றியுள்ளனர் என்பதுதானே உண்மை.
அறுவடைத் திருநாளைப் பல நாடுகள் கொண்டாடுகின்றன. ஆனால், அவை யாவும் முந்தைய நாளை அல்லது ஆண்டின் இறுதியை முதன்மையாகக் கருதி போகி அல்லது போக்கி போல் விழாவாகக் கொண்டாடவில்லை என்னும் பொழுதே நம் திருநாள் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
சுற்றுப்புறத் தூய்மையைக் கடைப்பிடிக்க ஏற்பட்ட, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், போகித் திருநாளில் இன்று அதன் அடிப்படை நோக்கத்திற்கு மாறாகத் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தும் பொருள்களை எரித்து வருவது முறையற்ற செயலன்றோ?
நம்மில் சிலரோ மாசுக் கட்டுப்பாட்டை மீறும் வகையில்தான் நச்சுப்புகை ஏற்படும் பொருள்களை எரியூட்டுகின்றனர். தண்டித்தேனும் இவர்களைத் திருத்த வேண்டும். ஆனால் ஈழத்திலோ நச்சுக்குண்டுகளால் நம் அருமைத் தமிழ் மக்களையல்லவா எரியூட்டிய கொடுமை நடந்துள்ளது. இவர்களுக்கு யார், எப்பொழுது  தண்டனை தரப்போகிறார்கள்? பழையன போக்கித் திருநாள் கொண்டாடும் பழைய இனத்தைப் போக்கியவர்கள் ஆட்சி உரிமையில் இருந்து போகப்போவது எந்நாளோ?
  • இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment