Thursday, February 17, 2011

the lazy - the poor: andre' sonnaargal 28: அன்றே சொன்னார்கள் - செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்

செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்!

                                                                                                                

natpu பொருள் பெற உழைப்பும் பெற்றபின் பகிர்வும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது பொருளியல் அறிஞர்கள் கருத்து.
பொதுநலப் பகிர்விற்காகப் பொருளைத் திரட்டும் உழைப்பே தமிழரின் முதன்மை நோக்கமாகும். நம் முன்னோர் பேராசையினால் செல்வம் சேர்க்க எண்ணியதில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே செல்வத்தைத் திரட்ட முயன்றனர். அதே நேரம் காதல் இன்பத்தினும் இல்லற இன்பத்தினும் செல்வம் உயர்ந்ததில்லை என்ற மனப்பான்மையும் இருந்துள்ளது. ஆனால், இந்த எண்ணத்தினால் எவ்வகை முயற்சியும் இன்றி, இல்லத்திலேயே தங்கி விடுதல் கூடாது என்றும் கருதினர். பொருள் தேடும் முயற்சியின்றி இல்லத்திலேயே தங்குபவரையே இல்லோர் எனக் குறித்துள்ளனர். எனவேதான் இல்லோர் என்பது பொருள் இல்லாதாரை மட்டுமே குறிப்பதாயிற்று.

புகழும் இன்பமும் கொடைச் செயலும் முயற்சியின்றி வீட்டில் இருப்போர்க்கு அருமையாகவும் வாய்க்காது என்பதைப் புலவர் கருவூர்க் கோசனார்

              இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
    அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் (நற்றிணை 214: 1-2)
எனக் கூறுகிறார். (ஈனும்(என்பது ஈன்ம் என்றாயிற்று) - தரும்)
 
பிறருக்குக் கொடுப்பதால் பெறும் அறப்பயனும் நாம் துய்த்தலால் அடையும் இன்பமும் பொருள் இல்லாதவர்க்கு இல்லை எனப் பொருள் செய்வதற்குரிய தொழிலை மேலும் மேலும் எண்ணுவாயாக என்று 
natpu ஈதலும் துய்த்தலும இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி    (குறுந்தொகை 63)

என்னும் வரிகள் மூலம் புலவர் உகாய்க்குடி கிழார் விளக்குகிறார்.

பிறருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைத் துய்த்தலே இல்லறத்தார் கடமை என்பதால் ஈதலுக்கு அடுத்துத் துய்த்தலை வைத்துள்ளதாக உரையாசிரியர்கள் விளக்கம் தருவர்.

அறத்திற்கும் இன்பத்திற்கும் பொருள் அடிப்படையாய் இருப்பதால்தான் அறம், பொருள், இன்பம் என வரிசைப்படுத்தி நடுவில் பொருளை வைத்தனர். இதனை நாலடியார் (114)

         வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
         நடுவணது எய்த இருதலையும் எய்தும்

என நடுவில் உள்ள பொருளை அடைந்தால் பிற இரண்டையும் அடையலாம் எனக் கூறுகிறது.

      ஆராயில்தானே அறம் பொருள்இன்பம் என்று
      ஆர்ஆர் இவற்றிடை அதனை எய்துவார்
      சீரார் இருதலையும் எய்துவர்

எனத் திவ்வியபிரபந்தமும் (2695) கூறுகிறது. அறம் பொருள் இன்பம் இவற்றில் இடையில் உள்ளதை எய்தினால் மற்ற இரண்டையும் எய்தலாம் என இவ்வாறு பலர் கூறியுள்ளனர்.

எனவே, அறத்திற்கும் இன்பத்திற்கும் அடிப்படையாக உள்ள பொருளை - முன்னோர் செல்வம் இருக்கின்றது எனச் சோம்பலுடன் இல்லத்தில் தங்கி விடாமல் - வெளியே  சென்று சம்பாதித்து வரவேண்டும் என்பதே பழந்தமிழர் நெறி.

தமிழர் அனைவரும் உரிமை இன்பம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நாமும் பொருள் ஈட்டுவோம்! நானிலத்தில் உயர்வோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment