Friday, February 11, 2011

Science of irrigation: andre' sonnaargal 22: அன்றே சொன்னார்கள்22- பாசன அறிவியல்


>>அன்றே சொன்னார்கள்

natpu

அன்றே சொன்னார்கள் பாசன அறிவியல்

                                                                                                                

natpu
மழை நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்டவர்க்கும் இருந்துள்ளது. ஆனால், நீர்த்தேக்க வகையில் வேறுபாடுள்ளது. கி.மு.3000 ஆண்டைச் சேர்ந்த  சோர்டானில் உள்ள சாவா அணை (Jawa Dam in Jordan)  தொன்மையானது என்கின்றனர். ஆனால், பழந்தமிழர் நாகரிகக்கூறுகள் உள்ள மெசபடோமியாவில் தொடக்கக்காலங்களில் பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், எகிப்து நாட்டவர் தமிழ் நாட்டு அணைக்கட்டு வல்லுநர்களை அழைத்து அணை கட்டும் வகையை அறிந்ததாக அந்நாட்டிலேயே குறிப்புகள் உள்ளன. எனவே, அணைக்கட்டு நுட்பவியல் தமிழ் நாட்டில் இருந்தே சோர்டானுக்கும் பரவியிருக்க வேண்டும் எனலாம். இல்லையேல் எகிப்தியர் சோர்டான் நாட்டவரை அழைத்து அணைநுட்பம் பற்றி அறிந்திருப்பர். அணைக்கட்டு அமைப்பில் தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளமையே  இதற்கான கராணமாகும்.
உலகிலேயே பழமையான - இன்றும் நிலைத்திருக்கக்கூடிய - ஒரே அணை திருச்சிராப்பள்ளியில் உள்ள கல்லணைதான். காவிரி நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகச் சோழ வேந்தன் கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்டது இது. இவ்வேந்தன் பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தி வெற்றி கண்டமை புலவர் முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையிலும் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலையிலும் குறிக்கப்பெற்றுள்ளது.

natpu கல்லணையின் நீளம் 1080 அடி; அகலம் 40 அடி முதல் 60 அடி வரை; ஆழம் 15 அடி முதல் 18 அடி என அமைந்துள்ளது. ஆனால் சாவா அணை, நீளம் 260 அடி, அகலம் 15 அடி, ஆழம் 15 அடி என மட்டுமே அமைந்திருந்ததாகும். எனவேதான் வயவர் ஆர்தர் தாமசு காட்டன் என்னும் ஆங்கிலேயப் பாசனப் பொறியாளர் (Sir Arthur Thomas Cotton:1803-1899) கல்லணையை மிகு நேர்த்தியான மாபெரும் அணை (grand anikut) என்கிறார். அணைக்கட்டு என்னும் சொல் ஆங்கிலத்தில் இடம் பெற்றதில் இருந்தே அணைக்கட்டு பிற நாடுகளில் இருந்ததில்லை என்பதை உணரலாம். கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட ஓர் அமைப்பு ஈராயிரம் ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுக்கப் பயன்பட்டு வருவது விந்தையிலும் விந்தையல்லவா!
நீரைத்தேக்கி அணை கட்ட வேண்டியதன் இன்றியமையாமையைப் புலவர் குடபுலவியனார் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வலியுறுத்திப் பாடியுள்ளார். மறுமை உலகிற்கான செல்வத்தை வேண்டினாலும், உலகையே ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து நீ ஆள விரும்பினாலும் புகழுடன் இவ்வுலகில் வாழ விரும்பினாலும், நீ ஆற்ற வேண்டிய அரும்பணி ஒன்று உள்ளது. நீர் இன்றி வாழ முடியாத இவ்வுலகத்தில் பசி நீங்க உணவு அளிப்பவரே உயிர் அளித்தவராவர்! உணவு என்பது நில விளைச்சலுடன் சேர்ந்த நீருமாகும்! வான் மழையை எதிர்நோக்கி இருக்கும் வறண்ட பூமியால் எப்பயனும் இல்லை. எனவே, நான் கூறப்போவதை மறவாமல் உள்ளத்தில் கொள்க! பள்ளத்தாக்கிலே  நீரினைத் தேக்கி  நீர் நிலைகளை உண்டாக்குபவர்களே, மறுமை இன்பங்களையும் புகழையும் இவ்வுலகில் பெற்று மகிழ்வோர் ஆவர்.  அவ்வாறு நீரினைத் தேக்கி விளைச்சலுக்கு உதவாதவர்கள், இவ்வுலகில் தம் புகழை நிலை நிறுத்த இயலாதவர்கள்  ஆவார் எனக்கூறுகையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

         நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
        தட்டோர் அம்ம இவண்தட் டோரே!
        தள்ளா தோர்இவண் தள்ளா தோரே!                               (புறநானூறு 18 : 28-30)
(தட்டு - நீர்நிலை)
நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசனஅறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர். நாமோ தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி இன்மையால்  அறியாமையைத் தேக்கி அல்லல் உறுகிறோம்!
-         இலக்குவனார் திருவள்ளுவன்





No comments:

Post a Comment