Wednesday, February 23, 2011

pioneer in clocks maker: andre' sonnaargal 31: அன்றே சொன்னார்கள் மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர்

>>அன்றே சொன்னார்கள் 31

அன்றே சொன்னார்கள் 

 மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர்

                                                                                                                

natpu கடிகாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான கிளாக்கு (clock) மணி என்னும் பொருளைத் தரும் கிளோக்கா என்னும் செல்திக்கு (Celtic Language) சொல்லில் இருந்து உருவானது. மணி என்பது முதலில் ஒலிக்கும் மணியைக் குறித்தது. மணி அடித்து நேரத்தை அறிவித்ததன் அடிப்படையில் இச் சொல் பின்னர் மணியைக் குறிப்பதாக மாறியது.

பீட்டர் என்கின் என்னும் பூட்டுத் தொழிலாளி கி.பி.1510இல் நிலைக் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். கி.பி.1656இல் இயூயன்சு என்னும் ஆலந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஊசல் கடிகாரத்தை உருவாக்கினார். இவர் 60 நொடி ஒரு நிமையம், 60 நிமையம் 1 மணி, 24 மணி 1 நாள் என்ற கணக்கீட்டில் கடிகாரத்தை அமைத்தார். இத்தகைய கடிகாரங்கள் முதலில் மரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டன; அடுத்து மாழையாலும் (உலோகத்தாலும்) கண்ணாடியாலும் கடிகாரப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
கனடா நாட்டைச் சேர்ந்த வாரன் மோரிசன் கி.பி.1927இல் கண்ணாடியால் ஆன கடிகாரத்தை உருவாக்கினார். மின்திறனும் தொடர்ச்சியாக மின்கலனும் பயன்பாட்டில் வந்த பின்,  மின் கலனைக் கொண்டு இயங்கும் கடிகாரத்தை அலெக்சாண்டர் பெயின் கி.பி.1840இல் கண்டு பிடித்தார். அதன்பின்னர் வெவ்வேறு மாற்றங்களைக் கடிகாரங்கள் அடைந்துள்ளன.

இருப்பினும் காலத்தைக் கண்டறிய பல்வேறு வழிமுறைகள் தொன்மைக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. காலத்தின் சிறப்பை அறிந்து உணர்த்திய தமிழ் ஆன்றோர்கள், காலத்தின்  உட்பிரிவாகிய பெரும் பொழுதுகளையும் பெரும் பொழுதுகளின் உட்பிரிவாகிய சிறு பொழுதுகளையும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே பகுத்துள்ளனர். முதலில் இவர்கள் பூவின் மலர்ச்சியைக் கண்டு காலத்தைக் கணக்கிட்டனர். மாலையில் மலரும் முல்லை; அந்தியில் பூப்பது அந்தி மந்தாரை என்னும் சொல் வழக்குகளும் அவற்றின் அடிப்படையிலே தோன்றியவையே.

பிறகு சூரியனின்  இயக்கம் அதனால்  உருவாகும் நிழல் இவற்றை அறிந்து அதற்கேற்ப நேரத்தைக் கணக்கிட்டனர். சூரிய இயக்கத்தின் அடிப்படையில் சுமேரியர்களும் நிழலின் அடிப்படையில் எகிப்தியர்களும் நேரத்தைக் கணக்கிடத் தொடங்கினர். அராபியர்களும் இவை போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு நேரத்தைக் கணக்கிட முயன்றனர். மேலே உள்ள கிண்ணத்தில் உள்ள நீர் அதனடியில் உள்ள மற்றோரு கிண்ணத்தில் சொட்டுச் சொட்டாக விழுவதைக் கொண்டும் விழுந்த நீரின் அளவைக் கொண்டும் கிரேக்கர்களும் உரோமானியர்களும் கி.மு.320 அளவில் நேரத்தைக் கணக்கிட்டனர்.

சூரியன் இல்லாத பொழுதும் நேரமறிய தமிழ் மக்கள் கண்டுபிடித்ததே குறுநீர்க்கன்னல் எனப்பெறும் நாழிகை வட்டிலாகும். அடுத்துச் சிறிய அளவிலான மணிகாட்டியைக் கண்டு பிடித்து அதனை மாலைபோல் கழுத்தில் அணிந்து கொண்டனர். எனவே, அதற்குக் < கடிகைஆரம் > கடிகாரம் எனப் பெயரிட்டனர். (ஆரம் - மாலை) (மணிக்கட்டில்-கையில் கட்டப்படும் கடிகாரம் கைக்கடிகாரம்)
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் என்னும் சங்கப் புலவர்

      பொழுதுஅளந்து அறியும்  பொய்யா மாக்கள்
     தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
     எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
    குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப
                                                                                 (முல்லைப்பாட்டு: 55, 58)
என பொழுதினை அறிந்து அறிவிக்கும் வல்லோர் நேரத்தைக் குறுநீர்க்கன்னலின் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாய்க் கூறுகிறார். சிறிய அளவில் நீர் விழும் கிண்ணம் என்பதால் குறுநீர்க் கன்னல் எனப்பட்டது.
வெளியே செல்ல முடியாத நேரத்திலும் சூரியன் காட்சி அளிக்காத நேரத்திலும் மணியைக் கண்டறிய கண்டுபிடிக்கப்பட்டதே குறுநீர்க்கன்னல் என்னும் மணிப்பொறி.
மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என்னும் மற்றுமொரு சங்கப்புலவர், கதிரவனின் கதிரைக் கொண்டு காலமறிய முடியாதபடி முகிழ் சூழ்ந்து அச்சம் தரும் வெள்ளம் பாய்ந்து ஓடும் மழைக்காலத்திலும் குறுநீர்க்கன்னல் மூலமாக நேரம் அறிய முடிவதைக் குறிப்பிடுகிறார்.  இப்பாடல் வருமாறு:

     குறுநீர்க் கன்னல் எண்ணுதல் அல்லது
     கதிர்மருங்கு அறியா அஞ்சுவரப் பாஅய்            (அகநானூறு: 43:6-7)

தமிழ்த்தேசியப் பெரும்புலவர் இளங்கோ அடிகள் நாழிகைக்கணக்கர் பற்றிக் குறிப்பிடுகிறார். (சிலப்பதிகாரம் 5: 49) (இதற்கான உரையில்

      பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
     காமன் திரியும் கருவூரா - யாமங்கள்
     ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்றுபோய் நாழிகையும்
     ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்று

என்னும் நாழிகை பற்றிய பாடல் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.)
புலவர் சீத்தலைச் சாத்தனார்
குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர் (மணிமேகலை : 7: 14-15)
இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
கந்தபுராணத்தில் குடிகை என்னும் நீர்க்கலம் மணிப்பொறியாக விளங்கியிருந்தமை
      அரும்புனல் குடிகை மீது
என்னும் தொடரில் குறிக்கப்பட்டுள்ளது.
காலச் சூழலுக்கேற்ப மணியை அறியும் பல்வகை மணிப்பொறிகளை நம் முன்னோர் உருவாக்கி உள்ளனர். நாமோ ஞாலச் சூழலுக்கேற்ப கொள்கைகளை மாற்றும் தலைவர்களை உருவாக்கி உள்ளோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்


நன்றி : நட்பூ  இணைய இதழ்  11.02.2041 *** 23.02.2011

No comments:

Post a Comment