Thursday, February 17, 2011

Earn money to give! andre' sonnaargal 27 : அன்றே சொன்னார்கள் 27 ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்  

ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே!

                                                                                                                

natpu
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனத் தெய்வப்புலவரின் தமிழ்மறை (குறள் 247) உணர்த்துகிறது. எனினும் பொருளைத் திரட்டுவதில் தகாத முறை எதுவும் பின்பற்றக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி. தனி மனிதனாயினும்  அரசாயினும் முறைவழியே பொருள் ஈட்டி நல்வகையில் செலவழிக்க வேண்டும் என்று இக்காலத்தில் வலியுறுத்துவதை அன்றே நம்மவர்கள் வலியுறுத்தியமையால் வேறு சில பாடல்களையும் இன்றும் நாளையும் பார்ப்போம்.
       கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
      கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
      ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து
      . . . . . .       . . . . . . .        . . . . . . . .
      செயல் அருஞ் செய்வினை முற்றினம்                   (அகநானூறு 93 : 1-7)

இப்பாடலில், உறவினர்களின் துன்பங்களைப் போக்கி அவர்களைத் தாங்கிடவும் சுற்றத்தார் குறைகளைத் தீர்த்திடவும் உறவினர்  அல்லாதவரும் உறவினர்போல் பழகிடவும் ஆள்வினைக்கு வேண்டிய முயற்சியுடன் சிறந்து பொருள் ஈட்டும் அருஞ் செயலை ஊக்கத்துடனும் விருப்பத்துடனும் முடித்தோம் எனத் தலைவன் தனக்குள் எண்ணுவதாகக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியுள்ளார். 

(கேள்-நெருங்கிய உறவினர்; கிளைஞர்-தொலைநிலை சுற்றத்தார்; கேள்அல் கேளிர்- உறவினரல்லாத ஆனால் உறவினர் போல் கருதப்பட வேண்டிய அயலார்; கெழீஇயினர் ஒழுக- நெருங்கிப் பழகுதல்;) 

இப்பாடல் வரிகளைப்படிக்கும் நாம் முழுப்பாடலில் உள்ள வேறு சிறப்புகளையும் அறிதல் நன்று.

இப்பாடலில் 1) (ஆத்திமாலை அணிந்த) சோழனின் அறம் பொருந்திய நல்ல அவையை உடைய உறையூரைப் போன்ற சிறந்த அணிகலன்களைப் பெற்றதாகப் பெருமிதம் கொள்கிறான்.
      ஆரங்கண்ணி அடுபோர்ச் சோழர்
     அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன
     பெறல் அரு நன் கலம் எய்தி                 (அகநானூறு 93 : 4-6)

2) தலைவியின் நெற்றியும் (வேம்பு மாலை அணிந்த பாண்டியனின்) மதுரையில் உள்ள நாளங்காடியைப் போன்ற நறுமணம் மிக்கது எனப் பாராட்டுகிறான்.
     வாடா வேம்பின் வழுதி கூடல்
     நாள் அங்காடி நாறும் நறுநுதல்
     நீள் இருங் கூந்தல்                       (அகநானூறு 93 : 9-11)

3) அச்சம் தரும் யானையையும் பெரிய தேரையும் உடைய சேரனின் செல்வம்  மிகுந்த அகன்ற தலைநகரான கருவூர் என மகிழ்கிறான்.
           கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
          திரு மா வியல் நகர்க் கருவூர்
            (அகநானூறு 93 : 20-21)
அருமையான உவமைகள் மூலமாக மூவேந்தர் சிறப்புகளையும் நம்மால் ஒரே பாடலில் அறிய முடிகிறது.

(இப் பாடலில் வரும் வானளாவிய நகர் பற்றியும் நுரைப்படுக்கை பற்றியும்உள்ள செய்திகளைத் தொடர்புடைய தலைப்பில் பார்ப்போம்)
 
பாடலின் தொடக்கத்தில், கடமையை முடித்துத் திரும்பும் தலைவன் உழைப்பின் நோக்கத்தைக் கூறுவது மிக உயர்ந்ததல்லவா? இதன் வழியாகப்,  பொருள் ஈட்டுவது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிந்திராத அயலாருக்கும் என்பதே ஒவ்வொரு தமிழனின் அற நெறியாக உள்ளது என்பது நன்கு தெளிவாகிறதல்லவா? 

இன்றும் நாம், உயர்ந்த நோக்கத்துடன் பொருள் ஈட்டினால் உலகம் நம் குரல்களுக்குச் செவிமடுக்கும்! அடிமை விலங்கினை  அறுத்தெறியும்! அக்காலம் விரைவில் வருவதாக!
- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment