Saturday, February 12, 2011

migration of birds : andre' sonnaargal 23: அன்றே சொன்னார்கள் 23: புலம் பெயர் பறவைகள்

>>அன்றே சொன்னார்கள்

natpu

அன்றே சொன்னார்கள் புலம்பெயர் பறவைகள்

                                                                                                                

natpu பறவைகள் சில பருவங்களில் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை - தம் புலத்தில் இருந்து பெயர்ந்து வேறு புலத்திற்குச் செல்வதைப் புலம் பெயர்தல் (migration) என்கின்றனர். இதற்கான தமிழ்க்கலைச் சொல் வலசை என்பதாகும். எசியாடு(Hesiod), ஓமர்(Homer), எரொடொதசு(Herodotus), அரிசுட்டாடில்(Aristotle) முதலான கிரேக்க அறிஞர்கள் பறவைகள் இடம் விட்டு இடம் மாறுவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் பறவைகள் பிற பகுதிகளில் இருந்து வருவதையும் பிற பகுதிகளுக்குச் செல்வதையும் எங்கும் செல்லாமல் ஒரே பகுதியிலேயே தங்கி இருப்பதையும் (வதி பறவை) வேறுபடுத்தி வலசை அறிவியலைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் போற்றிப்பாடும் பொழுது புலவர் குறுங்கோழியூர்க் கிழார் பறவைகள் புலம் பெயர்ந்து  வருவதையும் போவதையும்  - புதியதாக வேறு இடங்களில் இருந்து பறவைகள் இங்கு வருவதையும் இங்கேயே உள்ள பறவைகள் வேறு இடம் நாடிச் செல்வதையும் -
             புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்                             (புறநானூறு 20: 18)
என்னும் வரியில் குறிப்பிடுகிறார். (புள் - பறவை;)

வேந்தன் கோப்பெருஞ் சோழனை அவனைப் பார்க்காமலேயே நட்பு கொண்ட புலவர் பிசிராந்தையார் பாடும் பொழுது, தான் தூதாக அனுப்பும் அன்னப்பறவை தென்குமரியிலிருந்த வட இமயமலைக்குச் செல்வது என்பதைக்
                    குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
                   வடதிசை பெயர்குவையாயின்                       (புறநானூறு  67: 6-7)
natpu என்று குறிப்பிடுகிறார்.

தான் தனித்திருக்கத் தன் உயிர் மட்டும் பிரிந்து தலைவனை நாடிச் சென்றதைக் குறிப்பிடும்  இடத்தில் உவமையாகப், பறவை, தான் தங்கியுள்ள (அசையும் அழகிய கிளையில் உள்ள) கூட்டினைப் பொலிவிழக்கச் செய்யும் வண்ணம் புலம் பெயர்ந்து செல்லும் நிலையைக் குறிப்பிட்டு

              அலங்கல் அம்சினைக் குடம்பைப்  புல்லென
             புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந்தாங்கு           (அகநானூறு 113 : 24-25)
என்கிறார் புலவர் கல்லாடனார்.

              நீயும் நின்பெடையும், தென்திசை குமரியாடி
              வட திசைக்கு ஏகுவீராயின்
எனச் சத்திமுற்றத்துப் புலவர், நாரை விடு தூதுப் பாடலில் நாரை இடம் பெயர்ந்து செல்வது பற்றிக் குறிப்பிடுகிறார்.

புலவர் நரிவெரூஉத் தலையார்  வேறு எங்கும் செல்லாமல் தங்கி உள்ள நாரையை வதிகுருகு எனக்குறிப்பிட்டு 
       வதிகுருகு  உறங்கும் இன்நிழல் புன்னை                              (குறுந்தொகை 5)
என்கிறார்.

இவ்வாறு, பறவைகளின் புலப் பெயர்ச்சி அறிவியலை அன்றைய புலவர்களே அறிந்திருந்தனர். ஆனால், உரிமையிழந்து புலம் பெயர்ந்து செல்லும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு உரிமைவாழ்வு பெறுவதற்கான வழிவகைளைத் தமிழ்நாட்டு மக்கள் அறிந்து செயல்பட்டு வாகைசூடும்  நாள்  எந்நாளோ?

-         இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment